நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

சர்வதேச சந்தையின் போக்கு மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் முதலீடு காரணமாக நிஃப்டி, மேலும் புதிய உச்சத்தை அடைய நிறையவே வாய்ப்பிருக்கிறது.

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இதுவரை சந்தைக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்துவருகின்றன. அதன் தாக்கம், பங்குகளின் விலைநகர்வுகளிலும் எதிர்பார்ப்பைவிட அதிகமாகவோ எதிர்பார்த்தபடியோ இருந்தன. இதனால் சந்தையின் போக்கு உற்சாகமாகவே இருந்தது.

சந்தையை மேல்நோக்கி எடுத்துச்செல்லக்கூடிய பெருநிறுவனங்கள், அதிக மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் கொண்ட நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளில் சிறப்பான முடிவுகளையே கொண்டிருந்தன. தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் நகர இதைவிட சந்தைக்கு என்ன வேண்டும்?

கடந்த வாரம் சந்தையில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்தன. ஒன்று, வங்கித் துறை குறியீட்டில் ஏற்பட்டுள்ள வலுவான ஏற்றம். இதுநாள்வரை இது சந்தையின் போக்குக்கு  உதவாமலே இருந்தது. இப்போது பெரும்பாலான தனியார் வங்கிகளின் காலாண்டு முடிவுகள் நன்றாக வந்திருப்பதாலும், பொதுத் துறை வங்கிகள் ரீகேப்பிட்டலைசேஷன் செய்யப்படும் செய்தியினாலும் வங்கித் துறை பங்குகளில் நல்ல ஏற்றம் இருந்தது. இன்னும் ஏற்றமடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பேங்க் நிஃப்டி குறுகிய காலத்தில் 26000 என்ற நிலையைத் தாண்டி நகர வாய்ப்புள்ளது. இது நிஃப்டியின் ஏற்றத்துக்கும் உதவியாக இருக்கும்.

இரண்டாவது, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மீண்டும் சந்தையில் முதலீடு செய்திருப்பது சாதகமான விஷயம். சில வர்த்தக நாள்களில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். இந்தப் போக்கு தொடர்ந்தால் சந்தை மேலும் நன்றாகவே ஏற்றமடையும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



சந்தையின் போக்கில் இறக்கத்துக்கான வாய்ப்புகள் தெரியாதபட்சத்தில், செய்திகள் சந்தைக்கு பாசிட்டிவாக இருக்குமானால்  ஏற்றமடையலாம். எனவே, லாங்  பொசிஷன்களில் தொடரலாம். இன்ட்ரா வீக் இறக்கங்களை வாங்குவதற்கான வாய்ப்புகளாக பார்க்கலாம். பங்குகளின் நகர்வுகள், செய்திகளைப் பொறுத்து இருக்கும். எனவே, பங்குகளைத் தனித்தனியாகப் பின்தொடரவும்.

டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் (TVSELECT)

தற்போதைய விலை: ரூ.446.30

வாங்கலாம்

இந்தப் பங்கு, தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில்  வலுவாகவே இருந்துவருவதைப் பார்க்க முடிகிறது. தற்போது இந்தப் பங்கைப் புதிதாக வாங்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இதனால் ஏற்ற இறக்கமில்லாத நிலையிலிருந்து இந்தப் பங்கு ஏற்றமடைய இருக்கிறது. சந்தையின் போக்கு வலுவாக இருப்பதாலும் ஒட்டுமொத்தமாகச் சந்தையில் அட்வான்ஸ் செயல்பாடுகளின் ஆதரவு இருப்பதாலும் இந்தப் பங்கை, தற்போதைய விலையில் வாங்கலாம். இந்தப் பங்கு ரூ.500 என்கிற எல்லையை அடைய வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.405 வைத்துக்கொள்ளவும்.

பிக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் (பிஎஸ்இ மட்டும்)

தற்போதைய விலை: ரூ. 127.10

வாங்கலாம்

இப்போது சந்தையில் மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளுக்கான சீஸன் நிலவுகிறது. எனவே, இந்த வகைப் பங்குகள், மீண்டும் ஏற்றமடைவதற்குத் தயாராக புதிய சப்போர்ட் நிலைகளை உருவாக்கி யுள்ளன. ஆனால், எந்தப் பங்குகளில் ஏற்றமானது நீண்ட காலத்துக்கு  வலுவாக உள்ளதோ, அவற்றை வாங்கலாம். அப்படிப்பட்ட பங்குதான் பிக்ஸ் ட்ரான்ஸ்மிஷன். இது தொழில் துறைக்குத் தேவையான ரப்பர் பெல்ட்டுகளை உற்பத்தி செய்கிறது. இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னில் மீண்டும் ஏற்றம் ஆரம்பித்து ஆவரேஜ் லைன் நகர்வதால், புதிய சப்போர்ட் நிலை உருவாகி யிருக்கிறது. கேண்டிலிலும் காளையின் போக்கு தென்படுகிறது. ஏற்றத்துக்குத் தயாராக இந்தப் பங்கு இருப்பதால், தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.145 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.110 வைத்துக்கொள்ளவும்.

செலன் எக்ஸ்ப்ளோரேஷன் (SELAN)

தற்போதைய விலை: ரூ.242.70

வாங்கலாம்

இந்தப் பங்கில் சில இறக்கங்கள் வலுவாக இருந்ததால், 2015-ல் பங்கு விலை மிகவும்  சரிந்தது. அதன்பிறகு இரண்டு வருடங்களாக பெரிய ஏற்ற இறக்கமில்லாமல் பக்கவாட்டிலேயே நகர்ந்து கொண்டிருந்தது.

தற்போது இந்தப் பங்கில் பிரேக்அவுட் நிலை உண்டாகியிருப்பது தெரிகிறது. இதன் நகர்வுகள் நல்ல வரம்பிலும், வர்த்தகம் நல்ல வால்யூமிலும் நடப்பதைப் பார்த்தால், முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தப் பங்கில் ஆர்வம் காட்டுவது தெரிகிறது. இதற்குச் சாதகமான செய்திகள் எதுவும் இல்லாத நிலையிலும், இதில் நல்ல நகர்வுகள் இருக்கின்றன. பாசிட்டிவான செய்திகள் எதுவும் கிடைத்தால், நன்றாகவே ஏற்றமடையும். நல்ல வரம்புள்ள பிரேக்அவுட் நிலைகள் அடிக்கடி ஏற்படுமானால், அத்தகைய பங்கில் முதலீடு செய்வது குறைவான ரிஸ்க்காகவே இருக்கும்.

எனவே, தற்போதைய விலையிலும் ரூ.238 வரை இறங்கினாலும் இந்தப் பங்கை வாங்கலாம். அடுத்த 6-12 மாதங்களில் ரூ.280-290 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.225-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும். 

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.