நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: ஸ்மால், மிட்கேப் பங்குகள் உஷார்!

ஷேர்லக்: ஸ்மால், மிட்கேப் பங்குகள் உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: ஸ்மால், மிட்கேப் பங்குகள் உஷார்!

ஓவியம்: அரஸ்

மாலை நான்கு மணிக்கே வந்துநின்றார் ஷேர்லக். நாம் அந்த நேரத்தில் அவரை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. “ஆறு மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. அதனால்தான் சீக்கிரமாக வந்துவிட்டேன். கேள்விகள் தயாரா...” எனப் பரபரத்தார். நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.    

ஷேர்லக்: ஸ்மால், மிட்கேப் பங்குகள் உஷார்!

பி.எஸ்.இ பைபேக் அறிவித்துள்ளதே?

“பி.எஸ்.இ நிறுவனம், பங்குச் சந்தையில் பட்டியலாகி ஒரு வருடம்கூட நிறைவடையாத நிலையில் முதலீட்டாளர் களுக்கு பைபேக் சலுகையை அறிவித்துள்ளது. ஒரு பங்கை ரூ.1,100 என்ற விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறது. எப்போது இந்தச் சலுகை தொடங்குகிறது, எவ்வளவு பங்குகளை வாங்க இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஜனவரியில் ஐ.பி.ஓ-வில் ஒரு பங்கின் விலை ரூ.806-க்கு விற்பனையானது. தற்போது இதன் ஒரு பங்கின் விலை ரூ.910-920 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.”

ஹெச்.டி.எஃப்.சி பங்குகள் திடீரென்று 6% உயரக் காரணமென்ன?

“கடந்த திங்களன்று ஹெச்.டி.எஃப்.சி பங்குகள் 6.2% வரை உயர்ந்து வரலாற்று உச்சமாக  ரூ.1,870-க்கு வர்த்தகமாகின. காரணம், இதன் பங்கு மூலதனம் மூலம் ரூ.13,000 கோடி வரை நிதி திரட்டிக்கொள்ள அனுமதி கிடைத்திருப்பதுதான். பங்கு விலை உயர்ந்ததன் மூலம் அதன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டி ஹிந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் மாருதி சுஸூகி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.”  

சில்லி மாங்க்ஸ் முதல் வர்த்தகம் எப்படி?

‘‘ஹைதராபாத்தைச் சேர்ந்த சில்லி மாங்க்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனப் பங்கு, அதன் முதல் நாள் வர்த்தகத்தில் அமோக வரவேற்புப் பெற்று, அதன் பிரீமியம் விலையைக் காட்டிலும் 20% அதிகமாக உயர்ந்து வர்த்தகமாகியிருக்கிறது’’.

டிசம்பர் காலாண்டு முடிவுகள் எப்படி வந்து கொண்டிருக்கின்றன?

“ஃபெடரல் பேங்க் மூன்றாம் காலாண்டில் 26 சதவிகித நிகர லாப வளர்ச்சியை அடைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.206 கோடி நிகர லாபம் அடைந்திருந்த நிலையில், இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.260 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. இதன் வாராக் கடன், செப்டம்பர் காலாண்டில் 2.39 சதவிகிதமாக இருந்தது, டிசம்பர் காலாண்டில் 2.52 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் நிலையிலும் அதன் வட்டி வருமானம் உயர்ந்திருக்கிறது. இதுதான் இதன் நிகர லாப வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருக்கிறது.

ஸ்டெர்லைட் டெக் மூன்றாம் காலாண்டில் 83 சதவிகித நிகர லாப வளர்ச்சியை அடைந் துள்ளது. இதன் வருவாய் முன்பைவிட 14% கூடுதலாக வந்திருப்பதால், இந்த நிகர லாப வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. இதனால், அதன் நிகர லாபம் முந்தைய நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.49.12 கோடியாக இருந்தது, இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.90 கோடியாக உயர்ந்திருக்கிறது.

மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் நிகர லாபம், இந்த டிசம்பர் காலாண்டில் 37% வளர்ச்சி அடைந்திருக் கிறது. இதன் வருவாய் வளர்ச்சியும் நன்றாக இருந்ததால், நிகர லாபம் முந்தைய நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.103 கோடியாக இருந்தது, தற்போது ரூ.141.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால் இதன் இயக்குநர் குழு டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

ஜீ என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்துக்கு விளம்பரம் மற்றும் சந்தா மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருப்பதால், அதன் நிகர லாபம் முந்தைய நிதியாண்டின் டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 28% வளர்ச்சி கண்டுள்ளது. 

ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிகர லாபம் இந்த டிசம்பர் காலாண்டில் 28 சதவிகித வளர்ச்சி கண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின், இதன் வருமானம் முந்தைய நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.8,400 கோடியாக இருந்தது, இந்த டிசம்பர் காலாண்டில் ரூ.8,742 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால், அதன் நிகர லாபம் ரூ.1,038 கோடியிலிருந்து     ரூ.1,326 கோடியாக உயர்ந்திருக்கிறது.

ஏர்டெல் நிகர லாபம் இந்த டிசம்பர் காலாண்டில் 39% குறைந்திருக்கிறது. இதன் இன்டர்கனெக்‌ஷன் பயன்பாட்டின் மீதான வருமானம் மற்றும் ஜியோவுடனான போட்டி ஆகியவற்றால் இந்த நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், முந்தைய நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.504 கோடியாக இருந்த இதன் நிகர லாபம், இந்த டிசம்பர் காலாண்டில் ரூ.306 கோடியாகக் குறைந்திருக்கிறது.

அதானி பவர் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் ஏமாற்றமளித்துள்ளன. அதன் நிகர நஷ்டம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.668 கோடியாக இருந்த நிகர நஷ்டம், இந்த டிசம்பர் காலாண்டில் ரூ.1,291 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன் வருவாய் 10.8% குறைந்ததே இதற்குக் காரணம்.”

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில் ஸ்மால், மிட்கேப் குறியீடுகள் திடீர் இறக்கம் காண ஆரம்பித்திருக்கின்றனவே?

“அண்மைக் காலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடு மேம்பட ஆரம்பித் திருக்கிறது. மேலும், தனியார் வங்கிகளில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) அனுமதி, டிசம்பர் காலாண்டில் லார்ஜ்கேப் நிறுவனங்களின் நிலை மேம்பாடு போன்றவற்றால் திடீர் என லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளுக்குத் தேவை அதிகரித்து, அவற்றின் விலை உயர ஆரம்பித்திருக்கிறது. அதேநேரத்தில், பல ஸ்மால், மிட்கேப் பங்குகள் விற்கப்பட்டு லார்ஜ்கேப் பங்குகளுக்கு முதலீடு மாறியிருக்கிறது. இதனால், பல ஸ்மால், மிட்கேப் பங்குகளின் விலை தொடர்ந்து இறக்கம் கண்டு வருகின்றன.

குறுகிய காலம் முதல் நடுத்தரக் காலம் வரை யிலான முதலீட்டாளர்கள் ஸ்மால், மிட்கேப் பங்குகளிலிருந்து விலகி இருக்கும்படி அனலிஸ்ட் கள் ஆலோசனை சொல்கிறார்கள். இந்தப் பங்குகளின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் அவற்றின் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளைப் பொறுத்துதான் இருக்கும்.” 

சந்தை ‘அதுக்கும் மேல’ என்று தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அனலிஸ்ட்டுகள்  தொடர்ந்து எச்சரித்து வருகிறார்களே! 


