
ஓவியம்: அரஸ்
மழைக்கோட்டுடன் வந்து இறங்கிய ஷேர்லக்கை அப்படியே கேன்டீனுக்கு அழைத்துச் சென்று சூடாக இஞ்சி டீ வாங்கிக் கொடுத்தோம். “இரவு மழை வரும் என வெதர்மேன் ரிப்போர்ட் சொல்கிறது. சீக்கிரம் பேசி முடிப்போம்” என நேராக சப்ஜெக்ட்டுக்கு வந்தார் அவர். நாம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

“இந்தியச் சந்தையில் வெளி நாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித் திருக்கிறதே? என்றோம்.
‘‘இந்த ஆண்டு நம் பங்குச் சந்தைகள்அடைந்த உச்சங்களைப் பார்த்து மிகவும் ஆச்சர்யம் அடைந்திருப்பார்கள். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் 541 புதிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செபியிடம் பதிவு செய்துள்ளன. நமது நிலையான பொருளாதார வளர்ச்சிக் காரணி களும், நீண்ட கால அடிப்படை யிலான வளர்ச்சி வாய்ப்புகளும் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் இந்தியச் சந்தைக்குச் சாதகமாக உள்ளன. மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு முடிவுகளையும் செபி எடுத்துள்ளது. இந்தக் காரணங்களால் இந்தியச் சந்தை இன்னும் சர்வதேச முதலீட்டாளர்களின் முன்னணித் தேர்வாக இருக்கிறது.
ஆனாலும், கடந்த ஆகஸ்ட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகளை வெளியே எடுத்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் நிலவிவரும் அரசியல் பிரச்னைகளும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இல்லாமல் ஏமாற்றமளித்ததுமே காரணங்களாகும். கடந்த நவம்பர் 2016-லிருந்து ஆகஸ்ட் வரையிலான பத்து மாதங்களில் ஆகஸ்ட் மட்டும்தான் அதிக பட்சமாக ரூ.15,000 கோடி முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். என்றாலும், இதனால் சந்தை பெரிய இறக்கத்தைச் சந்திக்கவில்லை. சந்தை சரியாமல் இருந்ததற்குக் காரணம், மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக நம்மவர்கள் செய்துவரும் முதலீடுதான்’’ என்றவர், அதைக் கொஞ்சம் விளக்கமாக எடுத்துச்சொன்னார்.
‘‘கடந்த ஆகஸ்ட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.15,000 கோடி முதலீட்டை வெளியே எடுத்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்களும் மற்றும் தனிநபர்களும் ரூ.15,400 கோடியைச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடுதான் சந்தை மேற்கொண்டு சரியாமல் தடுத்்திருக்கிறது. சந்தை இறக்கத்துக்காகக் காத்திருந்த ஃபண்ட் மேனேஜர்களும் புதிதாக முதலீடு செய்தனர். கடந்த ஆகஸ்ட்டில் மட்டும் செய்யப்பட்ட முதலீட்டில் ரூ.14,000 கோடி ஃபண்ட் நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ளது.’’
“பி.எஸ்.இ-யின் 11 குறியீடுகளிலிருந்து ரிலையன்ஸ் கேப்பிட்டல் வெளியேற்றப் பட்டிருக்கிறதே, என்ன காரணம்?” என்றோம்.
“பி.எஸ்.இ எஸ் அண்டு பி குறியீடுகளிலிருந்து ரிலையன்ஸ் கேப்பிட்டல் வெளியேற்றப்படுகிறது. இந்த நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் கடன் வழங்கல் பிசினஸைத் தனியாகப் பிரிக்க முடிவு செய்ததே இதற்குக் காரணம். பிரிக்கப்படும் பிசினஸ் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படவிருக்கிறது. இதனால் பி.எஸ்.இ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட பி.எஸ்.இ, செப்டம்பர் 5-ம் தேதி முதல் பி.எஸ்.இ குறியீடுகளில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனப் பங்குகள் வர்த்தகம் ஆகாது என்று தெரிவித்ததுடன், அதன் 11 குறியீடுகளிலிருந்து அதனை வெளியேற்றுகிறது. பி.எஸ்.இ ஆல்கேப், பி.எஸ்.இ 200, பி.எஸ்.இ 100, பி.எஸ்.இ சென்செக்ஸ் நெக்ஸ்ட் 50, பி.எஸ்.இ மிட்கேப், பி.எஸ்.இ லார்ஜ்கேப் உள்ளிட்ட குறியீடுகள் அதில் அடக்கம்” எனத் துல்லியமான பதிலைத் தந்தார்.
