நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

விப்ரோ, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா... ரிசல்ட் எப்படி? - காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

ஹெச்.யு.எல் நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.22 டிவிடெண்ட் வழங்கவிருக் கிறது. இந்த நிறுவனம் இந்த ஆண்டில் மொத்தம் ரூ.39 வழங்குகிறது!

சென்ற மார்ச் காலாண்டுக்கான நிறுவனங்களின் காலாண்டு சீஸன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த வாரம் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட முன்னணி நிறுவனங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 30% அதிகரித்து, ரூ.3,158 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் சந்தை வல்லுநர்களின் கணிப்பை விட சிறப்பாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருமானம் 28% அதிகரித்து, ரூ.7,771 கோடியாக உள்ளது.

சிறப்பான காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு பல பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்து அதன் ஒரு வருட இலக்கு விலையாக ரூ.7,730 நிர்ணயம் செய்துள்ளனர். இது தற்போதைய விலையைவிட 28% அதிகமாகும். மேலும், இந்த நிறுவனம் 30 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் (HDFC Life)

ஆயுள் காப்பீடு வழங்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட குறைவாக உள்ளது. நிகர லாபம் ரூ.357 கோடியிலிருந்து ரூ.359 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் காப்பீட்டு பிரீமியம் வருடாந்தர அடிப்படையில் 36% அதிகரித்து, ரூ.19,426 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.1.9 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனங்களின் இணைப்பின் ஒரு பகுதியாக ஹெச்.டி.எஃப்.சி லைஃப் பங்கு மூலதனத்தை ஹெச்டி.எஃப்.சி வங்கி 50% வரை அதிகரிப்பதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இது இந்த நிறுவனத்துக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

விப்ரோ, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா... ரிசல்ட் எப்படி? - காலாண்டு முடிவுகள்

டாடா ஸ்டீல் (Tata Steel)

நமது நாட்டின் முதன்மையான ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 82% குறைந்து, ரூ.1,705 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 9% குறைந்து, ரூ.62,961 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த ஸ்டீல் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சமாக, சென்ற ஆண்டில் 19.88 டன்களாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ. 3.6 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் (Hindustan Unilever)

முன்னணி எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10% அதிகரித்து, ரூ.2,552 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 10.9% அதிகரித்து, ரூ.14,638 கோடியாக உள்ளது.

மேலும், இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.22 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. இதையும் சேர்த்து இந்த நிறுவனம் இந்த ஆண்டில் மொத்தமாக பங்கு ஒன்றுக்கு ரூ. 39 டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது.

ஆக்ஸிஸ் பேங்க் (Axis Bank)

தனியார் துறை சார்ந்த இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 33% அதிகரித்து, ரூ.11,742 கோடியாக உள்ளது. இந்த வங்கி சென்ற காலாண்டில் ரூ.5,728 கோடி நஷ்டத்தைச் சந்தித்து இருக்கிறது.

சிட்டி பேங்க்கின் இந்திய வர்த்தகத்தை ஆக்ஸிஸ் வங்கி சென்ற காலாண்டு கையகப்படுத்தி இருந்தது. அதனால் ஒருமுறை மட்டும் ஏற்படும் செலவினங்கள் காரணமாக அந்த வங்கி நஷ்டத்தைச் சந்தித்திருந்தது. இந்த செலவினத்தைத் தவிர்த்துப் பார்த்தால், அந்த வங்கி சென்ற காலாண்டில் ரூ.6,625 கோடி லாபத்தை ஈட்டியிருந்தது.

சிட்டி பேங்கைக் கையகப் படுத்தியதன் மூலமாக கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது, வரும் காலத்தில் இந்த வங்கியின் லாப விகிதத்தை அதிகரிக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வங்கி ஒரு பங்குக்கு ரூ.1 டிவிடெண்ட் வழங்குகிறது.

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி (SBI Life Insurance Company)

ஆயுள் காப்பீடு வழங்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 15% அதிகரித்து, ரூ.777 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் காப்பீட்டு பிரீமியம் 14% அதிகரித்து, ரூ.19,897 கோடியாக உள்ளது.

டெக் மஹிந்திரா (Tech Mahindra)

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 26% குறைந்து, ரூ.1,118 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 13% அதிகரித்து, ரூ.13,718 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.32 டிவிடெண்ட் வழங்குகிறது. இதையும் சேர்த்து சென்ற ஆண்டில் இந்த நிறுவனம் மொத்தமாக பங்கு ஒன்றுக்கு ரூ.50 டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது.

விப்ரோ (Wipro)

முன்னணி தகவல் தொழில் நுட்பத்துறை சார்ந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 0.4% குறைந்து, ரூ.3,074 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 11% அதிகரித்து, ரூ.23,190 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் 26.9 கோடி பங்குகளை ரூ.12,000 கோடி வரையிலான மதிப்பில் திரும்பப் பெற இருப்ப தாகத் தெரிவித்துள்ளது.

திரும்பப் பெரும் பங்கின் விலை யாக ரூ.445 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள பங்கு களில் 4.9% பங்குகளை இந்த நிறுவனம் திரும்பப் பெற இருக் கிறது.

கடந்த எட்டு ஆண்டுகளில் தற்போதைய நடவடிக்கையும் சேர்த்து நான்கு முறை ரூ.45,000 கோடி மதிப்பிலான பங்குகளை இந்த நிறுவனம் திரும்பப் பெற்று இருக்கிறது.

விப்ரோ, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா... ரிசல்ட் எப்படி? - காலாண்டு முடிவுகள்

ஏசிசி (ACC)

அதானி குழுமத்தைச் சேர்ந்த முன்னணி சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 40.3% குறைந்து, ரூ.235.6 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 8.23% அதிகரித்து, ரூ.4,791 கோடியாக உள்ளது. அதானி குழும சர்ச்சைகளுக்குப் பிறகு, அனைத்து அதானி குழும நிறுவன பங்குகளும் பெரிய அளவில் சரிந்தன.

இந்த விலைச் சரிவு நீண்ட கால நோக்கில் அதானி நிறுவனப் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்க வழி வகுத்துள்ளது.

பெரும்பாலான பங்குத் தரகு நிறுவனங்கள் அதானி குழும நிறுவனங்களில் இந்த நிறுவன பங்கை வாங்க பரிந்துரை செய்துள்ளன. மேலும், இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.9.25 டிவிடெண்ட் வழங்குகிறது.

பஜாஜ் ஃபின்செர்வ் (Bajaj Finserv)

சென்ற மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக உள்ளது. நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 31.4% அதிகரித்து, ரூ.1,769 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.23,625 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.18,862 கோடியாக இருந்தது. மேலும், இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 80 பைசா டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

அல்ட்ராடெக் சிமென்ட் (Ultratech Cement)

பிர்லா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி சிமென்ட் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 13% அதிகரித்து, ரூ.1,666 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனம் சென்ற ஆண்டு முதல் முறையாக 100 மில்லியன் டன் உற்பத்தி என்ற இலக்கை அடைந்துள்ளது. சென்ற காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த கொள்ளளவில் 95% உற்பத்தி செய்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 38 ரூபாய் டிவிடெண்டை வழங்குகிறது.

கோட்டக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank)

இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 26% அதிகரித்து, ரூ.3,416 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 35% அதிகரித்து, ரூ.61,026 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.1.50 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

எஸ்.பி.ஐ கார்ட்ஸ் (SBI Cards)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 3% அதிகரித்து, ரூ.596 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 32% அதிகரித்து, ரூ.3,762 கோடியாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்