நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: குவியும் ஐ.பி.ஓ... முதலீட்டாளர்கள் உஷார்!

ஷேர்லக்: குவியும் ஐ.பி.ஓ... முதலீட்டாளர்கள் உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: குவியும் ஐ.பி.ஓ... முதலீட்டாளர்கள் உஷார்!

ஓவியம்: அரஸ்

“தீபாவளி பர்சேஸ் இன்னும் பண்ணவில்லை. எனவே, உமக்கு அரை மணி நேரம் டைம். சரசரவென்று உமது கேள்விகளைக் கேளும்” எனச் சரவெடியாக வெடித்தார் ஷேர்லக். நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.   

ஷேர்லக்: குவியும் ஐ.பி.ஓ... முதலீட்டாளர்கள் உஷார்!

‘‘டாடா குழுமம் தனது வயர்லெஸ் பிசினஸை ஏர்டெல்லுக்கு விற்கிறதே?’’

‘‘ஜியோ வந்ததிலிருந்து டெலிகாம் துறையில் எப்போது என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாத அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. ரிலையன்ஸ் - ஏர்செல் இணைப்பு ரத்தாகிவிட்ட நிலையில், தற்போது டாடா குழுமம் தனது வயர்லெஸ் பிசினஸை ஏர்டெல் நிறுவனத்துக்கு விற்கவிருக்கிறது. அதுவும் எந்தப் பணமும் கேட்காமல், கடனுக்குமில்லாமல் இலவசமாகவே கொடுக்கிறது. எல்லாத் துறைகளிலும் தனது தொழில்களை விஸ்தரித்து வந்த டாடா குழுமம், தற்போது நஷ்டத்திலிருக்கும் மொபைல் பிசினஸை பார்தி ஏர்டெல்லுக்கு விற்கிறது. தற்போது டெலிகாம் துறை ஜியோ, ஏர்டெல் மற்றும் ஐடியா-வோடஃபோன் ஆகிய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இணைப்பின் மூலம் டெலிகாம் துறையில் ஏர்டெல்லின் கை ஓங்கும் என்று நம்பலாம். டாடா குழுமத்தின் இந்த இணைப்பு முடிவும், எந்தப் பணப்பரிமாற்றமும் இல்லாமல் இணைந்து செயல்படும் உத்தியும் பாசிட்டிவாக இருக்கும் என்றே சொல்லலாம்.’’

‘‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு எப்படி வந்திருக்கிறது?’’

‘‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாம் காலாண்டில் 12.8% அதிகரித்து ரூ.8,097-ஆக உள்ளது.  அதே நேரத்தில், ஜியோ மூலமான இழப்பு ரூ. 271 கோடியாக உள்ளது. எனினும், இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவு பாசிட்டிவாக வரப்போகிறது என்கிற தகவலால், வியாழக்கிழமையன்றே பங்கின் விலை சுமார் 4%  அதிகரித்தது. காலாண்டு முடிவு வெளியான வெள்ளிக்கிழமையன்று பங்கின் விலை, 52 வார உச்ச விலையாக 890.70-க்கு அதிகரித்தது. வர்த்தக முடிவில் 0.48% அதிகரித்து, 876.70 ரூபாயில் முடிந்தது.’’

“லட்சுமி விலாஸ் பேங்கின் இரண்டாம் காலாண்டு முடிவு எப்படி?’’

“தனியார் வங்கிகளில் ஒன்றான லஷ்மி விலாஸ் பேங்கின் இரண்டாம் காலாண்டு முடிவு  நெகட்டிவாக வந்துள்ளது. கமாடிட்டி ஃபைனான்ஸ் ட்ரான்ஸாக்‌ஷன்களில் ரூ.80 கோடி வரை முறைகேடு செய்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இரண்டாம் காலாண்டில் இதன் நிகர லாபமானது 84% குறைந்து, வெறும் ரூ.10.50 கோடியாக உள்ளது. ஜூலை மாதத்தில் ரூ. 200 என்ற நிலையில் வர்த்தகமாகிவந்த இந்தப் பங்கு விலை, தற்போது ரூ.140 என்ற நிலையில் இறங்கியுள்ளது.’’

“ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் ஐபிஓ வர இருக்கிறதே?”

“அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம்,  பொதுப் பங்கு வெளியிடுவதற்கான விண்ணப்பத்தை செபியிடம் சமர்ப்பித்திருந்தது. செபி, அதற்கான அனுமதியைத் தற்போது வழங்கிவிட்டது. ஐபிஓ மூலம் ரூ.1,524 கோடி அளவுக்கு நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது. பங்குகள் ரூ.247-252 என்ற விலைப்பட்டையில் விற்கப்படவிருக்கின்றன. இந்த ஐ.பி.ஓ.வில் புதிதாக 2.44 கோடி பங்குகளும், பங்குதாரர்கள் வசமுள்ள பங்குகளில் 3.67 கோடி பங்குகளும் விற்கப்பட இருக்கின்றன. முதன் முதலாக ஐ.பி.ஓ வெளியிடும்  மியூச்சுவல் ஃபண்டு (அஸெட் மேனேஜ்மென்ட்) நிறுவனமாக இது இருக்கிறது. இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் கேபிட்டல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் லைஃப் நிறுவனமும் இணைந்து நிர்வகித்து வருகின்றன. இந்த நிறுவனம், ரூ.3.8 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. அனில் அம்பானியின் நிறுவனங்கள் கடனில் மூழ்கிக்கொண்டிருக்கும் சமயத்தில், இந்த ஐ.பி.ஓ மூலம் திரட்டும் பணம் அதற்கு உதவியாக இருக்க நிறையவே வாய்ப்புண்டு. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பித்திருப்பது கூடுதல் தகவல்!’’

“இன்ஃபோசிஸ் பைபேக் அறிவித்திருக்கிறதே?”

“இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் பங்குகளைத் திரும்ப வாங்கும் (buyback) தேதியாக (Record date) வருகிற நவம்பர் 1-ம் தேதியை அறிவித்துள்ளது.  இந்த பைபேக் ஆஃபரில் மொத்தம் 11.3 கோடி பங்குகள் ரூ.1,150 என்ற விலையில் வாங்கப்படு கின்றன. இது, தற்போதைய விலையைக் காட்டிலும் 27.8% அதிகமாகும். இதில் பங்குபெற தகுதியுள்ளவர்களுக்கு, இன்ஃபோசிஸ் நிர்வாகம் அதற்கான அனுமதிக் கடிதத்தை அனுப்பியுள்ளது. அனுமதிக் கடிதம் பெற்றவர்கள் மட்டுமே இதில் பங்கு பெற முடியும். இந்த பைபேக் ஆஃபரில் 15% அல்லது ரூ.1,950 கோடி மதிப்பிலான பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரோஹன் மூர்த்தி, சுதா மூர்த்தி, அக்‌ஷதா மூர்த்தி மற்றும் நந்தன் நிலகேனி என நிறுவனத்தைச் சார்ந்தவர் களும் இந்த பைபேக் ஆஃபரில் தங்கள் பங்குகளை விற்க இருக்கின்றனர்.”

“ரிலையன்ஸ் இன்ஃப்ரா தனது மும்பை யூனிட்டை அதானி பவருக்கு விற்கிறதே?”

“அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்குள்ள கடன் தொகையைச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கிவிட்டது. எனவே, ரிலையன்ஸ் இன்ஃப்ராவின் மும்பை யூனிட்டில் உள்ள பவர் ஜெனரேஷன், ட்ரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரீபூஷன் பிசினஸை அதானி பவர் நிறுவனத்துக்கு விற்கவிருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத் திட்டுள்ளன. ரூ.130 கோடிக்கு இந்த பிசினஸ் கைமாறுகிறது. இந்த பிசினஸுக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் ஆரம்பம்தான்; இந்த டீலில் இன்னும் பல நடைமுறைகள் உள்ளன. இந்த டீல் நிறைவு பெற்றால், இந்தப் பணத்தைக் கடனை அடைக்கப் பயன்படுத்தவிருக்கிறது.

இந்த விற்பனை பேச்சுவார்த்தையால் அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவனப் பங்கு, விலையேற்றம் கண்டுள்ளது. மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 200% விலையேற்றம் கண்டுள்ளது. மேலும், அதானி குழுமம் புதுப்பிக்கத்தக்க மாற்று ஆற்றல் உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஸ்டேட் பேங்க் ரூ. 9,000 கோடி கடன் தருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த பாசிட்டிவ் செய்திகளால் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்கு, விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.”

