நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்!

ஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்!

ஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்!

ஷேர்லக் இன்னும் வரவில்லையே என நாம் நினைத்துக்கொண்டிருக்க, அவரோ செல்போனில் அழைத்தார். “அவசர வேலையாக முக்கியமான ஓர் இடத்துக்கு வந்துவிட்டேன்.நாம் போனிலேயே பேசிவிடலாமே...” என்றார். நாம் அவருடைய அவசரத்தைப் புரிந்துகொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

2018-ல் ஐ.பி.ஓ சந்தை எப்படி இருக்கும்?

“கடந்த 2017-ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) செய்தன. 36 ஐ.பி.ஓ-க்கள் மூலம் ரூ.67,147 கோடி நிதி திரட்டப்பட்டிருக்கிறது. இதற்குமுன் அதிகபட்சமாக 2010-ல் ரூ.37,534 கோடி நிதி  திரட்டப்பட்டது.

சந்தை, கடந்த வருடத்தில் சிறப்பாக ஏற்றம் கண்டு வந்தது ஐ.பி.ஓ சந்தைக்கும் சாதகமாக அமைந்தது. 2018-ல் ஐ.பி.ஓ சந்தை 2017-யைவிட அதிக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கலாம். அனலிஸ்ட்டுகள் கணிப்பதுபோல, சந்தை இந்த ஆண்டும் சிறப்பாகச் செயல்பட்டால், ஐ.பி.ஓ மூலம் பல நிறுவனங்கள் சந்தைக்குள் நுழையும்.

ஏற்கெனவே, பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கின்றன. 2019-ல் பொதுத் தேர்தல் வரவிருப்பதால், அதை முன்வைத்து சந்தை ஏற்றமடையும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, 2018-ல் ஐ.பி.ஓ வெளியீடுகள் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.”

ஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்!

புரமோட்டர்களின் அடமானம் வைத்தப் பங்குகள் 9% அளவுக்கு உயர்ந்திருக்கின்றனவே?

“பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் புரமோட்டர்கள், தங்களின் நிதித் தேவைக்காக  தங்களது நிறுவனப் பங்குகளை அடமானம் வைப்பது வழக்கம்.

பி.எஸ்.இ-ல்  பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் புரமோட்டர்கள், தங்களின் பங்கு களில் 30 சதவிகிதத்தை அடமானம் வைத்துள்ளனர். அப்படி அடமானம் வைத்த பங்குகளின் மதிப்பு 9% உயர்ந்திருக்கிறது. கடந்த நவம்பர் இறுதியில், ரூ.2.78 லட்சம் கோடியாக இருந்த அடமானப் பங்குகளின் மதிப்பு, டிசம்பரில் ரூ.2.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பங்குகள் அதிக அளவில் அடமானம் வைக்கப்படுவது  முதலீட்டாளர்களுக்குப் பாசிட்டிவான செய்தி அல்ல. எனவே, இதுமாதிரியான நிறுவனங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.” 

2017-ல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வளர்ச்சி எப்படி?

“2017ல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட முதலீட்டின் மதிப்பு ரூ.5.4 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டின் மொத்த முதலீடு ரூ.22 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. இது, 2016 முடிவிலிருந்த முதலீட்டைக் காட்டிலும் 32% வளர்ச்சி ஆகும்.

இந்த அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிக்கக் காரணம், சிறு முதலீட்டாளர்கள் நாடும் முதலீடுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலில் இருப்பதுதான். பண மதிப்பு நீக்கம், சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதக் குறைப்புப் போன்றவையும் இதற்கு முக்கியக் காரணமாகும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே சரியானது எனத் தொடர்ந்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தியதால், இந்த வளர்ச்சி சாத்தியமானது. இதனால் ஃபண்ட் நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.’’

வரும் வாரங்களில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

“சந்தையின் போக்கு பட்ஜெட், பருவமழை, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைச் சார்ந்துள்ளது. எனவே, குறியீடுகளைக் கவனிப்பதைவிட தனிப்பட்ட பங்குகளின் செயல்பாட்டைக் கவனித்தால் லாபம் பார்க்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”

புதிதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாகப் பதிவு செய்திருக்கிறார்களே?

“இந்தியச் சந்தைகளில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் முதலீடு செய்யும் போக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிதி ஆண்டின் கடந்த பத்து மாதங்களில் மட்டுமே புதிதாக 1,184 புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செபியிடம் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது மொத்தமாகப் பதிவு செய்துள்ள வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,991-ஆக உயர்ந்திருக்கிறது.

பங்குச் சந்தையில் மட்டுமல்லாமல், வெளி நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் நம்முடைய கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யவும் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.”

