
ஓவியம்: அரஸ்
நாணயம் பிசினஸ் ஸ்டார் விருதுகள் நிகழ்ச்சிக்காக நாணயம் விகடன் ஆசிரியர் குழுவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ஷேர்லக்கிடமிருந்து போன். ‘‘மாலையில் பிசினஸ் ஸ்டார் அவார்டு நிகழ்ச்சியில் சந்திப்போம்’’ என்றார். முன்னதாகவே நிகழ்ச்சிக்கு வந்துவிட்டவர் இறுதிவரை உட்கார்ந்து ஆர்வமாக விருது வழங்கும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கண்டுகளித்தார்.

‘‘பிசினஸ் சாதனை யாளர்களுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை இத்தனை சுவாரஸ்யமாக உம்மால்தான் நடத்த முடியும். வாழ்த்துகள், இனி ஒவ்வோர் ஆண்டும் இதேமாதிரி நிகழ்ச்சியை உம்மிடமிருந்து நான் மட்டுமல்ல, இந்த தமிழகமே எதிர்பார்க் கிறது’’ என்றபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார். உணவருந்திய படியே நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் இனி...
சர்க்கரை நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து பல முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திருக்கிறதே!
“சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களில் பங்குகளின் விலை கடந்த ஒரு வாரத்தில் செவ்வாயன்று ஒரே நாளில் மட்டும் 14% வரை உயர்ந்து வர்த்தகமாயின. காரணம், மத்திய அரசு இதுவரை சர்க்கரைக்கு கிடங்கு இருப்பு 500 டன்னாக வரம்பு விதித் திருந்தது. இதனால், வர்த்தகர்களிடம் சர்க்கரை வர்த்தகத்துக்கான ஆர்வம் குறைந்தது. அந்த வரம்பை அரசு தற்போது விலக்கியிருக்கிறது. கிடங்கு இருப்புக்கு இருந்த வரம்பானது விலகியதால், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றம் கண்டுள்ளது.’’
ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகள் 2017-ம் ஆண்டில் அபரிமிதமாக வளர்ச்சி கண்டிருக்கிறதே?
“பி.எஸ்.இ ஸ்மால் கேப் குறியீடானது கடந்த ஒரு வருடத்தில் 50% வளர்ச்சி அடைந்திருக்கிறது. சென்செக்ஸ் 25% வளர்ச்சி கண்டிருக்கிறது. இதன் மூலம் சென்செக்ஸைவிட இரண்டு மடங்கு வளர்ச்சியை ஸ்மால்கேப் இண்டெக்ஸ் கொடுத்துள்ளது. இதற்குக் காரணம், அந்தக் குறியீட்டில் உள்ள 861 ஸ்மால் கேப் நிறுவனங்களில் 80 சதவிகித நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருக்கின்றன. பி.எஸ்.இ-யில் உள்ள 2,353 பங்குகளில் 420 பங்குகள் 18% வளர்ச்சி யடைந்துள்ளன. இவற்றில் 90 சதவிகிதப் பங்குகள் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகள். ஸ்மால் கேப் நிறுவனங்கள் வளர்ச்சியானது விரைவாகவும், பெரிய அளவிலும் இருக்கும். மேலும், எதிர் காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடை வதற்கான சூழல் ஸ்மால் கேப் பங்குகளுக்கு இருக்கிறது. நீண்ட கால அடிப்படையில் அதிக வருமானத்தைத் தரக்கூடியவை ஸ்மால் கேப் பங்குகள்.
ஆனால், சில ஸ்மால் கேப் பங்குகள் சரிவையும் சந்தித்திருக்கின்றன. நிதின் ஃபயர் புரொட்டக்ஷன், லாங்கோ இன்ஃப்ராடெக், வீடியோகான் மற்றும் ஸ்ரீ அதிகாரி பிரதர்ஸ் ஆகியவை 50 சதவிகிதத்துக்கும் மேல் இறக்கம் கண்டிருக்கின்றன. ஸ்மால் கேப் பங்குகள் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடியவை. ஆனால், ஃபண்டமென்டல் நன்றாக உள்ள பங்குகளைத் தேர்வு செய்வது நல்லது.”
சுமார் 220 பங்குகளின் விலை 52 வார உச்சத்தை எட்டியிருக்கின்றனவே?
