
கம்பெனி பயோடேட்டா
இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் கம்பெனி பயோடேட்டா ஃபெடரல் பேங்க் லிமிடெட்.
நிறுவனத்தின் வரலாறு...
1931-ம் ஆண்டில் திருவாங்கூர் ஃபெடரல் வங்கி லிமிடெட் என்ற பெயரில் கேரளாவில் உள்ள திருவல்லா எனும் இடத்துக்கு அருகேயிருக்கும் நெடும்புரம் என்னும் ஊரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி இது.
1944-ம் ஆண்டில் கே.பி ஹோர்மிஸ் என்பவர் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து, இந்த வங்கியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவிலான பங்குகளைக் கையகப்படுத்தினர். 1945-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதலீடு திரட்டப்பட்ட பங்குகளின் அளவு ரூ.71,000 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதே ஆண்டில் இந்த வங்கியின் பதிவு அலுவலகம் அலுவா எனும் இடத்துக்கு மாற்றப்பட்டது. மேலும், அலுவாவில் தன்னுடைய முதல் கிளையையும் இந்த வங்கி ஆரம்பித்தது.
1946-ல் அங்காமாலி எனும் இடத்தில் இரண்டாவது கிளையை ஆரம்பித்த நிலையில், இந்த வங்கியின் பெயர் 1947-ம் ஆண்டில் ‘தி ஃபெடரல் பேங்க் லிமிடெட்’ என்று மாற்றம் செய்யப்பட்டது. 1949-ம் வருடத்திய வங்கி நிறுவனங்களுக்கான சட்டத்தின் 22-வது ஷரத்தின்கீழ் 1959-ம் ஆண்டில் ஒரு வங்கியாக இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டது. 1964-ம் ஆண்டில் ‘தி சாலக்குடி பப்ளிக் பேங்க் லிமிடெட்’, ‘தி கொச்சின் யூனியன் பேங்க் லிமிடெட்’, ‘தி ஆலப்பீ பேங்க் லிமிடெட்’ என்ற மூன்று வங்கிகளைக் கையகப்படுத்தியது இந்த நிறுவனம். 1965-ம் ஆண்டில் ‘தி செயின்ட் ஜார்ஜ் யூனியன் பேங்க்’, புத்தென்பள்ளி பேங்க்’, 1968-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தைச் சார்ந்த ‘தி மார்த்தாண்டம் கமர்ஷியல் பேங்க்’ போன்ற வங்கிகள் ஃபெடரல் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
1973-ல் தொடர்ந்து கிளை விரிவாக்கங்களை மேற்கொண்ட இந்த நிறுவனம், 1976-ம் ஆண்டில் 276 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வந்தது. 1989-ம் ஆண்டில் மெர்ச்சன்ட் பேங்கிங் சேவையை ஆரம்பித்தது இந்த நிறுவனம்.

பங்குச் சந்தையில்...
1992-ம் ஆண்டில் ரூ.1,000 கோடி என்கிற அளவிலான டெபாசிட் இலக்கைத் தொட்டது இந்த வங்கி. 1994-ம் ஆண்டில் பொதுப் பங்குகளை வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 1997-ம் ஆண்டில் எர்ணாகுளத்தில் முதல் ஏ.டி.எம்மை நிறுவிய இந்த நிறுவனம், 1999-ம் ஆண்டில் தன்னுடைய 400-வது கிளையை கொல்கொத்தாவில் நிறுவியது. 2001-ல் கணினிமயமாக்கல் செய்யத் தொடங்கிய இந்த வங்கி, 2002-ம் ஆண்டில் தன்னுடைய 412 கிளைகளையும் கணினிமயமாக்கியது. 2003-ம் ஆண்டில் இன்டர்நேஷனல் டெபிட் கார்டுகளை அறிமுகப்படுத்திய இந்த வங்கி, 2004-ம் ஆண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்தது.
2004-ம் ஆண்டில் 2:1 என்ற அளவிலான போனஸ் பங்குகளை வழங்கிய இந்த வங்கி, 500 கிளைகள் என்கிற இலக்கை 2006-ம் ஆண்டில் எட்டியது. இதே ஆண்டில் ஐ.டி.பி.ஐ மற்றும் போர்ட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆயுள் காப்பீட்டுக்கான ஒரு கூட்டு முயற்சியை செய்ய ஆரம்பித்தது. 2007-ம் ஆண்டில் முழு அளவிலான டேட்டா சென்டரை நிறுவிய இந்த வங்கி, பினாக்கிள் எனும் சென்ட்ரலைஸ்டு பேங்கிங் சொல்யூஷனைத் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் அறிமுகப்படுத்தியது.
