
காலாண்டு முடிவுகள்
நிறுவனங்கள் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வாரம் காலாண்டு முடிவுகளை வெளி யிட்ட முக்கியமான நிறுவனங்களின் தொகுப்பை இனி பார்ப்போம்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries)
இந்த நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 41% அதிகரித்து, ரூ.19,443 கோடியாக உள்ளது. இதன் நிகர வருமானம் 54.51% அதிகரித்து,ரூ.2,23,000 கோடியாக உள்ளது.
சென்ற காலாண்டில் ரஷ்ய யுத்தம், சீனாவில் ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் விலையில் அதிக ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டது. மேலும், மத்திய அரசு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய புதிய வரி விதித்திருந்தது. என்றாலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிசினஸ் சென்ற காலாண்டில் அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது.
ஆனால், நிறுவனத்தின் காலாண்டு முடிவு சந்தை எதிர்பார்ப்பைவிட சற்றுக் குறைந்ததால், இந்த நிறுவனப் பங்கு விலை காலாண்டு முடிவுக்குப் பிறகு, கணிசமாகக் குறைந்து வருகிறது.

கோட்டக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank)
இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படை யில் 19.96% அதிகரித்து, ரூ.4,697 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் 26% அதிகரித்து, ரூ.2,071 கோடியாக உள்ளது.
இதுவரை இந்த வங்கி மிகக் குறைந்த அளவிலான அடமானம் இல்லாத கடன்களை மட்டுமே வழங்கிவந்தது. முதல் முறையாக சென்ற காலாண்டில் மிக அதிகமான தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற அடமானம் இல்லாத கடன்களை இந்த வங்கி வழங்கியுள்ளது. இதுபோன்ற கடன்களில் ரிஸ்க் இருந்தாலும் அதிக வட்டி வருமானம் கிடைக்க வாய்ப்பிருப்பதால், வங்கியின் லாபம் வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
டாடா ஸ்டீல் (Tata Steel)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 13% குறைந்து, ரூ.7,765 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 18.6% அதிகரித்து, ரூ.63,430 கோடியாக உள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு வெளிநாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்யும்போது விதிக்கப்படும் வரி விகிதங்கள் சென்ற மாதம் அதிகரித்துள்ளது. மேலும், பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் ஸ்டீல் விலை சென்ற காலாண்டில் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக லாப விகிதம் சற்றுக் குறைந்தாலும் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட அதிக லாபத்தை சென்ற காலாண்டில் ஈட்டியுள்ளது.
மேலும், ஜூலை 29 அன்று 1 பங்குக்கு 10 பங்கு என்ற அடிப்படையில் பங்குப் பிரிப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஸ்டீல் விலை வரும் காலத்தில் ஏற்றம் பெறும் என்று கருதப்படுவதால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்னும் ஒரு வருட காலத்தில் 40% வரை ஏற்றம் பெறும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSW Steel)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 86% குறைந்து, ரூ.838 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 32% அதிகரித்து, ரூ.38,086 கோடியாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக எரிசக்தி விலை அதிகரித்ததால் லாப விகிதம் குறைந்துள்ளது.
கனரா பேங்க் (Canara Bank)
இந்த வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 71.79% அதிகரித்து, ரூ.2,022 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 10% அதிகரித்து, ரூ. 23,351 கோடியாக உள்ளது. பொதுத்துறை வங்கி களின் வாராக்கடன் அளவு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சரிந்து வருவதன் காரணமாக பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் வரும் காலத்தில் கணிசமாக உயரும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
ஆக்ஸிஸ் பேங்க் (Axis Bank)
இந்த வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 91% அதிகரித்து, ரூ.4,125 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 21% அதிகரித்து, ரூ.9,384 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் ஏறக் குறைய 10 லட்சம் புதிய கிரெடிட் கார்டுகளை வங்கி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டு களாக இந்த வங்கியின் பங்குகள் பெரிய விலை ஏற்றத்தைச் சந்திக்கவில்லை. இந்த மந்த நிலை வரும் காலத்தில் மாறி நல்ல லாபத்தை இந்த வங்கிப் பங்குகள் வழங்கும் என்று பல தரகு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இண்டஸ்இண்ட் பேங்க் (Indus Ind Bank)
இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த இந்த வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 64% அதிகரித்து, ரூ.1,603 கோடி யாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 16% அதிகரித்து, ரூ.4,125 கோடியாக உள்ளது. வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளதால், இதன் பங்கு விலை 7% வரை அதிக ரித்து வர்த்தகமாகி வருகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank)
இந்த வங்கியின் லாபம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 50% அதிகரித்து, ரூ.6,905 கோடி யாக உள்ளது. இதன் நிகர வட்டி வருமானம் 20.8% அதிக ரித்து, ரூ.13,120 கோடியாக உள்ளது. காலாண்டு முடிவு களுக்குப் பிறகு, தற்போது ரூ.800 என்ற அளவில் வர்த்தக மாகும் இந்த வங்கியின் பங்கு வரும் காலத்தில் ரூ.1,000 வரை அதிகரிக்கும் என்று பங்குத் தரகு நிறுவனங்கள் சொல்லி யுள்ளன.
இன்ஃபோசிஸ் (Infosys)
இந்த நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் வருடாந் தர அடிப்படையில் 3.2% அதிகரித்து, ரூ.5,360 கோடியாக உள்ளது. இதன் நிகர வருமானம் 23.6% அதிகரித்து, ரூ.34,470 கோடியாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 14 முதல் 16% வளர்ச்சி அடையும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

அல்ட்ராடெக் சிமென்ட் (Ultratech Cement)
பிர்லா குழுமத்தைச் சார்ந்த இந்த நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படை யில் 7% குறைந்து, ரூ.1,582 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 28% அதிகரித்து, ரூ.15,164 கோடியாக உள்ளது. அதிக உற்பத்தித்திறன் கொண்ட தொழிற்சாலைகளை நிறுவும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வரும் 2025-ம் ஆண்டு முதல் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தன் பேங்க் (Bandhan Bank)
இந்த வங்கியின் லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங்கு அதிகமாக ரூ.887 கோடியாக உள்ளது. இந்த வங்கி யின் வருமானம் ரூ.2,844 கோடியாக உள்ளது.
ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints)
இந்த நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 79% அதிகரித்து, ரூ.1,017 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் 55% அதிகரித்து, ரூ.8,579 கோடியாக உள்ளது. காலாண்டு முடிவு பல வல்லுநர்களின் கணிப்பை விட சிறப்பாக வந்துள்ளது.
ஆர்.பி.எல் பேங்க் (RBL Bank)
இந்த வங்கியின் லாபம் சென்ற ஜூன் காலாண்டில் ரூ. 201 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த வங்கி 459 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்து இருந்தது. இந்த வங்கியின் நிகர வருமானம் 6% அதிகரித்து, ரூ.1,027 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் ரிசர்வ் வங்கி உறுப்பினர்களை நியமித்த பிறகு தொடர்ந்து இந்த வங்கிப் பங்கு சரிவை சந்தித்து வருகிறது. காலாண்டு முடிவுகள் சிறப்பாக வெளிவந்துள்ளதால், வரும் நாள்களில் இந்த பங்கின் விலை உயரும் என எதிர்பார்க்கலாம்.
தொகுப்பு: பிரமேஷ்.எஸ்