
டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்
இந்த வாரமும் இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்றமே காணப்பட்டது. வாரத்தின் தொடக்க நாளிலேயே சிரியா போர் குறித்த செய்திகள் வெளியானாலும், சந்தை அதனைக் கண்டுகொள்ள வில்லை. அதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் நல்ல செய்திகள் இல்லாத நிலையையும் வாரம் முழுவதும் சமாளித்து சந்தைத் தனது ஏற்றமான போக்கைத் தக்க வைத்துக்கொண்டது.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, சாதகமான உணர்வுகள் (சென்டிமென்ட்) மிகையாக இருக்கும் போது நெகட்டிவ் செய்திகள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. சந்தை இப்போதைக்குக் கீழே செல்ல விரும்பாததே, சந்தையானது தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் செல்லும் என்பதற்கான சிக்னலாக உள்ளது.
இந்த வாரத்தின் மிகப் பெரிய ஏமாற்றம் என்றால், அது வங்கிகளின் மோசமான செயல்பாடுகள்தான். சில பொதுத் துறை வங்கிகளின் (அவற்றில் சில, அதன் அதிகபட்ச குறைந்த விலையைவிட இறக்கம் கண்டன) தத்தளிப்பு தொடர்ந்ததுடன், தனியார் வங்கிகளும்கூட அவற்றின் ஏற்றப் போக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போய், அது பேங்க் இண்டெக்ஸில் எதிரொலித்தது.

கடந்த மூன்று வாரங்களாக பேங்க் நிஃப்டியும், நிஃப்டியும் ஒரே சீராகச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், முடிவடைந்த வாரத்தில் பேங்க் நிஃப்டியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுவிட்டு, நிஃப்டி தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. வரும் வாரத்தில் பெரிய செய்திகள் எதுவும் இல்லை என்றாலும், பேங்க் நிஃப்டியால் பாதிப்புகளிலிருந்து தன்னைச் சரிசெய்து கொள்ள முடியும். மேலும், இப்போதைக்கு பெரிய செய்திகள் எதுவும் இருப்பதுபோலத் தெரியவில்லை.

இருப்பினும் நிஃப்டி-யில், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர்ப் பொருள்கள் மற்றும் ஐ.டி ( FMCG & IT) துறைகள் கணிசமான விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதால், வங்கிப் பங்குகளால் ஏற்பட்ட சரிவைக் காட்டிலும் இந்த இரு துறைகளும் அதிகமான ஏற்றத்தைக் கொடுத்து, ஒரு நல்ல உயர்வை அடைய வைத்தன.
ஐ.டி இண்டெக்ஸில் ஏற்றமான போக்கு தொடர்ந்து இருக்கும் எனக் கடந்த வாரம் சொல்லியிருந்தோம். அதன்படியே, ஐ.டி இண்டெக்ஸ் ஏறக்குறைய இந்த வாரத்தில் 800 புள்ளிகள் உயர்ந்தன. டி.சி.எஸ் நிறுவனம் ஈட்டிய நல்ல லாபம் மற்றும் அதன் போனஸ் பங்குகள் குறித்த அறிவிப்பால், அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலையும் உயர்ந்து, இந்த ஏற்றத்துக்கு மிகவும் உதவியது. இந்தத் துறையின் பெரும்பாலான பங்குகள் தொடர்ந்து உயர்வடையும் எனத் தெரிவ தால், ஐ.டி துறை தொடர்ந்து ஏற்றமடைந்து, நிஃப்டி அதன் தற்போதைய உயர்வைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.
இப்போதைக்கு நிஃப்டி புள்ளிகளின் உயர்வு எதிர்பார்ப்பை 10700 -10750 என்ற வரம்புக்குள் வைத்துக்கொள்ளலாம். இந்த மாதத்துக்கான புட் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் 10500-ஆக உயர்ந்துள்ள நிலையில், நிஃப்டி ஸ்டாப்லாஸ் 10450 என வைத்துக்கொண்டு வாங்கி விற்கலாம்.

ஹில்டன் மெட்டல் (HILTON)
தற்போதைய விலை: ரூ.37.95
வாங்கலாம்
ஹில்டன் மெட்டல் ஃபோர்ஜிங் லிமிடெட் (HMFL) நிறுவனமானது, அதிக தரமான இரும்பு இயந்திரப் பாகங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமானதாகும். உலோகம் சார்ந்த சந்தையானது வளர்ச்சி கண்டு வருகிறது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் நல்ல ஏற்றத்தைக் காணத் தொடங்கியுள்ளன. இந்தப் பங்கு, பாட்டம் உருவாக்கத்திற்குப்பிறகு பிரேக் அவுட் ஆகி, பங்கின் விலை ஏறத் தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தப் பங்கின் விலை சுமார் 60 ரூபாய்க்கு உயரக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.30-ஆக வைத்துக்கொள்ளவும். தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம்.

ஸ்ரீகாளகஸ்தி பைப்ஸ் லிமிடெட் (SRIPIPES)
தற்போதைய விலை: ரூ.390.00
வாங்கலாம்
கடந்த வாரத்தில் நாம் ஜிண்டால் ஷா நிறுவனப் பங்கைப் பரிந்துரை செய்தோம். இந்த வாரத்தில் மற்றொரு மெட்டல் பைப் நிறுவனமான ஸ்ரீகாளகஸ்தி பைப்ஸ் நிறுவனப் பங்கை பார்ப்போம். சமீபத்திய வாரங்களில், இந்தப் பங்கின் விலையில் டபுள் பாட்டம் பேட்டர்ன் உருவாக்கியுள்ளது. நல்லதொரு வால்யூமுடன் பங்கின் விலை மேல்நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இந்த வாரத்தில் பங்கின் விலை ரூ.425 வரை உயரக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.370-ஆக வைத்துக்கொள்ளவும். தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம்.

கோவா கார்பன் (GOACARBON)
தற்போதைய விலை: ரூ.893.35
வாங்கலாம்
ஓராண்டு காலமாக இந்தப் பங்கின் விலை ஏற்றம் காணாமல் இருந்தது. அதன்பிறகுப் பங்கின் விலை பல மடங்கு உயர்ந்தது. இந்த நிலையில், பங்கின் விலை இறக்கம் கண்டது. இந்த இறக்கம் என்பது பெரிதாக இல்லை. சந்தை வீழ்ச்சியின்போது விலை சற்றுக் குறைந்தாலும், பங்கின் விலை இறங்கவில்லை. தற்போது ‘மல்டி லெக் பிரைஸ் கரெக்ஷன் பேட்டர்ன்’ முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து தற்போதைய விலையிலிருந்து மீண்டுவருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இந்தப் பங்கில் ரூ.890 முதல் 870 வரையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.860-ஆக வைத்துக் கொள்ளலாம். இந்தப் பங்கு முந்தைய உச்சமான ரூ.1,200-க்கு உயரக்கூடும்
தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.