நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் ஐ.பி.ஓ உஷார்!

ஷேர்லக்: இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் ஐ.பி.ஓ உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் ஐ.பி.ஓ உஷார்!

ஓவியம்: அரஸ்

ரியாக மாலை ஆறு மணிக்கு நம் அலுவலகத்துக்குள் நுழைந்த ஷேர்லக், வழக்கம்போலவே பரபரத்தார். “இரவு எட்டு மணிக்கு ஒரு முக்கியமான கம்பெனியின்      சி.இ.ஓ-வைச் சந்திக்க வேண்டும். எனவே, 30 நிமிடம்தான் உமக்கு’’ என்று சொன்னபடி நம் எதிரில் அமர்ந்தார் ஷேர்லக். தயாராக வைத்திருந்த கேள்விகளை நாம் கேட்கத் தொடங்கினோம். 

ஷேர்லக்: இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் ஐ.பி.ஓ உஷார்!

‘‘வங்கிகளின் வாராக் கடன் சுமை எந்த அளவுக்கு இருக்கிறது?’’

“கடந்த நிதியாண்டின் இரண்டாம்   காலாண்டில் வாராக் கடன் அதிகரிப்பு 105 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வங்கி களின் வாராக் கடன் உயர்வு 26.3 சதவிகிதத்துக்குக் குறைந்திருக்கிறது. வங்கிகளின் வாராக் கடன் சுமை குறைந்திருப்பதையே இது காட்டுகிறது. இதனால் வங்கிகளுக்கு இருந்த அழுத்தம் குறைய ஆரம்பித்துள்ளது. மேலும், அரசின் ரீகேப்பிட் டலைசேஷன் நடவடிக்கையும் வங்கிகளுக்கு பாசிட்டிவாக அமைந்தது. இதனால் வங்கிப்  பங்குகளின் விலை நல்ல ஏற்றம் கண்டது.  என்றாலும், இதன் மூலம் ஏற்படும் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிய இன்னும் சில மாத காலம் ஆகும் என்கிறார்கள் வங்கித் துறை நண்பர்கள்”.

“ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு ஐ.பி.ஓ-வுக்கு வரவேற்பு எப்படி?”

“கடந்த வாரம் ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ், பொதுப் பங்கு விற்பனை வெளியிட்டது. இதன்மூலம் ரூ.8,695 கோடி நிதியினைத் திரட்ட திட்டமிட்டிருந்தது. இதற்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் 4.9 மடங்கு கூடுதலாக விண்ணப் பிக்கப்பட்டது.”

‘‘குஜராத் ஃபெர்டிலைசர் பங்கு விலை மூன்று மாதங்களில் 109% உயர்ந்திருக்கிறதே?’’

“குஜராத் அரசுக்குச் சொந்தமான குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனப் பங்கு விலை, கடந்த மூன்று மாதங்களில் 109% உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம், வெளிநாட்டு நிறுவனங்களின்  முதலீடுதான். அந்நிய முதலீடு இந்தப் பங்கில் அதிகரித்ததால், கடந்த ஆகஸ்ட்டில் ரூ.262.3-ஆக இருந்த இந்தப் பங்கு விலை, இப்போது ரூ.446-க்கு உயர்ந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாட்டு முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவில் இந்தப் பங்கு இருக்கிறதாம்’’ என்று புருவத்தை உயர்த்தினார் ஷேர்லக்.”

‘‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியும் பல பங்குகள் அதிக வருமானத்தைத் தந்திருக்கின்றனவே?’’

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறிய 20 பங்குகள், 2017-ம் வருடத்தின் கடந்த மூன்று காலாண்டுகளில் 100% ஏற்றம் கண்டுள்ளன. ஆனால், அவர்கள் வெளியேறுகிறார்கள் என்பதற்காக நாமும் வெளியேற வேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் வெளியேறும் அதேசமயத்தில் முதலீடும் செய்துவருகின்றனர். எனவே, சந்தை நன்றாகச் செயல்படும்போது முதலீட்டாளர்கள் அதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். நல்ல பங்குகளின் விலை குறையும்போது  அவற்றில் முதலீடு செய்ய வேண்டும்; விலை ஏறும்போது லாபத்தை எடுத்துக் கொள்ளலாம்.”

‘‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  அதிக அளவில் புதிதாகப் பதிவு செய்திருக்கிறார்களாமே!’’

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்துக்கொண்டுதான் வெளியேறுகிறார்கள்.  அதே சம்யம், அவர்கள்  தொடர்ந்து முதலீடும் செய்து வருகிறார்கள். இந்த நிதியாண்டின் கடந்த ஆறு மாத காலத்தில் 1,019 புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  ஆர்வமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.’’
  
‘‘லூபின் பங்கு விலை 16% குறையக் காரணம் என்ன?’’

