நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: அடாக் பங்குகள் உஷார்!

ஷேர்லக்: அடாக் பங்குகள் உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: அடாக் பங்குகள் உஷார்!

ஓவியம்: அரஸ்

‘‘13-ம் ஆண்டு சிறப்பிதழுக்கான அறிவிப்புப் பக்கம் ஜோராக ரெடியாகிவிட்டதே!’’ - டேபிள் மேலே பக்கத்தை எடுத்துப் பார்த்து பாராட்டினார் ஷேர்லக். ‘‘13-ம் ஆண்டுச் சிறப்பிதழில் சூப்பர் விருந்து படைக்கப்போகிறீர்கள்!’’ என்றபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார் ஷேர்லக்.  

ஷேர்லக்: அடாக் பங்குகள் உஷார்!

“அனில் அம்பானி நிறுவனப் பங்குகள் அனைத்துமே அடி வாங்குகின்றனவே?”

‘‘அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனப் பங்குகளில் பெரும்பாலானவை சென்ற வாரத்தில் புதன்கிழமையன்று இறக்கத்தைச் சந்தித்தன. ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ரிலையன்ஸ் கேபிட்டல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் நேவல் அண்ட் இன்ஜினீயரிங், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஆகியவை 8% முதல் 10% வரை விலையிறக்கம் கண்டன. அன்றைய தினத்தில் நிஃப்டி 0.67%், சென்செக்ஸ் 0.55 சதவிகிதம்தான்  இறக்கம் கண்டன.

அதிகக் கடன் சுமையால் திவாலாக இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் பங்கு விலையிறக்கத்துக்குக் காரணம். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை இந்த மாதத்தில் மட்டும் 41%  சரிந்திருக்கிறது.  மொத்தமாக இந்த வருடத்தில் 70% சரிந்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தனது ரூ.49,000 கோடி கடனுக்கான வட்டியைக்கூட செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இந்தக் கடன் பிரச்னையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ள நினைத்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
 
2008-ல் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் விவகாரத்தினால் சென்செக்ஸ், நிஃப்டி 4% முதல் 5% வரை சரிவைச் சந்தித்தன. தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலாகும் செய்தி பிற நிறுவனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தினால், அது சந்தையின் வளர்ச்சியையும் கணிசமாகப் பாதிக்கும். எனவே, அனில் அம்பானி குழும நிறுவனப் பங்குகளில் உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில், இவற்றில் சில நிறுவனங்களுக்கும் கடன் அதிகமாக உள்ளன.

இந்த மாதத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா 17 சதவிகிதமும், ரிலையன்ஸ் கேபிட்டல் 27 சதவிகிதமும் சரிவடைந்திருக்கின்றன. சமீபத்தில் சந்தையில் பட்டியலான ரிலையன்ஸ் நிப்பான் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியும் சரிவைச் சந்தித்திருக்கிறது. அனில் அம்பானி குழும நிறுவனங்களின் கடன், அவற்றின் மொத்த மார்க்கெட் கேபிட்டலைசேஷனைக் காட்டிலும் இரண்டு மடங்காக உள்ளது”

“நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனப் பங்கின் முதல் நாள் வர்த்தகம் எப்படி?”

“நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், பொதுப் பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) நல்ல வரவேற்பைப் பெற்று 1.19 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், பங்குச் சந்தையில் பட்டியலான முதல் நாள் வர்த்தகம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஐ.பி.ஓ-வில் ரூ.800-க்கு விற்பனையான இந்தப் பங்கு, அதைவிட 6.4% குறைவாக ரூ.748.90-க்குத்தான் பட்டியலானது. அதுமட்டுமல்லாமல், அன்றைய வர்த்தக முடிவில் வெளியீட்டு விலையைவிட 9.37% இறங்கி ரூ.725.05-க்கு வர்த்தகமானது.
இந்தப் பங்கை வாங்கியவர்களில், முதல் நாளில் லாபம் பார்க்க நினைத்தவர்களுக்கு இந்த இறக்கம் கவலையை ஏற்படுத்தியது. அன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ.749 வரை உயர்ந்தும், ரூ.717.75 வரை குறைந்தும் வர்த்தக மானது. இந்த இறக்கத்துக்குக் காரணம், இந்தப் பங்கில் முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைவாக இருந்ததுதான்.”

“பாரத் இ.டி.எஃப் வெளியீட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதே?”


