
தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர் மற்றும் பயிற்சியாளர் - www.ectra.in
பங்குச் சந்தை வட்டாரத்தில் ஜாம்பவான்கள் சிலர் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் இந்த ‘ப்ளாக் டீல்’ மற்றும் ‘பல்க் டீல்.’ பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி, இந்த ப்ளாக் மற்றும் பல்க் டீல் குறித்து ஒரு முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த மாற்றங்கள் குறித்துப் பார்க்கும்முன், ப்ளாக் மற்றும் பல்க் டீல் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.

ப்ளாக் டீல்
நாம் பங்குச் சந்தையில் ஈடுபடும்போது, நமக்குத் தேவையான பங்குகளை நமக்குத் தேவையான எண்ணிக்கையில் வாங்குவோம். பங்கு விலை அதிகமாக இருந்தால் குறைந்த எண்ணிக்கையிலும், விலை குறைவாக இருந்தால் அதிக எண்ணிக்கையிலும் பங்குகளை வாங்குவோம். சிறு முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை இதுதான் நடைமுறை.
ஆனால், பல கோடிகளை வைத்திருக்கும் பெரு முதலீட்டாளர்கள் 100, 200 என்றெல்லாம் பங்குகளை வாங்கமாட்டார்கள். அவர்கள் ஒரே சமயத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பங்குகளை வாங்குவார்கள். அவர்கள் இப்படிப் பங்குகளை வாங்குவதற்குத்தான் ப்ளாக் டீல் (Block Deal) என்று பெயர். ப்ளாக் டீல் என்பது ஒரு நிறுவனப் பங்கை மொத்தமாக, அதாவது அதிக எண்ணிக்கையில் வாங்குவது அல்லது விற்பது.
ஒரு ப்ளாக் டீல் நடக்கவேண்டுமானால், ஒருவர் விற்க வேண்டும்; இன்னொருவர் வாங்க வேண்டும். இப்படி வாங்க அல்லது விற்கப்படும் பங்குகளின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்காது. குறைந்தபட்சம் ஐந்து லட்சம் பங்குகளாக இருக்கவேண்டும் அல்லது ரூ.5 கோடி பணமதிப்பு இருக்க வேண்டும்.
சரி, ஒரு நிறுவனத்தின் பங்கை 5 கோடி ரூபாய் மதிப்புக்கு வாங்கத் தகுதி உள்ளவர்கள் யார்?
* அந்நிய நிதிநிறுவனம் (FII)
* அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள்(FPI)

* உள்நாட்டு நிதிநிறுவனங்கள் (DII)
* அதிக அளவில் முதலீடு செய்யும் தனி முதலீட்டாளர்கள்(HNI)
* இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்
* வங்கிகள்
* நிறுவனங்களின் புரமோட்டர்கள்
* பங்குச் சந்தை ஆப்ரேட்டர்கள்
இப்படி ஐந்து கோடி ரூபாய்க்கு ஒரே நேரத்தில் பங்குகளை வாங்கினால், அந்தப் பங்கின் விலை பலமாக ஏறிவிடாதா அல்லது இப்படி பெரிய தொகைக்கு விற்றால், அந்தப் பங்கின் விலை குறைந்துவிடாதா என்று நீங்கள் கேட்கலாம்.
பொதுவாக, ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் ஐந்து லட்சம் பங்குகளைச் சந்தையில் வாங்குவதாக இருந்தால், இப்படி நடக்கும். ஆனால், ப்ளாக் டீல் என்பது குறிப்பிட்ட விலையில் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம், இன்னொரு வருக்கு அல்லது நிறுவனத்துக்கு, குறிப்பிட்ட அளவு பங்குகளை ஒரே டிரான்சாக்ஷனில் வாங்குவது அல்லது விற்பது. அதாவது, ஐந்து லட்சம் பங்குகள் ஒரே டெலிவரியில் முடிய வேண்டும். இன்ட்ரா டே வியாபாரம் மாதிரி வாங்கி விற்க முடியாது.
ப்ளாக் டீல் மூலமாக இல்லாமல், ஐந்து லட்சம் பங்குகளைச் சந்தையில் வாங்கும்போது, ஒரு குறிப்பிட்ட விலையில் 5000 ஷேர்தான் கிடைக்கும். இன்னும் அதிகப் பங்குகளை வாங்க வேண்டுமானல், விலையை உயர்த்திக் கேட்க வேண்டியிருக்கும். அந்த விலையிலும் 10,000 பங்குகள்தான் கிடைக்கும் என்றால், மீண்டும் விலையை உயர்த்தி வாங்க வேண்டும். இப்படி ஐந்து லட்சம் பங்குகளை வாங்கும்போது விலை உயர்ந்துகொண்டே போகும்.
இதுவேதான், விற்பதற்கும். ஒருவர் ஐந்து லட்சம் பங்குகளைச் சந்தையில் விற்பதாக இருந்தால், விலை இறங்கிக்கொண்டே இருக்கும். அவர் விற்பதைப் பார்த்து, மேலும் சிலர் விற்கத் தொடங்கினால், விலை இன்னும் குறையும். இதனால் எல்லோருக்கும் நஷ்டம் ஏற்படும்.
