
ஓவியம்: அரஸ்
‘‘கடும்பனி காரணமாக கடும் ஜலதோஷம் பிடித்துவிட்டது. எனவே, வெளியில் தலைகாட்ட முடியவில்லை. வீட்டில் உட்கார்ந்தபடி சூடாக மிளகு ரசத்தைக் குடித்துக்கொண்டிருக்கிறேன். உமக்குத் தேவையான செய்திகளை போனிலேயே சொல்லிவிடவா?’’ என்கிற கோரிக்கையை நமக்கு வைத்தார் ஷேர்லக். ஓகே சொல்லிவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

முதலீடு செய்ய சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியிருக்கிறதே?
‘‘அந்நிய முதலீடுகளைக் கவர்வதற்காக இதுவரை அதற்கு இருந்துவந்த தடைகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. அதுமட்டுமல்லாமல், அந்நிய முதலீடுகளைக் கவரும் வகையிலான சந்தையை நம் நாடு கொண்டிருப்பதும் ஒரு காரணம். கூடவே பங்குச் சந்தையும் தொடர்ந்து காளையின் போக்கில் ஏற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. இப்படிப் பல்வேறு காரணங்கள் முதலீடுகளைக் கவர்வதற் கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தித் தந்துள்ளன.
ேவகமாக வளரும் சந்தையில், நம் நாடு முன்னணியில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புத் தெரிவித்துள்ளது. மேலும், நமது பொருளாதார வளர்ச்சி 2018-ம் ஆண்டில் 7.4 சதவிகிதமாக உயரும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா, முதலீடு செய்ய சிறந்த நாடுகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் அமெரிக்கா அபரிமிதமான வளர்ச்சியினாலும், சீனா பிரபலம் காரணமாகவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. மூன்றாம், நான்காம் இடங்களில் ஜெர்மனியும், பிரிட்டனும் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் பிரிட்டனையும், ஜெர்மனியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நம் நாடு முன்னேற வாய்ப்புண்டு. இந்த வளர்ச்சியின் பயனை நாம் அனுபவிக்க வேண்டுமெனில், இனியாவது நீண்ட காலத்துக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அவசியம்.’’
மார்க்கெட் கேபிட்டலைசேஷனில் முதல் இடத்தைப் பிடிப்பதில், ரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனப் பங்குகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறதே?
‘‘சந்தையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக பல முன்னணி பங்குகளின் விலை உயர்ந்து, அவற்றின் மார்க்கெட் கேப்பிட்டலை சேஷனும் உயர்ந்திருக்கிறது. மார்க்கெட் கேப் அடிப்படையில் முதல் இடத்தில் ரிலையன்ஸ் மற்றும் டி.சி.எஸ் இடையே கடும் போட்டி நடந்துவருகிறது. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பும் ரூ.6 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று நடந்த வர்த்தகத்தில் டி.சி.எஸ் பங்கு, ரிலையன்ஸ் பங்கை முந்தியது. ஆனால், வர்த்தக இறுதியில் மீண்டும் இரண்டாம் இடத்துக்கு வந்தது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ரிலையன்ஸ் ரூ.6.10 லட்சம் கோடி யிலும், டிசிஎஸ் ரூ.5.96 லட்சம் கோடியிலும் இருக்கின்றன.’’
தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறதே சந்தை... பட்ஜெட்டுக்குப் பிறகு மாற்றம் காணுமா?
‘‘இந்தியச் சந்தைகள் மீதான சர்வதேச பார்வை மிகவும் பாசிட்டிவ் சென்டிமென்டில் இருக்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து இந்தியா குறித்தும், இந்தியப் பொருளாதாரம் குறித்தும் சர்வதேச அமைப்புகள் மற்றும் ஆய்வுகள் பாசிட்டிவான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால், தொடர்ந்து இந்தியச் சந்தைகளில் முதலீடுகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. மேலும், பட்ஜெட் எதிர்பார்ப்புகள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் பாசிட்டிவாக அமைந்தது உள்ளிட்ட காரணங்களால் சந்தை மேலும் ஏற்றமடைந்து வர்த்தகமாகின்றன.
கடந்த வாரத்தில் சந்தை இந்த அளவுக்கு உயரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. நிஃப்டி 11000 புள்ளிகளையும், சென்செக்ஸ் 36000 புள்ளிகளையும் தாண்டி ஏற்றம் கண்டன. ஐந்தே வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் ஏற்றமடைந்திருக்கின்றன. இப்படித் தொடர்ந்து உயர்ந்தால், சந்தை தனது ஓராண்டு இலக்கை சில மாதங்களிலேயே அடைந்துவிடும் போலிருக்கிறது.

