
ஓவியம்: அரஸ்
மாலை நான்கு மணிக்கே ஷேர்லக் வந்துவிட்டார். அப்போதும் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கவே, அவருக்குப் புதினா, கொத்தமல்லி தூவிய மோர் கொடுத்து உபசரித்தோம். அதை அவர் சுவைத்துக் குடிக்கத் தொடங்கும்போதே கேள்விக்கணைகளைத் தொடுத்தோம்.

பினாமி பரிவர்த்தனைகளைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறதே செபி?
“பங்குச் சந்தையில் நடக்கும் முறைகேடான வர்த்தகங்களைக் கண்காணிக்க செபி தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே, ஷெல் கம்பெனிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்்திருக்கும் நிலையில், பினாமி பரிவர்த்தனை களை அடையாளம் காண, செபி நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. பங்குச் சந்தை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதன் மூலம், செயற்கையான விலை உயர்வு நடக்கும் பங்கு வர்த்தகங்கள் குறையக்கூடும்.”
“2017-ம் ஆண்டில் வெளிநாட்டினரைவிட உள்நாட்டினர் அதிகமாக முதலீடு செய்திருக்கிறார்களே?”
“எப்போதுமே இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினரின் முதலீடுதான் அதிகமாக இருக்கும். ஆனால், 2017-ல் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினர் செய்த முதலீட்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உள்நாட்டினர் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டில், உள்நாட்டினர் செய்த முதலீடு கிட்டத்தட்ட ரூ.90,700 கோடி ஆகும். ஆனால், வெளிநாட்டினர் ரூ.51,000 கோடிக்கு மட்டுமே முதலீடு செய்துள்ளனர். மேலும், வெளிநாட்டினர் பெருமளவில் முதலீடுகளை வெளியே எடுப்பவர் களாகவும், உள்நாட்டினர் முதலீட்டைத் தொடர்ந்து குவிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இதன் மூலம், நம் சந்தை வெளிநாட்டினரைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாறும் போக்கு உருவாகியிருக்கிறது. பங்குச் சந்தை முதலீடு குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்திருப்பதும், பிற முதலீடுகள் மீதான கவர்ச்சி குறைந்திருப்பதும்தான் இதற்கு முக்கியமான காரணம். கூடவே சந்தைச் சிறப்பாகச் செயல்பட்டதும் ஒரு காரணம்.’’
ஆனால், ஃபண்ட் மேனேஜர்கள் பங்குகளில் முதலீடு செய்வதைக் குறைத்துள்ளனரே?
“காரணம், சமீபத்தில் சர்வதேச சந்தைகள் அனைத்திலும் ஏற்பட்ட சரிவுதான். தற்போது பங்குச் சந்தைகளின் செயல்பாடு நிலையில்லாமல் இருப்பதால், ஃபண்ட் மேனேஜர்கள் பங்குகளில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொண்டுள்ளனர். கடந்த ஜனவரியில், மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீட்டில் 55% பங்குகளில் முதலீடு செய்திருந்தனர். இது பிப்ரவரியில் 43 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், சந்தையில் இறக்கத்தை எதிர்பார்த்து, ரொக்க விகிதத்தையும் அதிகரித்துள்ளனர்.”
வங்கிப் பங்குகள் விலை சரியத் தொடங்கியிருக்கிறதே என்ன காரணம்?
“பொதுத்துறை வங்கிகளில் ரீகேப்பிட்டலைசேஷன் செய்வதாக மத்திய அரசு அறிவித்தபிறகு, வங்கிப் பங்குகளுக்குச் சந்தையில் டிமாண்ட் உருவானது. ஆனால், அதற்குள் வங்கிப் பங்குகளுக்கு அடிமேல் அடி விழுந்திருக்கிறது. வங்கிகளின் வாராக் கடனை மீட்டெடுப்பதில் மிகக் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்பிருக்கும் கடன் மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட இருக்கின்றன. மேலும், ரூ.5 கோடிக்கு மேல் வாராக் கடன் வைத்திருப்ப வர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. அதுவும் வெள்ளிக்கிழமைதோறும் வங்கிகள், ஆர்.பி.ஐ-க்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். தற்போது ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் பஞ்சாப் நேஷனல் பேங்கில் நடந்த ரூ.11,000 கோடி மோசடியும் வங்கிப் பங்குகளுக்கு எதிராக மாறியிருக்கின்றன. வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அதிகாரிகள் மூலமாக லெட்டர் ஆஃப் அன்டர்டேக்கிங் முறையில் இந்த மோசடியை நிகழ்த்தி யிருக்கிறார். இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து தனியார் வங்கிப் பங்குகள் பலவற்றிலும் இறக்கம் ஏற்பட்டது.
