
டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்
கடந்த இதழில், “சந்தையை ஏற்றத்தை நோக்கி எடுத்துச்செல்லும் செய்திகள் எதுவும் இல்லாத வரை 10500-10600 என்ற நிலையை வலுவான ரெசிஸ்டன்ஸாகக்கொண்டு சந்தை வர்த்தகமாகும் வாய்ப்புகளே உள்ளது” என்று கூறியிருந்தோம். நாம் சொன்னபடியே சந்தை இந்த வரம்பு வரை உயர்ந்து, மீண்டும் இறக்கமடைந்தது. நாம் சொன்ன இந்த வரம்புக்குள்தான் வாரம் முழுக்க வர்த்தகமானது.

கடந்த வாரத்தில் குறிப்பிடத்தக்க செய்தியாக அமைந்தது, இடைத்தேர்தல்களில் பா.ஜ.க தோல்வியடைந்த செய்தி மட்டுமே. இந்தச் செய்தி சந்தையின் நெகட்டிவ் போக்கை ஆதரிக்கும் வகையில்தான் அமைந்தது என்றாலும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், வாங்கும் ஆர்வமுடன் இருக்கும் சிலரை, சந்தை யிலிருந்து விலகியிருக்கச் செய்தது. இதனால் சந்தையில் இறக்கத்தின் போக்கு நீடித்தது.
இந்த இறக்கத்தினால் நிஃப்டியானது 200 டி.எம்.ஏ என்ற நிலையை அடைந்துள்ளது. இதற்குமுன் 2016 இறுதியில் இதுபோன்ற இறக்கம் ஏற்பட்டபோது இந்த சப்போர்ட் நிலையில் மூவிங் ஆவரேஜ் மீண்டும் கிடைத்தது. அங்கிருந்து சந்தை பெரிய அளவிலான நகர்வுகளை அடைந்தது. தற்போது அதேபோன்ற ஒரு போக்கு இந்த சப்போர்ட் நிலையிலிருந்து மீண்டும் உருவாகும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயமாக இருந்தாலும், அத்தகைய மூவிங் ஆவரேஜ் சந்தைக்கு அத்தகைய சப்போர்ட் நிலையை உருவாக்கித் தருவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முயற்சி செய்து பார்க்கலாம்.
நிறுவனங்கள் தொடர்பான செய்திகளும் பெரிய அளவில் தற்போது இல்லை. இதனால் சந்தைக்கு வரும் முதலீடும் வழக்கமான அளவில்தான் இருந்தது. எனவே, பங்குகள் நகர்வுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் எவையும் இல்லாமலேயே இருந்தன. இதனால் கரடியின் ஆதிக்கம் தொடர்ந்து இருந்தது.

பேங்க் நிஃப்டியின் போக்கும் கிட்டத்தட்ட நிஃப்டியை ஒட்டியே இருந்ததால், 200 டி.எம்.ஏ என்ற நிலை இதற்கும் பொருந்தியது. எனவே, சப்போர்ட் நிலையில் இறக்கத்தை நாம் பார்க்கவேண்டியிருந்தது. வங்கிப் பங்குகள் சமீபத்திய இறக்கங்களிலிருந்து சற்று மீண்டும் வந்தாலும், நகர்வுகள் பெரிய அளவில் இல்லாததால், 25100 என்ற நிலையைக் கடந்து பாதுகாப்பான கட்டத்துக்கு அதனால் செல்ல முடியவில்லை. எனவே, தற்போது பேங்க் நிஃப்டியில் ஏற்றத்தைப் பார்க்க வேண்டுமெனில், இதன் தற்போதைய நிலைகளில் வலுவான சப்போர்ட் நிலை உருவாக வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் இருந்துவந்த இறக்கம் கடந்த வாரம் சற்றுக் குறைந்தாலும், தனியார் வங்கிப் பங்குகளின் நகர்வுகள் எதுவும் பெரிதாக இல்லாததால், பேங்க் நிஃப்டி நகர்வில் மாற்றம் எதையும் காண முடியவில்லை.
எனவே, நாம் பிற துறைகளையும் மற்றும் அவற்றின் குறியீடுகளில் அதிகம் பங்கு வகிக்கும் நிறுவனப் பங்கு களின் நகர்வுகளைக் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். வரும் வாரங்களில் அவற்றின் ஆதரவு இருந்தால், சந்தையின் போக்கில் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
வரும் வாரத்தைப் பொறுத்தவரை, நிஃப்டி 10050 என்ற நிலை வரை இறங்கும் அபாயம் தொடரலாம். மேல்நோக்கிய நகர்வைப் பொறுத்தவரை, 10500 என்ற நிலையைத் தாண்டிச் செல்வது கடினம்தான். எனவே, அந்த நிலையில் லாபத்தைப் பார்க்கலாம். சந்தையில் இறக்கத்தை ஏற்படுத்த நெகட்டிவ் செய்திகள் தேவை. அதேசமயம், வலுவான சப்போர்ட்டில் சந்தை வர்த்தகமாவதால், மிதமான பாசிட்டிவ் செய்திகள்கூடச் சந்தையை மேல்நோக்கி நகர்த்தலாம்.