200-க்கும் மேற்பட்ட பங்குகளில் கவனமாக வர்த்தகம் செய்யுமாறு பங்குச் சந்தைகள் எச்சரித்திருக்கின்றனவே?

“பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் 200 பங்குகளின் வர்த்தகத்தில் மிகவும் கவனமாக வர்த்தகம் செய்யுமாறு பி.எஸ்.இ,     என்.எஸ்.இ ஆகிய இரண்டுமே அதன் உறுப்பினர்களை எச்சரித்துள்ளன.

காரணம், இந்த 200 பங்குகளும் எளிதில் பணமாக்க இயலாத நிலையில் உள்ளன. அதாவது, இந்தப் பங்குகளை அவ்வளவு எளிதில் விற்பனை செய்ய முடியாது. ஏனெனில், அவற்றில் வர்த்தகமானது மிகவும் குறைவாகவே நடக்கிறது. இவற்றை வாங்குவதற்குப் பெரிதும் ஆர்வம் காட்டப்படுவதில்லை.

இவற்றில் முதலீடு செய்வது முதலீட்டாளர் களுக்கு அதிக ரிஸ்க்கைக் கொடுக்கும். இதனால், இவற்றில் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். அவற்றில் பில்பவர், க்ரியேட்டிவ் ஐ, டுடேய்ஸ் ரைட்டிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், உஷா மார்ட்டின் எஜுகேஷன் அண்ட் சொல்யூஷன்ஸ், யூரோ மல்டிவிஷன் மற்றும் ஜெய்ஹிந்த் புராஜக்ட்ஸ்  ஆகியவை அடக்கம்.”

நிஃப்டி 11500க்கு உயரும் என அனலிஸ்ட் அறிக்கை சொல்லி இருக்கிறதே?

“இந்தியப் பங்குச் சந்தைகள் 2018-ம்  ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் வாய்ப்பு அதிகம் உள்ள தாகப் பெரும்பாலான அனாலிசிஸ் ரிப்போர்ட்டுகள் சொல்கின்றன. தற்போது டாய்ச்  பேங்க் அறிக்கையும் அதையே தெரிவித்துள்ளது.

வரும் ஆண்டில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதாரச் சூழல் பாசிட்டிவாக இருக்கும்.  நிறுவனங்களின் வருமான வளர்ச்சி இரண்டு இலக்கங்களில் வளரும் வாய்ப்பும் இருப்பதால், இந்தியச் சந்தைகள் ஏற்றத்தின் போக்கில் வர்த்தகமாகும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

மேலும், 2019-ல் பொதுத் தேர்தல் வரவிருப்பதால் வரும் பட்ஜெட்டில், அரசு முதலீடு மற்றும் செலவினங்களும் அதிகமாகவே இருக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்

தொழில் செய்வதற்கான சூழலில் இந்தியா முன்னேறியிருக்கிறது. பொருளாதார சீர்திருத்தங்களின் பாசிட்டிவ் விளைவுகளும் இனிவரும் நாட்களில் தெரியவரும்.

இப்படிப் பல காரணிகள் சாதகமாக இருப்பதால், பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில் தொடரும். எனவேதான் டாய்ச் பேங்க், நிஃப்டி 11500 என்ற நிலையை இந்த ஆண்டின் இறுதிக்குள் அடையும் என்கிறது”.

கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது?

“நீண்டகால முதலீட்டுக்கு எம் அண்ட் எம், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ், டைட்டன் கம்பெனி பங்குகளைக் கவனிக்கலாம்.”

2017-ல் திரட்டப்பட்ட ரூ.1.6 லட்சம் கோடி!

ங்குச் சந்தை செயல்பாடு 2017 - ல் நன்றாக இருந்ததன் காரணமாக  நிதி திரட்டும் வழிகள் அனைத்திலும் சேர்த்து மொத்தமாக ரூ.1.6 லட்சம் கோடி திரட்டப்பட்டிருக்கிறது. ஐ.பி.ஓ, அங்கீகரிக்கப்பட்ட நிறுவன முதலீட்டாளர்களுக்குச் செய்யப்பட்ட விற்பனை ஆகிய இரண்டும்தான் அவற்றில் முன்னிலையில் இருக்கின்றன.

விரைவில் ஐ.பி.ஓ வரும் பந்தன் பேங்க்!

கொல்கத்தாவைச் சேர்ந்த பந்தன் பேங்க், முகமதிப்பு ரூ.10 கொண்ட தனது 11.92 கோடி பங்குகளைப் பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது பந்தன் பேங்க். இந்த வெளியீட்டின் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி நிதி திரட்டத் திட்டமிட்டிருக்கிறது. பந்தன் பேங்க் ஐ.பி.ஓ வருவதற்கான செபி மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தால், விரைவில் ஐ.பி.ஓ வெளியீட்டுக்குத் தயாராகிவிடும்.