சினிமா
Published:Updated:

பணத்தின் மதிப்பு சொன்ன பங்குச்சந்தைக் காளை!

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
பிரீமியம் ஸ்டோரி
News
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

இந்தியாவின் 36-வது பெரும் பணக்காரராக இருந்து, 62 வயதில் திடீர் மாரடைப்பால் ஆகஸ்ட் 14-ம் தேதி உயிரிழந்த ராகேஷின் வாழ்க்கையைப் படிப்பவர்கள், பணத்தின் முழுமையான மதிப்பையும் அர்த்தத்தையும் உணர்வார்கள்.

``இந்தியா போன்ற ஓர் ஏழை நாட்டில் பெரும் பணக்காரராக இருப்பது உங்களுக்குக் குற்ற உணர்வாக இல்லையா?'' என்று ஒருமுறை கேட்டபோது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தீர்மானமாக இப்படி பதில் சொன்னார்.

‘‘எனக்கு ஏன் குற்ற உணர்வு வர வேண்டும்? இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது? இங்கே வளமான பண்பாடு இருக்கிறது, உணவுகள் இருக்கின்றன, வளங்கள் இருக்கின்றன. சிந்தனை இருக்கிறது. இந்தியா வளமாக இல்லாவிட்டால் நான் எப்படிப் பெரும் பணக்காரன் ஆகியிருக்க முடியும்?

எல்லோரும் சமமாகிவிட முடியும் என்பது கற்பனை. ஆனால், எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது என்னைப் போன்ற பணக்காரர்களின் கடமை. இந்தியாவின் ஒட்டுமொத்த வளத்தை அதிகரித்தால்தான் இங்கு வறுமை குறையும். இந்தியாவின் வளங்கள் ஒரு கேக் என்று கருதிக்கொண்டால், அதை எல்லோருக்கும் பங்கீடு செய்து அளிக்க வேண்டும். கேக் பெரிதாக இருந்தால்தானே எல்லோருக்கும் நிறைய பங்கு கிடைக்கும்? அந்தக் கேக்கைப் பெரிதாக்கும் வேலையைத்தான் நான் செய்கிறேன்.''

இந்தியாவின் 36-வது பெரும் பணக்காரராக இருந்து, 62 வயதில் திடீர் மாரடைப்பால் ஆகஸ்ட் 14-ம் தேதி உயிரிழந்த ராகேஷின் வாழ்க்கையைப் படிப்பவர்கள், பணத்தின் முழுமையான மதிப்பையும் அர்த்தத்தையும் உணர்வார்கள்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

மும்பையில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ராஜஸ்தானி குடும்பத்தில், இன்கம்டாக்ஸ் அதிகாரியின் மகனாகப் பிறந்தவர் ராகேஷ். அப்பாவைத் தேடிவரும் நண்பர்கள் பங்குச்சந்தை பற்றிப் பேசும் விஷயங்கள் அவரை ஈர்த்தன. 10 ரூபாய்க்கு வாங்கும் ஒரு நிறுவனத்தின் பங்கு, சில வாரங்களில் 100 ரூபாய் மதிப்புக்கு உயர்வது அவருக்கு சாகசமாகத் தெரிந்தது. சி.ஏ முடித்தாலும் ஆடிட்டராக பிராக்டீஸ் செய்யவில்லை ராகேஷ். ‘‘என்ன செய்யப் போகிறாய்?’’ என்று அப்பா கேட்டபோது, ‘‘நான் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் போகிறேன்'' என்றார். அப்பா தடுக்கவில்லை. ‘‘நீ விரும்பியது போல செய். ஆனால், முதலீடு செய்ய நான் பணம் தர மாட்டேன்'' என்று சொல்லிவிட்டார். அப்போது ராகேஷ் 25 வயது இளைஞர்.

