
ஓவியம்: அரஸ்
மாலை 5 மணிக்கு வருகிறேன் என்று சொன்ன ஷேர்லக், 5.30 ஆகியும் வரவில்லை. என்ன காரணம் எனக் கேட்பதற்காக போனை கையிலெடுத்ததும், அவரே லைனில் வந்தார். “6 மணிக்கு திடீர்னு ஒரு மீட்டிங் போக வேண்டியிருக்கு. நேரில் வர முடியவில்லை. போனிலேயே பேசிவிடுவோம்” என்று சொல்ல, நாம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

“எஸ்.பி.ஐ பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் ரூ.61,000 கோடி உயர்ந்திருக்கிறதே?”
“பொதுத் துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுத்து வதற்காக, ரூ.2.11 லட்சம் கோடி ஒதுக்குவதாக கடந்த புதனன்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் அன்றைய தினம் வங்கிப் பங்குகள் திடீரென்று உயர்ந்து வர்த்தகமாயின. எஸ்.பி.ஐ பங்கு விலை 28% உயர்ந்து வர்த்தகமானதால், அன்றைய நாளில் ஆறு மணி நேரத்தில் அதன் சந்தை மதிப்பு ரூ.61,000 கோடி உயர்ந்தது. பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ.13,576 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.10,380 கோடியும் சந்தை மதிப்பில் உயர்ந்தன. இதில் பஞ்சாப் நேஷனல் பேங்க் பங்கு விலை 49% வரை விலை உயர்ந்தது.
அரசின் இந்த நடவடிக்கையால் சி.எல்.எஸ்.ஏ ரேட்டிங் அமைப்பின் ரேடாரில் பி.என்.பி, யூனியன் பேங்க், எஸ்.பி.ஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய பங்குகள் உள்ளன. நோமுராவின் ரேடாரில் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் மற்றும் பி.என்.பி ஆகியவை உள்ளன. கிரெடிட் சூய்ஸ் ரேடாரில் எஸ்.பி.ஐ, பி.என்.பி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா உள்ளன.”
“பாரத் மாலா திட்டத்துக்காக மத்திய அரசாங்கம் ஏழு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போகிறது. இதனால் பலனடையப் போவது யார்?”
“இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில் பொறுப்புகளைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை மற்றும் மாநில அரசு கட்டுமானப் பொறுப்புத் துறைகளுக்குப் பிரித்தளிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத் தினால் சாலை கட்டுமான நிறுவனங்களான திலிப் பில்ட்கான், கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், பி.என்.சி இன்ஃப்ராடெக் மற்றும் சத்பவ் இன்ஜினீயரிங் நிறுவனங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கலாம்.”
“ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்கின் முதல் நாள் வர்த்தகம் எப்படி?”
“இந்த ஆண்டின் மிகப் பெரிய ஐ.பி.ஓ-வாக இருந்த ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1.4 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், கடந்த புதன்கிழமையன்று சந்தையில் பட்டிய லானபோது அவ்வளவாக வரவேற்பு இல்லை. வெளியீட்டு விலையைக் காட்டிலும் 6.8% குறைந்து ரூ.850-க்குத்தான் பட்டியலானது. மேலும், இதில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. அன்றைய வர்த்தக முடிவில், வெளியீட்டு விலையைவிட 4.6% குறைந்து, ரூ.870.40-க்கு வர்த்தகமானது.”
“ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் ஐ.பி.ஓ-வுக்கு வரவேற்பு எப்படி?”
“கடந்த புதன்கிழமையன்று ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் ஐ.பி.ஓ வெளியிட்டது. ரூ.247-252 என்ற விலைப்பட்டையில் பங்குகள் விற்பனைக்கு விடப்பட்டன. ரூ.1,542 கோடி மதிப்பிலான ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பங்கு வெளியீட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மதியம் வரையில் மட்டுமே 10.74 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன. 4.2 கோடி பங்குகளுக்கான வெளியீட்டில், 45.99 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன.”
“பார்மா, ரியல் எஸ்டேட் பங்குகள் மீண்டு வருவதுபோல் தெரிகிறதே?”
