
இறங்கிய சந்தை... இனி என்ன ஆகும்?
இந்த ஆண்டில் நமது பங்குச் சந்தை அவ்வப்போது சரிவைச் சந்தித்தாலும், மீண்டும் இயல்புநிலைக்கு எளிதில் திரும்புவதாகவே இருந்தது. ஆனால், சந்தை சமீபத்தில் சந்தித்திராத அளவுக்குக் கடந்த வாரம் சரிவைச் சந்தித்தது. இதற்கு, இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் சரிவு, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி உயர்வு தொடர்பான அறிகுறிகள், அமெரிக்கா - வட கொரியா நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றம், இந்திய ராணுவம், மியான்மர் எல்லையில் நடத்திய திடீர்த் தாக்குதல் மற்றும் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறிவருவது எனப் பல காரணங்கள் உள்ளன. நமது சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் செய்த முதலீடுகள் தொடர்ந்து குறைந்துவருகிற காரணத்தினால், அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 66 ரூபாய் வரை சரிந்தது. இதனால், கடந்த வாரத்தில் முதல் மூன்று நாள்களில் சந்தை சரியவே செய்தது.

பெரிய பாதிப்பு இல்லை
இந்த நிலையில், பங்குச் சந்தை மேலும் குறையுமா என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் பேசினோம்.
“பொதுவாக, பண்டிகைக் காலத்தில் முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்பனை செய்து லாபத்தை வெளியே எடுப்பது வாடிக்கை. இப்போது பண்டிகை சீஸன் என்பதால், இதே நிலை தொடர்கிறது. இப்போது இந்தியப் பொருளாதார வீழ்ச்சி, வட கொரியாப் போர் பதற்றம் என ஒரு சில காரணங்களால் சந்தை சரிவடைந்து வருகிறது. இதனால் நமது பங்குச் சந்தைகளுக்குப் பெரிய பாதிப்பு எதுவுமில்லை. சந்தை தற்போது கொஞ்சம் சரிவடைந்தாலும், விரைவில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்.
சந்தை, தற்போது சரிவடைந்த நிலையில் இருப்பதை பாசிட்டிவாகவே பார்க்கலாம். நிஃப்டி 10178 புள்ளிகளிலிருந்து இப்போது 9768 புள்ளிகளுக்கு இறங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் சுமார் 300 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. இது ஒன்றும் பெரிய சரிவல்ல. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தை முதலீட்டுக்கான நல்லதொரு வாய்ப்பாகக் கருதி, பங்குச் சந்தையில் முதலீடு மேற்கொள்ளலாம்.
தற்போது 9640 புள்ளிகளில் நிஃப்டிக்கு நல்ல சப்போர்ட் இருக்கிறது. செப்டம்பர் 30-ம் தேதியுடன் இரண்டாம் காலாண்டு முடிவடைந்துவிடும். அக்டோபரில் நிறுவனங் களின் காலாண்டு முடிவுகள் வெளிவர ஆரம்பிக்கும். வரும் காலாண்டு முடிவு களைப் பொறுத்தே சந்தையின் ஏற்ற இறக்கம் அமையும். ஒருவேளை, காலாண்டு முடிவுகள் சந்தைக்குச் சாதகமாக அமையும்பட்சத்தில், சந்தை உடனடியாக மேல்நோக்கி நகரவே அதிக வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி, பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. சந்தை கொஞ்சம் சரிவடைந்துள்ளதால், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கூடுதலான முதலீடு சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இப்போது சந்தை சுமார் மூன்று சதவிகிதம் வரை சரிவடைந்துள்ளது. இனிமேல் அதிகபட்சமாக 5% வரை சரிவடையலாம். ஆனால், நிஃப்டி 9640 புள்ளிகளுக்குக் கீழே இறங்கி வர்த்தகமாகும்பட்சத்தில் மட்டுமே சந்தை மேலும் சரிவடைய அதிக வாய்ப்புள்ளது. சந்தை இறங்கினாலும், இனிவரும் ஆண்டுகளில் நீண்ட காலத்தில் தொடர்ந்து அதிகரிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
இப்போது பண்டிகைக் காலம் என்பதால், ரீடெய்ல், மீடியா, சுற்றுலா போன்ற துறை சார்ந்த பங்குகள் சிறப்பாகச் செயல்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதில் குறிப்பாக, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஐநாக்ஸ், பி.வி.ஆர், சன் டி.வி, ஜீ என்டர்டெய்ன் மென்ட், டிபி கார்ப், டீ மார்ட் அவென்யூ, ட்ரென்ட்ஸ் போன்ற பங்குகள் மிகச் சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கலாம். இந்தப் பங்குகளில் முதலீட்டை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டலாம்” என்றார் அவர்.
இது ஓர் அருமையான வாய்ப்பு
சந்தை கண்டிருக்கும் இறக்கம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகருடன் பேசினோம்.
“இந்திய பங்குச் சந்தையின் மதிப்பீடு இதற்கு முன்பு அதிகமாக இருந்தது. குறைந்துவந்த பொருளாதார வளர்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்புக் குறைவு மற்றும் கமாடிட்டிப் பொருள்களின் தாக்கத்தினால் சந்தை சரிவடைந்துள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால், கடந்த சில காலாண்டுகளில் நிறுவனங்களின் லாபம் குறைந்தது. ஜி.எஸ்.டி-யினால் இரண்டாம் காலாண்டு முடிவுகூட சிறப்பாக இருக்காது எனக் கூறப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 62, 63 எனச் சமீபகாலம் வரை இருந்தது. இப்போது அது கிட்டத்தட்ட 66- ஐ நோக்கிச் சரிவடைய ஆரம்பித்துள்ளது. இதற்கு முன் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்குக் கீழ் இருந்தது. இப்போது 56 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும், பிற கமாடிட்டி பொருள்களின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. என்றாலும், இவையெல்லாம் தற்காலிகமான நிகழ்வுகள்தான். சந்தையைப் பொறுத்தவரை, அடிப்படை பெரிதாக மாற்றமடையவில்லை.
ஆனால், மத்திய அரசாங்கமானது பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி எனத் தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை ஒரே சமயத்தில் மேற்கொள் வதால் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சந்தை இப்போது நல்ல நிலையில் இருக்கிறது. நிஃப்டி 9,600 புள்ளிகளுக்குக் கீழே இறங்காதபட்சத்தில், சந்தை மீண்டும் மேல்நோக்கி நகரும்.
சந்தை இப்போது கொஞ்சம் சரிவடைந்தாலும், முதலீட்டாளர்கள் ஓர் அருமையான வாய்ப்பாகவே பார்க்க வேண்டும். இதுபோன்ற சமயத்தில், நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கலாம்.
குறிப்பாக, எல் அண்ட் டி, ரிலையன்ஸ், டி.சி.எஸ், கோட்டக் வங்கி, ஏ.சி.சி, ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பவர்கிரிட் ஆகிய பங்குகளில் நீண்ட கால நோக்கில் முதலீட்டை மேற்கொண்டு லாபம் ஈட்டலாம்” என்றார் அவர்.
நிபுணர்களின் ஆலோசனைப்படி, நல்ல பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ளலாமே.
- சோ.கார்த்திகேயன்