நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: பட்ஜெட் தாக்கம்... சந்தை இறக்கம் தொடருமா?

ஷேர்லக்: பட்ஜெட் தாக்கம்... சந்தை இறக்கம் தொடருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: பட்ஜெட் தாக்கம்... சந்தை இறக்கம் தொடருமா?

ஓவியம்: அரஸ்

த்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் மதியம் 12 மணிக்கு நமக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார் ஷேர்லக். ‘‘சந்தை ஏகத்தும் இறங்கி ஒரே ரணகளமாக இருக்கிறது. மாலை 5 மணிக்கு உம்மைச் சந்திக்கிறேன்’’ என்று சொல்லியிருந்தார். அவருக்குப் பனங்கற்கண்டு போட்ட சுக்கு காபியை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம். அன்றைய தினம் சென்செக்ஸ்  830 புள்ளிகள் இறங்கியிருந்தது. அவர் வந்ததும், சுக்கு காபியைத் தந்துவிட்டு, செய்திகளைச் சேகரிக்க ஆரம்பித்தோம்.   

ஷேர்லக்: பட்ஜெட் தாக்கம்... சந்தை இறக்கம் தொடருமா?

சந்தை இன்றைக்குக் கடும் இறக்கத்தைச்  சந்தித்திருக்கிறதே!

‘‘எல்லாம் நீண்ட கால முலதன ஆதாய வரி கொண்டு வரப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த வரியினால் பாதிப்பு வரும் என்கிற பீதி சந்தையில் திடீரென பரவியது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பங்கு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினார்கள். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் வரி விதிக்கப்பட்டிருப்பதால், ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெறத் தொடங்கினார்கள். இதனால், சென்செக்ஸ் தடதடவென விழுந்து, ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் சந்தை மூலதன மதிப்பு குறைந்தது.

தவிர, சந்தையின் இன்றைய இறக்கத்துக்குப் புதிய வரிகள் மட்டுமே காரணமில்லை. எதிர்வரும் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவிகிதமாக இருக்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த் தார்கள். ஆனால், இப்போது அது 3.5 சதவிகிதமாக இருக்கும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டது எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும் என முதலீட்டாளர்கள் கருதியதாலும் சந்தை இறங்கியது.

மேலும், இன்றைக்கு பேங்க் ஆஃப் ஜப்பான், பாண்டுகளை வாங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து நிக்கி, ஹேங்க்செங்க், கோஸ்பி சந்தைகள் ஒரு சதவிகிதத்துக்கு மேல் விழுந்தன.  இதுவும் நம் சந்தையை மேலும் விழவைக்க ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இன்று ஒருநாள் மட்டுமே பிசி ஜுவல்லர்ஸ் பங்கு 24%, ஜி.எம்.ஆர் இன்ஃப்ரா 15%, பாம்பே டையிங் 13% சியட், ஜஸ்ட் டயல் தலா 12%, பி.இ.எம்.எல், அதானி பவர் தலா 11% என இறக்கம் கண்டன. பங்குச் சந்தையில் முதலீடு செய்த பல முதலீட்டாளர்கள் இன்றைக்குப் பேயறைந்த மாதிரித்தான் இருந்தார்கள்.’’

இந்த இறக்கம் தொடருமா?

‘‘சில நாள்களுக்கு நீடிக்கலாம் என்கிறார்கள். நமது பொருளாதாரத்தில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. நீண்ட கால மூலதன ஆதாய வரி என்பது புதிதாகக் கொண்டுவரப்பட்டிருப்பதில் அதுகுறித்த அதிர்ச்சி முதலீட்டாளர்களிடம் இருக்கிறது.

அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் இது குறித்த தெளிவு வந்துவிடும். அப்போது மீண்டும் முதலீடுகள் வரும் என்பதால், தற்போது விழுந்திருக்கும் சந்தை மீண்டும் உயரத் தொடங்கும். எனவே, நல்ல அடிப்படை உள்ள பங்குகள் இப்போது விலை குறைவாகக் கிடைத்தால் தயங்காமல் வாங்கிப்போடலாம்.’’

