
ஓவியம்: அரஸ்
சரியாக ஐந்து மணிக்கு ஷேர்லக்கிடமிருந்து போன் வந்தது. “நேற்றைய கனமழையில் சிக்கி என் புல்லட் பழுதாகிவிட்டது. இன்றும் பலத்த மழை வருகிற மாதிரி மேகம் சூழ்ந்திருக்கிறது. எனவே, போனிலேயே நான் செய்திகளைச் சொல்லிவிடுகிறேன்’’ என்றார். அவருக்கு ஓகே சொல்லிவிட்டு, தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

“பார்தி ஏர்டெல் 76% நிகர நஷ்டம் கண்டுள்ளதே?’’
“முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் நிகர லாப வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 76% வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.1,461 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்த ஏர்டெல், தற்போது ரூ.343 கோடி மட்டுமே ஈட்டி யிருக்கிறது. மொத்த வருமானமும் 12% குறைந்து, ரூ.21,777 கோடியாக இருக்கிறது.
ஆனாலும், இந்தப் பங்கின் விலை கடந்த புதனன்று 10 வருட உச்சத்தை எட்டியது. காரணம், இதன் ஆப்பிரிக்க பிசினஸ் 7.2% உயர்ந்திருக்கிறது. இதனால் அன்று ஒரே நாளில் 9.4% ஏற்றம்கண்டு ரூ.544.50 என்ற நிலைக்கு உயர்ந்தது.”
“ட்ரெட்ஜிங் கார்ப் நிறுவனப் பங்கு விலை 20% உயர்ந்திருக்கிறதே?”
“பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்ட மத்திய அரசு முடிவெடுத்தபிறகு, அடுத்தடுத்து அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்துவருகிறது. தற்போது, ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் 73% பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது. இதற்கான அனுமதியை அமைச்சரவைக் குழு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் ரூ.1,400 கோடி திரட்ட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பங்கு விலை இரு தினங்களில் மட்டும் 20% உயர்ந்து வர்த்தகமானது.’’
“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உலக அளவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட டாப் 10 நிறுவனங் களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறதே?”
“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ஜியோ. டெலிகாம் துறையின் ஜாம்பவான்களையெல்லாம் கலங்கடித்த ஜியோ, தனது சலுகைகளையெல்லாம் தாண்டி வாடிக்கை யாளர் எண்ணிக்கையிலும், வருமானத்திலும் வலுவாகவே சந்தையில் காலூன்றிவிட்டது. போட்டியாளர்களைவிட இதன் விநியோக செலவு குறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 5 ஜிக்கு அப்டேட் ஆவதற்கான ஆயத்த வேலை களிலும் இறங்கிவிட்டது.
இதன் பங்கு விலை 2014 மே மாதத்திலிருந்து இதுவரை 65% ஏற்றமடைந்திருக்கிறது. ரூ.564- லிருந்து ரூ.940.15-க்கு ஏற்றம் கண்டிருக்கிறது. இதன்மூலம் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இடம்பிடித்திருக்கிறது.”
“இந்தியச் சந்தைகள்மீது பன்னாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை வலுவடைந் திருப்பதாகத் தெரிகிறதே?”
‘‘இந்தியச் சந்தையின் பி/இ விகிதம் 22 மடங்காக இருக்கிறது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய சர்வதேச சந்தைகளில் 13-லிருந்து 18.6 மடங்கு வரையில்தான் இருக்கின்றன. இந்தியச் சந்தை தற்போது உச்சத்தில் இருப்பதால், மதிப்பு அதிகமான சந்தையாகத் தெரிகிறது. இந்திய நிறுவனப் பங்குகள் அவற்றின் 10 வருட சராசரியைக் காட்டிலும் 34% பிரீமியம் விலையில் வர்த்தகமாகின்றன. ஆனாலும், பன்னாட்டு முதலீட்டாளர்கள் நம்முடைய சந்தையைப் பற்றி பாசிட்டிவான சென்டிமென்டில்தான் இருக்கிறார்கள். நம் சந்தைகளின் செயல்பாடுகள் அவர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவ தாகவே இருக்கின்றன.”
“ருச்சி சோயா பங்கு விலை உயர என்ன காரணம்?”
“முன்னணித் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான டெவான்ஷயர் கேப்பிட்டல், ருச்சி சோயாவின் 51 சதவிகிதப் பங்குகளை வாங்க இருக்கிறது. குறிப்பாக, ருச்சி சோயாவின் எண்ணெய் பிசினஸை வாங்குகிறது. இதற்காக ரூ.4,000 கோடி கைமாறவிருக்கிறது. இந்தச் செய்தி வெளியானதால், ருச்சி சோயா பங்கின் விலை ஒரேநாளில் 4.5% உயர்ந்து வர்த்தகமானது.”