வரும் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. பட்ஜெட் எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் பாசிட்டிவாகவே இருப்பதால், சந்தையில் இறக்கத்தைப் பார்க்க முடியவில்லை. 2019-ல் தேர்தல் வரவிருப்பதால் பட்ஜெட்டில் எதிர்பார்த்த அம்சங்கள் பலவும் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது. எனவே, பட்ஜெட்டுக்குப் பிறகும் சந்தை பாசிட்டிவாகப் போக வாய்ப்பி ருக்கிறது. அதே சமயம், பட்ஜெட்டுக்குப் பிறகு சந்தையின் வளர்ச்சி வேகம் இப்போது இருப்பதைப் போலவே இருக்குமா என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், ஏற்றமடைந்த முதலீடுகள் லாப நோக்கில் விற்கப்பட்டால், சந்தையின் ஏற்றம் குறையும். மேலும், சந்தை அதன் உச்சகட்ட நிலைகளில் வர்த்தகமாகிறது. நெகட்டிவ் சென்டிமென்ட் உருவாகும்பட்சத்தில், இறக்கம் அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.’’
பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறதே?
‘‘சந்தையின் அபரிமிதமான வளர்ச்சியினால் முதலீட்டாளர்களின் பங்குச் சந்தை முதலீட்டு மதிப்பும் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது. சந்தைக் குறியீடுகள் மட்டுமல்லாமல் துறை சார்ந்த குறியீடுகளும் பெரும்பாலும் நன்றாக ஏற்றம் கண்டிருக்கின்றன. பி.எஸ்.இ-யில் பட்டியலாகியிருக்கும் நிறுவனப் பங்குகளின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி உயர்ந்து, ரூ.156.56 லட்சம் கோடியாக இருக்கிறது.’’
வங்கிகளுக்கு இந்த ஆண்டில் ரூ.88 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. இதனால் வங்கிப் பங்குகள் என்னவாகும்?
‘‘மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்கவிருக்கிறது. 2018-19-ம் நிதியாண்டில் 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88,139 கோடி மூலதனமாக வழங்கப்பட விருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக ஐ.டி.பி.ஐ வங்கிக்கு ரூ.10,610 கோடி நிதி தரப் படுகிறது. எஸ்.பி.ஐ வங்கிக்கு ரூ.8,800 கோடியும், பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.9,232 கோடியும் வழங்கப்படுகிறது. யூகோ வங்கிக்கு ரூ.6,570 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.5,473 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ.5,375 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.5,158 கோடியும், கனரா வங்கிக்கு ரூ.4,865 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.4,694 கோடியும் வழங்கப்படவிருக்கிறது. இந்த மூலதனத்தைக் கொண்டு வங்கிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். எனவே வங்கிகளைப் பொறுத்தவரை, பாசிட்டிவானப் போக்கில் தொடரும் என்று நம்பலாம்.’’
ஆனால், வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்திருக்கிறதே!
‘‘தொழில் கூட்டமைப்பான அசோசெம் மற்றும் தரக் குறியீடு நிறுவனமான க்ரிசில் இரண்டும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் வாராக் கடன் இந்த நிதியாண்டில் ரூ.9.5 லட்சம் கோடியாக உயரும் என்று கூறியுள்ளன. வாராக் கடன், கடந்த நிதியாண்டு இறுதியில் ரூ.8 லட்சம் கோடியாக இருந்தது. வாராக் கடனுக்கான வரையறையில் சில பிரச்னைகள் இருந்தாலும் வாராக் கடன் என்பது இருக்கவே செய்கிறது. மேலும், கடன் வாங்கித் திரும்பச் செலுத்தாத நிறுவனங்களின் அடமான சொத்துகள், சொத்து மீட்பு அமைப்பிடம் உள்ளது. ஆனால், சொத்துகளை விற்றுக் கடனைத் தீர்க்கும் செயல்பாடுகளில் நிர்வாகச் சிக்கல்கள் இருப்பதால், திட்டமிட்டப்படி வாராக் கடன்களைக் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கிகளின் வாராக் கடன் குறையாமல் உயர்ந்துள்ளது.’’
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறித்து...?
‘‘மாருதி சுஸூகி இந்த டிசம்பர் காலாண்டில் 3 சதவிகித நிகர லாப வளர்ச்சியைக் கண்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.1,744.50 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த மாருதி, இந்தக் காலாண்டில் ரூ.1,799 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. இதர வருமானம் குறைந்ததாலும், செலவினங்கள் அதிகரித்ததாலும் எதிர்பார்த்த நிகர லாப வளர்ச்சி கிடைக்கவில்லை.
ஐடியா செல்லுலாரின் டிசம்பர் காலாண்டு நிகர இழப்பு ரூ.1,284 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.383 கோடி நிகர இழப்பு இருந்தது. தற்போது மூன்று மடங்குக்கு மேல் இழப்பு அதிகரித்திருக்கிறது. ஜியோ-ஏர்டெல் போட்டியினால் தொடர்ந்து இந்த நிறுவனம் இழப்பைச் சந்தித்து வருவதால், நிகர இழப்பும் அதிகரித்துள்ளது. கடனும் அதிகமாக உள்ளது. வோடஃபோனுடனான இணைப்புக்குப்பிறகு முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகிறது’’ என்றவர் பலமாகத் தும்மிவிட்டு, ‘‘அடுத்த வாரம் பார்க்கலாமா?’’ என்று கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.