நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

‘‘பழைய ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை சேகரிப்பதுதான் என் ஹாபி..!’’ சென்னையின் வித்தியாசமான மனிதர்!

சையத் கஸ்ஸீம்
பிரீமியம் ஸ்டோரி
News
சையத் கஸ்ஸீம்

‘‘தமிழ், இந்தி, குஜராத்தி, வங்காளம், உருது, இங்கிலீஷ், ஃபிரெஞ்ச், போர்ச்சுகீஷ் எனப் பல மொழிகளில் சர்ட்டிஃபிகேட்டுகளை வைத்திருக்கிறேன்.’’

ஸ்டாம்புகளை சேகரிப்பவர்கள், வெளி நாட்டு கரன்சிகளை சேகரிப்பவர்கள், பழங்காலத்து நாணயங்களை சேகரிப்பவர்களை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், பங்கு நிறுவனங்கள் வெளியிட்ட ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை மட்டும் சேகரிப்பவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். காரணம், மிக மிகக் குறைவானவர்களே ஷேர் சர்ட்டிஃபி கேட்டுகளை சேகரித்து வருகின்றனர்.

ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளைத் தேடித் தேடி சேகரிப்பதற்கு ‘ஸ்க்ரிப்போஃபில்லி’ (Scripophily) என்று பெயர். இதில், இந்தியாவிலேயே மிக முக்கியமானவராக இருக்கிறார் சென்னையில் வசிக்கும் சையத் கஸ்ஸீம் (Syed Cassim). ஷேர் சர்ட்டிஃபிகேட்டு களை சேகரிக்கும் பழக்கத்தை உலக அளவில் ஊக்குவிக்கும் இன்டர்நேஷனல் பாண்ட் அண்ட் ஷேர் சொஸைட்டி (International Bond and Share Society - https://scripophily.org) என்ற அமைப்பின் இந்தியப் பிரதிநிதியாக இருக்கிறார். 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை வைத்திருக்கும் அவரை சந்தித்தோம். அவர் தன் அனுபவங்களை நம்மிடம் சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார். ‘‘குஜராத்தின் கட்ச் பகுதியில் இருந்து தொழில் செய்வதற்காக சென்னைக்கு வந்தவர்கள் நாங்கள். ஆனால், 150 ஆண்டுகளாக சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டோம். எங்கள் குடும்பம் தொழில் குடும்பம் என்பதால், சிறுவயதிலேயே பங்குச் சந்தை பற்றி எனக்குத் தெரியும். 40 ஆண்டுகளாக பல ஐ.பி.ஓ-களில் முதலீடு செய்து, பங்குகளை வாங்கி பல மடங்கு லாபம் பார்த்திருக்கிறேன்.

சையத் கஸ்ஸீம்
சையத் கஸ்ஸீம்

பங்குச் சந்தை முதலீட்டில் எனக்கிருந்த ஆர்வம், பிற்பாடு பங்குப் பத்திரங்கள் என்று சொல்லப்படும் ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகள் மீது திரும்பியது. உலக அளவில் 16-ம் நூற்றாண்டு தொடங்கி பல நிறுவனங்கள் தொழில் செய்வதற்கான மூலதனத்தைத் திரட்டு வதற்காக பங்குகளை வெளியிடும்போது ஷேர் சர்ட்டிஃபிகேட்டு களையும் வெளியிடும். இந்த ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகள் தனித் தன்மையுடன் கூடியதாக இருக்கும்.

அந்தக் காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பங்குகளில் வாங்க முடியும். காரணம், முதலீட்டுத் தொகை மிக மிக அதிகமாக இருக்கும். தவிர, சில ஆயிரம் ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை மட்டுமே வெளியிடுவார்கள். அந்த சர்ட்டிஃபிகேட்டுகளில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் கையெழுத்துப் போட்டிருப்பார். எந்த ஆண்டில், எவ்வளவு பணம் திரட்டப்படுகிறது என்கிற விவரங்கள் எல்லாம் அதில் இருக்கும். சுருக்கமாக, ஒவ்வொரு ஷேர் சர்ட்டிஃபிகேட்டின் பின்னாலும் சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கும்.

