நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

ஷேர்லக்: சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

ஓவியம்: அரஸ்

“இந்தியாவுக்கு புல்லட் ரயிலை மோடி கொண்டு வந்துவிட்டாரே... சென்னைக்கு எப்போது வருமாம்..?” எனக் கேட்டபடி உள்ளே வந்தார் ஷேர்லக். ‘‘முதலில் மெட்ரோ ரயில் வேலை முழுமையாக முடியட்டும். பிறகு புல்லட் ரயில் பற்றி யோசிப்போம்’’ என்று நாம் சொல்ல, ‘‘அப்ப கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்கிறீங்களா?’’ என சப்ஜெக்ட்டை மாற்றினார். நாம் கேள்வி களைக் கேட்க ஆரம்பித்தோம்.    

ஷேர்லக்: சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

“பி.எஸ்.இ பட்டியல் நிறுவனங்களின் மார்க்கெட் கேபிட்டலைசேஷன், வரலாற்று உச்சத்தை எட்டியிருக்கிறதே?” என்று நம் முதல் கேள்வியைக் கேட்டோம்.

“ஆம். சந்தையின் சமீபகால ஏற்றப் போக்கினால் பெரும்பாலான நிறுவனப் பங்கு விலைகள் 52 வார உச்ச விலையை எட்டியுள்ளன. மெட்டல், ஆட்டோ நிறுவனப் பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளன. இது சந்தையின் ஏற்றத்துக்கு உதவியாக அமைந்தது. பி.எஸ்.இ 30 குறியீட்டில் 25 பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. டாடா ஸ்டீல், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், ஹெச்.யு.எல் ஆகிய பங்குகள் விலை உயர்ந்ததால், பி.எஸ்.இ-ல் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மார்க்கெட் கேபிட்டலைசேஷன், வரலாற்று உச்சமான ரூ.135.83 லட்சம் கோடியை எட்டியது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் மார்க்கெட் கேபிட்டலைசேஷனில் ரூ.1.25 லட்சம் கோடி உயர்ந்தது அதிசயிக்கத்தக்க நிகழ்வு’’ என்றார்.

“கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளதே!’’ என்றோம் சற்று ஆச்சர்யத்துடன்.

‘‘சிறு முதலீட்டாளர்கள், பெருமளவு முதலீடுகளை மியூச்சுவல் ஃபண்டில் அதிகளவில் செய்ததன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வரலாற்று உச்சத்தை எட்டியது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.62 ஆயிரம் கோடி பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் மட்டுமே ரூ.20,362 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தொடர்ந்து 17 மாதங்களாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ரூ.2.2 லட்சம் கோடி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மட்டுமே      ரூ. 6.44 லட்சம் கோடி முதலீடாகியுள்ளது” எனப் புள்ளிவிவரங்களைத் தந்தார்.

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளைத் தொடர்ந்து விற்று வெளியேறுகி றார்கள். ஆனால், நம்மவர்கள் தொடர்ந்து வாங்குகிறார்கள். இது நல்லதுக்கா, இல்லை கெட்டதுக்கா?’’ என்று புது சந்தேகத்தைக் கிளப்பினோம். 

“உம் சந்தேகம், விஷயம் தெரிந்த சிலர் மட்டுமே எழுப்பும் சந்தேகம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகஸ்டில் மட்டும் இரண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றிருக்கிறார்கள். செப்டம்பரில் இதுவரை  800 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றுத் தள்ளியிருக் கிறார்கள். பங்கு மதிப்புகள் அதிக பிரீமியத்தில் இருப்பதும், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சரியில்லாத ஏமாற்றமும்தான் இதற்குக் காரணம். ஆனால், இதுபற்றியெல்லாம் நம்மவர்கள் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. சந்தையில் நேரடியாக இல்லாவிட்டாலும், ஃபண்டுகள் மூலம் மறைமுகமாகத் தொடர்ந்து முதலீடு செய்துவருவதால், ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்து வருகின்றன. இதனால் சந்தை பெரிய அளவில் இறங்காமலே இருக்கிறது” என்றவருக்குச் சூடான டீ தந்தோம். அதைக் குடித்தவர், நம் கேள்விகளுக்கு உற்சாகமாகப் பதில் சொல்ல ஆரம்பித்தார். 

“சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

‘‘கடந்த கேள்விக்கான பதிலின் தொடர்ச்சிதான் இந்தக் கேள்விக்கான பதிலும். நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பங்கு மதிப்புகள் வேறு உச்சத்தில் இருக்கின்றன. இந்த நிலையில், சந்தை இனி மேல்நோக்கி செல்வதற்குப் பதிலாக இறங்கவே வாய்ப்புண்டு என்றே மும்பை வட்டாரத்தில் பேச்சு. எனவே, நெகட்டிவ் செய்திகள் அடுத்தடுத்து வரும்பட்சத்தில், சந்தை இறங்கவே வாய்ப்புண்டு என்றே தலால் ஸ்ட்ரீட் வட்டாரத் தினர் பேசிக்கொள்கிறார்கள். ஏற்கெனவே முதலீடு செய்த பங்குகள் நல்ல லாபத்தில் இருந்தால், சந்தையின் போக்குக்கேற்ப கொஞ்சம் விற்று லாபம் பார்க்கலாம். அதைச் செய்ய விருப்பமில்லை என்றால், குறைந்தபட்சம் புதிய  முதலீடுகளை இப்போது செய்யாமல் இருக்கலாம். கொஞ்சம் காத்திருந்து, சந்தை இறங்கியபின் முதலீடு செய்யலாம்’’ என்று எச்சரித்தார்.

“வர்த்தக நேரத்தை நீட்டிப்பதற்கு முயற்சி நடந்ததே?” என்று வினவினோம்.


“இப்படியொரு பேச்சுவார்த்தை நடந்தாலும், தற்போதைய நிலையில், சந்தையின் வர்த்தக நேரம் மாற்றப்படாது என பி.எஸ்.இ-யின் தலைவர் ஆசிஷ்குமார் செளஹான் சொல்லி இருக்கிறார். இதனால் சந்தையின் வர்த்தகத்தை நிர்வகிப்பவர்களின் வேலைப்பளு அதிகமாகி, செலவும் அதிகரிக்கும். தவிர, இதனால் எந்த வகையிலும் பிசினஸ்  அதிகரிக்கும் என்று கூற முடியாது. எனவே, வர்த்தக நேரத்தை நீட்டிக்காமல் இருப்பதே நல்லது’’ என்றார். 

“அட்வான்ஸ்டு என்சைம் டெக்னாலஜீஸ் 5% விலை குறைய என்ன காரணம்?” என்று கேட்டோம்.


“கடந்த வாரத்தில் பெருமளவில் விலை குறைந்த பங்குகளில் இந்தப் பங்கும் ஒன்று.  கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.பி.ஓ வெளியிட்டு, பிறகு சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஐ.பி.ஓ வெளியீட்டில் அமோக வரவேற்பைப் பெற்றது. ஆனால், தற்போது அதன் பங்கு விலை குறையக் காரணம், அதன் காலாண்டு முடிவுகள் மோசமாக இருப்பதே ஆகும். இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியான செய்தியை அடுத்தே, இந்த விலை இறக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காலாண்டு முடிவு மட்டும் அல்ல, கடந்த மூன்று காலாண்டுகளிலும் இதன் நிதிநிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 43% நிகர லாபத்தை இழந்தது. வருவாயை ஈட்டும் சாத்தியக் கூறுகள் இருந்த நிலையிலும், கையகப்படுத்தல்களின் தாக்கத்தினால் அதன் வருவாய் குறைந்தது” என்று தெளிவான விளக்கத்தைத் தந்தார்.

“கோத்ரேஜ் அக்ரோவெட் ஐ.பி.ஓ-வுக்குத் தயாராகிவிட்டதே?”