‘‘அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கையால் லூபின் பார்மாவின் பங்கு விலை கடந்த செவ்வாயன்று இறக்கம் கண்டது. இதன் கோவா மற்றும் பிற உற்பத்தி ஆலைகள்மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதால், இந்தப் பங்கு விலை, கடந்த நான்கு ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு 16% இறக்கம் கண்டுள்ளது. இதன் தாக்கம் இந்தப் பங்கில் அடுத்த 12-18 மாதங்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.”

‘‘ஐ.பி.ஓ வந்த இன்ஷூரன்ஸ் நிறுவனப் பங்குகளில் சிறு முதலீட்டாளர்களின் செயல்பாடு மந்தமாக இருக்கிறதே?’’


“இதுவரை எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் போன்றவை ஐ.பி.ஓ வெளியிட்டுள்ளன. இவற்றில் முதல் மூன்று நிறுவனங்கள் சந்தையில் பட்டியலான பிறகு இறக்கத்தைச் சந்தித்துள்ளன. காரணம், இந்தப் பங்குகளில் சிறு முதலீட்டாளர்கள் கவனம் குறைவாக இருக்கிறது. இன்ஷூரன்ஸ் பிசினஸ் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. மேலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஐ.பி.ஓ-களில் முதலீடு செய்வதற்குக் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டின. இதன் காரணமாக, இன்ஷூரன்ஸ் நிறுவனப் பங்கு களிலிருந்து சிறு முதலீட்டாளர் கள் சற்று விலகியே  நிற்கின்றனர். இந்தப் பங்குகள், வெளியீட்டு விலையைவிடவும் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் இன்ஷூரன்ஸ் மட்டும் 2% உயர்ந்து வர்த்தகமாகிறது. தற்போது சந்தை இருக்கும் நிலையில், இந்தப் பங்குகளின் விலை மிகவும் மதிப்பு உயர்ந்ததாக இருக்கிறது. எனவே,  முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளிலிருந்து சற்று ஒதுங்கியே இருப்பது நல்லது என்பதே அனலிஸ்ட்டுகள் தரும்  ஆலோசனை.”

‘‘ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட்  பங்கு முதல் நாளே 13% உயர்ந்திருக்கிறதே?’’


“இந்தப் பங்கு கடந்த சந்தையில் பட்டியலான முதல் நாள் வர்த்தகத்திலேயே 18% விலை உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே ரூ.299 வரை பங்கு விலை உயர்ந்தது. வர்த்தக முடிவில் 13% அதிகரித்து, ரூ.284-ல் நிலைபெற்றது. இன்றைய வர்த்தக முடிவிலும் ஏறக்குறைய இதே விலையில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.”

‘‘குஜராத் முதல்வர் உட்பட 22 பேருக்கு செபி அபராதம் விதித்திருக்கிறதே?’’


“சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, மிகவும் பிரபலம் இல்லாத சிறு நிறுவனமான சாரங் கெமிக்கல்ஸ் பங்கில் செயற்கையான வர்த்தகத்தை ஊக்குவித்ததற்காக குஜராத் முதல்வர் விஜய் ருபானி உள்பட 22 பேருக்கு அபராதம் விதித்துள்ளது. இவர்கள்மீது மொத்தம் ரூ.6.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் ஜனவரி 2011 மற்றும் ஜூன் 2011 வரையிலான காலத்தில் நடந்த செயற்கை வர்த்தகத்துக்கானதாகும்.”

‘‘புதன்கிழமை, சந்தை திடீர் இறக்கத்தைச் சந்தித்தது ஏன்?’’

‘‘நன்றாக ஏற்றம் கண்டுவந்த சந்தை, கடந்த வாரத்தின் சில வர்த்தக தினங்களில் இறக்கத்தைச் சந்தித்தது. புதனன்று சந்தை இறக்கத்தில் வர்த்தகமானது. ஏனெனில், பெரும்பாலான பங்குகளில் லாபநோக்கிலான விற்பனை நடந்ததே காரணம்.  கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெரும்பாலான பங்குகளின் விலை உயர்ந்தன. இதன் காரணமாக, கிடைத்த லாபத்தை எடுத்துக்கொண்டு பங்குகளை விற்றிருக்கிறார்கள் பலர். இதனால்தான் சந்தை இறக்கத்தைச் சந்தித்தது.

ஆனாலும், நிஃப்டி 10300 என்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சந்தை இடையிடையே சிறிய இறக்கத்தைச் சந்தித்தாலும், இன்னும்கூட உச்சத்தில்தான் இருந்துவருகிறது. சந்தையில் ஏற்படும் இந்த   இறக்கத்தைப் பயன்படுத்தி, நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கி, உங்கள் போர்ட் ஃபோலியோவில் சேர்க்கத் தவறாதீர்கள்” என்ற ஷேர்லக், ‘‘மணியாகிவிட்டது. மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது. நான் கிளம்புகிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.