
காலாண்டு முடிவுகள்
நடப்பு நிதியாண்டுக்கான சில நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

எஸ்.பி.ஐ பேங்க் (SBI)
பொதுத்துறை சார்ந்த அரசின் முன்னணி வங்கி இது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் இரண்டாம் காலாண்டில் 10.7% அதிகரித்து,ரூ.31,184 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் லாபம் மிக அதிகபட்சமாக வருடாந்தர அடிப்படையில் 66.7% அதிகரித்து ரூ.7,626 கோடியாக உள்ளது. வங்கியின் வாராக்கடன் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக வாராக் கடனுக்காக ஒதுக்கப்படும் தொகை குறைந்து, லாப விகிதம் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வங்கியின் பங்கு விலை வரும் காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் என்று பல பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் கருத்து தெரிவித் துள்ளன.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (Britannia Industries)
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 5.5% அதிகரித்து ரூ.3,607 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 23% குறைந்து ரூ.384.22 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் எஃப்.எம்.சி.ஜி துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் மூலப்பொருள்களின் விலை உயர்வு செலவினத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பாமாயில், தானியங்கள், எரிபொருள் போன்றவற்றின் விலை ஏற்றம் லாபத்தைக் குறைத்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எய்ஷர் மோட்டார்ஸ் (Eicher Motors)
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 9% உயர்ந்துரூ.373 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 5% உயர்ந்து ரூ.2,250 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ராயல் என்ஃபீல்டு பைக்குகள் வெளிநாட்டுக்கு மிக அதிக அளவில், சென்ற காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கி 120 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு தென் துருவத்துக்கு இந்த நிறுவனத்தின் பைக் மூலம் பயணம் செய்யும் சாகச நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது.
அரபிந்தோ பார்மா (Aurobindho Pharma)
பார்மா துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 13.69% குறைந்து ரூ.697 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 8% குறைந்து ரூ.5,941 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.1.50 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கிராபைட் இந்தியா (Graphite India)
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 42.68% அதிகரித்து ரூ.692 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 412.2% அதிகரித்து ரூ.128 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் எபிட்டா 771.43% அதிகரித்து ரூ.188 கோடியாக உள்ளது.
கரூர் வைஸ்யா பேங்க் (Karur Vysya Bank)
தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் 43.5% அதிகரித்து, ரூ.165 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 13.1% அதிகரித்துள்ளது. வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 7% அதிகரித்து, ரூ.4,288 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வாராக்கடன் சென்ற காலாண்டில் சற்றுக் குறைந் துள்ளது.
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Ujjivan Small Finance Bank)
இந்த வங்கியின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 15.14% குறைந்து, ரூ.691 கோடியாக உள்ளது. இந்த வங்கி சென்ற காலாண்டில் ரூ.274 கோடி நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. வாராக்கடன் விகிதம் அதிகரித்துள்ளதால் ரிசர்வ் வங்கியின் பரிந்துரை யின்படி, அதற்கான ஒதுக்கீட்டு தொகையை அதிகரிப்பு செய்தது வங்கியின் நிகர லாப இழப்புக்கு காரணமாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பல ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் வாராக்கடன் பிரச்னைகளால் சென்ற காலாண்டில் இழப்பைச் சந்தித்துள்ளன. ஆனால், வரும் காலாண்டுகளில் வாராக்கடன் அளவு குறைந்து லாப விகிதம் அதிகரிக்கும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்ராம்பூர் சின்னி மில்ஸ் (Balrampur Chinni Mills)
முன்னணி சர்க்கரைத் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 5.89% குறைந்து, ரூ.1,213 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 6.13% அதிகரித்து, ரூ.83 கோடியாக உள்ளது. நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் சென்ற ஆண்டின் அளவான ரூ.3.66 என்ற நிலையிலிருந்து ரூ.3.96 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்கு முந்தைய காலகட்ட வளர்ச்சிக்குத் தற்போது நிறுவனம் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தரம் ஃபைனான்ஸ் (Sundaram Finance)
தமிழகத்தைத் தலைமை யிடமாகக் கொண்ட நிதிச் சேவை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 12% உயர்ந்து, ரூ.402 கோடியாக உள்ளது. நிறுவனம் வழங்கியுள்ள கடன் அளவு அதிகபட்சமாக 38% அதிகரித்து, ரூ.5,681 கோடியாக உள்ளது. வாராக்கடன், நிறுவனத்தின் சொத்து மதிப்பு போன்ற பல காரணிகளில் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்ததூட் ஃபைனான்ஸ் (Muthoot Finance)
கேரளாவைத் தலைமை யிடமாகக் கொண்ட முன்னணி நகைக் கடன் வழங்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 8% அதிகரித்து ரூ.1,002 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 5% அதிகரித்து, ரூ.3,052 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் கொடுத்துள்ள மொத்தக் கடன்களின் அளவு 17% அதிகரித்து, ரூ.60,919 கோடியாக உள்ளது. சிறப்பான காலாண்டு நிதி நிலை முடிவுகள் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு அதன் உச்சபட்ச விலையில் தற்போது வர்த்தகமாகி வருகிறது.
பாட்டா இந்தியா (Bata India)
காலணிகள் தயாரிப்பில் முதன்மையான நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் 37 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.44 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது. நிறுவனத்தின் நிகர வருமானமும் 80% உயர்ந்து, ரூ.368 கோடியாக உள்ளது. தற்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் வருங்காலத் தில் நிறுவனம் சிறப்பாகச் செயல்படும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network)
தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி மீடியா துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 13% அதிகரித்து ரூ.396 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 10% அதிகரித்து ரூ.849 கோடியாக உள்ளது. ஐ.பி.எல் அணிகளில் சன்ரைசர்ஸ் மூலம் கிடைத்த வருமானமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.2.50 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.
தொகுப்பு: எஸ்.பிரமேஷ்