
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, பொதுவான ஃபண்டுகள் – அதாவது, எந்த நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிராத ஃபண்டுகள். மற்றொன்று, நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஃபண்டுகள்.

முதல் வகையில் ஆயிரக்கணக்கான ஃபண்டுகள் உள்ளன. இரண்டாம் வகையில் சில ஃபண்டுகளே உள்ளன.
இங்கே இலக்கு அல்லது நோக்கம் என நாம் குறிப்பிடுவது நம் ஓய்வுக்காலம், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம் போன்றவற்றைத்தான். உதாரணத்துக்கு, நமது சந்தையில் ரிட்டையர்மென்ட் ஃபண்டுகள் உள்ளன; சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்டுகள் உள்ளன; கேன்சர் நோயாளிகளுக்காக உதவி செய்வதற்கான ஃபண்டுகள் உள்ளன. இதுபோல் இன்னும் வேறு ஃபண்டுகளும் உள்ளன. வரும் காலங்களில் புதிதாக அறிமுகமும் ஆகலாம்.
பொதுவான ஃபண்டுகளுக்கும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஃபண்டுகளுக்கும் இடையே இருக்கும் சாதகங்கள் மற்றும் பாதகங்களை விரிவாகப் பார்ப்போம்.
பொதுவான ஃபண்டுகள் சாதகங்கள்
• ஒரு வருடத்துக்குள் வெளியேறினால் 1% வெளியேற்றுக் கட்டணம் கட்ட வேண்டும். அதன்பின்பு எப்போது வேண்டுமானாலும் கட்டணமின்றி வெளியேறிக்கொள்ளலாம்.
• ஒரு வருடத்துக்குமேல் தேவைப்படும்போது விற்றுப் பணமாக்கிக்கொள்ளலாம்.
பாதகங்கள்
• எதிர்காலத் தேவை என்று வரும்போது திட்டமிட்ட பணம் இல்லாமல் போக வாய்ப்புண்டு.
• ஃபண்டுகளின் செயல்பாட்டை அடிக்கடி கவனித்து, வேண்டிய மாறுதல்களைச் செய்து கொண்டிருப்போம். கடைசியில் எந்த ஃபண்டில் எவ்வளவு, எதற்காக முதலீடு செய்தோம் என்கிற வரலாறே தெரியாமல் போய்விடும்.

• நோக்கம் பெரிதாகத் தெரியாது. ஃபண்டின் செயல்பாடே பிரதானமாகத் தோன்றும். அடிக்கடி செயல்பாட்டைப் பார்த்து நிம்மதி இழக்க வாய்ப்புண்டு. செக்ஷன் 80சி-யின் கீழ் வரிவிலக்கு கிடையாது.
• வயதுக்கேற்ற அஸெட் அலோகேஷன் என்பது தானாகவே நடப்பதில்லை.
• நமது நோக்கத்துக்காகத் தேவைப்படும் தொகையை இப்போதே நிர்ணயிக்க முடியாது.
• உறவினர்கள், நண்பர்கள் அல்லது வேறு மூன்றாம் நபர்கள் குழந்தைகளின் பெயரில் எஸ்.ஐ.பி அல்லது மொத்த முதலீடு செய்ய முடியாது.
• உறவினர்கள், நண்பர்கள் திடீரென்று கடன் கேட்கும்போது, தட்டமுடியாமல் பணத்தை எடுத்துக் கொடுக்க வழியுண்டு.
• ஃபண்டுகள் நிர்ணயிக்கும் தொகை அதிகமாக இருப்பதால், செலவு விகிதங்கள் சற்று குறைவாக இருக்கும்.
• சிறிய மற்றும் குறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஓய்வுக்காலத்துக்காக நன்மை தரும்போது, இவ்வித ஃபண்டுகளில் தனித்தன்மை தெரியாது.


நோக்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஃபண்டுகள் சாதகங்கள்
• நோக்கத்தைப் பொறுத்து வெளியேற்றுக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, ஓய்வுக்கால ஃபண்டுகளில் இருந்து 58 வயதுக்கு முன் வெளியேறினால், வெளியேற்றுக் கட்டணம் உள்ளது.
• நோக்கம் நிறைவேறும் வரை பணமாக்கிக்கொள்வது தடுக்கப்படுகிறது. எதிர்காலத் தேவை வரும்போது திட்டமிட்ட பணம் உறுதியாகக் கிடைக்கிறது.
