பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பேங்க் ஆஃப் பரோடா!

பேங்க் ஆஃப் பரோடா
பிரீமியம் ஸ்டோரி
News
பேங்க் ஆஃப் பரோடா

கம்பெனி பயோடேட்டா

பரோடா நகரத்தில் 1908-ம் ஆண்டில் சிறிய அலுவலகமாக ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு மும்பையில் கார்ப்பரேட் அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவருகிற வங்கிதான் பேங்க் ஆஃப் பரோடா.

வங்கி வளர்ந்த கதை...

1908-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி, அன்றைய பரோடாவின் ராஜாவாகிய மஹாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, 1969-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிதான் பேங்க் ஆஃப் பரோடா. இந்த வங்கியின் அலுவலகம் பரோடாவில் உள்ள மாண்ட்வி எனும் இடத்தில் நிறுவப்பட்டது. 1937-ம் ஆண்டு கொல்கத்தாவில் தன்னுடைய முதலாவது கிளையை ஆரம்பித்தது பேங்க் ஆஃப் பரோடா. பின்னர், 1949-ம் ஆண்டில் டெல்லியில் அடுத்த கிளையைத் தொடங்கிய இந்த வங்கி, 1953-ம் ஆண்டில் கென்யாவில் உள்ள மோம் பாசாவிலும், 1957-ல் லண்டனிலும் அயல் நாட்டுக் கிளைகளைத் தொடங்கியது.

1968-ம் ஆண்டில் விவசாயத்துக்கு எனத் தனிப்பட்ட கடன் வழங்கும் பிரிவை ஆரம்பித்தது இந்த வங்கி. 1969-ம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பட்டபோது இந்த வங்கியின் பெயர் ‘தி பேங்க் ஆஃப் பரோடா லிமிடெட்’ என்பதில் இருந்து ‘பேங்க் ஆஃப் பரோடா’ என்று மாற்றம் செய்யப்பட்டது.

1976-ம் ஆண்டில் இந்த வங்கி 19 வட்டார கிராமப்புற வங்கிகளை (Regional Rural Banks) தொடங்கியது. 1996-ம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் மத்தியில் முதல் முறையாக ஐ.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது இந்த வங்கி.

2003-ம் ஆண்டில் ‘பரோடா ஸ்வராஜ்கர் விகாஸ் சன்ஸ்தான்’ எனும் கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிகளை வழங்கும் நிறுவனத்தை நிறுவியது. 2004-06 கால கட்டத்தில் ஆயுள் மற்றும் பொது காப்பீடுகளை வழங்கும் நிறுவனங்களான ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பேங்க் அஸ்யூரன்ஸை வழங்குவதற்கான பணிகளைத் தொடங்கியது.

2005-ம் ஆண்டில் ஒரு புதிய கார்ப்பரேட் அடையாளமான ‘பரோடா சன்’ எனும் அடையாளத்தை உருவாக்கியது இந்த வங்கி. அதே ஆண்டில் ஹெவ்லெட் பேக்கார்ட் நிறுவனத்தைத் தன்னுடைய டெக்னாலஜி பார்ட்னராக இணைத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட இந்த நிறுவனம், அதிநவீன குளோபல் டேட்டா சென்டர் ஒன்றையும் அதே ஆண்டில் நிறுவியது.

2006-ம் ஆண்டில் புதுமையான முயற்சியாகத் தொழிற்சாலைகளில் உற்பத்தி வசதி அசெம்ப்ளி லைனில் செய்யப்படுவதைப் போல் சில்லறைக் கடன்கள் வழங்கும் பிரிவை மாற்றி அமைத்தது இந்த வங்கி. இதே ஆண்டில்தான் பேங்க் ஆஃப் பரோடா கோர் பேங்கிங் தீர்வையும் இன்டர்நெட் பேங்கிங் வசதியையும் அறிமுகப்படுத்தியது. மேலும், எஸ்.எம்.இ-களுக்கு கடன்களுக்கான தீர்வுகளையும் அசெம்ப்ளி லைன் என்ற அமைப்பு ரீதியாக இதே ஆண்டில் மாற்றி அமைத்தது இந்த வங்கி. 2006-09 காலகட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுடன் ஸ்ட்ராட்டஜிக் உறவுகளை விநியோகம் செய்ய ஏற்படுத்தியது.

2007-ம் ஆண்டில் ‘ஹைடெக்-ஹை டச் கிளைகள்’ என்ற நடைமுறையின்கீழ் இளைஞர்களுக்கென்றே பிரத்யேகமான அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையிலான கிளைகளை நிறுவியது. இதே ஆண்டில் தன்னுடைய ஒட்டுமொத்த ஏ.டி.எம் நெட்வொர்க்கையும் 24 மணி நேரமும் செயல்படும் அளவில் இணைத்தது. மேலும் தன்னுடைய நிறுவன ரீதியான சமூகப் பொறுப்பை சிறப்பாகச் செய்யும் பொருட்டு ‘பரோடா கிராமின் பரமார்ஷ் கேந்திரா’ எனும் அமைப்பை நிறுவியது. மேலும், இந்தியா இன்ஃபோ லைன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ஆன்லைன் பங்கு வர்த்தகத்துக்கான வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஆரம்பித்தது இந்த நிறுவனம். இதே ஆண்டில் ‘பரோடா பயோனிர் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்’ என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்தது.

