நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: இறக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஃபண்ட் நிறுவனங்கள்!

ஷேர்லக்: இறக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஃபண்ட் நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: இறக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஃபண்ட் நிறுவனங்கள்!

ஓவியம்: அரஸ்

யுத பூஜை காரணமாக வியாழனன்றே இதழ் முடிக்கும் பணியில் நாம் தீவிரமாக இருந்தோம். வழக்கமாக ஷேர்லக் வரவேண்டிய நேரத்துக்கு வரவில்லை என்பதால், செல்போனில் அவரை அழைத்தோம். ‘‘மழை காரணமாக வீட்டில் முடங்கிவிட்டேன். போனிலேயே செய்திகளைச் சொல்லிவிடுகிறேனே’’ என்றார். உடனே நாம் கேட்ட கேள்விகளும், அதற்கு ஷேர்லக் சொன்ன பதில்களும் இனி...   

ஷேர்லக்: இறக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஃபண்ட் நிறுவனங்கள்!

கடந்த வாரம், தொடர்ந்து பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்து வந்தது. சந்தையின் போக்கு மாறிவிட்டதா?

‘‘கடந்த வாரத்தில் முதல் மூன்று நாள்களில் சந்தை இறக்கத்தைச் சந்தித்தது. அனலிஸ்டுகள் பலர், இந்த இறக்கத்தை ஆரோக்கியமான நிகழ்வாகவே பார்க்கின்றனர். 

இந்திய பங்குச் சந்தை, கடந்த புதன் வரை ஏழு வர்த்தக தினங்களாகவே தொடர் இறக்கத்தில் இருந்தது. வியாழனன்று  சந்தை மீண்டும் மெள்ள ஏற்றமடைய ஆரம்பித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் தொடர்ந்து வெளியே எடுத்துவரும் நிலையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியானது, இந்திய நுகர்வுச் சந்தை பாசிட்டிவாக இருப்பதைக் காட்டுகிறது. எனவே, சந்தையின் இந்த இறக்கத்தில் நல்ல பங்குகளைத் தாராளமாக வாங்கலாம்.’’

‘‘சந்தை சரிவில் இருக்கும் நிலையிலும் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்திருக்கின்றனவே?’’

‘‘உள்ளபடி பார்த்தால், இந்தியப் பங்குச் சந்தையின் இறக்கத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது நம் நாட்டு ஃபண்ட் நிறுவனங்கள்தான். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியே எடுத்துவரும் நிலையில், ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் சந்தையை விழாமல் தடுத்து வருகின்றன. இறக்கத்தின்போது செய்யும் முதலீடு எதிர்காலத்தில் அதிக வருமானத்தைத் தரக்கூடியதாக அமையலாம். எனவே, சந்தை இறக்கத்துக்காகப் பலரும் காத்திருந்தார்கள் என்றே சொல்லலாம். இந்த மாதத்தில் மட்டும் இதுவரை ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நமது ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்துள்ளன.’’

‘‘2028-க்குள் சென்செக்ஸ் 1,00,000 ஆகும் என்கிறதே மார்கன் ஸ்டான்லி?’’

‘‘தற்போது இந்திய உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் இந்தியாவின் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை அடையும் என்று மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 2028-க்குள் சென்செக்ஸ் 1,00,000 புள்ளிகளாக வளர்ச்சியடையவும் வாய்ப்புள்ளது என்கிறது.

இந்தக் காலகட்டத்தில், பங்குச் சந்தையின் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் தற்போதுள்ள இரண்டு ட்ரில்லியன் டாலர் என்கிற நிலையிலிருந்து 6.1 ட்ரில்லியன் டாலராக வளரும் என்றும் கூறியுள்ளது. இதன்மூலம் டாப் 5 பங்குச் சந்தைகளில் ஒன்றாக இந்தியப் பங்குச் சந்தைகள் மாறும் என்கிறது.

இந்த வளர்ச்சிக்கு டிஜிட்டல் மாற்றம், மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியானது இந்திய ஜி.டி.பி-யை 0.5- 0.75 சதவிகிதம் வரை உயர்த்தும். எனவே, அடுத்தப் பத்தாண்டுகளில் இந்திய
ஜி.டி.பி-யானது 7.1 முதல் 11.2 சதவிகிதம் என்ற நிலையில் வளர்ச்சியடையும் என்கிறது. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் ஆண்டுக்கு 22 சதவிகிதக் கூட்டு வளர்ச்சியை அடைந்து, பத்து ஆண்டுகளில் 1.9 ட்ரில்லியன் டாலராக வளர்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளது. மார்கன் ஸ்டான்லியின் இந்தக் கணிப்பு உண்மையானால் இந்தியா, சர்வதேச அளவில் வலுவான பொருளாதாரப் பலம் கொண்ட நாடாக விளங்கும்.’’ 