2008-ம் ஆண்டில் 1:1 என்ற அளவிலான உரிமைப் பங்குகளை வெளியிட்ட இந்த வங்கி, இதே ஆண்டில் தன்னுடைய முதலாவது அயல்நாட்டுத் தொடர்பு அலுவலகத்தை அபுதாபியில் ஆரம்பித்தது. 2008-ம் ஆண்டில் இந்த வங்கியின் கிளைகள் 600 என்ற இலக்கைத் தாண்டியது. 2009-ம் ஆண்டில் இந்த வங்கியின் ஒட்டு மொத்த வர்த்தகம் ரூ.50,000 கோடி என்ற இலக்கை எட்டியது.
2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருவல்லா முத்தூர் எனும் இடத்தில் தன்னுடைய ஆயிரமாவது கிளையைத் தொடங்கியது. டிசம்பர் 2012-ல் இந்த வங்கியில் பணிபுரியும் பணி யாளர்களின் எண்ணிக்கை 10,000 என்ற இலக்கைத் தாண்டியது.
மொத்த வர்த்தகம் ரூ.2 லட்சம் கோடி...
2012-13-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி என்ற மொத்த வர்த்தக இலக்கை எட்டியது இந்த வங்கி. 2013-14 நிதியாண்டின் இறுதியில் 1,174 கிளைகள் என்ற இலக்கை எட்டிய இந்த வங்கி, மார்ச் 2018-ல் ரூ.2 லட்சம் கோடி அளவிலான மொத்த வர்த்தக இலக்கைத் தாண்டியது.
மார்ச் 2019-ல் 1,251 கிளைகள், 1,669 ஏ.டி.எம்-கள் மற்றும் 269 கேஷ் ரீசைக்ளர்கள் போன்றவற்றுடன் செயல்பட்டுவந்த இந்த வங்கி, தற்சமயம் (நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு இறுதி நிலவரப்படி) 1,333 கிளைகள் மற்றும் 1,896 ஏ.டி.எம் மற்றும் கேஷ் ரீசைக்ளர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
வங்கியின் சிறப்பான சேவைகள்...
டிஜிட்டல் பேங்கிங் யூனிட், அயல்நாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இங்கே அவர்கள் குடும்பத்தினர் சார்பாக செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தும் வசதி, வணிகம் செய்பவர்கள் ஜி.எஸ்.டி-யை செலுத்தும் வசதி, கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகள், ஃபின்டெக் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், டிஜிட்டல் பர்சனல் லோன்கள் வழங்குதல் உள்ளிட்ட பல டிஜிட்டல் சார்ந்த செயல்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது இந்த நிறுவனம்.
ஃபெட்பேங்க் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தில் 73.22% அளவிலான முதலீட்டையும், ஏஜஸ் ஃபெடரல் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்னும் நிறுவனத்தில் 26% அளவிலான முதலீட்டையும், ஈக்யுரஸ் கேப்பிடல் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தில் 19.79% அளவிலான முதலீட்டையும் செய்துள்ளது இந்த வங்கி.


ரிஸ்க்குகள் என்னென்ன?
வங்கித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்துமே இந்த நிறுவனத்துக்கும் உண்டு. வட்டிவிகித மாறுதல்கள், நவீன தொழில்நுட்பம் சார்ந்த போட்டி, ஏனைய வங்கிகள் தரும் கடுமையான போட்டி, வாடிக்கையாளர்களின் மாறிவரும் வங்கிச்சேவை குறித்த எதிர்பார்ப்புகள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.
வங்கித்துறை என்பது பொதுவாக பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே இயங்கும் துறை ஆகும். வியாபார ரீதியான வளர்ச்சி மற்றும் வாராக்கடன்களின் அளவு என்ற இரண்டுமே பொருளாதாரத்தின் செயல்பாட்டை அடிப்படையாகக்கொண்டே இருக்கக்கூடிய விஷயங்கள். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை நன்கு பாதிக்கவே செய்யும்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.
பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்தபின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பது நல்லது.
கடன் வழங்கிய விவரங்கள்..!
டிசம்பர் 31, 2022 நிலவரப்படி ஃபெடரல் வங்கி வழங்கியுள்ள கடன்களில் டாப் 10 செக்டார்களின் பங்களிப்பு (மொத்த கடனில் அந்தந்தத் தொழில் பிரிவின் பங்களிப்பு சதவிகிதம்)
1. என்.பி.எஃசிக்கள்: 6.41%, 2. ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள்: 4.42%, 3. ரியல் எஸ்டேட் பிசினஸ்: 2.34%, 4. உணவுப்பொருள்கள்: 2.25%, 5. டெக்ஸ்டைல்ஸ் (சணல் மற்றும் நார்கள் உள்ளிட்டவை): 2.07%, 6. வங்கிகள்: 1.85%, 7. கெமிக்கல்கள்: 1.73%, 8. நிலக்கரி/பெட்ரோலியம்/நியூக்ளியர் ப்யூயல்: 1.50%, 9. தனிநபர் உபயோகம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்: 1.29%, 10. ஒப்பந்ததாரர்கள்: 1.27%.