“கோத்ரேஜ், தனது பகுதி நிறுவனமான கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் பங்குகளை ஐ.பி.ஓ மூலம் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ மூலம் ரூ.1000-1200 கோடி திரட்டவுள்ளது. கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தில் 60.8 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது’’ என்று பதில் சொன்னார்.

“ஃபண்ட் மேனேஜர்கள் முதலீடு செய்துள்ள புதிய பங்குகள் எவை?”


“மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருகிறது. அந்தப் பணத்தை ஃபண்ட் நிறுவனங்களும் திறம்படப் பயன்படுத்தி வருகின்றன. புதிய பங்குகளைத் தங்கள் போர்ட் ஃபோலியோக்களில் சேர்த்து வருகின்றன. ஐ.பி.ஓ பங்குகளிலும் அதிகக் கவனத்தைச் செலுத்தி வருகின்றன. இதுவரை ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்யாத பங்குகளில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கின்றன. அவற்றில் சன்டெக் ரியால்ட்டி, லக்ஸ் இண்டஸ்ட்ரிஸ், டி.எஃப்.எம் ஃபுட்ஸ், குஃபிக் பயோசயின்ஸ் ஆகியவை அடக்கம். இதில் ஆச்சர்யப்படும் விதமாக ஆகஸ்ட் மாதத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஹெச்.டி.எஃப்.சி, ஆதித்ய பிர்லா சன் லைஃப், எஸ்.பி.ஐ போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இன்ஃபோசிஸ் மற்றும் என்.டி.பி.சி பங்குகளில் முதலீட்டை அதிகரித்துள்ளன.”

“இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஐ.பி.ஓ வரத் தொடங்கிவிட்டனவே!’’ என்றோம்.

“எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் பொதுப் பங்கு வெளியீட்டில், பங்கு விலைப்பட்டை ரூ.685 முதல் ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.10 முக மதிப்பு கொண்ட 12 கோடி  பங்குகள் விற்பனை செய்யப் படுகின்றன. இதில், தகுதி வாய்ந்த பணியாளர் களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 20 லட்சம் பங்கு களும் அடங்கும். குறைந்தபட்சம் 21 பங்குகளுக்கும், அதற்கு மேல் 21 பங்குகளின் மடங்குகளிலும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வெளியீடானது வரும் 20-ம் தேதியன்று ஆரம்பித்து, செப்டம்பர் 22-ம் தேதியன்று முடிகிறது. இந்த வெளியீட்டின் மூலம் ரூ.8,400 கோடி நிதி திரட்டவுள்ளது. 

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஐ.பி.ஓ செப்டம்பர் 15 அன்று தொடங்கி, செப்டம்பர் 19, செவ்வாய்க்கிழமை நிறைவு பெறுகிறது. இதன்  பங்கு விலைப்பட்டை ரூ.651-661 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 22 பங்குகளுக்கும், அதற்கு மேல் அதன் மடங்குகளிலும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஃபண்ட் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் விரைவில்   ஐ.பி.ஓ. வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஸ்டாண்டர்ட் லைஃப் இன்வென்ஸ்ட்மென்ட்ஸ் இரண்டும் 39.9 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளன.

ஃபண்ட் நிறுவனங்கள் எதுவும் சந்தையில் இதுவரை ஐ.பி.ஓ வெளியிட்டதில்லை என்பதால், இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். 2016-17-ம் நிதியாண்டில் ரூ.550 கோடி நிகர லாபம் ஈட்டியது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.478 கோடி நிகர லாபம் ஈட்டியது. இது தவிர, ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும்,பொதுப் பங்கு விற்பனைக்குத் தயாராகி வருகின்றன’’ என்றவர் கிளம்பும்முன், ‘‘சந்தையின் போக்கு இனி எப்படி வேண்டு மானாலும் இருக்கும் என்பதால், உஷாராக இருக்க வேண்டும்’’ என்று எச்சரித்துவிட்டுக் கிளம்பினார் ஷேர்லக்.