நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: தீபாவளி வர்த்தகத்தில் இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

ஷேர்லக்: தீபாவளி வர்த்தகத்தில் இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: தீபாவளி வர்த்தகத்தில் இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

ஓவியம்: அரஸ்

தீபாவளி விடுமுறை முடிந்து, அலுவலகம் வந்து பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். மாலை சரியாக 5 மணிக்கு ஷேர்லக் நம் கேபினுக்குள் வந்தார். அவருக்குமுன் அதிரசத்தையும், முறுக்கையும் வைத்தோம். வீட்டிலேயே நிறைய சாப்பிட்டிருப்பார் போலும்; எனவே, ஒரு துண்டை மட்டும் எடுத்துக்கொண்டு நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.   

ஷேர்லக்: தீபாவளி வர்த்தகத்தில் இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

‘‘மொத்த விற்பனைப் பணவீக்கம் குறைந்திருக்கிறது. ரிசர்வ் வங்கி இனியாவது வட்டி விகிதத்தைக் குறைக்குமா?” 

‘‘உணவுப் பொருள்கள் விலை குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பரில், மொத்த விற்பனை பணவீக்கம் 2.6 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 3.24 சதவிகிதமாக இருந்தது, தற்போது நன்றாகவே குறைந்திருக்கிறது. பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்தியத் தொழில் கூட்டமைப்பு எனப்படும் சி.ஐ.ஐ, வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறது. 

சமீபத்தில் நடந்த ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில், பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என்பதால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது விலைவாசி குறைந்ததால், வட்டி விகிதத்தைக் குறைக்கலாமே என்று சி.ஐ.ஐ கேட்டிருக்கிறது. ஏனெனில், அரசின் சீர்திருத்தங்களால் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. தற்போது தொழில் துறையில் வளர்ச்சி அவசியமாக உள்ளது. அதற்கு வட்டி விகிதக் குறைப்பு உதவியாக இருக்கலாம் என்பது தொழில் துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது”  என்றவருக்கு லெமன் டீ ஆர்டர் கொடுத்தபடி, அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

‘‘கோத்ரேஜ் அக்ரோவெட் முதல் நாள் வர்த்தகத்துக்கு வரவேற்பு எப்படி?’’ 

‘‘இந்தப் பங்கு சமீபத்தில் ஐ.பி.ஓ வெளியீட்டு சந்தையிலும் பட்டியலானது. தனது முதல் நாள் வர்த்தகத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதன் வெளியீட்டு விலையைக் காட்டிலும் 35% கூடுதல் பிரீமியம் விலையில் ரூ.621-க்குப் பட்டியலானது. ஐ.பி.ஓ வெளியீட்டில் 95 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்ட இந்தப் பங்கு, தனது முதல் நாள் வர்த்தகத்திலும் சிறப்பாகச் செயல்பட்டது. அதிகபட்சமாக ரூ. 629.85 வரை ஏற்றம் கண்டது. ஆனாலும் முதல் நாள் வர்த்தக முடிவில் 4.1% இறக்கம் கண்டு, ரூ.583.50-ல் நிறைவுற்றது” என்றவரிடம், “கடந்த வாரத்தில் சந்தையில் பட்டியலிடப்பட்ட எம்.ஏ.எஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிஸ்டிங் எப்படி?” என்று கேட்டோம். 

‘‘வங்கிசாரா நிதி நிறுவனமான எம்.ஏ.எஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஐ.பி.ஓ-க்கு 128 மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் வந்தன. சிறு முதலீட்டாளர்கள் பிரிவில்கூட 14.41 மடங்குக்கு விண்ணப்பிக்கப்பட்டது. பங்கு ஒன்று ரூ.459-க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்தப் பங்கு, சந்தையில் பட்டியலிட்டபோது வெளியீட்டு விலையைவிட 43.8% விலை அதிகரித்து, ரூ.660-ல் பட்டியலிடப்பட்டது. வர்த்தகத்தின் இடையே பங்கின் விலை ரூ.670-க்கு அதிகரித்தது.’’ 

‘‘செப்டம்பர் காலாண்டு முடிவுகள் எப்படி வருகின்றன?’’ என்று விசாரித்தோம்.

‘‘கலவையாக வருகின்றன. ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ரா டெக் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 31% இறக்கம் கண்டிருக்கிறது. அதாவது, நிகர லாபம் ரூ.614 கோடியிலிருந்து ரூ.423 கோடியாகக் குறைந்துள்ளது. புதிதாக வாங்கப்பட்ட ஜே.பி சிமென்ட் ஆலையில் செய்யப்பட்ட முதலீடு மற்றும் தேய்மானம் அதிகரிப்பு போன்றவற்றால் நிகர லாபம் குறைந்திருக்கிறது. 

விற்பனை அதிகரிப்பினால், ஏ.சி.சி-யின் நிகர லாபம் இருமடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.90 கோடியிலிருந்து ரூ.182 கோடியாக அதிகரித்துள்ளது. விப்ரோவின் நிகர லாபம் 6% அதிகரித்து, ரூ.2,189 கோடியாக அதிகரித்துள்ளது.