“கடந்த வார ஐ.பி.ஒ-க்களின் செயல்பாடு எப்படி?”
“கடந்த வாரம் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், காதிம் மற்றும் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிட்டன. இதன் மூலம் ரூ.9,600 கோடி நிதியைத் திரட்ட திட்டமிட்டிருந்த நியூ இந்தியா அஷ்யூரன்ஸின் ஐ.பி.ஓ-வில் 1.13 மடங்கு கூடுதலாக விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது.
மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் மூன்று மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. காதிம் நிறுவனத்தின் ரூ.543 கோடி மதிப்பிலான ஐ.பி.ஓ வெளியீட்டின் இரண்டாம் நாள் நிலவரப்படி, 21% கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.”
“சுமார் 250 நிறுவனப் பங்குகள் தங்களின் ஒருவருட இலக்கைச் சில வாரங்களிலேயே அடைந்துள்ளனவே!’’
“இந்தியப் பங்குச் சந்தையின் அபரிமிதமான வளர்ச்சியில் பல பங்குகள் நல்ல உச்சத்தை நோக்கி ஏற்றம் கண்டன. ஆனால், இந்த ஏற்றத்தில், 600 பங்குகளில் 40 சதவிகிதப் பங்குகள் தங்களின் ஒரு வருட இலக்கை, சில வாரங்களிலேயே அடைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து புதிய உச்சங் களையும் அடைந்து வருகின்றன.
பேங்க் ஆஃப் இந்தியா, செயில், டிவிஎஸ் மோட்டார்ஸ், டாடா குளோபல், யுனைடெட் புரூவரிஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி ஆகிய பங்குகள் உள்பட 50 பங்குகள் அவற்றின் இலக்கு விலையைக் காட்டிலும் 20% உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்த ஏற்றத்துக்குக் காரணம், சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான்.”
“ஃபண்ட் மேனேஜர்களின் செப்டம்பர் மாத பங்கு விற்பனை முடிவுகள் தவறாகத் தெரிகின்றனவே?”
“செப்டம்பரில் ஃபண்ட் மேனேஜர்கள் விற்பனை செய்த டாப் 10 பங்குகளில் எட்டு பங்குகள், அக்டோபரில் மேலும் ஏற்றம் கண்டுள்ளன. உதாரணமாக, டாடா மோட்டார்ஸ் 7% ஏற்றம் கண்டுள்ளது. இதில் ரூ.802 கோடி மதிப்பிலான பங்குகளை ஃபண்ட் மேனேஜர்கள் விற்றிருக்கிறார்கள். இதுபோலவே, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் ஆகியவையும் அக்டோபரில் இரண்டு இலக்க சதவிகிதத்தில் ஏற்றம் கண்டிருக்கின்றன. செப்டம்பரில் ஃபண்ட் மேனேஜர்கள் முதலீடு செய்த டாப் 10 பங்குகளில் இண்டிகோ, கெயில், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மற்றும் பாரத் ஃபோர்ஜ் ஆகியவை 6.45 சதவிகித வளர்ச்சியும், எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நெகட்டிவ் போக்கிலும், ஐ.டி.சி 3 சதவிகித வளர்ச்சியிலும் இருக்கின்றன. ஃபண்ட் மேனேஜர்கள் குறுகிய கால நகர்வுகளைப் பார்த்து முடிவெடுக்காமல் நீண்டகால அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.’’
“சரிவில் இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை 9% உயர்ந்துள்ளதே?”
“கடனில் மூழ்கித் தவித்ததால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்கு, தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்தது. தற்போது இதன் கடன் சுமைக்கான தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்தப் பங்கு 9.24% உயர்ந்து வர்த்தகமாகி இருக்கிறது. நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்கிலிருந்து வெளியேற சரியான நேரம்.”
“சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?”
“இந்திய பங்குச் சந்தை புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இது காலாண்டு முடிவுகள் சீஸன் என்பதால், சந்தை அதன் அடிப்படையில் ஏறியிறங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஒட்டுமொத்த சந்தையைக் கவனிப்பதற்குப் பதில், தனிப்பட்ட பங்குகளின் செயல்பாட்டைக் கவனிப்பது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்” என்றவர், அடுத்த வாரம் நேரில் பார்ப்போம் என்று சொல்லிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்தார்.