‘‘வியாழக்கிழமையன்று சந்தைக் குறியீடுகள் பெரிதாக ஏற்றம் காணவில்லை. ஆனால், அன்றைக்கு மட்டும் சுமார் 220 பங்குகளின் விலை 52 வார உச்சவிலையைத் தாண்டி இருக்கின்றன. நுகர்வோர் துறையை சேர்ந்த சுமார் 45 நிறுவனப் பங்குகள் புதிய உச்சத்தைக் கண்டன. நிதிச் சேவை துறையைச் சேர்ந்த தலா 40 நிறுவனங்களின் பங்குகள் அதிக விலை ஏற்றம் கண்டன. ஃப்யூச்சர் கன்ஸ்யூமர், கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் கன்ஸ்யூமர், கிளாஸ் கோஸ்மித்கிளைன் பார்மாசூட்டிக்கல்ஸ், பயோகான், வோக்கார்ட், வி.ஆர்.எல், மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், ரேமண்ட், ஜெட் ஏர்வேஸ், கெய்தான், மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், வோல்டாஸ், சத்பவ் இன்ஜினீயரிங், வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ், பிடிலிட்டி இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு விலை புதிய உச்சம் கண்டன.’’
ஸ்மால் 2018 இறுதிக்குள் நிஃப்டி புள்ளிகள் 12500-க்கு உயரும் என எஸ்.பி.ஐ கேப்பிட்டல் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளதே!
‘‘நிறுவனங்களின் வருமானம் மேம்பட்டு வருவதால் இந்த அளவுக்கு சந்தை ஏறும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி அமலாக்கம், கடனுக்கான வட்டிக் குறைப்பு போன்றவற்றால் வரும் ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என எஸ்.பி.ஐ கேப்பிட்டல் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.’’
இந்தியப் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?
“நுகர்வுக் கலாசாரம், நிதிநிலை, மத்திய அரசின் முதலீடு மற்றும் ஒழுங்கு முறை நடவடிக்கைகள் ஆகிய நான்கு விஷயங்கள் மீதியிருக்கும் நம்பிக்கையில் தான் சந்தையானது தொடர்ந்து வலுவான போக்கில் நீடிக்கிறது.
நம்முடைய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை தற்காலிகமானதாகவே இருக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்றவற்றால் ஏற்பட்ட தாக்கங்கள் விலகி, பொருளாதாரம் மீண்டு வருகிறது. பேங்க் ரீகேபிட்டலைசேஷனும், சாலைக் கட்டுமானத்துக்காக ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதும் நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது. மழைப்பொழிவு நன்றாக இருப்பதாலும், ஊதிய உயர்வு இருப்பதாலும் கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. நிறுவனங்களின் நிதி நிலையிலும் முன்னேற்றம் தெரிகிறது.
இதனால்தான் தேர்தல், பட்ஜெட், அமெரிக்க வட்டி விகித முடிவுகள், பிற நாடுகளின் சந்தை வளர்ச்சி, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி குறைவு, பணவீக்க விகிதம் உயர்வு, நிறுவனங்களின் குறைந்த வருவாய் என எவ்வளவு தடைகள் வந்தபோதிலும் சந்தைத் தன்னை ஏற்றத்தின் போக்கில் தக்கவைத்துக்கொண்டு வளர்ந்துள்ளது. துறை வாரியாகப் பார்க்கும்போதும் இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள்கள் எனப் பரவலாக அனைத்துத் துறைகளின் செயல்பாடும் நன்றாகவே இருக்கிறது. இதனால், 2018-ம் ஆண்டில் சந்தையின் செயல்பாடும் பாசிட்டிவாக இருக்கும்’’ என்றவர், அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அஸ்ட்ரான் ஐ.பி.ஓ-வுக்கு அமோக ஆதரவு!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பேப்பர் உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரான் பேப்பர் சமீபத்தில் ஐ.பி.ஓ வெளியிட்டது. அந்த நிறுவனத்துக்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியமாக, சிறு முதலீட்டாளர்களிடம் வரவேற்பு அதிகமாக இருந்தது. மொத்தமாக 12 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. ரூ.1.40 கோடி பங்குகள் இந்த வெளியீட்டில் விற்பனைக்கு விடப்பட்டன. இந்த ஐ.பி.ஓ மூலம் ரூ.70 கோடி நிதியைத் திரட்டவிருக்கிறது.
டிரேடர்ஸ் பக்கங்கள் பகுதியைப் படிக்க : http://bit.ly/2BSuUTJ