ஹாஸ்பிட்டல் பங்குகள் விலையேற்றம் கண்டிருக்கின்றனவே?

‘‘மத்திய பட்ஜெட்டில் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸூக்குச் செலுத்தும் பிரீமியத்தில் வரிச் சலுகை ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், ஹெச்.சி.ஜி மற்றும் நாராயணா ஹெல்த் நிறுவனப் பங்குகள் விலை ஏற்றம் காண ஆரம்பித்திருக்கின்றன.’’

பொதுத் துறை பங்குகள் விற்பனை இலக்கு முதல்முறையாக நிறைவேறியிருக்கிறதே?


‘‘2017-18- ம்  ஆண்டில் ரூ.72,500 கோடி மதிப்புள்ள பொதுத் துறை பங்குகளை விலக்கிக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இந்த நிதி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.  சாதனை அளவாக, பங்கு விலக்கல் மூலம் சுமார் 92,000 கோடி திரட்டப் பட்டுள்ளது. மீதியுள்ள இரு மாதங்களில் (2018 பிப்ரவரி, மார்ச்) திரட்டப்பட இருக்கும் தொகையையும் சேர்த்தால், ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டிவிடும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
   
வரும் 2018-19- ம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனப் பங்கு விலக்கல் மூலம் ரூ.80,000 கோடி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, 24 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.’’

அமெரிக்க டாலர் மதிப்பில் நிஃப்டி 56%  வருமானம் தந்துள்ளதே! 
 
‘‘2014-லிருந்து அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து சர்வதேச அளவில் மூன்றாவது சிறப்பான சந்தையாக இந்தியச் சந்தை இருக்கிறது. அப்போதிலிருந்து இதுவரை நிஃப்டி, டாலரின் மதிப்பில் 56% வருமானம் தந்திருக்கிறது. அமெரிக்கா, சீன சந்தைகள் இந்தக் காலகட்டத்தில் முறையே 81% மற்றும் 70% வருமானத்தைத் தந்திருக்கின்றன. முக்கியமாக மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் நன்றாக ஏற்றம் கண்டு வருமானம் தந்திருக்கின்றன. நடப்பு நிதியாண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 1,235-ஆக உள்ளன.’’ 

அம்பர் முதல் நாள் வர்த்தகம் எப்படி?


‘‘ஏசி உற்பத்தி நிறுவனமான அம்பர் என்டர்பிரைசஸ் ஐ.பி.ஓ வந்து சந்தையில் பட்டியலானது. அதன் முதல் நாள் வர்த்தகத்தில், அதன் ஐ.பி.ஓ வெளியீட்டு விலை ரூ.859-யைக் காட்டிலும் 45% உயர்ந்து வர்த்தகமானது. அதிகபட்சமாக 47% வரை உயர்ந்தது.’’
 
புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் முதலீடு செய்யும்விதமாக புதிய மியூச்சுவல் ஃபண்ட் வருகிறதே! 

‘‘எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட், எடெல்வைஸ் மெய்டன் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - சீரிஸ் 1 என்கிற புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த ஃபண்ட் மூன்றாண்டு காலம் லாக் இன் பிரீயட் கொண்டது.

அண்மையில் பட்டியலிடப்பட்ட புதிய நிறுவனப் பங்குகளைத் (ஐ.பி.ஓ) தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை இந்த ஃபண்ட் கொண்டுள்ளது. இந்த ஃபண்ட் விற்பனை பிப்ரவரி 16-ல் நிறைவு பெறுகிறது’’ என்றவர், ‘‘பட்ஜெட் குறித்த மீட்டிங் ஒன்றுக்குச் செல்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

கமாடிட்டி பரிவர்த்தனை வரி குறைப்பு!

கமாடிட்டி ஆப்ஷனிலிருந்து (தங்கம், கொத்தவரை போன்றவை) கமாடிட்டி ஃபியூச்சர்ஸுக்கு மாற்றிக்கொள் வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 0.125 சதவிகிதத்திலிருந்து 0.0001 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2018, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.