
ஜி.அண்ணாதுரை குமார், நிதி ஆலோசகர்
‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வருமானம், சந்தை அபாயங்களுக்கு உட்பட்ட தாமே?” - இதுதான் நான் முதலீட்டாளர்களிடம் அதிகம் எதிர்கொண்ட கேள்வி. அபாயம் எதில்தான் இல்லை? உலக நாடுகளின் கணக்கெடுப்பின்படி, உலக மக்களில் 53% பேர் தூக்கத்தில்தான் இறந்துபோகிறார்களாம். அதற்காக நாம் தூங்கப் பயந்தால் என்னாகும்?’’

‘‘பங்குச் சந்தை சிலசமயம் நன்றாக ஏறுகிறது. சில சமயம் இறங்குகிறது. அதுதான் பயமாக இருக்கிறது’’ என்கிறார்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்கள்.
உண்மைதான். இல்லையென்று மறுக்கவில்லை. நம் நண்பர் ஒருவர் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய, இருதயத் துடிப்பு ஏறி இறங்கிச் சென்றால்தான், அவர் உயிரோடு இருக்கிறார் என்று அர்த்தம். ஒரே நேர்க்கோட்டில் இருந்தால் அதன் அர்த்தம் வேறு.
அதேபோலத்தான் சந்தையும். ஏறி இறங்கி, இறங்கி ஏறினால்தான் சந்தை உயிர்ப்புடன் உள்ளது என்று அர்த்தம். ஒரே நேர்க்கோட்டில் சென்றால், அதைப் பார்த்துப் பயப்படத்தானே வேண்டும்?
பணவீக்கத்தை வென்று, அதைவிட நீண்ட காலத்தில் கூடுதலான லாபம் தரும் முதலீடுகள் அனைத்துமே நாம் முதலீடு செய்ய ஏற்றதுதான். அதில், ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் முதலிடத்தில் உள்ளது.
சிலர் ஒரு ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து விட்டு, தினமும் என்.ஏ.வி மதிப்பைப் பார்த்து விட்டு, பெரிதாக ஒன்றும் ஏறவில்லையே என்கிறார்கள். கடலில் மீன் பிடிக்க ஒரே ஒரு தூண்டிலை மட்டும் எடுத்துச் சென்று, நீண்ட நேரம் காத்திருந்து, மீன் கிடைக்கவில்லை என்றதும், உடனே ‘இந்தக் கடலில் மீனே இல்லை’ என்ற முடிவுக்கு வருவது மிகப் பெரிய தவறு. கடலில் மீன் பிடிக்க வேண்டுமென்றால், பரந்த மீன்பிடி வலை நிச்சயம் தேவை. அதைப்போலதான், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும். நமது முதலீடு வளர்ச்சியடையவும், அதன் ரிஸ்க்கைக் குறைக்கவும், நிதி ஆலோசகர் உதவியோடு, நமது முதலீட்டைப் பரவலாக்கம் செய்ய வேண்டும்.
உடனடியாகத் தேவைப்படும் (2 முதல் 6 மாதம் வரை) பணத்தை லிக்யூட் ஃபண்டுகளிலும், ஒரு வருடம் வரை மட்டுமே காத்திருக்க முடியுமெனில் கடன் சார்ந்த ஃபண்டுகளிலும், இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை காத்திருக்க முடியுமெனில், ஃபேலன்ஸ்டு ஃபண்ட் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

ஐந்து வருடங்கள் மற்றும் அதற்கு மேலும் காத்திருக்க முடியுமெனில், மல்டி கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளிலும், மொத்தம் 5 முதல் 8 ஃபண்டுகளை நிதி ஆலோசகரின் துணையோடு தேர்வு செய்து, முதலீடு செய்யலாம்.
தேர்வு செய்த ஃபண்டுகளில் வாய்ப்பு வசதி இருக்கும்பட்சத்தில், நமது மொத்த முதலீட்டையும் மேற்கொள்ளலாம். இல்லையென்றால் எஸ்.ஐ.பி (SIP) முறையில் மாதாமாதம் எல்லா ஃபண்டுகளிலும் குறைந்தபட்சம் 500 -1,000 ரூபாய் முதலீடு செய்து வரலாம். அப்படித் தேர்ந்தெடுத்த ஃபண்டுகளில், முதலீட்டைத் தொடரும்பட்சத்தில் உங்களுக்கென தனி போர்ட்ஃபோலியோ உருவாகியிருக்கும்.
இந்த போர்ட்ஃபோலியோவில் லிக்யூட் ஃபண்ட், டெட் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட், லார்ஜ் கேப் ஃபண்ட், மல்டி கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் இடம் பெற்றிருப் பதால், ரிஸ்க் பரவலாக்கப்படுவதோடு, அதிக வருமானமும் கிடைக்கும். நாம் முதலீடு செய்த பணம், நாம் உறங்கும்வேளைகளிலும், நமக்காக உழைத்துக்கொண்டிருக்கும். அதன்பின் மாதம் ஒருமுறையோ அல்லது சந்தை இறங்கும்போதோ உங்கள் போர்ட்ஃபோலியோவை ஆராயலாம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நிதி ஆலோசகரைச் சந்தித்து விளக்கம் கேட்கலாம்.
பங்குச் சந்தை இறங்கினால், நம் ஃபண்ட் மேனேஜர்களும், பெரிய புரோக்கர்களும் முதலீடு செய்த நல்ல பங்குகளின் விலை குறைந்திருந்தால், பதற்றப்படாமல் அந்தப் பங்குகளை மேலும் வாங்கி, சராசரி செய்து ரிஸ்க்கைக் குறைத்து, கூடுதல் லாபத்துக்கு வழிசெய்கிறார்கள். நாமும் அந்த வழிமுறையைப் பின்பற்றி, நமது ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்துக்குக் கீழ் ஃபண்ட் இறங்கியிருந்தால், அந்த ஃபண்ட் நல்ல தேர்வாக இருக்கும்பட்சத்தில், அதில் கூடுதலாக முதலீடு செய்யலாம். இதனால் நமது ரிஸ்க் குறையும். மற்றும் யூனிட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பின்னர் சந்தை உயரும்போது கூடுதல் லாபமும் கிடைக்கும்.