
செல்லமுத்து குப்புசாமி
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், “ஒரு பெண் தவறு செய்திருந்தால், நீங்கள் உடனடியாகச் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, நீங்கள் மன்னிப்புக் கேட்பதுதான்” என்பார். அதாவது ஆண்-பெண் உறவில் யார் தவறு செய்தாலும், ஆண் மன்னிப்புக் கேட்பதாகவே அமையும் என்பதே அவரின் (ஆணாதிக்க) நிலைப்பாடு.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழகினாலும், ஆண்-பெண் உறவு புரிந்துகொள்ள முடியாத புதிர். அதிலும் குறிப்பாக, ஆண்களைப் பொறுத்தவரைப் பெண்ணைப் புரிந்துகொள்வதென்பது எப்போதுமே புதிர்தான். கிட்டத்தட்ட ஷேர் மார்க்கெட் மாதிரிதான். நமக்கு மிகவும் பிடிக்கும். எப்போது அதன் மனநிலை மாறும், எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. நாம் எதிர்பார்க்காத வகையில் அளவு கடந்த சந்தோஷத்தை ஒரு சில நாள்கள் அளிக்கும். ஒரு சில நாள்களில் பேரதிர்ச்சி காத்திருக்கும். நெஞ்சு வலியே வந்துவிடும். ஆனால், நீண்டகால அடிப்படையில் நன்மையே தரும்.

பெண்களைப் புரிந்துகொள்வதைப்போல, மார்க்கெட்டையும் புரிந்துகொள்ள நிறையவே பிரயத்தனப்படுகிறோம். அதனை எளிமையாக விளங்கிக்கொள்ளும், சுலபமான குறுக்குவழிகளைத் தேடுகிறோம். அதுதான் ஷேர் மார்க்கெட் டிப்ஸ் என்கிற பெயரில் நமக்கு வந்துசேரும் இலவச ஆலோசனைகள். அதாவது, பரிந்துரைகள். எந்தப் பங்கு நிறுவனத்தை வாங்கலாம், வாங்கி எவ்வளவு காலம் வைத்திருக்கலாம், அப்படி வைத்திருந்தால் விலை எவ்வளவு உயரும் என்பன போன்ற சங்கதிகள் இந்த ஆலோசனையில் இடம்பெறும்.
பத்திரிகைகள், புரோக்கர்கள், இணையதளங்கள், பங்குச் சந்தை ஆர்வலர்கள்/வல்லுநர்கள் எனப் பலதரப்பட்டோரும் இந்த டிப்ஸ்களைத் தருகிறார்கள். சில டிப்ஸ்கள் நீண்ட காலப் பரிந்துரை களாக இருக்கும். பொங்கல், தீபாவளிபோல, இவர்களும் புது வருடம், தீபாவளிக்கு மறக்காமல் பரிந்துரைப்பார்கள்.
மின்னஞ்சல், வாட்ஸ்அப், குறுந்தகவல் என எல்லா வகையிலும் இந்த டிப்ஸ்கள் நம்மை வந்தடையும். ‘காசு கொடுக்கிறேன். டிப்ஸ் கிடைக்குமா’ என்று காது கொடுத்துக் கேட்பவர்களும் உண்டு. டிப்ஸை எதிர்பார்ப்பது ஒருவிதமான போதை. அதற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து விடுபடுவது கடினம்.
நல்ல பங்குகளைப் பரிந்துரை செய்யுமாறு என்னிடம் சில நண்பர்கள் அவ்வப்போது கேட்பதுண்டு. என்ன நம்பிக்கையில் என்னிடம் டிப்ஸ் கேட்கிறீர்கள் எனத் திருப்பிக் கேட்டால், “நல்லா அனலைஸ் பண்ணி வெச்சிருப்பீங்க. கூடுதல் லாபம் வர்ற மாதிரி கம்பெனி ஏதாவது சொல்வீங்க. அதான்...” என்பார்கள். ‘‘சராசரிக்கும் கூடுதலாக வளரக்கூடிய முதலீட்டை நான் கண்டறிந்தி ருக்கிறேன் என்றால், அது என் சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடித்த விஷயம். அதை வைத்து நான் மேலும் லாபம் ஈட்ட விரும்புவேனே தவிர, எதற்காக மற்றவர்களிடம் பகிர வேண்டும்? அது, நான் சம்பாதிக்கப் போகும் லாபத்தை இன்னொரு வரோடு பங்கு போடுவது போலாகாதா?’’ என்று நான் திரும்பக் கேட்பதுண்டு.

