நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: உஷார் பங்குகளை விற்று லாபம் பார்க்கும் புரமோட்டர்கள்!

ஷேர்லக்: உஷார் பங்குகளை விற்று லாபம் பார்க்கும் புரமோட்டர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: உஷார் பங்குகளை விற்று லாபம் பார்க்கும் புரமோட்டர்கள்!

ஓவியம்: அரஸ்

சொன்ன நேரத்துக்குச் சரியாக வந்து சேர்ந்தார் ஷேர்லக். “நாணயம் கான்க்ளேவ், எக்ஸ்போ எனக் கலக்குகிறீர்களே... சென்னை கலைவாணர் அரங்கம் அதிரும்போல தெரிகிறதே...” என விழா வடிவமைப்புப் பக்கங்களைப் பார்த்தபடி கேட்டார். “நாணயம் விகடன் வாசகர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கும் ஒரு விருது கொடுத்துவிடலாமா” என நாம் கேட்டதும், “கேள்விகளைக் கேட்கிறீர்களா... வழக்கம்போல அவசர மீட்டிங் இருக்கிறது” என்றார். நாம் கேள்விகளுக்குத் தாவினோம்.   

ஷேர்லக்: உஷார் பங்குகளை விற்று லாபம் பார்க்கும் புரமோட்டர்கள்!

“ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லையே?”

“சில மாதங்களுக்கு முன்னர்வரை பணவீக்கம் குறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி, சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை ஆகியவை சொத்துகளின் விலையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6 சதவிகிதமாகவே உள்ளது.

ஆனால், பணவீக்கம் கட்டுக்குள் இல்லாவிட்டால் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி வரலாம். அப்படி உயர்த்தினால் அது வங்கிகளுக்கு நெகட்டிவாக மாறலாம். பணவீக்கமும்,வளர்ச்சிக் குறியீடுகளும்தான் அதைத் தீர்மானிக்கும்.” 

“வங்கிப் பங்குகள் இறக்கம் கண்டிருக்கின்றனவே?”

“ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாததால் முதலீட்டாளர் கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். இதனால், பங்குச் சந்தையில் இறக்கத்தைப் பார்க்க முடிந்தது. முக்கியமாக வங்கிப் பங்குகளை விற்பது அதிகரித்தது.

பி.எஸ்.இ பேங்க் குறியீடு 1.23 சதவிகிதம் இறக்கம் கண்டது. எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் ஆகியவை 2.27 சதவிகிதம் வரை இறக்கம் கண்டன. இதனால் சென்செக்ஸ் 205 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு 32,597.18 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 74.15 புள்ளிகள் இறங்கி 10044.10 புள்ளிகளில் வர்த்தகமானது.”

“கடந்த வாரத்தில்  சில துறைகளின் பங்குகளில் இறக்கத்தையே பார்க்க முடிந்தது. என்ன காரணம்?”

“அதற்கு ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாதது, பணவீக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கைச் செய்தது மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது ஆகியவை காரணங்களாக உள்ளன. இவை வங்கிப் பங்குகளை மட்டுமல்லாமல் பார்மா, ஆட்டோ மொபைல், ஐ.டி மற்றும் மெட்டல் போன்ற துறைகளிலும் இறக்கத்தை ஏற்படுத்தின.    

ஷேர்லக்: உஷார் பங்குகளை விற்று லாபம் பார்க்கும் புரமோட்டர்கள்!

ஓ.என்.ஜி.சி, எல் அண்டு டி, டாடா மோட்டார்ஸ், எம் அண்டு எம், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஐ.டி.சி லிமிடெட், என்.டி.பி.சி, டாக்டர் ரெட்டீஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஏசியன் பெயின்ட், அதானி போர்ட்ஸ், சிப்லா, விப்ரோ, டி.சி.எஸ் மற்றும் லூபின் உள்ளிட்ட பங்குகள் இறக்கத்தை அடைந்தன. 

பி.எஸ்.இ மெட்டல் குறியீடு 2.03 சதவிகிதம் இறக்கம் கண்டது. டெலிகாம் 1.38 சதவிகிதமும், பொதுத்துறை நிறுவனங்கள் 1.32 சதவிகிதமும், உள்கட்டமைப்புத்துறை 1.15 சதவிகிதமும், மூலதனப் பொருள்கள் 1.09 சதவிகிதமும், ஹெல்த்கேர் 1.02 சதவிகிதமும் இறக்கம் கண்டன. பவர் 0.91 சதவிகிதமும் ஆட்டோமொபைல் 0.73 சதவிகிதமும் இறக்கம் அடைந்தன.”

