நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: பி.என்.பி பங்குகளை வாங்கிக் குவித்த ஃபண்ட் மேனேஜர்கள்!

ஷேர்லக்: பி.என்.பி பங்குகளை வாங்கிக் குவித்த ஃபண்ட் மேனேஜர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: பி.என்.பி பங்குகளை வாங்கிக் குவித்த ஃபண்ட் மேனேஜர்கள்!

ஓவியம்: அரஸ்

ற்கெனவே பேசியபடி சரியாக மாலை நான்கு மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக், “சீக்கிரமாகப் பேசி முடிக்கவேண்டும். டெல்லி நண்பர் ஒருவரை வரவேற்க விமான நிலையத்துக்குப் போகவேண்டும்” என வழக்கம் போலப் பரபரத்தார். நாம் கேள்விகளைக் கேட்கத் தயாரானோம். 

அரசுத்துறை நிறுவனங்களின் நிதிநிலையில் முன்னேற்றம் தெரிகிறதே?

“அரசுத்துறை நிறுவனங்களின் மொத்த லாப வளர்ச்சி 2015-16-ம் நிதியாண்டைக் காட்டிலும்  2016-17-ம் நிதியாண்டில் 11.7% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்களிப்புதான். நம் நாட்டில் மொத்தம் 257 அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் எண்ணெய் நிறுவனங்களின் லாப வளர்ச்சி மட்டுமே ஒட்டுமொத்த அரசுத் துறை நிறுவனங்களின் லாப வளர்ச்சியில் 47.1%. ஐ.ஓ.சி, ஒ.என்.ஜி.சி, கோல் இந்தியா, என்.டி.பி.சி மற்றும் பி.பி.சி.எல் ஆகிய நிறுவனங்கள் லாப வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.’’

கீதாஞ்சலி ஜெம்ஸ் உட்பட 23 நிறுவனங்களுக்கு என்.எஸ்.இ அபராதம் விதித்திருக்கிறதே!

“ஒரு காலாண்டு முடிந்த அடுத்த 45 நாள் களுக்குள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த டிசம்பர் காலாண்டுக் கான நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்காத காரணத்தால் பி.என்.பி மோசடியில் ஈடுபட்ட கீதாஞ்சலி ஜெம்ஸ் உட்பட 23 நிறுவனங்களுக்கு என்.எஸ்.இ அபராதம் விதித்துள்ளது. இவற்றில் ஏ.பி.ஜி ஷிப்யார்ட், ஆம்டெக் ஆட்டோ, டி.எஸ் குல்கர்னி டெவலப்பர்ஸ், பார்தி டிஃபென்ஸ் மற்றும் எஜுகாம்ப் சொல்யூஷன்ஸ், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் உள்ளிட்டவை அடக்கம். காலாண்டு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்காத நிறுவனங் களின் பங்கு வர்த்தகம் தற்காலிகமாகத் தடை செய்யப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பங்குகளை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.”

ஷேர்லக்: பி.என்.பி பங்குகளை வாங்கிக் குவித்த ஃபண்ட் மேனேஜர்கள்!

டி.சி.எஸ் பங்கு கடந்த செவ்வாயன்று திடீரென்று 5% விலை குறைய என்ன காரணம்?

“இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளை டாடா சன்ஸ் குழுமம் விற்று, ரூ.8,200 கோடி நிதி திரட்டியது. இதனால் கடந்த செவ்வாயன்று டி.சி.எஸ் பங்கு பி.எஸ்.இ-யில் 5.22% விலை குறைந்து ரூ.2,892.45-க்கு வர்த்தக மானது. என்.எஸ்.இ-யில் 5.49% விலை குறைந்து ரூ.2,884.1-க்கு வர்த்தகமானது.”

பாரத் டைனமிக்ஸ் ஐ.பி.ஓ-வுக்கு வரவேற்பு எப்படி?

“பாதுகாப்புத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் கடந்த வாரம் ஐ.பி.ஓ வெளியிட்டது. 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிந்த இந்த ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த ஐ.பி.ஓ-வுக்கு 1.3 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 2.24 கோடி பங்கு களுக்கான இந்த வெளியீட்டில் 2.92 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. குறிப்பாக, இதற்குச் சிறு முதலீட்டாளர் களிடமிருந்து 1.41 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தது ஆச்சர்யமான விஷயம்.’’ 

ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஐ.பி.ஓ வர இருக்கிறதே?

“சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், ஐ.பி.ஓ வெளியீடுகள் தொடர்ந்து வந்தபடி உள்ளன. பாரத் டைனமிக்ஸ் ஐ.பி.ஓ-வைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ.பி.ஓ தொடங்கி, வரும் செவ்வாய்கிழமை வரை நடக்கிறது. தற்போது ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் தனது அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் 4%  பங்குகளை ஐ.பி.ஓ மூலம் விற்பனைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது. மேலும், இதில் ஹெச்.டி.எஃப்.சி-க்கு நிகரான பங்குதாரராக இருக்கும் ஸ்டாண்டர்டு லைஃப் 8%  பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. இந்த ஐ.பி.ஓ மே மாதம் இருக்க வாய்ப்புள்ளது.’’ 

வேதாந்தா நிறுவனத்திடமிருந்து இரு முக்கியச் செய்திகள் வந்திருக்கிறதே?

