
டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்
கடந்த இதழில், நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி குறியீடுகளின் சார்ட்டுகளில் கரடியின் ஆதிக்கம் கொண்ட பேட்டர்ன்கள் உருவாகியிருப்பதைச் சொல்லியிருந்தேன். இத்தகைய பேட்டர்ன்களால் வரும் வாரத்தில் சில நாள்களுக்குக் கரடியின் ஆதிக்கம் தொடரவே வாய்ப்புள்ளது. அது, கடந்த வாரத்தின் முதல் நாளிலிருந்தே தொடங்கிவிட்டது. அடுத்தடுத்த நாள்களில் அதன் தாக்கம் மேலும் அதிகரித்து, நிஃப்டியானது 9700 என்ற நிலைக்குக் கீழிறங்கியது.

இதனால் பல பங்குகள் விலைச் சரிவைக் கண்டன. பெரும்பாலான வர்த்தகர்கள் இழப்பைச் சந்தித்தனர். இதேபோன்ற ஓர் இறக்கத்தை முன்பே, கடந்த ஆகஸ்ட்டில் நாம் பார்த்தோம்.
ஆனால், அந்த இறக்கத்தின்போது சந்தை மீண்டும் எழுந்துவர முயற்சியெடுத்தது. ஒருவாரம் கழித்து மீண்டு வந்தது. இந்த முறை சந்தை தொடர்ந்து இறக்கத்தைச் சந்திப்பதுடன், பல பங்குகளின் விலைச் சரிவுக்கும் வழிவகுத்தது.

பேங்க் நிஃப்டியின் சார்ட் பேட்டர்ன், நிஃப்டியின் சார்ட் பேட்டனுடன் ஒப்பிட்டால், கூடுதல் நெகட்டிவ் போக்கைக் கொண்டிருந்தது. ஏனெனில், அந்த ஆகஸ்ட் மாத இறக்கத்துக்குப்பிறகு நிஃப்டி புதிய உச்சத்தை அடைந்தது.
ஆனால், சந்தை இனி எப்படி யிருக்கும் என்பது கேள்விக் குறியாகவும், கூர்ந்து கவனிக்கத் தக்கதாகவும் மாறியுள்ளது.
ஒருவேளை, சந்தை வங்கிப் பங்குகளுக்குச் சாதகமான நிலையை அவ்வளவு எளிதாக உருவாக்க அனுமதிக்காது என்பதற்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், நிஃப்டிக்கும் கடினமான காலம்தான். ஏனெனில், வங்கிகளின் பங்கு நிஃப்டியில் அதிகமாக உள்ளது.
மேலும், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் இரண்டிலும் பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த இழப்பானது சந்தையின் மீதான பாசிட்டிவ் சென்டிமென்டைக் கொஞ்சம் பலவீனமாக்கி இருக்கிறது. இந்த நிலையில், சந்தையானது ஏற்றத்தை நோக்கி வலுவாக நகர்வது கொஞ்சம் சிரமம் என்றே தோன்றுகிறது.
வரும் வாரத்தில் சந்தைக்கு பாசிட்டிவான செய்திகள் வராத பட்சத்தில் சந்தையின் போக்கு இறக்கத்தில்தான் தொடரும்.
அதன்படி, நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 9900-9950 என்ற வரம்புக்கு மீண்டு வரும்பட்சத்தில் மட்டுமே ஏற்றத்தின் போக்கை நாம் எதிர்பார்க்கலாம்.
வரும் வாரத்தில் சந்தை இறக்கமானது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், பல பங்குகளின் விலை இறங்கும் என்பதை மறக்கக் கூடாது.

அசோக் லேலாண்ட் (ASHOKLEY)
தற்போதைய விலை: ரூ.116.75
வாங்கலாம்
அசோக் லேலாண்ட் பங்கில் வலுவான விலை ஏற்றத்தின் போக்கு உருவாகியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தையில் வர்த்தகம் ஆரம்பிக்கும்போதே இந்தப் பங்கின் விலை நகர்வு முன்னணியில் இருந்தது. இதன் மூலம், இந்தப் பங்கில் காளையின் ஆதிக்கம் இருப்பதையும், வாய்ப்பு கிடைக்கும்போது உச்சங்களுக்குச் செல்லும் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். வரும் வாரத்தில் ரூ.122-125 வரை உயரும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.110 வைத்துக்கொள்ளவும்.

கோல் இந்தியா (COALINDIA)
தற்போதைய விலை: ரூ.267.80
வாங்கலாம்
சார்ட்டில் நல்ல பேட்டர்ன்களைக் கொண்ட லார்ஜ் கேப் பங்குகள், சந்தையின் தற்போதைய இறக்கநிலையில்கூட பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு குறைவுதான். அத்தகைய பங்குகளில் ஒன்றாக கோல் இந்தியா உள்ளது.
இதன் சார்ட் பேட்டர்ன்களில் நல்ல இன்வெர்ட்டட் ஹெட் மற்றும் ஷோல்டர் பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது.
இந்த நிலையில், இந்தப் பங்கானது தனது பிரேக்அவுட் நிலையைத் தாண்டி ஏற்றமடையத் தயாராக உள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். அடுத்த சில வாரங்களில் ரூ.290 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.260-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

ரெய்ன் இண்டஸ்ட்ரிஸ் (RAIN)
தற்போதைய விலை: ரூ.173.20
வாங்கலாம்
சாதகமான சர்வதேச சூழல், சமீப காலங்களில் காணப்பட்ட பாசிட்டிவான நிதிநிலை முடிவுகள் ஆகியவை காரணமாக, இந்தப் பங்கில் கடந்த சில மாதங்களாகவே நிலையான ஏற்றம் இருந்துவந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக, ஏற்ற இறக்கமில்லாத நிலை இந்தப் பங்கில் உருவானது. தற்போது, அது முடிவுக்கு வந்து மீண்டும் ஏற்றமடையத் தயாராக இருக்கிறது.
மேலும், இந்தப் பங்கில் ஏற்றம் ஏற்படும்போது வால்யூம் அதிக மாகவும், இறக்கத்தின்போது வால்யூம் குறைவாகவும்தான் வர்த்தகமாகிறது. இது காளையின் ஆதிக்கத்தை உறுதி செய்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். சில மாதங் களில் ரூ. 195 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.165 வைத்துக் கொள்ளவும்.
தொகுப்பு: ஜெ.சரவணன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.