‘‘பி.ஹெச்.இ.எல் போனஸ் பங்குகள் தர இருக்கிறதே?’’

‘‘பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் (பி.ஹெச்.இ.எல்) இரண்டு பங்குக்கு ஒரு பங்கு வீதம் போனஸ் பங்கு வழங்க முடிவு செய்துள்ளது. அத்துடன் 39% டிவிடெண்டும் வழங்கவுள்ளது. இதற்கு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 2016-17-ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் அளித்துள்ள மொத்த டிவிடெண்ட் 79 சதவிகிதமாக உள்ளது. இந்த போனஸ் பங்கு மூலம் இந்த நிறுவனத்தின் பங்கு எண்ணிக்கை 244.76 கோடி பங்குகளிலிருந்து 367.14 கோடி பங்குகளாக உயர்கிறது. மேலும், அதன் பங்கு மூலதனம் ரூ.489.50 கோடியிலிருந்து ரூ.734.30 கோடியாக உயர்கிறது. இதன் பண இருப்பு மற்றும் உபரித் தொகையானது மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, ரூ.31,800 கோடியாக இருக்கிறது. போனஸ் வழங்குவதற்கு இதுவே காரணமாகும்.’’ 

‘‘இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக் குறைவதால்,  சந்தைக்குப் பாதகம் இருக்குமா?’’

‘‘பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம் உள்ளிட்ட சில பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இந்தியப் பொருளாதாரத்தைக் குறுகிய காலத்துக்குக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதை மறுக்க முடியாது. இதனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி, குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், துறை வாரியாகப் பார்க்கும்போது, பெரும்பாலான துறைகளில் வளர்ச்சி இருக்கவே செய்கிறது. இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை யிலிருந்து முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர்.

இந்த வருடத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் முறையே 21.9% மற்றும் 20% ஏற்றம் கண்டு, சர்வதேச சந்தைகளில் வேகமாக வளர்ந்து வந்தநிலையிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கடந்த ஏழு வாரங்களில் 2.66 பில்லியன் டாலர் முதலீட்டை வெளியே எடுத்திருக்கின்றனர்.

அதேசமயம், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதை ஈடுகட்டும் வகையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். எனவே, மேக்ரோ அளவிலான காரணிகள் சந்தையைப் பாதித்தாலும்கூட , நல்ல நிறுவனப் பங்குகளின் செயல்பாடுகளால் சந்தை, தன்னுடைய போக்கில் நிலைத்தன்மையுடன் இருக்கும் என்று நம்பலாம்.’’

‘‘கோத்ரேஜ் அக்ரோவெட் ஐ.பி.ஓ தயாராக இருக்கிறதே?’’


‘‘கோத்ரேஜ் அக்ரோவெட், ஐ.பி.ஓ வெளியிடத் தயாராகிவிட்டது. இந்த நிறுவனம், பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் டைவர்சிஃபைடு நிறுவனமாக விளங்குகிறது. இந்த வெளியீட்டின் மூலம் ரூ.1,160 கோடி திரட்ட வுள்ளது.
கோத்ரேஜ் இண்டஸ்ட்ரிஸ், தற்போது கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தில் 63.67 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த டேமாசெக் ஹோல்டிங்ஸ் 20 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது. இந்த விற்பனையில் பங்கு விலைப்பட்டை ரூ.450-460 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை விற்பனை நடக்கிறது. ஐ.பி.ஓ வெளியீடு செய்தி வெளியானதும், கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் 4% வரை கோத்ரேஜ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனப் பங்கு விலை ஏற்றம் கண்டது.’’

‘‘பிரதாப் ஸ்நாக்ஸ் ஐ.பி.ஓ-வுக்கு வரவேற்பு எப்படி?’’