• ஃபண்ட் செயல்பாட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், மாறுதல் செய்யாததால், நாம் எதற்காக முதலீடு செய்தோம், எவ்வளவு முதலீடு செய்தோம், இப்போது எவ்வளவு உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக இருக்கும்.
• இதில் நோக்கம்தான் பிரதானமாக இருக்கும். முதலீடு செய்தபின் நிம்மதியாக இருப்போம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சில இலக்கு நோக்கிய ஃபண்டுகளுக்கு 80சி-யின் கீழ் வரிவிலக்கு கிடைக்கிறது. ரிட்டையர்மென்ட் ஃபண்டுகளில் வயதுக்கேற்ற அஸெட் அலோகேஷன் ஆட்டோமெட்டிக்காக நடப்பதற்கான ஆப்ஷன்கள் உள்ளன.
• ஓய்வுக்கால ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆரம்பிக்கும்போதே நமது பென்ஷன் தொகையை நிர்ணயிக்கும் வாய்ப்பை சில ஃபண்டுகள் கொடுக்கின்றன.
• சில்ரன்ஸ் ஃபண்டுகளில் உறவினர்கள், நண்பர்கள் அல்லது வேறு மூன்றாம் நபர்கள் குழந்தைகளின் பெயரில் எஸ்.ஐ.பி அல்லது மொத்த முதலீடு செய்ய முடியும். உறவினர்கள், நண்பர்கள் திடீரென்று கடன் கேட்கும்போது, வெளியேற்றுக் கட்டணம் இருப்பதால், பணத்தை எடுத்துக் கொடுப்பது தடுக்கப்படுகிறது.
பாதகங்கள்
• ஃபண்டுகள் நிர்ணயிக்கும் தொகை குறைவாக இருப்பதால், செலவு விகிதங்கள் சற்று அதிகமாக இருக்கும். தாத்தா பாட்டி, பேரக் குழந்தைகளுக்கு கிஃப்ட் கொடுக்கும்போது, தனியாகத் தெரியும்.
• சிறிய மற்றும் குறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஓய்வுக்காலத்துக்கான நன்மைகளைத் தரும்போது, இந்தவித ஃபண்டுகளில் தனித்தன்மை தெரியும்.

நோக்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஃபண்டுகள் இந்தியாவில் இன்னும் பெரிதாக பிரபலமாகவில்லை. என்றாலும், இனிவரும் காலத்தில் இதன் சாதகங்களால் பாப்புலாரிட்டி கூடும். மேலும், தற்போது மக்கள் தீர்வுகளைத் தேடிச் செல்கிறார்கள். ஆகவே, உங்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி உங்கள் நோக்கத்துக்காக முதலீடு செய்ய, இந்த வகை ஃபண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சில ஃபண்டுகள் முன்பக்கத்தில் உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்
இந்த ஃபண்டில் மூன்று விதமான பிளான்கள் உள்ளன. புரகிரஸிவ் (100% பங்கு சார்ந்தது), மாடரேட் (பேலன்ஸ்ட்) மற்றும் கன்ஸர்வேட்டிவ் (எம்.ஐ.பி). வயதைப் பொறுத்து தானாகவே பிளான்கள் மாறிக்கொள்ளும் ஆப்ஷன் உள்ளது. அதேபோல், ஓய்வுக்காலத்தில் (60 வயது முடியும் தருணத்திலிருந்து) வளர்ந்திருக்கும் தொகை யிலிருந்து மாதத்துக்கு 0.50% பென்ஷனாக எடுத்துக் கொள்ளும் ஆப்ஷனும் உள்ளது.
ஸோனம் உதாசி இந்த ஃபண்டின் மேனேஜராக உள்ளார். இந்த ஃபண்டிலிருந்து 60 வயதுக்குமுன் வெளியேறினால் 1% கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த ஃபண்டில் உள்ள மூன்று பிளான்களுமே நன்றாகச் செயல்பட்டு வருகின்றன.
