நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: சர்க்கரை பங்குகள் உஷார்!

ஷேர்லக்: சர்க்கரை பங்குகள் உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: சர்க்கரை பங்குகள் உஷார்!

ஓவியம்: அரஸ்

“மத்திய அமைச்சரவை மாற்றம் முடிந்துவிட்டது. மாநிலத்திலும்  இரு அணிகளும் சேர்ந்தாச்சு. ஆனாலும், நீட் பிரச்னை தீர்ந்தபாடில்லையே’’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘அது பற்றி பிறகு பேசுவோம்’’ என்றபடி, டிவியை அணைத்துவிட்டு, சந்தை தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். நாம் கொடுத்த சூடான இஞ்சி டீயை ரசித்துக் குடித்தபடி, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.   

ஷேர்லக்: சர்க்கரை பங்குகள் உஷார்!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த பங்குகள் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக் கின்றனவே?

‘‘உண்மைதான். கடந்த ஜூலை மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகளில்தான் அதிக முதலீடுகளைச் செய்துள்ளன. செபி அறிக்கையின்படி, இந்த இரண்டு துறைகளில் மட்டுமே 31.2% முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு துறை களிலும், அதற்கு முந்தைய மாதத்தில் 27.8% மட்டுமே முதலீடு செய்துள்ளன. இப்போது அது 3.3% உயர்ந்திருக்கிறது. இதில் ஜனவரியில் 20.9 சதவிகிதமாக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் வங்கித் துறை முதலீடு, ஜூலையில் 22.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

வங்கிகள் மட்டுமல்லாமல், நிதித் துறை சார்ந்த நிறுவனங்களிலும் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. மேக்ஸ் இந்தியா, ஐ.டி.எஃப்.சி, ஓரியண்டல் பேங்க், கேபிட்டல் ஃபர்ஸ்ட், ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் முத்தூட் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள், ஃபண்ட் நிறுவனங்களின் முதலீட்டுப் பட்டியலில் முன்னணியில் உள்ளன. பொருளாதாரத்தின் முதலீட்டுச் சுழற்சி மற்றும் நுகர்வு சுழற்சி இரண்டும் இந்தத் துறைகளுக்குச் சாதகமாக இருப்பதே இதற்குக் காரணம். நீண்ட கால முதலீட்டுக்கு இந்த துறையிலுள்ள நல்ல பங்குகளை நிச்சயம் பரிசீலிக்கலாம்.’’

சர்வதேச அளவில் எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் நடக்கும் மாற்றங்களால் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பலன் கிடைக்குமா?


‘‘சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மீதான லாபம் உயர்ந்திருக்கிறது. இந்தக் காரணத்தினால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்தான். முக்கியமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் அதிக பலனடையும். கடந்த ஜூன் 30-ம் தேதியிலிருந்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை இதுவரைக்கும் 18% உயர்ந்துள்ளது. இதேபோல், பி.பி.சி.எல், ஹெச்.பி.சி.எல், ஐ.ஓ.சி ஆகியவற்றின் விலை 12% முதல் 24% உயர்ந்துள்ளன. இதே காலகட்டத்தில் சப்ளை பாதிக்கப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உயர்ந்தன. இனிவரும் மாதங்களிலும் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பலன் காத்திருக்கிறது. ரிலையன்ஸின் வருவாய் வளர்ச்சி, இந்த நிதியாண்டில் 10 முதல் 12 சதவிகிதமென மதிப்பிடப்பட்டுள்ளது.”
   
ரேமண்ட் நிறுவனத்தில் எல்.ஐ.சி முதலீட்டைக் குறைத்துள்ளதே?

‘‘இந்தியப் பங்குச் சந்தையில் அதிக முதலீடுகளைச் செய்யும் நிறுவனமான எல்.ஐ.சி, ரேமண்ட் நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளில் அக்டோபர் 2016-லிருந்து செப்டம்பர் 2017 வரையிலான காலத்தில் 12.37 லட்சம் பங்குகளை விற்றுள்ளது. அதன் மூலம் 5.53 சதவிகிதமாக இருந்த முதலீட்டை 3.51 சதவிகிதமாகக் குறைத்துக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள சொத்துப் பிரச்னையே இதற்கு காரணம். தந்தையிடமிருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டதாக மகன்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதால், இந்தப் பங்கின் விலை இறக்கப் பாதையில் இருக்கிறது.’’  

