டெக்னோ எலெக்ட்ரிக் & இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட்! (BSE Code: 542141, NSE Symbol: TECHNOE)

கம்பெனி பயோடேட்டா
இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோ டேட்டா டெக்னோ எலெக்ட்ரிக்& இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட் என்னும் நிறுவனத்தினுடையது.
இன்ஃப்ரா துறையில்...
1963-ம் ஆண்டில் பதிவு செய்து ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், கொல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி அகில இந்திய ரீதியில் தன்னுடைய தொழிலை செய்து வருகிறது. இந்தியாவில் பவர் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் துறையில் செயல்பட்டு வருகிற முன்னணி நிறுவனம் இது. இ.பி.சி (EPC) என்னும் இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் (செய்யும் தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சொந்தமாக வைத்துக் கொண்டிருப்பது இதன் தனிச்சிறப்பு) மின்சார உற்பத்தி மையங்களை அமைத்தல், இயக்குதல் மற்றும் காத்தல், மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கடத்துதல் மற்றும் விநியோகம் என்னும் மின்சாரம் சம்பந்தப்பட்ட மூன்று பெரும் பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து தருகிறது இந்த நிறுவனம். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக்கொண்டுள்ள இந்த நிறுவனம், இன்றைக்கு நானூறுக்கும் மேற்பட்ட புராஜெக்டுகளை வெற்றிகரமாகப் பல்வேறு வாடிக்கையாளர்களுக்காகச் செய்துகொடுத்துள்ளது.

இந்த நிறுவனம் இயங்கிவரும் தொழில் பிரிவுகள் என்கிற ரீதியாகப் பார்த்தால், இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன், மின் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வதற்கான இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அஸெட்டுகளைச் சொந்தமாக வைத்திருத்தல் மற்றும் இயக்குதல் மற்றும் பராமரிப்பு என்ற மூன்று தொழில் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. மின் உற்பத்தி மையங்களை வடிவமைத்தல் என்பதில் ஆரம்பித்து, அவற்றை நிர்மாணம் செய்து, செயல்படுத்தி வாடிக்கை யாளர் வசம் ஒப்படைத்து, பின்னர், இயக்கித் தந்து என மின் உற்பத்தியின் வாழ்க்கைச் சுழற்சியில் அத்தனை படிநிலைகளிலும் தன்னுடைய சேவைகளை வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.
1980-ம் ஆண்டில் இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற சேவைகளை ஆரம்பித்த இந்த நிறுவனம், 2009-ம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க (காற்றாலை போன்ற) ரீதியிலான மின் உற்பத்தியில் கால்பதித்தது. 2010-ம் ஆண்டில் மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கடத்துவதற்கான (டிரான்ஸ்மிஷன்) அஸெட்டுகளை சொந்தமாக நிர்மாணிக்க ஆரம்பித்தது இந்த நிறுவனம்.