“பஜாஜ் ஃபைனான்ஸ் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ. 1 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதே?’’ என ஆச்சர்யப்பட்டோம்.
‘‘பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு கடந்த எட்டு மாதங்களாகவே நல்ல ஏற்றம் கண்டுவருகிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் 142% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த திங்கள் அன்று இதன் பங்கு விலை ரூ.1800-ஐத் தாண்டி முதன்முறையாக வர்த்தகமாகியது. இதனால் அதன் மொத்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது” என்றவர், டீயைக் குடித்துக்கொண்டே மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைப் பார்த்தார்.
“நிஃப்டியிலிருந்து வெளியேறும் நிறுவனங் களுக்குப் பதிலாக வரும் நிறுவனங்கள் எவை?” எனக் கேட்க, ஐ-பேடை எடுத்துத் தேடிவிட்டு, பதில் சொன்னார்.
“நிஃப்டி பட்டியலிலிருந்து ஏ.சி.சி, பேங்க் ஆஃப் பரோடா, டாடா மோட்டார்ஸ் டிவிஆர் ஆகியவை வெளியேறுகின்றன. அதற்குப் பதிலாக, பஜாஜ் ஃபைனான்ஸ் ஹெச்.பி.சி.எல் மற்றும் யு.பி.எல் ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. செப்டம்பர் 29 முதல் இந்த மாற்றம் நிகழவிருக்கிறது. இதில் நிஃப்டி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஏ.சி.சி முதன்முறையாக வெளியேறுகிறது. மேலும், நிஃப்டி 100-லிருந்து டிவிஸ் லேப்ஸ் மற்றும் யுனைடெட் புரூவரிஸ் ஆகியவை வெளியேறுகிறது. அதற்குப் பதிலாக அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் மற்றும் எம்.ஆர்.எஃப் இரண்டும் இடம் பெறுகின்றன’’ என்று ஒரு பட்டியலையே வாசித்தார்.
“ஓரியன் கேப்பிட்டல் நிறுவனத்துக்கு செபி 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளதே’’ என்றோம்.
“ஓரியன் கேப்பிட்டல் மற்றும் ஓரியன் புரோக்கிங் ஆகியவை மற்றும் அதன் பார்ட்னர்கள் பங்குச் சந்தையில் ஈடுபட 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது செபி. முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய முதிர்வுத் தொகையை வழங்காத காரணத்துக்காக இந்தத் தண்டனையைத் தந்துள்ளது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரியன் கேப்பிட்டல் ரூ.6 கோடியும், ஓரியன் புரோக்கிங் ரூ.4 கோடியும் முதலீட்டாளர்களுக்குத் தர வேண்டிய தொகை நிலுவையில் இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டுப் புறப்படத் தயாரானார்.
அவர் புறப்படும்முன், ‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டோம்.
‘‘கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிஃப்டி ஒரு சதவிகிதமும், சென்செக்ஸ் இரண்டு சதவிகிதமும் இறக்கம் கண்டன. பேங்க் நிஃப்டி 2.4 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்ததற்குப் பிறகு, பேங்க் நிஃப்டியின் ஏற்றத்துக்கு உதவக்கூடிய சாதகமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை.
நிஃப்டி செப்டம்பர் ஃப்யூச்சர்ஸின் ரோல் ஓவர் இந்த ஆண்டில் மிகக் குறைவாக 58 சதவிகிதம்தான் இருக்கிறது மற்றும் ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டும் குறைவாக இருப்பதால், சந்தையின்மீதான நம்பிக்கை சற்றுத் தடுமாற்றத்தில் தான் இருக்கிறது. இதனால் செப்டம்பர் மாதத்தில் சந்தையின் போக்கானது இறக்கத்தின் போக்கிலோ அல்லது பெரிய அளவில் ஏறாமல் அல்லது இறங்காமல் பக்கவாட்டிலோ நகரும் என எதிர்பார்க்கலாம். எனவே, இந்த வாரம் கவனிக்க பங்குகள் எதுவும் இல்லை’’ என்றவர், ‘‘இன்னும் கொஞ்சம் நேரத்தில் மழை வந்துவிடும்போல. எனவே, நான் கிளம்புகிறேன்’’என்று சொல்லிவிட்டு, மழைக்கோட்டை மாட்டிக் கொண்டு, வீட்டுக்குப் பறந்தார்.