ஃபெடரல் பேங்க் இரண்டாம் காலாண்டில் 31 சதவிகித நிகர லாப வளர்ச்சியடைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ.201 கோடியாக இருந்த இதன் நிகர லாபம், தற்போது ரூ.264 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் கடன் வளர்ச்சி 25% உயர்ந்ததினால், இந்த நிகர லாப வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.  இதற்கு, இதன் நிலையான லாப வளர்ச்சி மற்றும் கடன் சொத்துகளின் தரம் ஆகியவையும் காரணம். மொத்த வட்டி வருமானம் ரூ.899 கோடியாகும். இது, சென்ற வருடத்தைக் காட்டிலும் 24% அதிகம். இதன் வாராக் கடன் விகிதம் 1.61 சதவிகிதத்திலிருந்து 1.32 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது   

ஷேர்லக்: தீபாவளி வர்த்தகத்தில் இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

அதேபோல், மற்றொரு தனியார் வங்கியான டி.சி.பி பேங்கும் 23 சதவிகித நிகர லாப வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த நிதி யாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.48 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.59 கோடியாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

கர்நாடகா பேங்கின் நிகர லாபம் 24.5% குறைந்திருக்கிறது. முந்தைய நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ.123.82 கோடியாக இருந்த இதன் நிகர லாபம், இந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ.93.38 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் வாராக் கடன் சுமைதான் இந்த நிகர லாப வளர்ச்சி குறையக் காரணம். வாராக் கடன் 3.04 சதவிகிதத்திலிருந்து 4.13 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. உள்கட்டமைப்புத் துறையில் மட்டும் ரூ.230 கோடி வாராக் கடன் இருக்கிறது. இதற்காக 25 சதவிகிதத்தை ஒதுக்கியிருக்கிறது. இதன் பிற வளர்ச்சி காரணிகள் ஆரோக்கியமாக இருப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதன் மொத்த வட்டி வருமானம் ரூ.440.23 கோடி, பிற வருமானம் ரூ.247.82 கோடி ஆகும்.’’

‘‘கடந்த இதழில் ‘ஐ.பி.ஓ முதலீட்டில் உஷார்’ என நீங்கள் எச்சரித்தது உண்மையாகிவிட்டதே!’’


‘‘உண்மைதான். நடப்பு நிதியாண்டில் இதுவரைக்கும் வெளியான ஐ.பி.ஓ.களில் சுமார் 35 சதவிகிதப் பங்குகள், அவற்றின் வெளியீட்டு விலைக்குக் கீழே வர்த்தகமாகி வருகின்றன. சி.எல் எஜூகேட் (-34), எஸ் சாண்ட் அண்ட் கம்பெனி (-31), ஜி.டி.பி.எல் ஹாத்வே (-16%) போன்ற பங்குகள் அதிகம் விலை இறக்கம் கண்டிருக்கின்றன. எனவே, ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிறுவனங்களின் நிதி நிலை, திரட்டப்படும் நிதி எதற்குப் பயன்படுத்தப்பட இருக்கிறது என்பனவற்றை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.’’
 
‘‘தீபாவளி சிறப்புப் பங்கு வர்த்தகம், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இறக்கம் கண்டிருக்கிறதே?”

‘‘கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில், இந்தாண்டு (2017) தீபாவளி சிறப்புப் பங்கு வர்த்தகத்தின்போது, சந்தை இழப்பைச் சந்தித்துள்ளது. இது, கடந்த பத்தாண்டுகளில் அதிக இறக்கமாகும். கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடந்த சிறப்பு தீபாவளி முகூர்த் டிரேடிங்கில், சென்செக்ஸ் 194.39 புள்ளிகள் இறக்கம் கண்டது. நிஃப்டி 64.30 புள்ளிகள் இறக்கம் கண்டது. சர்வதேச நிலவரம் காரணமாக ஐரோப்பிய சந்தை இறக்கம் கண்டது. இது இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது’’ என்றவரிடம், “சந்தையின் போக்கு இனி எப்படி இருக்க வாய்ப்புண்டு?” என்றோம்.

‘‘இது காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகும் காலம் என்பதால், சந்தையின் போக்கு அதனைச் சார்ந்தே இருக்கும். முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவு ஏற்றமாக இருந்தால், அன்றைய தினம் சந்தை ஏற்றத்தைச் சந்திக்கக்கூடும். மோசமாக இருந்தால், சந்தை இறங்கக்கூடும். ஒட்டுமொத்த சந்தையின் போக்கைக் கவனிப்பதற்குப் பதில், அடிப்படையில் வலுவான தனிப்பட்ட பங்குகளின் விலை மாற்றத்தைக் கவனித்து முதலீடு செய்வது நல்லது. நல்ல நிறுவனப் பங்குகள், விலை இறங்கினால் வாங்கிச் சேர்க்கத் தவறாதீர்கள். குறுகிய காலத்தில் இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், அது நீண்ட காலத்தில் லாபகரமாகவே இருக்கும் என்பது பெரும்பாலான அனலிஸ்ட்களின் கணிப்பாக இருக்கிறது” என்றபடி கிளம்பினார்.