உலக அளவில் 150, 200 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட பல நாடுகளின் ஷேர் சர்ட்டிஃபி கேட்டுகளை வாங்கலாம் என்றாலும், நம் நாட்டில் வெளியிடப்பட்ட ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை மட்டுமே நான் வாங்குவேன். அதிலும் 1948-க்கு முன்பு வெளியிடப்பட்ட ஷேர் சர்ட்டிஃபிகேட்டு களைத்தான் நான் வாங்குவேன். என்னிடம் இருக்கும் ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளில் முக்கியமானது எனில், ஈஸ்ட் இந்தியா கம்பெனி 1787-ல் வெளியிட்ட ஷேர் சர்ட்டிஃபிகேட்டை சொல்வேன். 1700, 1800-களில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இந்த நிறுவனம் ஆங்கிலேயர்கள் உலகம் முழுக்க வியாபாரம் செய்ய அனுமதி தந்திருந்தது. ஒரு காலத்தில் உலகத்தின் மொத்த வியாபாரத்தில் 50% இந்த நிறுவனத்திடம்தான் இருந்தது. மிக அபூர்வமாக கிடைக்கும் இந்த கம்பெனியின் ஷேர் சர்ட்டிஃபிகேட்டைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன்.

‘‘பழைய ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை சேகரிப்பதுதான் என் ஹாபி..!’’
சென்னையின் வித்தியாசமான மனிதர்!

ஓரியன்டல் பேங்க் கார்ப்ப ரேஷன் என்கிற வங்கி 1852 வெளியிட்ட ஷேர் சர்ட்டி ஃபிகேட் என்னிடம் இருக்கிறது. 1842-ல் மும்பையில் பேங்க் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா என்கிற பெயர் இந்த வங்கியானது முதலில் தொடங்கப்பட்டது. 1845-ம் ஆண்டிலேயே இந்த வங்கியின் தலைமையகத்தை லண்டனுக்கு மாற்றிவிட்டார்கள். 1850-களில் இந்த வங்கி மிக முக்கியமான வங்கியாக இருந்தது. இந்தியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா எனப் பல நாடுகளில் இந்த வங்கி கிளைகளைத் தொடங்கியது. 1884-ம் ஆண்டில் காப்பிப் பயிர்களை ஒருவிதமான பூச்சி தாக்கி, பெரும் சேதத்தை விளைவித்தது. இதனால் 1892-ம் ஆண்டு இந்த வங்கி மூடப்பட்டது.

இப்போது இருக்கும் தென்னக ரயில்வேவுக்கு முன்னோடி என்றால், 1840-களில் செயல்பட்ட தி மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தான். இந்த கம்பெனி 1852-ம் ஆண்டு பங்குகளை வெளியிட் டது. ஒரு பங்கை 20 பவுண்டுக்கு அப்போது வெளியிட்டார்கள். இதன் மூலம் கிடைத்த பணத் தைக் கொண்டு சென்னை ராய புரத்திலிருந்து ஆற்காடுக்கு ரயில் பாதை அமைத்திருக்கிறார்கள். தென் தமிழகத்துக்கும், பெங்களூருக்கும் ரயில் பாலம் அமைக்கும் பணிகள் இந்தப் பணத்தைக் கொண்டுதான் செய்யப்பட்டன.

சென்னையில் பக்கிம்ஹாம் கால்வாய் அமைக்க மெட்ராஸ் இரிகேஷன் & கெனால் கம்பெனி என்கிற பெயரில் பங்கு வெளி யிட்டிருக்கிறார்கள். 1850-ல் இந்தப் பங்கு வெளியிடப்பட்டது. ‘கால்வாய் வெட்டும் வேலை எல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை; அதைத் தனியாரிடம் தரக் கூடாது என சர்ச்சை கிளம்பியதால், 10 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள். வைரம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டு வதற்காக சென்னையில் இருந்து மெட்ராஸ் பிரசிடென்ஸி டைமண்ட் ஃபீல்ட் லிமிடெட் என்கிற பெயரில் பங்கு வெளி யிடப்பட்டது. சென்னையில் வைரம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆந்திரா, கர்நாடகாவில் தங்கச் சுரங்கம் தோண்ட சென்னையில் இருந்து பங்குகளை வெளி யிட்டிருக்கலாம் என்கிறார்கள்.