ரிலையன்ஸ் ரிட்டையர்மென்ட் ஃபண்ட்
இந்த ஃபண்டில் வெல்த் கிரியேஷன் மற்றும் இன்கம் ஜெனரேஷன் என இரு பிளான்கள் உள்ளன. இந்த ஃபண்டில் முதலீடு செய்பவர் களுக்கு செக் ஷன் 80சி-யின் கீழ் வரிவிலக்குப் பெறலாம். வெல்த் கிரியேஷன் பிளான் ஒரு மல்டிகேப் ஈக்விட்டி திட்டமாகச் செயல்பட்டு வருகிறது. 60 வயதுக்கு முன் வெளியேறினால் 1% வெளி யேற்றுக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஹெச்.டி.எஃப்.சி சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட்
ஹெச்.டி.எஃப்.சி சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்டில் இரு பிளான்கள் உள்ளன. இன்வெஸ்ட்மென்ட் பிளான் மற்றும் சேவிங்ஸ் பிளான் என்பவையே அவை. இந்த ஃபண்டில் 18 வயது வரை முதலீட்டை எடுக்க முடியாமல் லாக்-இன் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. லாக்-இன் செய்யாவிட்டால், மூன்று வருடத்துக்குள் வெளியேறும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிராக் சேத்தல்வது இதன் ஃபண்ட் மேனேஜராக உள்ளார். ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் போன்ற நன்றாகச் செயல்பட்டுவரும் திட்டங்களையும் நிர்வகித்து வருகிறார். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பெற்றோர் அல்லது கார்டியனுக்கு ரூ.10 லட்சம் வரைக்கும் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.
யூ.டி.ஐ சில்ரன் கேரியர் பிளான்
இந்த ஃபண்டில் பேலன்ஸ்டு மற்றும் அட்வாண்டேஜ் என இரு பிளான்கள் உள்ளன. பேலன்ஸ்டு பிளான் எம்.ஐ.பி ஃபண்டைப் போன்றது. இது 40% வரை ஈக்விட்டியிலும், எஞ்சியதை கடன் சார்ந்த உபகரணங்களிலும் முதலீடு செய்கிறது. அட்வாண்டேஜ் பிளான் 70% வரை ஈக்விட்டியிலும், எஞ்சியதை கடன் சார்ந்த உபகரணங்களிலும் முதலீடு செய்கிறது. ஐந்து வருடங்களுக்குள் வெளியேறினால், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
யூ.டி.ஐ ரிட்டையர்மென்ட் பெனிபிஃட் பென்ஷன் ஃபண்ட்
இது நெடுங்காலமாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் ஒன்று. இது கடன் சார்ந்த (எம்.ஐ.பி-யைப் போன்ற) ஃபண்டாகும். 60% வரை கடன் சார்ந்த உபகரணங்களிலும், எஞ்சியதைப் பங்கு சார்ந்த முதலீட்டிலும் முதலீடு செய்கிறது. 58 வயதுக்கு முன், முதலீட்டை வெளியில் எடுத்தால், வெளியேற்றுக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூ சைல்டு கேர் பிளான் - ஸ்டடி பிளான்
இது எம்.ஐ.பி போன்ற ஒரு திட்டமாகும். அதிக பட்சமாக 25% வரை ஈக்விட்டியிலும், எஞ்சியதைக் கடன் சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்கிறது. மூன்று வருடங்களுக்குள் வெளியேறினால் வெளியேற்றுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளின் கல்லூரிப் படிப்புக்காகக் குறுகிய காலத்தில் சேமிக்க விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.
டாடா யெங் சிட்டிஸன்ஸ் ஃபண்ட்
இது குழந்தைகளுக்கான ஒரு திட்டமாகும். 50% வரை ஈக்விட்டியிலும், எஞ்சியதைக் கடன் சார்ந்த உபகரணங்களிலும் முதலீடு செய்கிறது. முதலீடு செய்த நாளிலிருந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு குழந்தை 18 வயதை எட்டினால், 18 வயதை எட்டியபிறகு எந்தவித வெளியேற்றுக் கட்டணமும் இல்லாமல் வெளியேறிக்கொள்ளலாம். முதலீடு செய்த நாளிலிருந்து ஏழு வருடங்களுக்குள் குழந்தை 18 வயதை எட்டும்போது, ஏழு வருடங்களுக்குள் வெளியேறினால் வெளியேற்றுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எஸ்.பி.ஐ மேக்னம் சில்ரன்ஸ் பெனிஃபிட் பிளான்
இந்தத் திட்டம் எம்.ஐ.பி போன்ற ஒரு திட்டமாகும். 25% வரை ஈக்விட்டியிலும், எஞ்சியதைக் கடன் சார்ந்த உபகரணங்களிலும் முதலீடு செய்கிறது. மூன்று வருடங்களுக்குள் வெளியேறினால் வெளியேற்றுக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பெற்றோர்களுக்கு, முதலீட்டைப்போல 10 மடங்கு (அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை) விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.