நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: ஐ.டி பங்குகள்... ஆர்வம் காட்டும் ஃபண்டுகள்!

ஷேர்லக்: ஐ.டி பங்குகள்... ஆர்வம் காட்டும் ஃபண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: ஐ.டி பங்குகள்... ஆர்வம் காட்டும் ஃபண்டுகள்!

ஓவியம்: அரஸ்

ரியாக மாலை ஐந்து மணிக்கு ஷேர்லக் நம் கேபினுக்குள் நுழைந்தார். அவர் வரும் தகவலை முன்கூட்டியே சொல்லியிருந்ததால், ஆப்பிள் ஜூஸைத் தயாராக வைத்திருந்தோம். அவர் நம் கேபினுக்குள் நுழைந்தவுடன் அவரிடம் நீட்ட, வாங்கிப் பருகியபடி, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.  

ஷேர்லக்: ஐ.டி பங்குகள்... ஆர்வம் காட்டும் ஃபண்டுகள்!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலிருந்து சாந்தா கோச்சார் விலகுவதற்கான நெருக்கடி அதிகரித்துள்ளதே?

“சாந்தா  கோச்சாரின் கணவர் தீபக்  கோச்சாருக் கும், வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணு கோபால்தூத்துக்கும் இடையேயான வியாபாரத் தொடர்பு அடிப்படையில் வீடியோகான் நிறுவனத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.3,250 கோடி கடன் தந்தது. இது தொடர்பான சர்ச்சை எழுந்ததிலிருந்தே சாந்தா கோச்சாருக்கு நெருக்கடி ஆரம்பித்துவிட்டது. என்றாலும், ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு, சாந்தாவை இழக்க விரும்பவில்லை. எனவே, அவர் நடவடிக்கையின் பிடியில் சிக்காமலே இருந்தார்.

ஆனால், இன்னொரு முதலீட்டாளரும் சமீபத்தில் புகார் கொடுக்கவே, அது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துவது எனக் கடந்த 30-ம் தேதியன்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி  முடிவெடுத்தது.

கடந்த 2011-ல் இதேபோன்றதொரு குற்றச் சாட்டுக்கு உள்ளான யு.டி.ஐ வங்கியின் அப்போதைய தலைவர் பி.ஜே.நாயக், இதே போன்ற விசாரணைக்குமுன்னர் பதவி விலகியது போல, சாந்தா கோச்சாரும் பதவி விலக வேண்டும் என வங்கியாளர்களும், அனலிஸ்ட்களும் சொல் கின்றனர். இதனால், சாந்தா கோச்சார் தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஓ பதவியில் நீடிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு, சாந்தா கோச்சாரை காலவரையற்ற விடுமுறையில் செல்ல ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கேட்டுக்கொண்டுள்ளது.” 

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஐ.டி பங்குகளில் முதலீடு செய்வது உயர்ந்திருக்கிறதே?

“அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு மற்றும் இந்தியச் சந்தையில் தொடர்ந்து காணப்படும் ஏற்ற இறக்கமான போக்குக்கு மத்தியிலும் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது அதிகரித்துள்ளது.

 ஐ.டி நிறுவனங்களின் பங்குகளை, பெரும்பாலான முன்னணி  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே தங்களது போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொண்டு வந்துள்ளன. அதற்கு முன்னதாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே இந்தப் பங்குகள்  நல்ல லாபம் கொடுக்கத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில்  பி.எஸ்.இ ஐ.டி இண்டெக்ஸ் 35% வளர்ச்சி கண்டது. நடப்பு ஆண்டில் இதுவரை சென்செக்ஸ் 2.6% அதிகரித்துள்ள நிலையில், ஐ.டி இண்டெக்ஸ் 18% உயர்ந்துள்ளது. 2014 முதல் 2017 - ம் ஆண்டு வரை யிலான காலகட்டத்தில் ஐ.டி நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறைந்ததால், அதன் பங்குகள் அப்போது மந்தகதியிலேயே காணப்பட்டது. தற்போது, அந்தப் பங்குகளின் சமீபத்திய செயல்பாடுகள் நன்றாக இருக்கின்றன. இந்தியா உள்பட சர்வதேச நாடுகளின் கரன்சிகளுக்கு எதிரான டாலர் மதிப்பு எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் ஐ.டி நிறுவனங்களின் பங்குகள்மீது மியூச்சுவல் ஃபண்டு கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. 2018 ஜனவரியில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் பங்கு முதலீட்டில் 5.69 சதவிகிதத்தை வைத்திருந்தது.  இது 2018 மார்ச்-ல் 9.40 சதவிகிதமாக அதிகரித்தது.  அடுத்த இடங்களில் யு.டி.ஐ (2.16%), கோட்டக் (1.91%), டி.எஸ்.பி பிளாக் ராக் (1.66%), ஹெச்.டி.எஃப்.சி (1.46%), ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. (1.19%) ஆகிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளன.” 

முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் பற்றி சொல்லுங்களேன்?

“நான்காம் காலாண்டில் பெல் (BHEL) நிறுவனத்தின் நிகர லாபம் இரு மடங்கு அதிகரித்து ரூ.457.12 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 1976-77-ம் நிதியாண்டிலிருந்து இடைவிடாமல் டிவிடெண்டுகளை வழங்கிய பெருமையைத் தக்க வைத்துள்ளது. 40% இடைக்கால டிவிடெண்ட் வழங்கியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய சுரங்க நிறுவனமான கோல் இந்தியாவின் நிகர லாபம் 52.3% சரிந்து, ரூ.1,295 கோடியாகக் காணப்படுகிறது. பணியாளர் செலவு கணிசமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள். 

ஷேர்லக்: ஐ.டி பங்குகள்... ஆர்வம் காட்டும் ஃபண்டுகள்!

நான்காம் காலாண்டில், இந்தியாவின் மிகப் பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சன் பார்மாவின் நிகர லாபம் 7% அதிகரித்து, ரூ.1,308.96 கோடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து திங்களன்று அந்த நிறுவனத்தின் பங்குகள் 8% ஏற்றம் கண்டன.

கேப்லின்பாயின்ட் லேப் நிறுவனத்தின் லாபம் 39 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாகக் குறைந்த தால், அந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்று 14.39% இறக்கம் கண்டது.’’

கடந்த வியாழனன்று பங்குச் சந்தைகள் பெரிய அளவில் ஏற்றம் கண்டதற்கு என்ன காரணம்? 

‘‘2017-18-ம் நிதியாண்டின் நான்காம்  காலாண்டில், இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி) 7.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக வெளியான தகவல் பங்குச் சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைய தினம் சென்செக்ஸ் 416.27 புள்ளிகள் உயர்ந்து, 35,322.38 என்ற நிலையை எட்டி, கடந்த இரண்டு வாரத்தில் இல்லாத உச்சத்தை எட்டியது.”

அவந்தி ஃபீட்ஸ் நிறுவனம் இலவசப் பங்குகளை வழங்கியுள்ளதே?

‘‘இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு,      2017-18-ம் நிதியாண்டுக்கான டிவிடெண்டாக  6 ரூபாயை அறிவித்துள்ளது. மேலும், 1:2 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. இந்த நிறுவனத்தைப் பற்றி ஒரு மாதத்துக்குமுன்பே நீங்கள் எழுதி, முதலீட்டாளர்களை எச்சரித்திருந்தது, நிச்சயம் கவனிக்கக்கக்கது.’’

சில நிறுவனங்களைச் சந்தையில் செயல்பட தடை விதித்துள்ளதே செபி?

“பொதுப் பங்கு வெளியீட்டுக்கான விதிமுறை களைப் பின்பற்றாமல், 1,832 முதலீட்டாளர் களிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும்  பங்குகளை விற்று ரூ.21.18 கோடி ரூபாயைத் திரட்டியது ரியல் விஷன் இன்டர்நேஷனல். முதலீட்டாளர்களிட மிருந்து சட்டவிரோதமாக வசூலித்த பணத்தை அவர்களிடம் திருப்பித் தர வேண்டும் என அந்த நிறுவனத்துக்கும்,  அதன் ஒன்பது புரமோட்டர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு செபி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அந்த நிறுவனம் நிறைவேற்றாததால், தற்போது ரூ.25 லட்சம் அபராதம் விதித்துள்ளது செபி. இதேபோல, முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய நிதியைத் தவறாகப் பயன்படுத்திய காரணத்துக்காக எஃப் 6 ஃபின்சர்வ், எஃப் 6 கமாடிட்டீஸ் மற்றும் அவற்றின் இயக்குநர்கள் எட்டு பேரைச் சந்தையிலிருந்து தடை செய்து செபி உத்தரவிட்டுள்ளது” என்றவர், முக்கியமான போன் வரவே, அவசரமாகக் கிளம்பினார் ஷேர்லக்.