சென்னை அண்ணா சாலையில் தற்போது ஸ்பென்ஸர் பிளாசா இருக்கும் இடத்தில்தான் ஸ்பென்ஸர் & கம்பெனி லிமிடெட் என்கிற நிறுவனம் இருந்தது. இந்த நிறுவனம் 1887-ல் பங்குகளை வெளியிட்டது. இந்த நிறுவனம்தான் பங்கு விலையை ரூபாயில் குறிப்பிட்டு இருக்கிறது. ஒரு பங்கு விலை ரூ.100 என்கிற கணக்கில் ரூ.25 லட்சத்தை இந்த நிறுவனம் திரட்டியிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் சொந்தக் காரரிடம், ‘ஸ்பென்ஸர் நிறுவனம் 1887-ல் வெளியிட்ட ஷேர் சர்ட்டிஃபிகேட் இருக்கிறதா’ என்று கேட்டேன். ‘ஒன்றே ஒன்று மட்டும் இருக்கிறது’ என்ற வரிடம், ‘எவ்வளவு ரூபாய் வேண்டும்’ என்று கேட்டேன். ‘ரூ.8,000 ஆகும்’ என்றார். உடனே வாங்கிவிட்டேன்’’ என்று சொல்லும் சையத் கஸ்ஸீம் தோல் மற்றும் லினன் துணியில் தயாரித்து வெளியிடப்பட்ட ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளையும் தன்னுடைய கலெக்‌ஷனில் வைத்திருக்கிறார்.

‘‘தமிழ், இந்தி, குஜராத்தி, வங்காளம், உருது, இங்கிலீஷ், ஃபிரெஞ்ச், போர்ச்சுகீஷ் எனப் பல மொழிகளில் அச்சிடப் பட்ட ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை வைத்திருக்கிறேன். பிர்லா நிறுவனம் வெளியிட்ட ஒரு ஷேர் சர்ட்டிஃபிகேட்டில் ஜி.டி. பிர்லாவின் கையெழுத்து இருக் கிறது. இதை நான் வைத்திருக்கும் ஷேர் சர்ட்டிஃபிகேட்டில் முக்கியமானதாகக் கருதுகிறேன்’’ என்றார் சையத் கஸ்ஸீம்.

‘‘பழைய ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை சேகரிப்பதுதான் என் ஹாபி..!’’
சென்னையின் வித்தியாசமான மனிதர்!

தன்னிடம் இருக்கும் ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளில் 25-க்கும் மேற்பட்ட முக்கியமான ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை சென்னை மியூசியத்துக்கு அன்பளிப்பாக தந்திருக்கிறார். தன்னிடம் உள்ள பழைமையான ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகள் ஒன்றிரண்டை அவ்வப்போது தனக்குப் பிடித்தவர்களுக்கும் பரிசாக அளிக்கிறார்.

‘‘உலக அளவில் ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை சேகரிப் பவர்கள் சுமார் 40,000 பேர் இருக்கிறார்கள். இந்த ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகளை வாங்கவும் விற்கவும் ஐரோப்பாவில் பல இடங்களில் ஏலம் விடப்படும் மையங்கள் உள்ளன. 1665-ல் ‘Coppagnie des Indes Orientales’ என்கிற நிறுவனம் வெளியிட்ட ஷேர் சர்ட்டிஃபிகேட் 1.20 லட்சம் யூரோவுக்கு விலைபோனது. உலக அளவில் ரஷ்யா மற்றும் சீனாவில் வெளியிட்ட நிறுவனங்களின் ஷேர் சர்ட்டிஃபிகேட்டுகள் நல்ல லாபத்தில் விலை போகின்றன.

நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த ‘ஸ்க்ரிப்போஃ பில்லி’ மக்களிடம் பிரபலமடைந்து வருகிறது. இந்த ‘ஸ்க்ரிப்போஃபில்லி’யை இந்தக் காலத்து இளைஞர் களிடம் பிரபலமடையச் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். இந்தக் காலத்து இளைஞர்கள் கிரிப்டோகரன்சி போன்றவற்றில் பணம் போடுவதற்குப் பதிலாக இது மாதிரியான பழைமையான பங்குப் பத்திரங்களை வாங்கி வைத்து, பிற்பாடு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்’’ என்றார்.

வித்தியாசமான மனிதர், வித்தியாசமான பழக்கம்..!