பங்குச்சந்தை என்றாலே சூதாட்டம் என நம்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராகேஷ், உறவினர் ஒருவரிடம் 5,000 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு 1985-ம் ஆண்டு பங்குச்சந்தைக்குள் நுழைந்தார். கடந்த வாரம் இறக்கும்போது அவரின் சொத்து மதிப்பு, 46,042 கோடி ரூபாய். ‘ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து ஓர் இளைஞன் தன் முயற்சியால் சில ஆண்டுகளில் இந்தியாவின் டாப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கலாம்' என்பதைச் சாத்தியமாக்கிய ராகேஷ், பல இளைஞர்களுக்குக் கனவு நாயகன்.

மும்பைப் பங்குச்சந்தையில் ‘பிக் புல்' என்று அடையாளம் சொல்லப்பட்டவர் ராகேஷ். பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்கிறது என்றால், ‘காளையின் ஆதிக்கம் இருக்கிறது' என்பார்கள். ஒரு தனிநபராக சிலர் செய்யும் முதலீடுகள் பலரையும் சந்தையை நோக்கி இழுக்கும். பங்குச்சந்தையை வளரச் செய்யும். அப்படிப்பட்டவராக இருந்தார் ராகேஷ். ஒரு நிறுவனத்தைப் பற்றிப் பலவிதங்களிலும் ஆராய்ந்து, நீண்ட சிந்தனைக்குப் பிறகே அதன் பங்குகளில் முதலீடு செய்வார். அவர் செய்யும் முதலீடு பல கோடிகளில் இருக்கும். பல சந்தர்ப்பங்களில் அவர் ரிஸ்க்கும் எடுத்திருக்கிறார். அப்படி அவர் முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு எல்லாமே வேகமாக உயர்ந்தது. அதனால், ராகேஷ் எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கினாலும், கண்ணை மூடிக்கொண்டு ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் அதைச் செய்தார்கள். இப்படிப் பங்குச்சந்தையை வளர்ச்சியை நோக்கி இழுத்துச் சென்ற காளை யாக அவர் இருந்தார்.

முதலீட்டுச் சாமர்த்தியம்தான் அவரை இந்தியாவின் பில்லிய னர்கள் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியது. ‘இந்தியாவின் வாரன் பஃபெட்' என்று அவரைச் சொல்வதை அவர் எப்போதும் விரும்பியதில்லை. ‘‘நான் யாருடைய பிரதியும் இல்லை. நான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா'' என்பார்.

வெறுமனே முதலீடு செய்வது, பணம் சம்பாதிப்பது என்று இருக்கும் ஒரு பணக்காரர் எப்போதும் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டுவிடுவார். ராகேஷ் அப்படி ஆகாததற்குக் காரணம், அவர் அப்பா. 2008-ம் ஆண்டு பில்லியனராக ஆனதும் பெருமையுடன் அப்பா முன்னால் போய் நின்றார் ராகேஷ். ‘‘நீ எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறாய் என்பது பெருமை இல்லை. இந்தச் சமூகத்துக்கு எவ்வளவு திருப்பிக் கொடுக்கிறாய் என்பதுதான் முக்கியம்'' என்றார் அப்பா. அந்த நிமிடத்திலிருந்து அறச்சிந்தனையுள்ள ஒரு கொடையாளி ராகேஷுக்குள் உதயமானார்.