பேங்க் ஆஃப் பரோடா பங்கையும் எல்.ஐ.சி விற்றிருக்கிறதே?

‘‘பேங்க் ஆஃப் பரோடாவில், தான் வைத்திருந்த பங்குகளில் 2 சதவிகிதப் பங்குகளைக் கடந்த இரண்டு மாத காலத்தில் எல்.ஐ.சி நிறுவனம் விற்றுள்ளது. மொத்தம் 4.69 கோடி பங்குகள். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.649.74 கோடி. இப்போது எல்.ஐ.சி வசம் பேங்க் ஆஃப் பரோடாவின் 7.24 சதவிகிதப் பங்குகள் உள்ளன. இந்த விற்பனைக்குமுன், 9.29 சதவிகிதப் பங்குகளை வைத்திருந்தது. எல்.ஐ.சி 2 சதவிகிதப் பங்குகளை விற்றதன் செய்தி வெளியான தினம் பேங்க் ஆஃப் பரோடா பங்கு 1.12% விலை குறைந்து வர்த்தக மானது.’’

என்.எஸ்.இ, 15 நிறுவனங்களைச் சந்தை யிலிருந்து டீலிஸ்ட் செய்கிறதே?

‘‘தேசியப் பங்குச் சந்தை (என்.எஸ்.இ) தனது வர்த்தகத் தளத்திலிருந்து 15 நிறுவனங்களை செப்டம்பர் 15 முதல் வெளியேற்றுகிறது. அவை, அரவளி இண்டஸ்ட்ரிஸ், குரோத் டெக்னோ புராஜக்ட்ஸ், மார்ஸ் சாஃப்ட்வேர் இன்டர்நேஷனல், நமஸ்தே எக்ஸ்போர்ட்ஸ், என்.இ.பி.சி அக்ரோ புட்ஸ், என்.இ.பி.சி டெக்ஸ்டைல்ஸ், ஓ.ஆர்.ஜி இன்ஃபர்மேட்டிக்ஸ், புரூடென்ஷியல் சுகர் கார்ப்பரேஷன் மற்றும் எஸ்பி அண்ட் டி இன்டர்நேஷனல் ஆகியவை ஆகும். இந்தப் பங்குகளைத் தப்பித் தவறி வைத்திருந்தால், உடனடியாக விற்றுவிடுவது நல்லது’’.

தமிழ்நாட்டு சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்திருக்கின்றனவே?

“தமிழ்நாட்டில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால், தமிழ்நாட்டு சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. உற்பத்தி வெகுவாகக் குறைந்திருக்கிறது. 2011-12 நிதி ஆண்டில் 23.79 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, 2016-17 நிதியாண்டில் 10.45 லட்சம் டன்னாகக் குறைந்திருக்கிறது. இதனால் அவற்றின் பங்கு வர்த்தகமும் மோசமான நிலையை அடைந்துள்ளது. பல நிறுவனப் பங்குகளின் விலை 52 வாரக் குறைந்தபட்ச விலைக்கு இறக்கத்தைக் கண்டுள்ளன. வரும் பருவத்தில் இன்னும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், இவற்றின் விலை மேலும் இறங்கவே  வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், வட இந்திய சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 52 வார அதிகபட்ச விலையை நோக்கி ஏற்றம் கண்டு வருகின்றன. அந்தப் பகுதிகளில் உற்பத்தி அதிகரிக்கச் சாதகமான சூழ்நிலை நிலவுவதே அதற்குக் காரணம்.” 

இந்த நிதியாண்டில் பங்கு விற்பனையைவிட பங்குகள் திரும்பப் பெறப்பட்டிருப்பது அதிகமாக இருக்கிறதே?

