
டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்
இந்தியப் பங்குச் சந்தை, கடந்த வாரத்தில் மீண்டும் புதிய உச்சத்தை அடைந்தது. இதன் மூலம் இந்தியச் சந்தை 2 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன், சர்வதேச சந்தைகளில் மிகவும் மதிப்புமிக்கச் சந்தையாக உயர்ந்ததைப் பார்த்து நாம் அனைவருமே கொண்டாடவும் செய்தோம்.

ஆனால், இந்த உச்சத்தைச் சந்தை, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளினால் அடையத் தொடங்குவதற்கு முன்பே அடைந்து விட்டது. எனவே, பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும்போது, சந்தை மேலும் ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்றே சொல்லலாம்.
கடந்த வாரத்தில், வரலாற்றில் இதற்குமுன் இல்லாத அளவுக்கு பொதுத் துறை வங்கிகள், அவற்றின் சர்க்யூட்டின் உச்சத்தை அடைந்ததோடு மட்டுமல்லாமல், சில நாள்களிலேயே 40-50 சதவிகிதத்துக்கும் மேல் ஏற்றம் கண்டன.

ஆகமொத்தத்தில், இவையனைத்தும் சந்தையில் பாசிட்டிவ் சென்டிமென்டை உருவாக்கி, ஏற்றத்தின் போக்கைத் தக்க வைத்துக் கொள்ள சந்தைக்கு உதவியாக இருந்தன.
காலாண்டு முடிவுகள் சீஸன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை வெளியான விவரங்கள் கலவையாகவே இருக்கின்றன. பெரும்பாலான தனியார் வங்கிகளின் முடிவுகள் வெளிவந்துவிட்டன (ஆனால், பெரிய அளவில் சந்தையில் அவை எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை).
பொதுத்துறை வங்கிப் பங்குகள் பல குறிப்பிடத்தக்க ஏற்றத்தை அடைந்து விட்டன. எனவே, வங்கிகள் சந்தையை மேலும் ஏற்றத்தை நோக்கி எடுத்துச் செல்வது கடினம்தான்.
சந்தை மேலும் உயர்ந்து வர்த்தகமாக வேண்டுமெனில், நமக்கு வேறு துறைகளும், பங்குகளும்தான் அவசியமாக உள்ளன. அந்த வகையில், ஆயில் மற்றும் கேஸ், எஃப்.எம்.சி.ஜி ஆகியவை அந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
தற்போது, நிஃப்டி 10450 என்பது ரெசிஸ்டன்ஸாக இருக்கிறது. பேங்க் நிஃப்டி 25000 புள்ளிகளை அடைந் திருப்ப தால், மேலும் நகர்வதற்கு சற்று சிரமப்படும்.
சந்தையால் மேலும் ஏற்றத்தை நோக்கி நகர முடியவில்லையெனில், லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி, சந்தை 9800 என்ற நிலையில் மீண்டும் ஏற்றமடையும் போது, மீண்டும் சந்தைக்குள் நுழையலாம்.

டாடா குளோபல் பிவரேஜஸ் (TATAGLOBAL)
தற்போதைய விலை: ரூ.220.50
வாங்கலாம்
நீண்ட கால ஏற்ற இறக்கமில்லாத நிலைக்குப்பிறகு உருவான பிரேக்அவுட் நிலையிலிருந்து ஏற்றமடைய ஆரம்பித்த இந்த நிறுவனப் பங்கில், பல வாரங்களாக வலுவான ஏற்றத்தின் போக்கைப் பார்க்க முடிந்தது. அதன்பிறகு சில வாரங்கள் ஏற்றமடையாமல் இருந்த இந்தப் பங்கு, தற்போது மீண்டும் ஏற்றமடையத் தயாராக இருக்கிறது. அதன் அடுத்த டார்கெட் ரெசிஸ்டன்ஸான 245 நிலையை நோக்கி, வரும் சில வாரங்களில் நகர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. சமீபத்திய ஏற்ற இறக்கமில்லாத நிலை 196-200 என்ற நிலையில், நல்ல ஸ்டாப்லாஸ் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம்.

கொச்சின் ஷிப்யார்ட் (COCHINSHIP)
தற்போதைய விலை: ரூ.571.30
வாங்கலாம்
இந்த நிறுவனப் பங்கு, பட்டியலானபிறகு அடைந்த ஏற்றத்தைப் பயன்படுத்தி ஐ.பி.ஓ-வில் பங்குகளை வாங்கி லாபம் பார்க்க நினைத்தவர்கள், லாபத்தை எடுத்துக் கொண்டு பங்கை விட்டு வெளியேறினார்கள். இருந்தாலும், பங்கு விலை வீழ்ச்சி அவ்வளவாக இல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் இந்தப் பங்கில் நுழைந்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
கடந்த வார இறுதியில் இந்தப் பங்கில் ஏற்பட்டுள்ள நகர்வுகள், சமீபத்தில் உருவாகியிருந்த ஏற்ற இறக்கமில்லாத நிலையிலிருந்து ஏற்றமடைவதற்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். அடுத்த சில வாரங்களில் ரூ.640-650 வரை உயர வாய்ப்பிருக்கிறது. ஸ்டாப்லாஸ் ரூ.560-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் (GODREJIND)
தற்போதைய விலை: ரூ.584.75
வாங்கலாம்
இந்த வருடம் ஜூலை மாதத்தில், இந்த நிறுவனப் பங்கு ரூ.689 என்ற உச்சத்தை அடைந்திருந்தது. அதன்பிறகு இறக்க மடைய ஆரம்பித்தது. இந்த கரெக்ஷன் முக்கோண வடிவ பேட்டர்னைக் கொண்டதாக இருக்கிறது எனலாம். ஏனெனில் 2016 டிசம்பரில் அடைந்த இறக்க நிலையிலிருந்து 38 சதவிகித ரிட்ரேஸ்மென்ட் நிலையை இந்தப் பங்கு அடைந்திருந்தது. விலை வீழ்ச்சி குறைவாக இருந்ததால், இந்தப் பங்கில் காளையின் ஆதிக்கம் வலுவாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
எனவே, முன்பு 2016-ல் அடைந்த இறக்கத்துக்குப்பிறகான ஐந்து அட்வான்ஸ் சுழற்சிகளில், அடுத்த சுழற்சியைத் தொடங்கும் தருணம் என்பதால் இந்தப் பங்கின் விலை தற்போது மீண்டும் ஏற்றமடையத் தயாராக இருக்கிறது எனலாம். அடுத்த 6 முதல் 12 மாதங்களில் ரூ.688 வரை உயர வாய்ப்புள்ளது.
தொகுப்பு: ஜெ.சரவணன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.