“சி.எல்.எஸ்.ஏ அறிக்கையில் மாருதி பங்கின் ரேட்டிங் குறைக்கப்பட்டிருக்கிறதே?” 


“பங்குகளின் செயல் பாடுகளைப் பொறுத்து ரேட்டிங் நிறுவனங்கள் பங்குகளுக்கான ரேட்டிங்கை நிர்ணயிக்கும். அதில் முன்பு அதிக மதிப்பைக்கொண்ட ஆட்டோமொபைல் துறை இருந்த மாருதி நிறுவனப் பங்கை அவுட்பர்ஃபாம் (outperform) நிலையிலிருந்து தற்போது ‘ஸ்ட்ரக்சரல் பை (Structural buy)’ என்ற நிலையில் வைத்துள்ளது. ஆனால், மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனப் பங்கை ‘வாங்கலாம்’ என்ற நிலையிலிருந்து அவுட் பர்ஃபாம் என்ற நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. மாருதி பங்கின் விலை, இந்த வருடத்தில் 48% ஏற்றம் கண்டுள்ளது. ஆனால், மாருதியைக் காட்டிலும் மஹிந்திரா அண்டு மஹிந்திராவின் பிசினஸ் நல்ல வளர்ச்சியைக் கண்டுவருவதால், அதன்மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால், இதன் இலக்கு விலையும் அதிகரித்துள்ளது. மேலும், சி.எல்.எஸ்.ஏ அறிக்கையில் ஹவுஸிங் துறையும் பார்மா துறையும் நீண்ட காலத்தில் மீண்டுவரும் என்றும் தெரிவித்துள்ளது.”

“ஐ.பி.ஓ-க்களில் புதிய சாதனை படைத்துள்ளதே, இந்தியப் பங்குச் சந்தை?”


“ஐ.பி.ஓ மூலம் நிதித் திரட்டுவதில் இந்தியச்  சந்தை புதிய சாதனையைப் படைத்துள்ளது.  நடப்பு 2017-ம் ஆண்டில் இதுவரை வெளியிடப்பட்ட ஐ.பி.ஓ-க்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியானது ரூ.52,125 கோடி. இதற்குமுன் அதிகபட்சமாக நிதி திரட்டப்பட்ட ஆண்டு 2010, திரட்டப்பட்ட தொகை ரூ.37 ஆயிரம் கோடி. இந்த ஆண்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐ.பி.ஓ-வான ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வெளியீட்டுத் தொகை மட்டுமே ரூ.11,370 கோடி. இன்னும் பல நிறுவனங்கள்  ஐ.பி.ஓ. வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. ஐ.பி.ஓ வெளியீடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, வரலாறு காணாத அளவுக்கு நிதி திரட்டப்படுவது நமக்கு ஒன்றை உணர்த்துகிறது.இப்படி திரட்டப்பட்ட நிதியில் ரூ.32,000 கோடி, ஐ.பி.ஓ வந்த நிறுவனங்களில் ஏற்கெனவே முதலீடு செய்திருந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுக்குத் திரும்ப அளிக்கப்பட்டி ருக்கிறது. இதுபோன்ற நிறுவனங்களில் பொது மக்களிடமிருந்து திரட்டப் பட்ட நிதி, நிறுவனத்திலிருந்து வெளியேறியிருப்பதால், அந்த நிறுவனத்துக்குப் பெரிய அளவில் பலனில்லை. இதனால், பங்கின் விலை நல்லபடியாக அதிகரிக்கும் எனச் சொல்வதற்கில்லை. எனவே, திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் விரிவாக்கம், வளர்ச்சி, கடன் அடைக்க போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தப்பட இருந்தால், அந்த ஐ.பி.ஓ-வில் பங்கேற்கலாம். இல்லை யென்றால் விலகி நிற்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”

“தீபாவளி பங்குகள் ஏதாவது..?”

“நீங்கள்தான் பெரிய பட்டியலே போட்டி ருக்கிறீர்களே, நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா?” என்றபடி ஹேப்பி தீபாவளி சொல்லிவிட்டு, ஷாப்பிங் செய்யப்  புறப்பட்டார் ஷேர்லக்.