‘‘இந்த நிதியாண்டில் இதுவரையில் நடந்த பங்கு விற்பனையைக் காட்டிலும் நிறுவனங்களால் திரும்ப வாங்கப்பட்ட பங்குகள் (பைபேக்) 2.3 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதாவது, இதுவரையிலான ஐந்து மாதங்களில் 20 பைபேக் திட்டங்களில் ரூ.23,500 கோடி மதிப்பிலான பங்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால், பொதுப் பங்கு வெளியீட்டில் விற்பனைக்கு விடப்பட்ட பங்குகளின் மதிப்பு ரூ.10,000 கோடி மட்டுமே. கடந்த நிதியாண்டிலும் 49 பைபேக் திட்டங்களில் ரூ.33,931 கோடி மதிப்பிலான பங்குகள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், 25 ஐ.பி.ஓ.களில் ரூ.28,225 கோடி மட்டுமே நிதி  திரட்டப்பட்டது. இது செபிக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், நிறுவனங்கள் தரப்பில் பார்க்கும்போது, புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக  இல்லாததால், பணத்தை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளித்து மேலும் தங்கள் நிறுவனப் பங்கின்மீதான கவர்ச்சியை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. இந்த நிலை மாறும் என்று செபி நம்புகிறது. ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஐ.பி.ஓ திட்டங்கள் தயாராகி வருவதாக செபி தரப்பில் சொல்லப்படுகிறது.’’

இறக்கத்தில் இருந்த கோல் இந்தியா பங்கு ஏற்றம் காணத் தொடங்கியிருக்கிறதே?

‘‘கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி 52 வார குறைந்தபட்ச விலையை அடைந்த கோல் இந்தியா, தற்போது ஏற்றத்தின் போக்கில் இருக்கிறது. கடந்த 12 மாதங்களாக பெரிய அளவில் நிலக்கரி கொள்முதல் நடக்காததால் மின் உற்பத்தி நிலையங்களில் தற்போது நிலக்கரிக்கான தேவை உருவாகியிருக்கிறது. எனவே, கோல் இந்தியாவுக்கு இதுவரை இருந்துவந்த சப்ளை தடையானது நீங்கியிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் கோல் இந்தியாவின் உற்பத்தி 16 சதவிகிதமும், சப்ளையானது 19 சதவிகிதமும் உயர்ந்திருக்கிறது. இதனால் இதுவரை இறக்கம் கண்டுவந்த கோல் இந்தியா பங்கு ஏற்றம் காணத் தொடங்கியிருக்கிறது. கடந்த வாரத்தில் இரு வர்த்தக தினங்களில் இந்தப் பங்கு 6% வரை ஏற்றம் கண்டது. இந்தப் பங்கில் ஏற்றத்தின் போக்கு உருவாகியிருப்பதால், ஒரு வருடத்தில் சுமார் 18% ஏற்றம் காண வாய்ப்புள்ளதாக அனலிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்” என்றவர், ‘‘சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்பதால், கவனிக்க வேண்டிய பங்குகள் எதுவும் வேண்டாமே’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

பி.ஏ.சி.எல் மீதான அபராதம் குறைப்பு!

மு
றையான அனுமதி எதுவும் இல்லாமல் அப்பாவி மக்களிடமிருந்து ரூ.49,100 கோடி டெபாசிட் திரட்டியதற்காக பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்கு, கடந்த 2015-ம் ஆண்டு ரூ.7,269.5 கோடி அபராதம் விதித்தது செபி. இவ்வளவு பெரிய தொகையை செபி, இதற்குமுன் விதித்ததே இல்லை. இந்த அபராதம் மிக அதிகம் என பி.ஏ.சி.எல் தரப்பில் செபியிடம் முறையிடப்பட்டது. இதனையடுத்து இந்த அபராதம் ரூ.2,423 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 66% குறைவு. ‘‘எங்களுக்கான இழப்பீடு கிடைப்பதற்கான வழி தெரியவில்லை. அப்படியிருக்க, கொள்ளையடித்தவர்களுக்கான அபராதத்தைக் குறைப்பது எப்படி நியாயம்?’’ என்று கேட்கிறார்கள் இந்தத் திட்டத்தில் பணத்தைப் போட்டு பரிதவிக்கும் மக்கள். அப்பாவி மக்கள் இழந்த தொகை மீண்டும் கிடைப்பதற்கு செபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.