தான் முதலீடு செய்து சேர்த்த பணத்தில் நான்கில் ஒரு பங்கை தன் வாழ்நாளுக்குள் அறச்செயல்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்ட இலக்கை அவர் கடந்த ஆண்டு நிறைவேற்றினார். கல்வி நிறுவனங்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவும் சிகிச்சையும் தரும் இல்லங்கள், இலவச சிகிச்சை தரும் கண் மருத்துவமனை, பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியல் அறிவூட்டும் சேவை என்று ஏராளமான விஷயங்களுக்கு அவர் நன்கொடை அளித்திருக்கிறார். கடந்த ஆண்டில் அவர் கொடுத்த நன்கொடைகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு நாளும் 13.69 லட்ச ரூபாயை அவர் அறப்பணிகளுக்குச் செலவிட்டிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான கோடிகளைச் சம்பாதித்தாலும், மனதளவில் அவர் ஒரு மிடில் கிளாஸ் மாதவனாகவே இருந்தார். கடந்த அக்டோபரில் பிரதமர் மோடியை ராகேஷ் சந்தித்தார். அப்போது அவர் அணிந்திருந்த தொள தொள வெள்ளைச் சட்டை சுருங்கியும் கசங்கியும் இருந்தது. அதைப் பற்றி சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமே எழுந்தது. ‘‘என்ன செய்யச் சொல்கிறீர்கள்? அயர்ன் செய்துதான் போட்டுக்கொண்டு போனேன். சட்டை கசங்கிவிட்டது. உடையில் என்ன மதிப்பு இருக்கிறது? நான் எப்போதும் இப்படித்தான் கேஷுவலாக இருப்பேன். பணம் என் வாழ்க்கைமுறையை மாற்றிவிடவில்லை. அதே கார், அதே வீடு, அதே விஸ்கி... எதுவுமே மாறவில்லை. ஒவ்வொரு ரூபாயும் என்னைப் பொறுத்தவரை மதிப்புள்ளது'' என்றார் ராகேஷ்.

பணத்தின் மதிப்பு சொன்ன பங்குச்சந்தைக் காளை!

ராகேஷின் ‘பணம்' பற்றிய ஒரு சொற்பொழிவு, எல்லோருக்குமான பால பாடம்.

‘‘வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்து கற்றுக்கொடுக்கும் பாடம், ‘பணம்தான் எல்லாமே' என்பதுதான். பணத்தைச் சிலர் நேசிக்கிறார்கள், சிலர் அதற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள், சிலர் அதை நன்கு பயன்படுத்துகிறார்கள், சிலர் வீணடிக்கிறார்கள், சிலர் அதற்காகச் சண்டை போடுகிறார்கள், சிலர் வெறுமனே ஆசைப்படுகிறார்கள்.

முதல் மில்லியனைச் சம்பாதிப்பது கடினம். இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது. மூன்றாவது மில்லியனைச் சம்பாதிப்பது அதைவிடச் சுலபம். இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை, எவ்வளவு பணம் நிறைவு தரும் என்பதற்கு முடிவான கணக்கு எதுவும் கிடையாது. பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளைத் தரலாம். கெட்ட விஷயம் என்ன என்றால், நீங்கள் போகும்போது அதை எடுத்துப் போக முடியாது.

என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்... தினமும் 25 சிகரெட் பிடிக்கிறேன், ஆறு பெக் விஸ்கி அடிக்கிறேன், உடற்பயிற்சி செய்வதில்லை. ஒரு பன்றிபோல சாப்பிடுகிறேன். பணத்தை அனுபவிக்க ஓர் எல்லை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இரவும் பகலும் உழைத்துச் சம்பாதித்த பணம் இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும் ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.

பணம் தலைமுறைகளைத் தாண்டி, நாடுகளைத் தாண்டி, கலாசாரங்களைத் தாண்டி, மதத்தைத் தாண்டி நிலைத்திருக்கும் விஷயம். வாழ்வில் பணத்துக்கு அர்த்தம் உண்டு. அது உங்களுக்குப் பொறுப்புணர்வையும் கூடுதலாகக் கொடுக்கிறது.

பணத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை; ஆனால், பணம் உங்களை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம். உங்களுக்குள் இருக்கும் மனித இயல்புகளை அது மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். உங்கள் குடும்பத்தை, நண்பர்களை, இளமைக்காலம் முதல் உங்களுடன் இணைந்து இருப்பவர்களை நீங்கள் நடத்தும் விதத்தை, உங்களிடம் சேரும் பணம் மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.''