“கடந்த செவ்வாயன்று பாரத் இ.டி.எஃப் 22 ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு விற்பனைக்கு வந்தது. அந்த விற்பனையில் மார்கன் ஸ்டான்லி, எல்.ஐ.சி, பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்.பி.ஐ பென்ஷன் ஃபண்ட், ஹெச்.டி. எஃப்.சி எர்கோ இன்ஷூரன்ஸ் உள்பட 44 ஆங்கர் முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  விண்ணப்பிக்கப்பட்ட அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட ஆறு மடங்கு கூடுதலாகும். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.12,102.97 கோடி ஆகும். புதன்கிழமையன்று சிறு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.”

“செப்டம்பர் காலாண்டு முடிவுகள் எப்படி?’’

“அண்மையில் ஐ.பி.ஓ வந்த ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் ஏ.எம்.சி நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் காலாண்டில் 25% உயர்ந்து, ரூ.122 கோடியாக உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸ் நல்ல வளர்ச்சியடைந்ததன் மூலம் இந்த நிகர லாப வளர்ச்சியை இந்த நிறுவனம் அடைந்துள்ளது. 

பேங்க் ஆஃப் பரோடா நிகர லாபம், எதிர்பார்க்கப்பட்டதை விட மோசமாக 36%  குறைந்திருக்கிறது. இது, 17% குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. முந்தைய நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ.552 கோடியாக இருந்த இதன் நிகர லாபம், இந்த நிதி யாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ.355 கோடியாகக் குறைந்திருக்கிறது.

சன் பார்மா, செப்டம்பர் காலாண்டில் 59 சதவிகித நிகர லாப வளர்ச்சியை இழந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 2235.14 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த சன் பார்மா, தற்போது ரூ.912.12 கோடி மட்டுமே நிகர லாபம் அடைந்துள்ளது. ” 

“ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ் பங்கின் முதல் நாள் வர்த்தகம் எப்படி?”


‘‘இந்த நிறுவனப் பங்கு இன்று (வெள்ளிக் கிழமை) பட்டியலிடப்பட்டது. பங்கின் வெளியீட்டு விலை ரூ.290-ஆக இருந்த நிலையில், ரூ.313-க்கு பட்டியலிடப் பட்டது. வர்த்தகத்தின் இடையே ரூ.366-க்கு உயர்ந்தது. வர்த்தக முடிவில் 18%  உயர்ந்து ரூ.344.60 என நிலைபெற்றது. 

‘‘இந்திய பங்குச் சந்தையின் போக்கு எப்படியிருக்கிறது?’’

‘‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு நீக்கம்,  ஜி.எஸ்.டி உள்பட பல்வேறு சீர்திருத்தங்களைக் கடந்த சில ஆண்டுகளில் கொண்டு வந்திருக்கிறது. இதனால், குறுகிய காலத்தில் சில பாதகமான விளைவுகள் ஏற்பட்டாலும், நீண்ட காலத்தில் பாசிட்டிவான பல விளைவுகள் ஏற்படும் என மூடீஸ் நிறுவனம் நினைப்பதால், இந்தியாவுக்கான தரக்குறியீட்டை அது உயர்த்தியிருக்கிறது. இந்தத் தகவலால் இன்று இந்திய பங்குச் சந்தை நாள் முழுக்க அதிக ஏற்றத்திலேயே வர்த்தகமானது.  வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 236 புள்ளிகளும், நிஃப்டி 69 புள்ளிகளும் ஏற்றம் கண்டன.

மூடீஸ் அறிவிப்பினால் பங்குச் சந்தை, கடன் சந்தைக்குச் சாதகமான விளைவுகள் ஏற்படும். ஆனால், இந்திய ரூபாய் பலம் பெறும். இதனால் ஐ.டி பங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும்.

என்றாலும், குறுகிய காலத்தில் இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில்தான் இருந்து வரும். வரும் வாரத்தில், காலாண்டு முடிவுகளும் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். இடையில் நல்ல நிறுவனப் பங்குகளில் விலையில் இறக்கம் கண்டால், வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது” என்ற ஷேர்லக், “சிறப்பிதழை நீர் அடுத்த வாரம் முடிக்கப் போவதால், வியாழன் மாலை அன்றே உம் அலுவலகத்துக்கு வருகிறேன்’’ என்று சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அரைமணி நேரம் கழித்து ஷேர்லக் வாட்ஸ்அப்பில் அனுப்பிய கடைசிச் செய்தி...

“டிசம்பர் 18 முதல் சிப்லா, லூபின் பங்குகள் சென்செக்ஸ் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, இண்டஸ்இண்ட்பேங்க், யெஸ் பேங்க் பங்குகள் சேர்க்கப்படும்!”