
ஓவியம்: அரஸ்
மதியம் 3.30 மணி. ‘நிஃப்டி 157 புள்ளிகள் இறக்கம்...’ என்கிற செய்தியைப் படித்துவிட்டு, அன்று மாலை ஷேர்லக்கின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந் தோம். அவர் வந்தவுடன், “நீர் சொன்னது நடந்துடுச்சே” என்றோம்.

கடந்த வாரம் அவர், ‘‘சந்தை இனி மேல்நோக்கிச் செல்வதற்குப் பதிலாக இறங்கவே வாய்ப்புண்டு’’ எனச் சொல்லியிருந்தது வாரக் கடைசியில் நிஜமானதை எடுத்துச் சொன்னோம். லேசாக புன்னகைத்தவர், மேற்கொண்டு நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘சொல்லுங்கள், சந்தை சரிவுக்கு என்ன காரணம்?’’
‘‘உலக நிலைமையும், உள்ளூர் நிலைமையும்தான் காரணம். உலக அளவில், அமெரிக்கா - வட கொரியா மோதல் போக்கு வலுவடைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஐ.நா சபையில் பேசிய பேச்சு உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டைப் பொறுத்தவரை, நம் பொருளாதாரம் சரியில்லை என ஆளும்கட்சியினரே பேசத் தொடங்கியிருக்கின்றனர். சுமார் 50,000 கோடி ரூபாய் அளவுக்குச் சலுகைகளை அறிவித்து, தொழில் வளர்ச்சியை முடுக்கிவிட நினைக்கிறது மத்திய அரசாங்கம்.
பொருளாதார நிலை சரியில்லாததாலும், சந்தையின் வேல்யூவேஷன் அதிகளவில் இருப்பதாலும், சந்தை மேற்கொண்டு மேலே செல்வதற்குப் பதிலாக, கொஞ்சம் கீழே இறங்கியிருக்கிறது. இன்று (வெள்ளிக்கிழமை) நிஃப்டி 157 புள்ளிகள் இறங்கியிருந்தாலும், இதை மிகப் பெரிய இறக்கம் என்று சொல்ல முடியாது.
வரும் வாரத்தில் பெரிய அளவில் பாசிட்டிவ் செய்திகள் இல்லாதபட்சத்தில், சந்தை இன்னும் கூட இறங்கலாம். சந்தை 9900 புள்ளிகளுக்குக் கீழே இறங்கும்பட்சத்தில் 9600 புள்ளிகள் வரை இறங்க வாய்ப்புண்டு என்கிறார்கள். பார்ப்போம், அடுத்த வாரம் என்ன நடக்கிறதென்று.’’
‘‘நிதிச் சேவை நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளதே!’’
‘‘பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளால் வங்கிகளின் முக்கியத்துவம் மிகவும் அத்தியாவசியமாகி விட்டது. இதனால் வங்கிகளின் நிதிநிலை மேம்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், அவற்றின் பங்கு விலையும் கணிசமான ஏற்றத்தைக் கண்டிருக்கிறது. இதனால், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங் களின் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் பங்களிப்பு, மார்ச் 2014-ல் காணப்பட்ட 17.2 சதவிகிதத்திலிருந்து தற்போது 22.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஐ.டி, பார்மா போன்ற துறைகள் அழுத்தத்தில் உள்ள நிலையில், தற்போது வேகமாக வளரும் துறையாக வங்கி மற்றும் நிதிச் சேவை உள்ளது.’’
‘‘ஐ.பி.ஓ வெளியீடுகளின் சராசரி வெளியீட்டு மதிப்பு இந்த வருடம் அதிகமாகி யிருக்கிறதே?’’
‘‘ஐ.பி.ஓ சந்தைக்குத் தொடர்ந்து அமோக வரவேற்பு கிடைப்பதாலும், நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடுவதில் அதிக ஆர்வத்துடன் இருப்ப தாலும், அதிக எண்ணிக்கையில் ஐ.பி.ஓ-க்கள் வந்தபடியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெளியான ஐ.பி.ஓ-க்களின் சராசரி வெளியீட்டு மதிப்பானது, முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 23 ஐ.பி.ஓ-க்கள் வெளியிடப்பட்டு ரூ.30,385 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இவற்றின் சராசரி வெளியீட்டு மதிப்பு ரூ.1,321 கோடியாக இருக்கிறது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 30% அதிகம். அதே சமயம், 2010-ம் ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்காகும். இன்னும் பல ஐ.பி.ஓ வெளியீடுகள் காத்திருக்கின்றன.’’
‘‘ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் ஐ.பி.ஓ-வுக்கு வரவேற்பு எப்படி?’’
‘‘ஏற்கெனவே ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் ஐ.பி.ஓ வந்து நல்ல வரவேற்பு பெற்று, சந்தையிலும் சிறப்பாகச் செயலாற்றியது. இந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தின் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட்டது. இந்த வெளியீட்டிலும் வரவேற்பு நன்றாகவே இருந்தது. அதனால் 6.16 கோடி பங்குகள் வெளியீட்டுக்கு, 18.34 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதாவது, மூன்று மடங்கு கூடுதலாக விண்ணப்பம் ஆகியிருக்கிறது.’’