பேங்க் ஆஃப் பரோடா!

மாற்றங்களும் ஏற்றங்களும்...

2009-ம் ஆண்டில் நூறு சதவிகித கோர்-பேங்கிங் வசதிக்கு தன்னுடைய செயல்பாட்டை மாற்றியமைத்துக் கொண்டதன் மூலம் இந்தியாவின் எந்த மூலையில் எந்த நேரத்திலும் வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பை செயல்படுத்த ஆரம்பித்தது. 2013-ம் ஆண்டில் தன்னுடைய நூறாவது அயல்நாட்டுக் கிளையைத் துபாயில் தொடங்கியது இந்த நிறுவனம். மேலும், விவசாயத்துக்கான கடன் வழங்கும் பிரிவை ஏற்கெனவே சில்லறை மற்றும் எஸ்.எம்.இ கடன் வழங்கும் நடைமுறையில் அறிமுகப்படுத்தப்பட்ட லோன் பேக்டரி என்ற நடைமுறையின் கீழ் ஒரு பைலட் புராஜெக்ட்டாகக் கொண்டு வந்தது. மேலும், இதே ஆண்டில் இ-லாபி எனும் நடைமுறையின்கீழ் 24x7 பேங்கிங் வசதியை ஒரே கூரையின்கீழ் கொண்டுவந்தது. 2014-ம் ஆண்டில் பரோடா ஆதர்ஷ் கிராமின் கிளை எனும் விவசாயிகளை இணைத்துக்கொண்டு செயல்படும் வகையில் கிராமப்புற கிளைகளைத் தொடங்கியது.

2014-ம் ஆண்டில் 5,000-க்கும் மேற்பட்ட கிளைகள், 1,250-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்-கள் மற்றும் 25 நாடுகளில் செயல்பாடு என்ற நிலையை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா. 2019-ம் ஆண்டில் இந்த வங்கியுடன் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி என்ற இரண்டு வங்கிகளும் முழுமையாக இணைக்கப்பட்டன. இதே ஆண்டில் ‘பரோடா கிசான்’ என்ற மொபைல் போன் ஆப்பை பேங்க் ஆஃப் பரோடா அறிமுகப் படுத்தியது.

மேலும், இதே ஆண்டில்தான் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக் கான வங்கிச் சேவைகளை வழங்க ஆரம்பித்தது பேங்க் ஆஃப் பரோடா. 2020-ம் ஆண்டில் பரோடா இன்ஸ்ட்டா ஸ்மார்ட் டிரேட் என்ற வர்த்தக நிறுவனங்களுக்கு (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் செய்யும்) உதவும் வகையிலான பல்வேறு வசதிகள் கொண்ட தீர்வை (சாஃப்ட்வேர் வாயிலாக) வழங்க ஆரம்பித்தது பேங்க் ஆஃப் பரோடா. 2021-ம் ஆண்டில் ‘பாப் வேர்ல்டு’ எனும் ஸ்மார்ட் போன்களுக்கான ஆப்பை அறிமுகம் செய்தது. ஆகஸ்ட் 2021-ல் ‘பாப் பெனிஃபிட்’ எனும் இளைஞர் களுக்கான வசதி அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த ஆப் 28 மில்லியன் பயனாளர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

நவம்பர் 2021 நிலவரப்படி, டிஜிட்டல் வர்த்தகம் என்ற அளவீட்டில் பார்த்தால், டெபிட் கார்டுகள் வழங்குவதில் அகில இந்திய ரீதியாக இரண்டாவது நிலையிலும், யு.பி.ஐ வாயிலாக பணப் பரிவர்த்தனை செய்வதில் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது இந்த வங்கி. இந்தியா பர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (44% முதலீட்டுடனான கூட்டணி), பாப் ஃபைனான்ஷியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (100% அளவிலான துணை நிறுவனம்), பரோடா அஸெட் மேனேஜ் மென்ட் இந்தியா லிமிடெட் (100% அளவிலான துணை நிறுவனம்), இந்தியா இன்ஃப்ராடெட் லிமிடெட் (40.99% அளவிலான முதலீட்டுடனான கூட்டணி), பரோடா குளோபல் ஷேர்டு சர்வீசஸ் லிமிடெட் (100% துணை நிறுவனம்), பாப் கேப்பிடல் மார்க்கெட்ஸ் லிமிடெட் (100% துணை நிறுவனம்) போன்ற நிறுவனங்களைத் தன்னுடைய உள்நாட்டுத் துணை நிறுவனங் களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பேங்க் ஆஃப் பரோடா (உகாண்டா) லிமிடெட், பேங்க் ஆஃப் பரோடா (கென்யா) லிமிடெட் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (யுகே) லிமிடெட் என்ற மூன்று நிறுவனங்களை அயல்நாட்டில் தன்னுடைய துணை நிறுவனங்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த வங்கி.

பேங்க் ஆஃப் பரோடா!
பேங்க் ஆஃப் பரோடா!

ரிஸ்க்குகள் என்னென்ன?

வங்கித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். பொதுவாக வங்கிகளின் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் வாராக்கடன் என்ற மூன்றுமே முழுக்க முழுக்க பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கக் கூடியவை ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அந்த நிலை இந்த வங்கியின் செயல்பாட்டைக் கணிசமாகப் பாதிக்கும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!