
ஓவியம்: அரஸ்
“கேள்விகளை எடுத்துக் கொண்டு உங்கள் கேன்டீனுக்கு வாருங்கள்...” என ஷேர்லக்கிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வர, சட்டென்று லேப்டாப்பை மடித்து வைத்துவிட்டு, கேன்டீனுக்கு ஓடினோம். நமக்கும் சேர்த்து அவரே சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்திருந்தார். ‘‘கேள்விகளைக் கேளுங்கள்’’ என்று அவர் சொல்லவே, கேட்கத் தொடங்கினோம்.

மார்ச் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வங்கிப் பங்குகளை அதிக அளவில் வாங்கியுள்ளனவே?
“சமீபத்திய வங்கி மோசடிகள் மற்றும் அவற்றின் தலைவர்களின் நிர்வாகத் திறமையின்மை குறித்த செய்திகளினால் வங்கிகளின் மீதான மதிப்புக் குறைந்தாலும்கூட, அவற்றின் பங்கு களின் மீதான முதலீட்டு நம்பிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. மேற்கூறிய நெகட்டிவ் செய்தி களினால் வங்கிப் பங்குகளின் மீதான வெளிநாட்டு முதலீடு குறைந்தாலும், உள்நாட்டு அளவில் லெட்டர் ஆஃப் கிரெடிட்/கேரன்டீஸ் மூலம் வர்த்தகம் மெள்ள முன்னேற்றம் கண்டுவருவதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
இதனால்தானோ என்னவோ கடந்த மார்ச் மாதம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக அளவில் வங்கிகளின் பங்குகளை வாங்கியுள்ளன. சுமார் ரூ.5,029 கோடி அளவுக்கு முன்னணி வங்கிகளின் பங்குகளை வாங்கியுள்ளன மியூச்சுவல் ஃபண்டுகள். அதேநேரத்தில், கைவசம் இருந்த சுமார் ரூ.2,135 கோடி மதிப்புள்ள வங்கிப் பங்குகளை விற்றுள்ளன. பங்கு விற்பனை பட்டியலில் ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள்தான் மிக அதிகமாக, அதாவது ரூ.1,538 கோடிக்கு விற்கப்பட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளன. ஆக்ஸிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியின் பதவிக்காலத்தை நீட்டிக்க ரிசர்வ் வங்கி ஆட்சேபித்ததுதான் இதற்குக் காரணம்.
வாங்கப்பட்ட பங்குகளின் பட்டியலில், முதல் 5 இடங்களில் டி.சி.எஸ் நிறுவனம் தவிர்த்து, பந்தன் பேங்க், எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க் ஆகிய முன்னணி வங்கிகளே இடம்பெற்றுள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் - வீடியோகான் கடன் சர்ச்சையால் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கின் விலை மிக அதிகமாக வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில், 4.2 கோடி என்கிற எண்ணிக்கையில் ஐ.சி.ஐ.சி.ஐ பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கியுள்ளன.”
நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.4% வளர்ச்சி காணும் என்கிறதே ஐ.எம்.எஃப்?
“நமது பொருளாதார வளர்ச்சி நடப்பு மற்றும் வரும் நிதியாண்டில் வேகமெடுக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் 7.6% ஆக வளர்ச்சி காணும் என்றும் ஐ.எம்.எஃப் மதிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சி கண்டுவரும் நாடாக நம் நாடு உருவாகிவருகிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சற்றுப் பின்தங்கியுள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் நமது பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் வாங்கும்திறன் அதிகரிப்பு, பணமதிப்பு நீக்கம் ஆகிய நடவடிக்கையின் பலன்கள் கிடைக்கப்பெறுதல், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது ஆகியவற்றினால் 2017-ம் நிதியாண்டில் 6.7 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.4 சதவிகிதமாக வளர்ச்சியடையும் என்றும், இது 2019-ம் ஆண்டில் 7.8 சதவிகிதமாக இருக்கும் எனவும் சொல்லியிருக்கிறது. நடப்பாண்டில் நமது பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கியும் மதிப்பிட்டுள்ளது.’’
ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு விலை வீழ்ச்சி கண்டுள்ளதே?
“அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கையிருப்பு குறைந்துள்ளது மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் போன்ற வற்றால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74 டாலரைத் தாண்டி இருக்கிறது. இதனால் ஆயில் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாப வரம்பு குறையும். இந்தத் தகவலை அடுத்து வியாழக்கிழமை பி.பி.சி.எல், ஹெச்.பி.சி.எல், ஐ.ஓ.சி பங்குகளின் விலை அதிகபட்சம் 7% வரை இறங்கியது. இந்த மூன்று பங்குகளும் அவற்றின் 52 வாரக் குறைவு வரைக்கும் இறக்கம் கண்டன.”
மெட்டல் பங்குகள் விலை உயர்ந்துள்ளதே?
“சர்வதேச அளவில் அலுமினியம், நிக்கல், உலோகங்களின் விலை உயர்ந்ததையடுத்து கடந்த வியாழனன்று பி.எஸ்.இ மெட்டல் இண்டெக்ஸ் 4.5% அதிகரித்துள்ளது. ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை ஒரே நாளில் 9% உயர்ந்தது. இதேபோல், நால்கோ, வேதாந்தா மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் பங்குகளின் விலையும் அதிகரித்தன.”
வேளாண் சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்துள்ளதே?