‘‘டிக்சன் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்கின் முதல் நாள் வர்த்தகம் எப்படி?’’
‘‘சமீபத்தில் ஐ.பி.ஓ வெளியீட்டுச் சந்தையில் பட்டியலான டிக்சன் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்கு, தனது முதல் நாள் வர்த்தகத்திலேயே சிக்ஸர் அடித்தது. கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான இது, தனது முதல் நாள் வர்த்தகத்திலேயே வெளியீட்டு விலையைக் காட்டிலும் 64 சதவிகித ஏற்றத்தைக் கண்டது. ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.1,766-க்கு விற்பனை செய்யப்பட்ட பங்குகள், சந்தையில் ரூ. 2,725-க்குப் பட்டியலானது. பட்டியலான அன்றைய வர்த்தகத் தில் ரூ.2,892 வரை உயர்ந்து வர்த்தகமானது.
மேட்ரிமோனி.காம் பங்கு விலை, முதலிரண்டு நாள்களிலேயே 15 சதவிகிதத்துக்கு மேல் விலை இறக்கம் கண்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று வர்த்தகமாகத் தொடங்கிய ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், 115 - 130 ரூபாய்க்குள் வர்த்தகமாகலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தப் பங்கின் விலையும் குறையவே செய்தது.’’
‘‘ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை மேலும் குறைக்குமா?’’
‘‘ரூபாயின் மதிப்பு, சமீபகாலமாக வலுவிழந்து வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பில்லை. மேலும், ரிசர்வ் வங்கியானது அந்நியச் செலாவணியின் இருப்பை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. அதற்காகக் கடன் பத்திரங்களை விற்று, அதிகபட்ச லிக்விடிட்டியைக் குறைத்து, அந்நியச் செலாவணியை அதிகரிக்க இருக்கிறது. இதன் மூலம்தான், கடந்த வாரத்தில் நம்முடைய அந்நியச் செலாவணி இருப்பு முதன்முறையாக 400 பில்லியன் டாலர் என்ற நிலையைத் தாண்டி யிருக்கிறது. ரூபாய் மதிப்பு சரிந்துவருவதால், ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு, வேலைவாய்ப்பு உருவாவதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரூபாய் மதிப்புச் சரிவைக் கட்டுப்படுத்த, வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இருக்கவே ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும்.’’
‘‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் அதிக ஹோல்டிங்ஸ் வைத்திருக்கிறார்களே?’’
‘‘நடப்பு 2017-18-ம் நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில், சென்செக்ஸ் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஹோல்டிங்ஸ் அதிகரித்துள்ளது. அவ்வப்போது முதலீடுகளை விற்று வெளியே எடுத்து வந்தாலும், அவர்களும் முதலீடு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி நடைமுறை, சாதகமான பருவ நிலை போன்றவைதான் இதற்கு முக்கியக் காரணங்களாகும். சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம், 2017 ஜூன் மாத இறுதியில் 28.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது, 2017 மார்ச் இறுதியில் 26.3 சதவிகிதமாக இருந்தது. இதனோடு நம்மவர்களும் தொடர்ந்து நேரடியாகவும், மியூச்சுவல் ஃபண்ட் மூலமாகவும் முதலீடு செய்வது வருவதும் குறிப்பிடத்தக்கது.’’
‘‘ஈக்விட்டி ஃபண்டுகளிடம் கையிருப்பில் இருக்கும் பணம் அதிகமாக இருக்கிறதே!’’
‘‘மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு குவிந்திருக்கிறது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் ரூ.81 ஆயிரம் கோடியும், பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ரூ.53 ஆயிரம் கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் ஆர்வமாக முதலீடு செய்தாலும், ஃபண்ட் நிறுவனங்கள் அவற்றை முதலீடு செய்வதற்கான சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இதனால் ஃபண்ட் நிறுவனங்கள், தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தை அதிகரித்து வருகிறது. ஈக்விட்டி திட்டங்களில் மட்டுமே ரூ.50 ஆயிரம் கோடி கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.’’
‘‘இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.20 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறதே?’’
‘‘வங்கிகள், டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துவிட்ட நிலையில், முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் தான் வருமானம் ஈட்ட ஒரே வழியாக மாறியுள்ளது. இதனால் முதலீடுகள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட்டில் ஈக்விட்டி திட்டங்களில் ரூ.21,352 கோடி, பேலன்ஸ்டு திட்டங்களில் ரூ.8,783 கோடி மற்றும் இன்கம் ஃபண்டுகளில் ரூ.8,390 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன. எஸ்.ஐ.பி திட்டங்களில் ஆகஸ்ட்டில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5,206 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால்தான், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.20.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது” என்றவர், “சந்தை இனி இறங்க வாய்ப்புள்ளதால், எல்லாப் பங்குகளுமே கவனிக்க வேண்டிய பங்குகள்தான்” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.