இந்த ப்ளாக் டீலில் செபி இப்போது ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. முன்பு, ப்ளாக் டீலானது தினமும் காலை 9.15-க்குத் தொடங்கி, 9.50-க்கு முடியும். அதாவது மொத்தம் 35 நிமிஷம்தான் இந்த ப்ளாக் டீல் வியாபாரம் நடக்கும். செபி இப்போது நேரத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது. காலை 8.45 - 9 மணி வரை ஒரு பகுதியாகவும், பிறகு மதியம் 2.05-ல் இருந்து 2.20 வரை இன்னொரு பகுதியாகவும் இந்த ப்ளாக் டீலை இனி செபி நடத்தப் போகிறது.
ப்ளாக் டீலில் பங்கு விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது எல்லோரும் கேட்கும் கேள்வி. காலை 8.45 - 9 மணி வியாபாரத்துக்கு முந்தைய நாளின் முடிவு விலையையும், மதியம் நடக்கும் 2.05 - 2.20 ப்ளாக் டீல் வியாபாரத்துக்கு 1.45 - 2.00-க்குள் உள்ள ஒரு பங்கின் வால்யூம் வெயிட்டட் ஆவரேஜ் விலையை அடிப்படை விலையாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். இது ஒரு மாதிரி விலை மட்டுமே. இந்த விலையிலிருந்து 1% கூடுதலாக அல்லது குறைவாக ப்ளாக் டீலில் பங்கு விலை நிர்ணயமாகும். ஆனால், இந்த எல்லைக்கு மேலேயோ அல்லது கீழேயோ வியாபாரமாக அனுமதி இல்லை. அது மட்டுமல்ல, தற்போதுள்ள குறைந்தபட்ச டீல் மதிப்பான ரூ.5 கோடியை ரூ.10 கோடி ரூபாயாகவும் செபி உயர்த்த உள்ளது.
இந்த மாற்றம் அடுத்தாண்டு முதல், அதாவது 1.1.2018 அன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த ப்ளாக் டீல் வியாபாரத்தில் பங்குகளை யார் விற்கிறார்கள், வாங்குகிறார்கள் என்கிற தகவல் நமக்குக் கிடைக்கும். ஆனால், அந்தத் தகவல், சந்தை முடிந்த பிறகுதான் பங்குச் சந்தைகள் (Stock Exchanges) அவற்றின் வலைதளத்தில் வெளியிடும்.
பல்க் டீல்
ப்ளாக் டீல் மாதிரி, பல்க் டீல் (Bulk Deal) என்ற ஒன்றும் இருக்கிறது. இதன்படி, ஒரு நிதி நிறுவனம், பட்டியிலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் அளவில் 0.5% அளவுக்கு மேல் வாங்கினால், அதை ‘பல்க் டீல்’ என்கிறோம். இது சந்தை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
சிறு முதலீட்டாளர்கள், இந்த ப்ளாக் மற்றும் பல்க் டீல் விவரங்களைத் தெரிந்துகொண்டு லாபம் சம்பாதிக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி.
பெரும்பான்மையான பங்குகள் பொதுவாகக் குறைந்த வால்யூமில் வியாபாரம் ஆகின்றன. ஆனால், ப்ளாக் டீல் நடக்கும்போது மட்டும் வால்யூம் கூடுகிறது. ஆனால், விலை கூடுகிறதா என்றால், சில சமயம் கூடும். பின்பு இறங்கிவிடும். சிலசமயம் பிளாக் டீல் நடந்த மறுநாள் ஒரு கேப் அப்பில் விலை அதிகரிக்கும் அல்லது குறையும். அதாவது, ப்ளாக் அல்லது பல்க் டீல் நடந்ததைப் பார்த்து, நாம் பங்கு வாங்கியபின் அதன் விலை இறங்க வாய்ப்புண்டு.
சில பங்குகள், தொடர்ந்து ப்ளாக் டீல் லிஸ்டில் இருந்தால் ஏற வாய்ப்பிருக்கின்றன. இதில் சில பங்குகள் அப்பர் பிரீஸ், டவுன் பிரீஸ் என்ற மாட்டவும் வாய்ப்புண்டு. ப்ளாக் டீல் வியாபாரத்தைவிட பல்க் டீல் வியாபாரத்தில் அதிக வால்யூமுடன் வியாபாரம் ஆகும்ப்ளாக் மற்றும் பல்க் டீல் விவரங்களை நாம் பின்பற்றலாம். ஆனால், ஒரு நிறுவனம் பங்குகளை வாங்குகிறது அல்லது விற்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக நாமும் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்க வேண்டும் என்றோ அல்லது விற்க வேண்டும் என்றோ எந்த அவசியமும் இல்லை. எனவே, நம் முதலீட்டு முடிவை நாமே ஆராய்ந்தறிந்து எடுப்பது நல்லது.
தேசியப் பங்குச் சந்தையில் நிகழும் ப்ளாக் டீல் விவரங்களைப் பார்க்க:
https://www.nseindia.com/products/content/equities/equities/bulk.htm
மும்பைப் பங்குச் சந்தையில் நிகழும் ப்ளாக் டீல் விவரங்களைப் பார்க்க:
http://www.bseindia.com/markets/equity/EQReports/block_deals.aspx