“உண்மைதான். சந்தை எதிர்பார்த்தைவிட மிக வேகமாக ஏற்றமடைந்து வருகிறது. அந்த வேகம் தான் அனலிஸ்ட்டுகளை எச்சரிக்கை மனநிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. 2017-ல் சந்தை கொடுத்த வருமானம் 28.47%. இதே காலகட்டத்தில் இன்கம் ஃபண்டுகள் 3.97 சதவிகிதமும், பாண்ட் ஃபண்டுகள் 2.37 சதவிகிதமும், கோல்டு ஃபண்டுகள் 1.38 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன. இதனால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் மிகுந்த ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், சந்தைத் தனது இயல்பான நகர்வை மீறி அதீத மதிப்புகளில் உயர்ந்து வர்த்தகமாகி
வருவதால்தான் அனலிஸ்ட்டுகள் முதலீட்டாளர்களை எச்சரிக்கிறார்கள். எனவே, மொத்த முதலீட்டையும் பங்குச் சந்தையில் மட்டும் வைத்திருக்காமல், அஸெட் அலோகேஷன்படி முதலீடு செய்வதே சிறந்தது.”
 
மத்திய அரசு நிறுவனங்கள் பல ஐ.பி.ஓ வரவிருக்கின்றனவே!

“சந்தை தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருப்பதால், ஐ.பி.ஓ வெளியீடுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்டுவதைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதன்படி இதுவரை 23 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆறு அரசு நிறுவனங்கள் வரிசையாக ஐ.பி.ஓ வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. இவற்றில் ட்ரெட்ஜிங் கார்ப் ஆஃப் இந்தியா, பவன்ஹன்ஸ் (Pawan Hans), ஹெச்.எல்.எல் லைஃப் கேர், சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ரயில் விகாஸ் நிகம்  மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஆகியவை அடக்கம்.” 

நிஃப்டியின் இலக்கை அதிகப்படுத்தியிருக்கிறதே ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ்?

“சந்தை தற்போது நகரும் வேகத்தைப் பார்த்தால், இந்த ஆண்டு நிஃப்டி அடைய வேண்டிய இலக்கை அடுத்த ஆறு மாதங்களில் அடைந்துவிடும் போலிருக்கிறது. அதனால்தான் இந்த நிதியாண்டுக் கான நிஃப்டியின் இலக்கை 11500-லிருந்து 11800 -ஆக உயர்த்தியிருக்கிறது ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ்.”

சென்செக்ஸ் 35 ஆயிரத்தை சீக்கிரத்திலேயே கடந்திருக்கிறதே?


“ஒரே ஒரு செய்தி சந்தையை வரலாறு காணாத உச்சத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது. கடந்த புதன் கிழமையன்று சென்செக்ஸ் 35000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது. நிஃப்டி 10760 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. காரணம், அரசு இந்த நிதியாண்டில் வாங்க வேண்டிய கூடுதல் கடன் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிர மாகக் குறைக்கப்பட்டிருப்பதுதான். இதனால், முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்து சந்தையில் ஆர்வமுடன் முதலீடு செய்தனர். இதற்கிடையே மூன்றாம் காலாண்டு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. பெரும்பாலும் பாசிட்டிவான முடிவுகள் வருவதால், அவையும் சந்தையின் ஏற்றத்துக்கு உதவுகின்றன.

அரசின் கடன் குறைவதற்குக் காரணம், ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரிப் பணத்தை அரசுக்குத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் எதிர்பார்ப்பு, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் சந்தைக்குச் சாதக மான செய்திகள் எனத் தொடர்ந்து சந்தை ஏற்றத்தில் இருப்பதற்கான காரணிகள் தற்போது வலுவாக இருப்பதால், சந்தை விரைவாக ஏற்றம் கண்டிருக்கிறது. அதேநேரத்தில், இந்த ஏற்றம் தொடர்ந்து நீடிக்குமா என்பது நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள், பட்ஜெட் சலுகைகளைப் பொறுத்தே உள்ளது” என்றவர், ‘‘சந்தை தற்போது உச்சத்தில் இருப்பதால், கவனிக்க வேண்டிய பங்கு களைப் பிறகு சொல்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.