“மெட்டல் பங்குகள் விலை சரியக் காரணம் என்ன?”

“சர்வதேச அளவில் கமாடிட்டி பொருள்களின் விலையில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவே மெட்டல் பங்குகளில் விலை இறக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மெட்டல் துறை குறியீடு இரண்டு சதவிகிதம் குறைந்திருக்கிறது.
காரணம், சீனாவில் மெட்டல் கமாடிட்டிகளுக்கான தேவை குறைந்திருக்கிறது. இந்த நிலையில் மெட்டல் கமாடிட்டிகளின் விலையும் குறைந்திருக்கிறது. இதில், ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் 3.9 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஹிண்டால்கோ, ஹெச்.இசட்.எல், செயில் ஆகியவை மூன்று சதவிகிதமும், வேதாந்தா 2.2 சதவிகிதமும் குறைந்திருக்கின்றன.”

“புரமோட்டர்களின் அடமானப் பங்குகளின் மதிப்பு சரிந்திருக்கிறதே?”

“இந்த வருடம் நவம்பர் மாதம் வரை பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள 5,148 நிறுவனங்களில் 3,005 நிறுவனங்களில்  அடமானம் நடந்துள்ளது. புரமோட்டர்கள் அடமானம் வைத்துள்ள நிறுவனப் பங்குகளின் மதிப்பு, நவம்பர் மாதத்தில் ரூ.2.78 லட்சம் கோடிகளுக்குச் சரிவடைந்திருக்கிறது. இது, செப்டம்பர் மாதத்தில் ரூ. 2.6 லட்சம் கோடியாக இருந்து, பின்னர் அக்டோபர் மாதத்தில் ரூ.2.81 லட்சம் கோடியாக அதிகரித்தது.    

ஷேர்லக்: உஷார் பங்குகளை விற்று லாபம் பார்க்கும் புரமோட்டர்கள்!

ஆனால், இப்போது மீண்டும் அதன் மதிப்பு குறைந்திருக்கிறது. அதிகளவில் அடமானம் நடப்பது சந்தையின் போக்குக்கு நல்ல அறிகுறியாக இருக்காது. இந்தப் போக்கு, சந்தையில் இறக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 448 நிறுவனங்களில் 30 சதவிகிதப் பங்குகள் அடமானம் செய்யப் பட்டுள்ளன. 139 நிறுவனங்களில் 30-50 சதவிகிதப் பங்குகள் அடமானம் செய்யப்பட்டுள்ளன. 81 நிறுவனங்களில் 50-75 சதவிகிதப் பங்குகள் அடமானம் செய்யப்பட்டுள்ளன.”

“பல புரமோட்டர்கள், பங்குகளை விற்று லாபம் பார்த்திருக்கிறார்களே?”

“கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 7-ம் தேதி வரையிலான காலத்தில் ஸ்மால் மற்றும் மிட் கேப் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 140 நிறுவனர்கள், சந்தையின் ஏற்றத்தைப் பயன்படுத்தி நிறுவனங்களில் அவர்கள் கொண்டுள்ள பங்குகளைக் கணிசமாக விற்று லாபம் பார்த்திருக்கிறார்கள். இப்படி ரூ.2,600 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை செய்யப் பட்டிருக்கின்றன. இப்படி விற்கப்பட்ட பங்குகளின் மதிப்பீடு அதிகம் என்பது கவனிக்கத் தக்கது.

 வி-கார்ட், எஸ்கார்ட்ஸ், அசோகா பில்ட்கான், கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், மெக்லியோட் ருசெல் இந்தியா, ஆக்‌ஷன் கன்ஸ்ட்ரக்‌ஷன், சாரதா மோட்டார், வர்தமான் ஸ்டில்ஸ், கேமான் இன்ஃப்ரா போன்றவை முக்கிய நிறுவனங்களாகும்.”

“மீண்டும் பி-நோட்டில் முதலீடு அதிகரித்திருக்கிறதே?”

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்பு ஆவணங்கள் (பி-நோட்) மூலமாக முதலீடு செய்வது வழக்கம். கடந்த ஜூன் மாதம் முதல் பி-நோட் முதலீடு குறைய ஆரம்பித்தது. செப்டம்பர் மாதத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி-நோட் முதலீடுகள் குறைந்தன.

