
கம்பெனி பயோடேட்டா
இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோ டேட்டா கோதாவரி பவர் & இஸ்பாட் லிமிடெட். இது ராய்ப்பூரைச் சார்ந்த ஹீரா (HIRA) குழுமத்தைச் சார்ந்த நிறுவனமாகும்.
நிறுவனத்தின் உற்பத்தி...
1999-ம் ஆண்டில் ஒரு ஒருங்கிணைந்த ஸ்டீல் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக நிறுவப்பட்டது. இன்றைக்கு கோதாவரி பவர் நிறுவனம் மைல்டு ஸ்டீல் வயர் உற்பத்தியில் அனைத்து படிநிலைகளையும் சொந்த மாகச் செய்துகொள்ளும் ஒரு நிறுவனமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் உற்பத்தி படிநிலைகளில் செயல்படும்போது ஸ்பாஞ்ச் அயர்ன், பில்லட்ஸ், ஃபெரோ அலாய்ஸ், மின்சாரம், வயர் ராடுகள் ஸ்டீல் வயர்கள், ஆக்சிஜன் வாயு, ஃப்ளை ஆஷ் செங்கல்கள் மற்றும் அயர்ன் ஓர் (Iron ore) பில்லட்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. கோதாவரி பவர் & இஸ்பாட் நிறுவனம் தன் சொந்த உபயோகத்துக்கான அளவில் இரும்புத்தாது சுரங்கங்களுக் கான அனுமதியைப் பெற்றுள்ளது. இதனால் மூலப்பொருள்கள் முதல் இறுதிவடிவ தயாரிப்பு வரை யிலான ஒருங்கிணைந்த உற்பத்தி வசதியைக் கொண்ட நிறுவனமாகத் திகழ்கிறது.
கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி ஆண்டொன்றுக்கு 3.05 மில்லியன் டன் அளவிலான இரும்புத்தாது எடுக்கும் சுரங்க வசதியையும், ஆண்டொன்றுக்கு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான பெல்லட் உற்பத்தி வசதியையும், ஆண்டொன்றுக்கு 0.5 மில்லியன் மெட்ரிக்டன் அளவிலான ஸ்பாஞ்ச் அயர்ன் உற்பத்தி வசதியையும், 73 மெகாவாட் அளவிலான மின்சார உற்பத்தி நிலையங் களையும், ஆண்டொன்றுக்கு 16,500 மெட்ரிக் டன் அளவி லான சிலிகோ மேங்கனீஸ் உற்பத்தி வசதியையும், ஆண்டொன்றுக்கு 0.4 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான ரோலிங் மில் மற்றும் வயர் ராடுகள் உற்பத்தி வசதியையும், ஆண்டொன்றுக்கு 0.4 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான ஸ்டீல் மெல்ட்டிங் ஷாப் /பில்லட் உற்பத்தி வசதியையும் தன் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியின் அளவாகக்கொண்டிருக்கிறது.

நிறுவனத்தின் வளர்ச்சி...
1999-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். 2001-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 1,50,000 மெட்ரிக் டன் என்ற அளவிலான ஸ்பாஞ்ச் அயர்ன் உற்பத்தி வசதி ஒன்றை நிறுவியது. 2002-ம் ஆண்டில் சொந்த உபயோகத்துக்காக ஒரு மின் உற்பத்தி வசதியை நிறுவிய இந்த நிறுவனம், 2003-ம் ஆண்டில் ஸ்டீல் பில்லட்கள் உற்பத்தி வசதி ஒன்றை நிறுவியது. 2004-ம் ஆண்டில் ஸ்பாஞ்ச் அயர்ன், ஸ்டீல் பில்லட் மற்றும் சொந்த உபயோகத்துக்கான மின் உற்பத்தி வசதி என்ற மூன்றையும் விரிவாக்கம் செய்ய ஆரம்பித்தது. இதே ஆண்டில் ஃபெரோ அலாய்ஸ் மற்றும் கடினரக ஸ்டீல் வயர்களை உற்பத்தி செய்யும் வசதியை நிறுவியது. 2005-ல் விரிவாக்கங்களை நிறைவு செய்த இந்த நிறுவனம் ஹார்ட் பிளாக் வயர்கள் உற்பத்தியை ஆரம்பித்தது.