“இந்த ஆண்டும் பருவமழை வழக்கமான அளவு பெய்யும் என்ற இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கணிப்பால் உரம், பூச்சிக்கொல்லி, விதைகள் மற்றும் வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற வேளாண் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தன. திங்கள்கிழமையன்று உர நிறுவனங்களில் குறிப்பாக, டாடா கெமிக்கல்ஸ் (1.43%), ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்ட்டிலைசர்ஸ் (1.10%), தீபக் ஃபெர்ட்டிலைசர்ஸ் (3.97%), கோரமண்டல் இன்டர்நேஷனல் (0.81%) மற்றும் ஜி.எஸ்.எஃப்.சி (0.47%) போன்ற நிறுவனங்களின் விலை ஏறின.
அதேபோல, ராலிஸ் இந்தியா (0.52%), பேயர் க்ராப்சயின்ஸ்(2.44%) மற்றும் இன்செக்ட்டிசைட்ஸ் இந்தியா (0.43%) போன்ற வேளாண் ரசாயனத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் விலையும், மான்சான்டோ இந்தியா (0.24%), காவேரி ஸீட் கம்பெனி (1.70%) போன்ற விதை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலையும், ஜெயின் இர்ரிகேஷன் (2.83%), சக்தி பம்ப்ஸ் (1.73%) மற்றும் எம் & எம் (1.66%) போன்ற வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலையும் உயர்ந்து காணப்பட்டன.”
எஸ்.பி.ஐ வங்கியைக் கோட்டக் மஹிந்திரா வங்கி பின்னுக்குத் தள்ளியிருக்கிறதே!
“கடந்த திங்களன்று மும்பை பங்குச் சந்தையில் எஸ்.பி.ஐ வங்கியின் பங்கு மதிப்பைக் காட்டிலும் கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்கு மதிப்பு முதல்முறையாக உயர்ந்து காணப் பட்டதுடன், நாட்டின் அதிக மதிப்பு மிக்க வங்கிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது.
மும்பை பங்குச் சந்தையில், திங்களன்று வர்த்தக முடிவின்போது ரூ.2,22,970.40 கோடி சந்தை மூலதன மதிப்பைக்கொண்ட கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்கு ஒன்றின் விலை 1.88% உயர்வுடன் ரூ.1170.05 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் வர்த்தக தொடக்கத்தின்போது அந்த வங்கியின் பங்குகளின் விலை மதிப்பு 2.22% உயர்ந்து, ஒரு பங்கின் விலை ரூ.1,174 என்ற புதிய உயர்வுடன் காணப்பட்டது. இந்த ஆண்டில் இந்த வங்கியின் பங்குகள் இதுவரை 16% லாபம் ஈட்டியுள்ளது.
அன்றைய தினம் எஸ்.பி.ஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.2,22,043.74 கோடியாகக் காணப்பட்ட நிலையில், அதன் பங்கு ஒன்றின் விலை மும்பை பங்குச் சந்தையில் ரூ.248.80 என்ற அளவுக்கு வர்த்தகமானது. இது, முந்தைய வர்த்தக தின முடிவில் காணப்பட்ட விலையைவிட 1% குறைவாகும்.”
மியூச்சுவல் ஃபண்ட் துறையில் எஸ்.ஐ.பி மூலமான முதலீடு அதிகரித்துள்ளதே?
“2017-18-ம் நிதியாண்டில் எஸ்.ஐ.பி மூலமான முதலீட்டின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் துறை பெற்ற தொகை ரூ.67,190 கோடியாகும். இது, அதற்கு முந்தைய நிதியாண்டில் கிடைத்த ரூ.43,921 கோடியைக் காட்டிலும் 53% அதிகம். இதன்மூலம் இந்தத் துறையில் எஸ்.ஐ.பி மூலமான முதலீட்டையே சிறு முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பு கிறார்கள் என்று தெரிகிறது’’ என்றவர், சாத்துக்குடி ஜூஸை முழுக்கக் குடித்து முடித்திருந்தார். புறப்படலாமா என்று கேட்கிறமாதிரி தனது கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்சினைப் பார்த்தார். ‘‘சந்தை இன்னும் சில மாதங்களுக்கு கொஞ்சம் மேலும், கீழுமாகத்தான் இருக்கும். நீண்ட கால முதலீட்டாளர்களில் நல்ல லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யலாம்’’ என்றபடி, வீட்டுக்குப் புறப்பட ஆரம்பித்தார்.
இன்ஃபோசிஸை முந்திய டி.சி.எஸ்!
மார்ச் 31 உடன் முடிந்த நான்காம் காலாண்டில் இன்ஃபோசிஸின் நிகர லாபம் 2.4%, வருமானம் 5.6 சத விகிதமாக அதிகரித்துள்ளது. இதேகாலத்தில், டி.சி.எஸ் நிகர லாபம் 4.4%, வருமானம் 3.9% உயர்ந்துள்ளது. காலாண்டு முடிவு வெளியான இன்ஃபோசிஸ் பங்கின் விலை சுமார் 5% இறக்கம் கண்டது. அதேநேரத்தில், டி.சி.எஸ் பங்கின் விலை 6% அதிகரித்தது. டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலையை விட்டுச் செல்பவர்களின் சதவிகிதம் 11-ஆக இருக்க, இது இன்ஃபோசிஸில் 19.5 சதவிகிதமாக உள்ளது. டிஜிட்டல் பிரிவு வருமானத்தில் இன்ஃபோசிஸ் 25.5% பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. இதில் டி.சி.எஸ் 21.1 சதவிகிதமாக உள்ளது. பல விஷயங்கள் நெகட்டிவாக இருந்தாலும், பல தரகு நிறுவனங்கள் இன்ஃபோசிஸ் பங்குகளில் முதலீடு செய்யப் பரிந்துரை செய்துள்ளன.