ஆனால், அக்டோபர் மாதத்தில் மீண்டும் பி-நோட் முதலீடுகள் அதிகரித்துள்ளன. அக்டோபர் மாதத்தில், ரூ.90,161 கோடி பி-நோட் மூலம் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. இதன் மூலம் பி-நோட் முதலீடு ரூ.1.31 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.”

“இன்ஃபோசிஸ் பங்கு திடீரென்று விலை உயர்ந்திருக்கிறதே?”

“காரணம், இன்ஃபோசிஸ் நிறுவன சி.இ.ஓ-வாக சலீல் பாரெக் நியமிக்கப்பட்டிருப்பதுதான். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த பல மாதங்களாகவே நிர்வாக அளவில் குழப்பம் இருந்து வந்தது. விஷால் சிக்கா ராஜினாமாவும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் பாதித்தது. அதன் பிசினஸ் வளர்ச்சியும் குறைந்தது.

இந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் சலீல் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மூன்று மாதங்கள் ஆகியிருக்கின்றன.

இவருடைய நியமனத்தையொட்டி இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கின் விலை நான்கு சதவிகிதம் வரை உயர்ந்திருக்கிறது. இவர் கேப்ஜெமினி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்தவர். இவருடைய நியமனம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பாசிட்டிவான மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பங்கின்மீது மீண்டும் முதலீட்டாளர்களின் கவனம் குவிந்துள்ளது.”

“நவம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் எப்படியிருந்தன?”

“சந்தையில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தபடிதான் இருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.

நவம்பரில் ரூ.20,308 கோடி ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஐ.பி மூலம் மட்டுமே ரூ.6000 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ கணக்குகளும் 1.75 மில்லியனாக அதிகரித்துள்ளன.”

“2018-ம் ஆண்டிலும் இந்தியச் சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடரும் என்கின்றனவே, வெளிநாட்டு தரகு நிறுவனங்கள்?” 

“நோமுரா, ஹெச்.எஸ்.பி.சி மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் இந்தியச் சந்தைகளை மிகவும் நம்புகின்றன. நம்முடைய சந்தைகளில் தற்போது நிலவும் காளையின் ஆதிக்கம் 2018-லும் தொடரும் என்று அவை தெரிவிக்கின்றன. 2018-ல் 15 சதவிகிதம் வரை சந்தை வளர்ச்சியடையும் என்றும் கூறுகின்றன.

நிறுவனங்களின் நிதி நிலையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் மீதான நம்பிக்கை, பேங்க் ரீகேப்பிட்டலைசேஷன் நடவடிக்கை எனப் பல்வேறு சாதகமான சூழல்கள் இந்தியப் பொருளாதாரத்துக்கு இருக்கின்றன. இதனால் வரும் ஆண்டிலும் பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2018-ல் நிஃப்டி 11600 புள்ளிகளை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.”

“டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு செபி அபராதம் விதிக்கக் காரணம்?”

“டாடா ஸ்டீல், அதன் குழும நிறுவனமான டின்ப்ளேட் கம்பெனியில் தன்வசம் உள்ள பங்குகளை அதிகரித்துள்ளது. பங்கு மூலதனத்தை அதிகரித்திருப்பதை ‘செபி’யிடம் தாக்கல் செய்யத் தவறியதால் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.”

ஷேர்லக், நம் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடிக்கவும், அவருடைய செல்போன் ஒலித்தது. நமக்கு டாட்டா காட்டிவிட்டு அவசரமாகப்  புறப்பட்டார்.

ஐ.பி.ஓ-க்கு என்.எஸ்.இ மீண்டும் விண்ணப்பம்!

.பி.ஓ வெளியீடுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐபிஓ-வாக என்.எஸ்.இ ஐ.பி.ஓ இருக்கிறது. இதன் வெளியீட்டு மதிப்பு கிட்டதட்ட ரூ.10 ஆயிரம் கோடி. கடந்த வருடம் டிசம்பரிலேயே செபியிடம் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு என்.எஸ்.இ விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கிறது. ஏனெனில், இதன் கோ-லொகேஷன் விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைத்திருப்பதால் மீண்டும் விண்ணப்பம் செய்திருக்கிறது. இதன் மூலம் விரைவில் செபியிடமிருந்து ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.