உண்மையில் மார்க்கெட்டை விஞ்சக்கூடிய முதலீடு உள்ளதா (பெரும்பாலான நேரங்களில் அப்படி ஒன்று இருக்காது), அதை நான் அறிந்திருக்கிறேனா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால், இந்தக் கேள்வியை நண்பர்களிடம் கேட்பதன் நோக்கம் ஒருவன் நல்ல முதலீட்டை கண்டுபிடித்திருக்கிறான் என்றால், அதை மற்றவர்களோடு பகிர வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை என்பதை உணர்த்தத்தான். அந்த டிப்ஸை மெசேஜ் செய்து மாதம் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிற ஒரு நபர், அதே டிப்ஸை வைத்து தாமே முதலீடு செய்து ஏன் பணம் சம்பாதிக்கக் கூடாது? அது முடியாது. ஏனென்றால், பங்குப் பரிந்துரை வழங்குகிறவர்களுக்கு அது ஒரு தொழில். அதில் வருமானம் வருகிறது. அவர்கள் வெறும் டிப்ஸ் விநியோகிஸ்தர்களே தவிர, முதலீட்டாளர்கள் கிடையாது.
ஏன் முதலீட்டாளர்களைப் பற்றி மட்டும் பேச வேண்டும்? டிப்ஸ்கள் தின வர்த்தகம் செய்யும் டிரேடர்களையும் நோக்கி வீசப் படுகின்றன. ஆனால், வீசுவோர் டிரேடர்களும் இல்லை என்பதே கவனிக்கவேண்டிய சங்கதி. கூடவே தமது பரிந்துரைகளைத் தாமே பயன்படுத்திப் பணம் சம்பாதிக்க முடியாமல் பிறருக்கு அனுப்பி அதன்மூலமாக வருமானம் ஈட்டக்கூடியவர்களின் டிப்ஸை நம்பியே நம் பணத்தைப் போடுகிறோம் என்ற நினைப்பும் இருந்தால் சரி.
ஷேர் மார்க்கெட்டில் நாமே தவறாக முடிவெடுத்து, சரியாக ஆராயாமல், மோசமான முதலீடுகளைச் செய்தால்கூடப் பரவாயில்லை. ஒருமுறை தவறுசெய்தால், அடுத்த முறை அந்தத் தவற்றைத் திரும்பவும் செய்யாமல் நம்மை நாமே மேம்படுத்திக்கொள்வோம். ஆனால், டிப்ஸ் பார்த்து முதலீடு செய்கிற பழக்கம் வந்துவிட்டால் நாம் முழுக்க முழுக்க மற்றவர்களைச் சார்ந்து நிற்கப் பழகிவிடுவோம்.
இப்போதெல்லாம் செய்திகளைப் படிக்கிற மக்கள் செய்தியின் உள்ளடக்கத்தைப் படிப்பதைவிட செய்தியைத் தருகிற ஊடகத்தின் அரசியல் நிலைப்பாட்டையே படிக்கிறார்கள். ஒரே செய்தியை ஒரு டிவியில் ஒரு மாதிரியாகவும், இன்னொரு டிவியில் வேறு மாதிரியாகவும் சொல்கிறார்கள் அல்லவா? அவ்வாறே பங்குப் பரிந்துரைகளும்.