‘‘பிரதாப் ஸ்நாக்ஸ், கடந்த வாரம் ஐ.பி.ஓ வெளியிட்டது. பங்கு விலைப் பட்டை ரூ.930-938. இந்த விற்பனையில் 36 லட்சம் பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஆனால், 47 மடங்கு அதிகமாக 17.16 கோடி பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.  மொத்தம் 9 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அங்கீகரிக்கப் பட்ட நிறுவன முதலீட்டாளர்கள் 77.58 மடங்கு அதிகமாகவும், நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் 101.52 மடங்கு அதிகமாகவும், சிறு முதலீட்டாளர்கள் 8.37 மடங்கு அதிகமாகவும் விண்ணப்பித்துள்ளனர்.’’

‘‘ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் பங்கின் முதல் நாள் வர்த்தகம் எப்படி?’’

‘‘ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் சமீபத்தில் ஐ.பி.ஓ வெளியிட்டு, கடந்த வாரம் புதன்கிழமையன்று பங்குச் சந்தையில் பட்டியலானது. ஐ.பி.ஓ-வில் விலைப்பட்டை ரூ.661-ஆக இருந்தது. ரூ.651-க்குத் தள்ளுபடி விலையில் பட்டியலானது. அன்றைய வர்த்தகத்தில் இதன் 3.46 கோடி பங்குகள் வர்த்தகமாயின. வால்யூம் 59.12 லட்சம் பங்குகளாக இருந்தது. முதல் நாள் வர்த்தகத்தில் ஓரளவுக்கு வரவேற்பு இருந்ததால், அன்றைய வர்த்தக முடிவில் 4.81% உயர்ந்து, ரூ.681.55-க்கு நிறைவுற்றது.’’ 

‘‘சமீபத்திய சரிவில் ஸ்மால் மற்றும் மிட்கேப் குறியீடுகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. காரணம்?’’

‘‘கடந்த ஏழு நாள் வர்த்தகத்தில் சந்தை இறக்கத்தைச் சந்தித்தது. இதனால் முதலீட்டாளர் களின் ரூ.6 லட்சம் கோடி முதலீடு காணாமல் போனது. ஆனால், குறியீடுகளின் செயல்பாடு களைப் பார்க்கும்போது, மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள்தான் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. நிஃப்டி மிட் கேப் 5 சதவிகிதமும் நிஃப்டி ஸ்மால் கேப் 7 சதவிகிதமும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. ஆனால், நிஃப்டி 50 குறியீடு 3.5 சதவிகிதமே  இறக்கத்தைச் சந்தித்துள்ளது.

இதற்குக் காரணம், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளிலிருந்து, வெளிநாட்டு முதலீட்டாளர் கள் பெருமளவு முதலீடுகளைத் தொடர்ந்து வெளியே எடுத்திருக்கின்றனர். முதலீடுகள் மேலும் வெளியேறுமானால் இந்தக் குறியீடு களிலுள்ள பங்குகளின் விலை குறையலாம். எனவே, புதிதாக இந்தப் பங்குகளில் லாங் பொசிஷன் எடுப்பதைத் தவிர்க்குமாறு என் அனலிஸ்ட் நண்பர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.

அதே சமயம், இந்த வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரையிலான காலத்தில் நிஃப்டி 50, நிஃப்டி 500 குறியீடுகள் முறையே 23 மற்றும் 27 சதவிகிதமே வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால் கேப் இரண்டும் முறையே 31%  மற்றும் 49% வளர்ச்சி கண்டுள்ளன.’’

‘‘ஜீவன் சுரக்‌ஷா எனர்ஜி நிறுவனம்  சந்தையில் செயல்படத் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே?’’

‘‘சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, ஜீவன் சுரக்‌ஷா எனர்ஜி அண்ட் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்துக்குப் பங்குச் சந்தையில் செயல்பட தடை விதித்திருக்கிறது. காரணம், 2012-13 காலத்தில் இந்த நிறுவனம், ரூ.25.82 லட்சம் மதிப்புள்ள பங்குகளை, 125 பேருக்கு மீட்கக்கூடிய பங்குகளாக (redeemable preference shares) வழங்கியதை செபி கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனம் பொது விற்பனைக்கான நிபந்தனைகளை மீறியதற்காகத் தடை விதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இந்தப் பங்கை வைத்திருப்பவர்கள் உடனே விற்றுவிட்டு, வெளியேறுவது நல்லது’’ என்றவர், ‘‘சந்தை சரியான பின்பு ஃபாலோ செய்ய வேண்டிய பங்குகளைச் சொல்கிறேன்’’ என்றபடி செல்போனைத் துண்டித்தார்.

டிரேடர்ஸ் பக்கங்கள் பகுதியை இணையதளத்தில் படிக்க : http://bit.ly/2wYWudU