எதிர்கால இலக்குகள்...
இந்த நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 8% அளவிலான வருமானம் (2021-22 நிதியாண்டு நிலவரப்படி) இந்தப் பிரிவில் இருந்து வந்திருந்தது. டேட்டா சென்டர் பிரிவில் தற்சமயம் 36 மெகாவாட் அளவிலான டேட்டா சென்டரைக் கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனம், 2030-ம் ஆண்டுவாக்கில் 250 மெகாவாட் அளவிலான அல்ட்ரா-ஸ்கேலபிள் ஹைப்பர் டென்சிட்டி டேட்டா சென்டர்களை உருவாக்குவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது.
டெக்னோ எலெக்ட்ரிக் நிறுவனம் மத்திய அரசு நிறுவனங்கள், மாநில அரசின் மின்சார உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின்சார உற்பத்தியாளர்கள் (சொந்த உபயோகத்துக்காக உற்பத்தி செய்துகொள்ளும் கேப்டிவ் பவர் பிளான்ட்டுகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை), மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளுக்கான டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம்கள் போன்றவற்றுக்கான தீர்வுகளைச் செய்து தருகிறது.
கடந்த காலத்தில் இந்தியாவின் நேஷனல் பவர் கிரிட் கட்டுமானத்தில் கிட்டத்தட்ட 50% அளவிலான கட்டுமானத்துக்குத் தன்னுடைய பங்களிப்பைத் தந்துள்ளது இந்த நிறுவனம். என்.டி.பி.சி நிறுவனத்தின் புராஜெக்ட்டுகளில் கிட்டத்தட்ட 50% புராஜெக்ட்டுகளில் பல்வேறு விதமான பணிகளில் கடந்த காலத்தில் இந்த நிறுவனம் தன்னுடைய பங்களிப்பை செய்துள்ளது. இந்தியாவின் முக்கியமான மத்திய அரசு நிறுவனங்களுக்குத் தொடர்ந்து பல ஆண்டுகள் தன்னுடைய சேவையை வழங்கும் ஒப்பந்தங் களைச் செய்துகொண்டுள்ள இந்த நிறுவனம், பல்வேறு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குத் தேவையான பவர் டிஸ்ட்ரிப் யூஷன் தீர்வுகளையும் செய்து தந்துள்ளது.
மேலும், அலுமினிய உற்பத்தி நிறுவனங்கள் பலவற்றுக்கும் (ஸ்மெல்ட்டர்களை வைத் திருக்கும் நிறுவனங்கள்) மின்சார பயன்பாட்டுக்கான தீர்வுகளை வழங்கிவருகிறது இந்த நிறுவனம்.
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அதானி டிரான் ஸ்மிஷன், ஸ்டெர்லைட் பவர், டிவிசி, ராஜஸ்தான் டிரான் ஸ்கோ, ஆர்.இ.சி டிரான்ஸ்மிஷன் புராஜெக்ட்ஸ் கம்பெனி லிமிடெட், கே.எஸ்.இ.பி, என்.டி. பி.சி, சி.பி.டி.சி.எல், ஆர்.இ.சி பவர் டிஸ்ட்ரிப்யூஷன் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் (செப்டம்பர் 2022 நிலவரப்படி) இந்த நிறுவனதின் வாடிக்கை யாளர்களாக இருக்கின்றன.
அனைத்து தெர்மல் பவர் பிளான்ட்டுகளும் சல்பர் வெளியேற்றத்தைக் (sulphur Emission) குறைக்க வேண்டும் என்ற அரசின் கொள்கை, புதுப் பிக்கத்தக்க மின்சார உற்பத்தி நடைமுறைகளை அதிகரிப்பதில் காட்டப்படும் ஈடுபாடு (175 கிகாவாட் அளவிலான இலக்கு), 2025 வாக்கில் ஒரு கிகா வாட் அளவிலான டேட்டா சென்டர் அமைக்க வேண்டிய அளவுக் கான தேவை மற்றும் இலக்கு, 2024-ம் ஆண்டுவாக்கில் 250 மில்லியன் எண்ணிக்கையிலான ஸ்மார்ட் மீட்டர்களுக்கான தேவை உள்ளிட்ட பல இந்தத் துறைசார்ந்த விஷயங்கள் இதுபோன்ற நிறுவனங் களுக்கான வியாபாரத்துக்கான வாய்ப்புகளை அதிகரித்துத் தரும் என எதிர்பார்க்கலாம்.

ரிஸ்க்குகள் என்னென்ன?
மின் உற்பத்திக்கான மையங் களை அமைத்தல், மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கடத்துதல் மற்றும் டேட்டா சென்டர்கள் போன்ற தொழில்களில் ஈடுபடும் நிறுவனங் களுக்கு உரித்தான அனைத்துவகை ரிஸ்க்குகளுமே இந்த நிறுவனத்துக் கும் உண்டு. மின்சாரம் மற்றும் அது சார்ந்த விஷயங்கள் அனைத்துமே நாட்டின் பொருளாதார வளர்ச் சியை சார்ந்தே தேவை அதிகரிக்கும் விஷயங்களாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர் பார்த்த அளவுக்கு இல்லாது போனாலோ, தேக்கநிலையை சந்தித்தாலோ அது இந்த நிறுவனத் தின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
நீண்ட கால அளவில் பெரிய புராஜெக்ட்டுகளை செய்துதரும் நிறுவனம் இது என்பதால், ஏதாவது எதிர்பாரதவிதமான எதிர்மறை விஷயங்கள் நடந்துவிட்டால், அதுவும் இந்த நிறுவனத்தின் எதிர்கால வியாபாரத்தை பாதிக்கவே செய்யும். அதிக அளவு பணப்புழக்கம் தேவைப்படும் துறையாகவும், வொர்க்கிங் கேப்பிடல் அதிக அளவில் தேவைப்படுகின்ற தொழிலாகவும் இருப்பதையும் ஒரு ரிஸ்க்காகவே பார்க்க வேண்டும். எடுத்த புராஜெக்ட்டுகளை குறித்த நேரத்தில் முடித்துத் தர வேண்டிய கடமை இதுபோன்ற நிறுவனங்களுக்கு உண்டு. எதிர்பாராதவித மாக இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அது இந்த நிறுவனத்தின் லாபத்தை பாதித்துவிட வாய்ப்புள்ளது.
இந்த நிறுவனம் செய்துதரும் பெரும்பாலான பணிகள் ஒப்பந்தப் புள்ளிகள் அடிப்படையில் செய்துதரப்படும் பணிகளாக இருப்பதால், செலவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் திட்டங்கள் தீட்டி அதன் அடிப்படையிலேயே ஒப்பந்தப் புள்ளிகளுக்கான கோருதலை இந்த நிறுவனம் செய்யும். ஏதாவது ஒரு காரணத்தால் செலவினங்கள் அதிகரித்தாலோ, செலவுகள் (திட்டமிடும் நேரத்தில்கூட) ஏனைய நிறுவனங்களைவிட அதிகமாக இருந்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் லாபம் மற்றும் எதிர்கால வர்த்தகம் என்ற இரண்டையும் பாதிக்கவே செய்யும்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்தபின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!