“பார்மா பங்குகள் கடந்த பல மாதங்களாகவே மந்தமாகவே வர்த்தகமாகி வந்தன. இதற்கு, பல்வேறு பார்மா நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருந்து வந்ததும், நிறுவனங்களுக்கிடையே நிலவிய போட்டியும் காரணங்களாக இருந்து வந்தன. ஆனால், தற்போது பல நிறுவனங்களுக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கின்றன. எனவே, பார்மா துறை நிறுவனப் பங்குகளுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் பங்கு வர்த்தக விவரங்களைப் பார்க்கும்போது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பார்மா கம்பெனிகளில் தங்களின் முதலீட்டை அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக அரபிந்தோ பார்மாவில் 1.27% உயர்த்தப் பட்டுள்ளது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, லூபின் பங்கில் தனது பங்கு முதலீட்டை 0.13 சதவிகிதத்திலிருந்து 1.89 சதவிகிதமாக உயர்த்தி யுள்ளார். இவை தவிர சன் பார்மா, டாரன்ட் பார்மா, கெடிலா ஹெல்த்கேர் மற்றும் நட்கோ பார்மா போன்றவற்றிலும் முதலீடுகள் உயர்ந்துள்ளன. பார்மா மட்டுமல்ல, ரியாலிட்டி துறையும் வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரியல் எஸ்டேட்டில், கறுப்புப் பணத்தின் செயல்பாடு குறைந்துள்ளது. மேலும், ஜி.எஸ்.டி, ரெரா ஆகிய இரண்டும் ரியல் எஸ்டேட் துறையில் பாசிட்டிவான போக்கை உருவாக்கியுள்ளது. இதனால் குடியிருப்புகள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி வாரத்தின் முடிவில் ரியாலிட்டி பங்குகள் 18% வரை உயர்ந்தன. கோல்டி-பாடில் டெவலப்பர், சன்டெக் ரியாலிட்டி, புரவங்காரா மற்றும் சோபா உள்ளிட்டவை 52 வார அதிகபட்ச விலையை அடைந்தன. டி.எல்.எஃப், கோத்ரேஜ் பிராபர்ட்டீஸ் மற்றும் பெனின்சுலா லேண்ட் உள்ளிட்டவை 3 முதல் 8% வரை உயர்ந்திருக்கின்றன.”
“ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப் ஐ.பி.ஓ வருகிறதே?”
“ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஸ்டாண்டர்டு லைஃப் மொரிஷியஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நிர்வகித்துவரும் ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப், வரும் நவம்பர் 7-ம் தேதி யன்று பொதுப் பங்கு விற்பனை வெளியிடுகிறது. இதில் ஹெச்.டி.எஃப்.சி வசமுள்ள 9.55 சதவிகித அல்லது 19.1 கோடி பங்குகளும், ஸ்டாண்டர்டு லைஃப் வசமுள்ள 5.42 சதவிகித அல்லது 10.8 கோடி பங்குகளும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் பிசினஸ் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. இன்ஷூரன்ஸ் துறைக் கட்டுப்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., குறைந்தபட்சம் 150 சதவிகிதத்தை சால்வன்சி விகிதமாக நிர்ணயித்துள்ளது. இதன் நிதிநிலையும் சிறப்பாக இருக்கிறது. ஜூன் காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ. 886.92 கோடி ஆகும். நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி முடியும் இந்த வெளியீட்டில் பங்கு விலை ரூ.275-290 என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 பங்குகளும், 50 பங்குகளின் மடங்குகளிலும் விண்ணப்பிக்கலாம்.”
‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?’’
‘‘கடந்த மூன்று மாதங்களில் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் சராசரி ரோலோவர் 66 சதவிகிதமாக இருந்தது. இது, அக்டோபர் மாதத்தில் 73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த சந்தையின் ரோலோவர் 78 சதவிகிதத்திலிருந்து 81 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வரும் நவம்பர் மாதத்திலும் சந்தையின் போக்கு ஏற்றத்தில் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்றவர், ‘‘நான் மீட்டிங் போகிறேன்’’ என்று சொல்லி போனை
கட் செய்தார்.