கடந்த வாரத்தில், கடைசி மூன்று தினங்களில் பி.என்.பி பங்கின் விலை சுமார் 25% வீழ்ச்சி கண்டது. இந்தப் பங்கில் சுமார் 115 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீடு செய்துள்ளன. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் கிட்டத்தட்ட ரூ.4,000 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. அதேநேரத்தில், ஃபண்டுகளின் போர்ட் ஃபோலியோவைக் கவனிக்கும் போது, பி.என்.பி பங்கின் பங்களிப்பு சுமார் 2 - 4 சதவிகித அளவுக்குத்தான் இருக்கிறது. அந்த வகையில், மியூச்சுவல் ஃபண்ட் சிறு முதலீட்டாளர்கள் பெரிதாக கவலைகொள்ளத் தேவை யில்லை என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
இந்த மோசடி செய்தியால் பி.என்.பி.யின் பங்குச் சந்தை மதிப்பு நான்கு தினங்களில் ரூ.15,000 கோடி வீழ்ச்சி கண்டுள்ளது. இது வங்கியின் ஆண்டு லாபத்தைப் போல் ஆறு மடங்கு ஆகும். இந்தப் பங்கு விலை மிகவும் இறக்கம் கண்டிருப்பதால், அதனை சிறு முதலீட்டாளர்கள் யாரும் வாங்கிவிட வேண்டாம். காரணம், பி.என்.பி-யின் கடன் தரக்குறியீடு, வரும் வாரத்தில் குறைக்கப்படக்கூடும்.
கூடுதலாக வங்கிகளின் காலாண்டு முடிவுகளும் மோசமாகவே உள்ளன. எனவே, தற்போது வங்கிப் பங்குகளில் முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.”
இனி சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?
‘‘கஷ்டமான கேள்வி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஷ்வரன் சொன்னது போலவும், பங்குச் சந்தை நிபுணர் ஜி.மாறன் சொன்னது போலவும் இந்த ஆண்டில் சந்தை ஏற்ற, இறக்கமாகவே இருக்கும். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வதாக இருந்தால், இப்போது முதலீடு செய்வதற்கு நல்ல வாய்ப்புதான்’’.
அவர் கிளம்பும்முன் ‘‘கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது...’’ என நாம் கேட்கும் முன்பே வாட்ஸ்அப்பில் இருந்த தகவலை நமக்கு ஃபார்வேர்டு செய்துவிட்டுக் கிளம்பினார். அவர் அனுப்பிய பங்குகள்: “ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு... பேங்க் ஆஃப் பரோடா, ஓ.என்.ஜி.சி, ராம்கோ சிமென்ட்ஸ்.”
அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்தால், இந்தியாவுக்குப் பாதிப்பு!
அமெரிக்கா, 2008 பொருளாதார நெருக்கடிக்குப்பின் 5.25 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 0.25 சதவிகித மாகக் குறைத்தது. இதனால் அமெரிக்கர்கள் பிற சந்தைகளில் குறிப்பாக, இந்தியச் சந்தைகளில் அதிக முதலீடு செய்தனர். 2009-2014-க்கு இடைப்பட்ட காலத்தில், வெளிநாட்டு முதலீடுகள் இந்தியச் சந்தைகளில் ஆண்டுக்குச் சராசரியாக 15 பில்லியன் டாலராக இருந்தது. பிற்பாடு, அமெரிக்க நிதிநிலை கணிசமாக முன்னேறியதால், 2015 முதல் 2017 வரையிலான காலத்தில், ஐந்து முறை வட்டி விகிதத்தை உயர்த்தியது.இதனால், இந்தியச் சந்தைகளில் வெளிநாட்டினரின் முதலீடு குறைந்தது. கடந்த வாரத்தில், சர்வதேச சந்தைகள் ஆட்டம் காண ஆரம்பித்த ஒரு வாரத்தில் மட்டுமே 938 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்று, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினார்கள். தற்போது 1.25 சதவிகிதமாக இருக்கும் ஃபெடரல் வட்டி விகிதம், 2018 இறுதியில் 2.1%, 2019 இறுதியில் 2.9 சதவிகிதமாகவும் உயர்த்தப்படலாம் என்கிறார்கள். அப்படி உயர்த்தப்பட்டால், நம் சந்தையில் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகள் இன்னும்கூட வெளியேறும் என்று எதிர்பார்க்கலாம்!