நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, அசோக் லேலாண்ட்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நடப்பு நிதியாண்டுக்கான நிறுவனங் களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சில நிறுவனங்களின் முடிவுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

ஹீரோ மோட்டார் கார்ப் (Hero Motorcorp)

இருசக்கர வாகனத் தயாரிப்பில் இந்தியா வின் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 9.8% குறைந்து, ரூ.8,538 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 22.2% குறைந்து, ரூ. 745.72 கோடியாக உள்ளது. கடந்த காலத்தைக் காட்டிலும் லாப விகிதம் குறைந்து இருந்தாலும், பெரும்பாலான சந்தை வல்லுநர் களின் கணிப்பைவிட அதிகமான லாபத்தை இந்த நிறுவனம் ஈட்டியுள்ளது.

கடந்த ஓராண்டாக நிஃப்டி குறியீடு கணிசமாக உயர்ந்திருந்தாலும், இந்த நிறுவனப் பங்குகள் விலை மாறாமல் உள்ளது. சென்ற காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இரு சக்கர வாகனத் துறை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு மாறும் என்று கருதுவதால், விலை குறைவாக உள்ள இந்த நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு பல பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்து வருகின்றன.

ஹிண்டால்கோ (Hindalco)

பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அலுமினியம் மற்றும் காப்பர் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 53% உயர்ந்து, ரூ.47,765 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஏறக்குறைய ஒன்பது மடங்கு உயர்ந்து, ரூ.3,417 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் தற்போது பாலிகேப் நிறுவனத்தைச் சேர்ந்த ரைகர் பேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் 100% பங்கை வாங்கியுள்ளது. இது காப்பர் வயர்கள் தயாரிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, அசோக் லேலாண்ட்... ரிசல்ட் எப்படி..?

டாடா ஸ்டீல் (Tata Steel)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 7.5 மடங்கு உயர்ந்து, ரூ.12,548 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 55% உயர்ந்து, ரூ.60,283 கோடியாக உள்ளது.

பல சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பை விட அதிக வருமானத்தை இந்த நிறுவனம் ஈட்டியுள்ளது. பெரும்பாலான மெட்டல் துறை சார்ந்த பங்குகள் சென்ற காலாண்டில் சிறப்பான முடிவுகளை வெளியிட்டுள்ளன.

என்.எம்.டி.சி (NMDC)

அரசுத் துறை சார்ந்த முன்னணி இரும்புத் தாது தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் மூன்று மடங்கு உயர்ந்து, ரூ.2,326 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக ரூ.6,882 கோடியாக உள்ளது.

சென்ற காலாண்டில் மிக அதிகமாக 8.77 மெட்ரிக் டன் இரும்புத் தாதுவை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இரும்புத் தாதுக் களுக்கு அரசு விதிக்கும் ராயல்டி அளவை அதிகரித்ததால், சென்ற காலாண்டில் அதிகமான ராயல்டி தொகையை நிறுவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் செலவீனம் சற்று அதிகரித்து இருந்தது.

இரும்புத் தாது விலையும் உலக அளவில் கணிசமாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக நிறுவனப் பங்குகளின் விலை காலாண்டு முடிவுகளுக்கு பிறகு 5% வரை சரிந்தது.

வா டெக் வபாக் (VA Tech Wabag)

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி நீர் மேலாண்மை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்5டில் வருடாந்தர அடிப்படையில் 80% அதிகரித்து, ரூ.26 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 12.5% அதிகரித்து, ரூ.684 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்துக்குத் தற்போது ரூ.10,000 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கையிருப்பில் உள்ளன. காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, பல சந்தை தரகு நிறுவனங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் பரிந்துரை செய்துள்ளன.

கிரானூல்ஸ் இந்தியா (Granules India)

ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி பார்மா துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 3.52% உயர்ந்து, ரூ.888 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 50% குறைந்து, ரூ.80.68 கோடியாக உள்ளது. மூலப்பொருள்கள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தது, சீனா தனது கொள்கைகள் சிலவற்றை மாற்றியதால் இறக்குமதியில் ஏற்பட்ட அதிகப்படியான செலவினம் உள்ளிட்ட காரணங் களால் நிறுவனத்தின் லாபம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)

பொதுத்துறை சார்ந்த முன்னணி வங்கி இது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 0.78% உயர்ந்து, ரூ.7,565.97 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் 24.38% உயர்ந்து, ரூ.2,088 கோடியாக உள்ளது.

இந்த வங்கியின் இ.பி.எஸ் ரூ.3.63 என்ற கடந்த ஆண்டின் அளவைவிட அதிகரித்து, ரூ.4.04-ஆக உள்ளது. வாராக் கடன் அளவு குறைவது காரண மாக அதற்கான வைப்புத் தொகை கணிசமாகக் குறைவது பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் மீண்டும் நல்ல லாபப் பாதைக்கு மாறுவதற்கு உதவு கிறது.

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Godrej Consumer Products)

கோத்ரேஜ் குழுமத்தைச் சார்ந்த வீட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 4.5% அதிகரித்து, ரூ.479 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 8.63% அதிகரித்து, ரூ.3,144 கோடியாக உள்ளது.

என்.ஹெச்.பி.சி (NHPC)

மின்சாரத் தயாரிப்பில் முன்னணி பொதுத்துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத் தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 7% உயர்ந்து, ரூ.1,387 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 2% அதிகரித்து, ரூ.3,166 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனம் ஒடிசா மாநிலத்துடன் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்ற காலாண்டில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு நிறுவனம் முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோல் இந்தியா (Coal India)

நிலக்கரி தயாரிப்பில் இந்தியாவின் பொதுத்துறை சார்ந்த முதன்மையான நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஆண்டின் அளவையொட்டி ரூ.2,936 கோடியாக உள்ளது.

இது பல சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பை விட குறைவாக இருந்தது. மேலும், இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 10.1% அதிகரித்து, ரூ.23,291 கோடியாக உள்ளது.

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் (Grasim Industries)

பிர்லா குழுமத்தைச் சார்ந்த டெக்ஸ்டைல் துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 180% அதிகரித்து, ரூ.979 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 67% அதிகரித்து, ரூ.4,933 கோடியாக உள்ளது.

ஓ.என்.ஜி.சி (ONGC)

எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் பொதுத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 565% உயர்ந்து, ரூ.18,347 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 44% அதிகரித்து ரூ.24,354 கோடியாக உள்ளது. மிக அதிக அளவில் வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கப் பெற்றதால், லாப விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் (Apollo Hospitals)

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி மருத்துவமனை நெட்வொர்க் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 34.64% அதிகரித்து, ரூ.3,717 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மூன்று மடங்கு அதிகரித்து, ரூ.248 கோடியாக உள்ளது. நல்ல லாபம் காரணமாக நிறுவனத்தின் இ.பி.எஸ் நான்கு மடங்கு உயர்ந்து ரூ.17.24-ஆக உள்ளது.

அசோக் லேலாண்ட் (Ashok Leyland)

முன்னணி ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் சென்ற செப்டம்பர் காலாண்டில் 84 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது 97 கோடி நஷ்டமாக இருந்தது. நிறுவனத்தின் நிகர வருமானம் 44% அதிகரித்து, ரூ.5,562 கோடியாக உள்ளது.

தற்போது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தயாரிப்பதில் முன்னெடுப்பு நடவடிக்கைகளை செய்துவருவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்