உங்கள் புரோக்கர் பரிந்துரைகளை அனுப்பினால் நீங்கள் அடிக்கடி விற்று வாங்க வேண்டும்; அதனால் அவருக்கு அடிக்கடி கமிஷன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கமிருக்கலாம். இதுவே முதலீடு தொடர்பான நம்பிக்கைக்குரிய பத்திரிகை வாசகர்களுக்குப் புதிய நிறுவனங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம். தனிநபராக எழுதுகிற ஒரு நபர் விருப்பு, வெறுப்புகள் இன்றி பரிந்துரை செய்யலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தைப் பற்றி உயர்வாக எழுதி அதன் பங்கு விலையை மேலே தள்ள முற்படலாம். அதன்மூலம் அந்த நிறுவனத்தின் புரமோட்டர்களிடம் அவர் ஆதாயம் பெறலாம். வாட்ஸ்அப் மூலம் டிப்ஸ் அனுப்புகிறவர்கள், தாம் பரிந்துரை செய்துள்ள பங்குகளை அவர்களே வாங்கியிருப்பார்களா என்று கேட்டால், பதில் நிச்சயமாக இல்லை என்றுதான் வரும்.
ஆக, டிப்ஸ் கிடைத்தால் அதை ஆராயவும், அதன் நதிமூலம் - ரிஷிமூலம் மற்றும் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கவும் பழகுவது நலம். அதற்காக டிப்ஸ்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டியதில்லை. பல துறைகளிலும் இயங்கும் நிறுவனங்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கும். பிறகு அந்தத் துறைகளில் மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அவை எவ்வாறு செயல்படுகின்றன எனத் தெரியவரும்.
சுருங்கச் சொன்னால், இந்த டிப்ஸ்கள் எல்லாம் மேட்ரிமோனி வெப்சைட்டுகள் போல. எண்ணற்ற புரஃபைல்கள் காணக் கிடைக்கும். நமக்கு வேண்டியதை நாம்தான் ஆராய்ந்து பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில பேருக்கு நேரடிப் பழக்கம் அல்லது நெட்வொர்க் மூலமாகவே நல்ல பெண் அமையும் சாத்தியம் இருக்கலாம். அவர்களுக்கு மேட்ரிமோனி தளங்கள் தேவையில்லை.
அதற்காக மேட்ரிமோனி தளங்களும், ஷேர் மார்க்கெட் டிப்ஸும் அறவே தேவையில்லை என ஒதுக்க வேண்டியதில்லை.
ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா? எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் கல்யாணமானபிறகும்கூட மேட்ரிமோனி தளங்களில் தமது கணக்கைத் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள்! நாம் இந்த மாதிரி இருக்க வேண்டாம். சந்தையைப் பற்றி ஆராயக் கற்றுக்கொள்வோம். யார் என்ன சொன்னாலும், அது எந்தளவுக்குச் சரியென்று சீர்தூக்கிப் பார்க்கக் கற்றுக்கொண்டால், டிப்ஸ் போதை நம் தலைக்கு ஏறாது!
(லாபம் சம்பாதிப்போம்)

இந்தியாவைக் குறிவைக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்கள்!
டெக்னாலஜியின் தாக்கம் அதிகமாகிவரும் இந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் வைரஸ்களின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் வைரஸ்களால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில், இந்தியா முக்கியமான இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டுள்ளது ஷோபாஸ் என்னும் நிறுவனம். கிட்டத்தட்ட 67 சதவிகித நிறுவனங்கள் கம்ப்யூட்டர் ரான்சம்வேர் வைரஸ்களால் ஒருமுறையும், 38 சதவிகித நிறுவனங்கள் ரான்சம்வேர் வைரஸ்களால் இரண்டு முறையும் பாதிப்படைந்து உள்ளன. இந்தப் பாதிப்பு களைச் சரிசெய்ய ஒரு நிறுவனமானது, சராசரியாக 1.17 மில்லியன் டாலர் களைச் செலவு செய்வதாகச் சொல்லப்படுகிறது.