2006-ம் ஆண்டில் பொதுப் பங்குகளை வெளி யிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதே ஆண்டில் ஃபெரோ அலாய்ஸ் உற்பத்தியை ஆரம்பித்த இந்த நிறுவனம் ஸ்பாஞ்ச் அயர்ன், ஸ்டீல் பில்லட் மற்றும் மின் உற்பத்திக்கான இரண்டாவது விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கியது. 2008-ம் ஆண்டில் புதிய பெல்லட் உற்பத்தி வசதியை நிறுவுவதற்காக க்யூ.ஐ.பி மூலம் 100 கோடி ரூபாயைத் திரட்டி இந்த வசதிகளில் முதலீடு செய்தது. இதே ஆண்டில் ஆர்டெண்ட் ஸ்டீல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் 75 சதவிகித பங்குகளைக் கையகப்படுத்தியது.
2010-ம் ஆண்டில் 0.6 மில்லியன் அளவிலான பெல்லட் உற்பத்தி வசதியை ஆரம்பித்த இந்த நிறுவனம், இதே ஆண்டில் அரி டோங்ரி எனும் இடத்தில் தாதுப் பொருள்களுக்கான சுரங்கம் தோண்டுதலை ஆரம்பித்தது. 2011-ம் ஆண்டில் ஹீரா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆர்.ஆர் இஸ்பத் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதே ஆண்டில் ஆர்டெண்ட் ஸ்டீல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 0.6 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான ஸ்டீல் பில்லட்கள் உற்பத்தியை ஆரம்பித்தது கோதாவரி பவர் & இஸ்பத் நிறுவனம்.
2013-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 1.5 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான பெல்லட்டைசேஷன் உற்பத்தி வசதியொன்றை நிறுவியது. 50 மெகாவாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யும் தெர்மல் பவர் பிளான்ட்டை இதே ஆண்டில்தான் இந்த நிறுவனம் ஆரம்பித்தது.
2016-17-ம் நிதியாண்டில் தன் சுரங்கம் தோண்டுதல் வசதியை ஆண்டொன்றுக்கு இரண்டு மில்லியன் டன் என்ற அளவுக்கு விரிவாக்கம் செய்தது. இதே ஆண்டில் தன் கடனை மறு சீரமைப்பும் செய்துகொண்டது. 2020-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 0.2 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான உற்பத்தி வசதி கொண்ட ரோலிங் மில் ஒன்றை நிறுவியது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் ரோலிங் மில் நிர்மாணிக் கப்பட்ட உற்பத்தி வசதியானது ஆண்டொன்றுக்கு 0.4 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு உயர்ந்தது. இதே ஆண்டில் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிலான உற்பத்தித்திறன் கொண்ட அயர்ன் ஓர் பெனிபிசியேஷன் வசதி ஒன்றையும் நிறுவியது. 2021-ம் ஆண்டில் சோலார் மின் உற்பத்தி வசதியை நிறுவியது.

ரிஸ்க்குகள் என்னென்ன?
இரும்புத்தாது, இரும்பு, லாங் ஸ்டீல், வயர்கள், பில்லட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழில்துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கே உரித்தான அனைத்துவகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. இதன் தயாரிப்பு கள் அனைத்துமே பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே தேவை அதிகரிக்கும். ஏதாவது காரணத்தால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதுபோனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.
மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தியில் உபயோகப் படுத்தப்படும் பல்வேறு வகையான இடுபொருள்களின் விலை அதிகரிப்பு / செலவின அதிகரிப்பு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், உலகளாவிய அளவில் ஸ்டீல் விலையில் ஏற்படும் மாறுதல்கள், இறக்குமதி செய்யப்படுவதற்கான வாய்ப்பு, நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தலால் ஏற்படக்கூடிய அதிக முதலீட்டுக்கான தேவை, புதிய விரிவாக்கங்கள் செய்யப் படும்போது ஏற்படக்கூடிய தாமதங்கள், தேவை இருக்கும் இடத்துக்கும் உற்பத்தி வசதிக்கும் இடையேயான தொலைவு போன்றவையும் ரிஸ்க்குகளே.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்து தல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத் துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!