எஸ்டர் இண்டஸ்ட்ரீஸ் (ESTER)
தற்போதைய விலை: ரூ.68.35
வாங்கலாம்
பேக்கேஜிங் துறைப் பங்குகள் சந்தையில் நன்றாகவே செயலாற்றி வருகின்றன. காரணம், கச்சா எண்ணெய் விலை நிலையாகத் தொடர்வதால், மூலப் பொருள் களுக்கான செலவு குறைந்து, லாபம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்துக்குமேலாக நன்றாக வளர்ச்சிகண்டு வருகின்றன. எஸ்டர் இண்டஸ்ட்ரீஸ் அவற்றில் ஒன்றாக இருப்பதால், இதன் சார்ட் பேட்டர்னில் ஆரம்பத்திலேயே காளையின் வலுவான போக்கு உருவாகியது. ஆனால், அதைப் பயன்படுத்திக்கொண்டு ஏற்றமடையாமல் தோல்வியடைந்தது. 2016-ல் அடைந்த உச்சத்திலிருந்து இறக்கம் கண்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வரத் தயாராக இருக்கிறது. இந்தப் பங்கில் நீடித்திருந்த ஏற்ற இறக்கமில்லாத நிலையிலிருந்து ஏற்பட்ட திடீர் ஏற்றம் இந்தப் பங்கில் மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தைத் திருப்பி யிருக்கிறது. எனவே, ரூ.80 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.60-க்குக்கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொண்டு தற்போதைய விலையில் வாங்கலாம்.

ஜி.எம் புரூவரிஸ் (GMBREW)
தற்போதைய விலை: ரூ.991.95
வாங்கலாம்
சந்தையின் சமீபத்திய இறக்கத்தினால் நல்ல ஏற்றத்திலிருந்த பல பங்குகள் இறக்கத்துக்கு ஆளாகியுள்ளன. அவற்றில் ஒன்றுதான், ஜி.எம் புரூவரீஸ். இந்தப் பங்கு ஏற்றத்தின் போக்கில் ரூ.1,200 வரை நன்றாக ஏற்றம்கண்டு வந்தது. தற்போது இறக்கத்தில் இருக்கும் இந்தப் பங்கு, இதன் மூவிங் ஆவரேஜ் சப்போர்ட் நிலைக்கு வந்து ரிட்ரேஸ்மென்ட் நிலையை அடைந்துள்ளது. மேலும், இந்தப் பங்கில் ஆசிலேஷன் முடிவுக்கு வந்து, நியூட்ரல் நிலையை அடைந்து தற்போது ஏற்றமடையத் தயாராகி யிருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். ரூ.1,085 வரை உயர வாய்ப்புள்ளது.

ஸ்கிப்பர் (SKIPPER)
தற்போதைய விலை: ரூ.238.85
வாங்கலாம்
புல்பேக் காலகட்டங்களில் 200 டி.எம்.ஏ என்ற நிலை நல்ல சப்போர்ட்டாகவே கருதப் படுகிறது. அந்தப் போக்கு ஸ்கிப்பர் சார்ட்டில் பார்க்க முடிகிறது. இந்த சப்போர்ட் நிலையில் இருந்து, இந்தப் பங்கு ஏற்றமடைவதைப் பார்க்க முடிகிறது. எனவே, 25 டி.எம்.ஏ மிக அருகில் இருப்பதைக் கவனிக்க வேண்டும். இந்தநிலையில், தற்போது இந்தப் பங்கில் பிரேக் அவுட் நிலை ஏற்படுவதற்குச் சிறு முயற்சி போதுமானதாக இருக்கிறது. அப்படி பிரேக் அவுட் ஆகும்பட்சத்தில் இந்தப் பங்கில் காளையின் போக்கு உருவாகி மீண்டும் ரூ.280-90 என்ற நிலைக்குக் குறுகிய காலத்தில் உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.210-க்குக்கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.
தொகுப்பு: ஜெ.சரவணன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.