“ஒன்று, பில்லியனர் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்தில் செபியின் முன்னாள் தலைவர் யு.கே சின்ஹா சுயாதீன இயக்குநராகச் சேர்க்கப்பட்டு உள்ளார். இரண்டாவது, வேதாந்தாவின் பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட்டாக பங்குக்கு ரூ.21.2 வழங்கியது. இதுவரை இந்த நிறுவனம் இவ்வளவு டிவிடெண்ட் வழங்கியதே இல்லை. மேலும், கடந்த ஏப்ரலில் வேதாந்தா வுடன் இணைந்த கெய்ர்ன் இந்தியா பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைப் பங்குகளுக்கு இந்த நிதி ஆண்டுக்கு 7.5% டிவிடெண்ட் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வேதாந்தா நிறுவனத்துக்கு ரூ.8,091 கோடி செலவாகும். இந்த இரண்டு டிவிடெண்ட்டும் வழங்குவதற்கான ரெக்கார்ட் தேதியாக மார்ச் 21-ம் தேதியை நிர்ணயித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் இறக்கத்தில் வர்த்தகமாகிவந்த வேதாந்தா பங்கின் விலை ஏற்றத்தில் வர்த்தகமானது.”

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு திடீரென்று 15% உயர என்ன காரணம்?

“ஜெய்பீ (Jaypee) குழும நிறுவனமான ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் இந்தியாவின் பஃபெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ரேர் (Rare)என்டர்பிரைசஸ் முதலீட்டு நிறுவனம் முதலீடு செய்துள்ளதே இதற்குக் காரணம். மொத்தம் மூன்று கோடி பங்குகளை ரேர் என்டர்பிரைசஸ் வாங்கியுள்ளது. இந்தச் செய்தி தெரிந்ததும் பலரும் இந்தப் பங்கை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இந்தப் பங்கின் விலையும் சிறு முதலீட்டாளர்கள் அனைவரும் வாங்கும் அளவில் இருப்பதும் முக்கியக் காரணம். இதனால்  இந்தப் பங்கு விலை திடீரென்று உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.’’ 

இந்த நிதியாண்டில் சென்செக்ஸ் 40000 என்கிறதே மணிகன்ட்ரோல் கருத்துக் கணிப்பு?

“கடந்த வருடம் இந்தியப் பங்குச் சந்தைகள் அடையாத வரலாற்று உச்சங்களை அடைந்து சாதனை படைத்தது. ஆனால், 2018 வருடம் பிறந்ததிலிருந்து அதிக அளவு இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. சென்செக்ஸ் தனது அதிகபட்ச உச்சமான 36,443 என்ற நிலையிலிருந்து 7% வரை இறக்கம் கண்டது. இதனால் முதலீட்டாளர்கள் பதற்றமடைந்தனர். ஆனால், மணிகன்ட்ரோல் டாட்காம் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பெரும் பாலான அனலிஸ்ட்டுகள் மற்றும் ஃபண்ட் மேனேஜர்கள் இந்தியப் பங்குச் சந்தை இந்த ஆண்டில் நல்ல வளர்ச்சியடையும் என்றும், சென்செக்ஸ் 35000-40000 என்ற நிலையில் வர்த்தகமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.” 

சரிவிலிருக்கும் பி.என்.பி பங்குகளைப் பல ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்களே?


“பி.என்.பி வங்கி லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங் மூலம் ரூ.13,600 கோடி மோசடி செய்த செய்தி வெளியானதிலிருந்து பி.என்.பி வங்கிப் பங்கு கடும் இறக்கத்தைச் சந்தித்தது.  சுமார் 50% வரை அதன் பங்கு விலை  இறக்கம் கண்டது. பி.என்.பி வங்கியில் நடந்த இந்த மோசடியால் பிற வங்கிகளின் பங்குகளும் விலை  இறங்கின. விலை இறங்கினாலும், பி.என்.பி வங்கிப் பங்குகளை ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கிக் குவித்துள்ளனர். மொத்தமாக ஃபண்ட் மேனேஜர்கள் 17 லட்சம் பி.என்.பி பங்குகளை வாங்கித் தங்களின் போர்ட்ஃபோலியோவில்  சேர்த்துள்ளனர். பி.என்.பி இந்தியாவின் மிகப் பெரிய வங்கி. விரைவில் அதன்மீதிருக்கும் சிக்கல்கள் விலகினால் விலையேறும் என்கிற எதிர்பார்ப்பில்தான் ஃபண்ட் மேனேஜர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். இது நடக்காமல் போனால், முதலீடு செய்த ஃபண்ட் நிறுவனங்கள் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.”

ஏர்டெல் நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறதே ட்ராய்?

“டெலிகாம் துறை கட்டுப்பாட்டு ஆணையமான ட்ராய், ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதரவாகச்  செயல்படுகிறது என ஏர்டெல், ஐடியா வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் குற்றம் சாட்டின. இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனத்துக்குக் கடும்நெருக்கடியை ட்ராய் தந்து வருவதாகப் பேச்சு கிளம்பியிருக்கிறது. ஏர்டெல் வழங்கும் சேவைகளுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி யுள்ளதாகச் சொன்ன ட்ராய், இதற்கு விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் கடன் பத்திரங்கள்மூலம் ரூ.16,500 கோடி நிதி திரட்ட அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஏர்டெல் தனக்கிருக்கும் கடனைக் குறைக்கவும், அலைக்கற்றை வாங்கியதற்கான தொகையைச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஏர்செல் திவாலாகிவிட்ட நிலையில் ஏர்டெல்லும் திவாலாகப் போகிறது என்று சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், அந்த நிலைக்கு ஆளாகாமல் அடுத்தடுத்து நடவடிக்கைகளை ஏர்டெல் நிறுவனம் எடுத்துவருகிறது” என்றவர், ‘‘சந்தை தொடர்ந்து இறக்கத்திலேயே இருக்கிறது. எனவே, கவனிக்க வேண்டிய பங்குகள் நிறையவே இருக்கின்றன’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஷேர்லக்!