நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்?

மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்?
பிரீமியம் ஸ்டோரி
News
மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்?

மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்?

டந்த பல ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்பாக, தூத்துக்குடி மக்களின் கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து, அங்குள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.  லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனம், சுரங்கம் மற்றும் உலோகங்களைத் தாதுவாகப் பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.  

மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்?

அதிகளவில் சுரங்கங்களைக் கொண்டது

லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள இந்த நிறுவனம், இந்தியாவில் இரும்பு அல்லாத உலோகங்களுக்கு, அதிகளவில் சுரங்கங்களைக் கொண்டுள்ளது. இந்தக் குழுமத் திற்குத் தாமிரம், துத்தநாகம், ஈயம், அலுமினியம் மற்றும் இரும்புத்தாது சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா, சாம்பியாவில் சுரங்கங்கள் உள்ளன. எண்ணெய் துரப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. வேதாந்தா குழுமத்திற்கு வேதாந்தா லிமிடெட், பால்கோ, ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்,  கெய்ர்ன் இந்தியா, ஜிங்க் இன்டர்நேஷனல் என உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல  நிறுவனங்கள் உள்ளன. 

மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்?ஆண்டுக்கு 4 லட்சம் டன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) நிறுவனத்தில் வேதாந்தா குழுமம் 53.9% பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. 1994-ல் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை தினமும் 1,200 டன்,  ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரத்தை உருக்கும் திறன் கொண்டது.

கடந்த 28-ம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாகமூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிறுவனத்திற்கு விரிவாக்கத்துக்கு வழங்கிய 342 ஏக்கர் நிலத்தையும் திரும்பப் பெற்றது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வேதாந்தா குழுமத்திற்குப் பாதிப்பு ஏற்படுமா, இந்தப் பங்கின் விலைப்போக்கு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்  விஜய் ஆனந்திடம் கேட்டோம். அவர் சொன்னதாவது... 
‘‘கடந்த 2017-18-ம் நிதியாண்டில் வேதாந்தா குழுமத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.25,470 கோடியாக இருந்தது. இதில் தாமிர வர்த்தகத்தின் பங்களிப்பு வெறும் 5%  மட்டுமே. அதாவது, ரூ.1,200 கோடி. இதர தொழில்கள் சிறப்பான வளர்ச்சி கண்டுவரும் நிலையில், தாமிரம் தொடர்பான தொழில் அந்த அளவிற்கு வளர்ச்சியடையவில்லை. சர்வதேச அளவில் இரும்புத்தாது, துத்தநாகம், அலுமினியம் ஆகிய தொழில் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபத்தைவிட தாமிரம் சார்ந்த தொழில் நிறுவனங்களின் லாபம் குறைவாகவே இருக்கிறது.

வெறும் ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே

வேதாந்தா நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு தற்போது ரூ.92,500 கோடியாக இருக்கிறது. இதில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் மதிப்பு ரூ.5,000 கோடி மட்டுமே. இது வேதாந்தா நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவுதான். இதனால், வேதாந்தாவின் மற்ற நிறுவனங்களுக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு, அந்தப் பங்கின் விலை குறையுமோ என்கிற பயம் காரணமாக, இந்தப் பங்கின் விலை குறைந்துள்ளது. 

இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா ரிசோசர்ஸ் நிறுவனம், வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தில் 50.1 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் மூலம் வேதாந்தாவிற்குக் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவே. எனவே, ஸ்டெர்லைட் மூடப்பட்டதால், வேதாந்தாவிற்கு அதிகளவில் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. லண்டன் பங்குச் சந்தையில் அதன் பங்கு விலை குறைந்துள்ளதும் தற்காலிகமானதுதான். அதேசமயம், இதன் பி.இ (Price Earning) குறைய வாய்ப்புள்ளது” என்றார்.

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் சர்ச்சைக்குள்ளான நிறுவனங்களில் இருந்து விலகி இருப்பதே நல்லது. சர்ச்சை மேகம் விலகிய பின் மீண்டும் அதில் முதலீடு செய்வதே நல்லது.

- கே.எஸ்.தியாகராஜன்

படம்:  ஏ.சிதம்பரம்