
கம்பெனி பயோடேட்டா
இந்தப் பகுதியில் நாம் பார்க்கப்போகும் வினாதி ஆர்கானிக்ஸ் லிமிடெட் எனும் வேதிப்பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத் தினுடையதாகும்.
வேதிப்பொருள்கள் உற்பத்தியில்...
35 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கிவரும் இந்த நிறுவனம், தனிச்சிறப்பு கொண்ட வேதிப்பொருள்கள் மற்றும் கரிம இடைவினைப் பொருள்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் ஒரு முன்னணி நிறுவன மாகச் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் களுக்குத் தேவைப்படுகிற பல்வேறு வகையான வேதிப்பொருள்களை மதிப்புக்கூட்டல் என்ற அடிப்படையில் செயல்பட்டு அதிநவீன தொழில்நுட்ப வாயிலாக உற்பத்தி செய்து தருகிறது.
ஆரம்பத்தில் ஒரே ஒரு வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்து, காலப்போக்கில் படிப்படியாக முன்னேற்றம் கண்ட இந்த நிறுவனம் இன்றைக்கு ஒருங்கிணைந்த உற்பத்தி மையத்தையும் பல்வேறு வேதிப்பொருள்களையும் உற்பத்தி செய்து வருகிறது. மேலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் செயல்பட்டு வருகிற இது போன்ற நிறுவனங்களின் மத்தியில் மிகப் பெரியதொரு நிறுவனமாகவும் இருக்கிறது இந்த நிறுவனம்.
இந்தியாவில் இரண்டு அதிநவீன உற்பத்தி மையங்களைக் கொண்டு இயங்கிவருகிற இந்த நிறுவனம், தன்னுடைய தயாரிப்புகளை 35-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஐசோப்யூட்டைல் பென்சீன் மற்றும் 2-அக்ரிலேமிடோ 2 மீத்தைல் புரோபேன் சல்போனிக் ஆசிட் என்கிற இரண்டு வகை வேதிப் பொருள்களின் மொத்த சந்தையில் கிட்டத்தட்ட 65% சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் இந்த இரண்டு வேதிப்பொருள்களை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்வதும் தனிச்சிறப்பான விஷயமாகும். அகில இந்திய ரீதியாக ஐ.பி மற்றும் ஹெச்.பி எம்.டி.பி.இ (High Purity- Methyl Tertiary Butyl Ether) ரக கெமிக்கல்களை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய நிறுவனமாகவும் இந்த நிறுவனம் திகழ்கிறது.
டி.பி.ஏ, டி.பி.ஏ-அமைன், டி.ஓ.ஏ, பி.டி.பி.டி, பி.டி.பி.பி.ஏ, பி.டி.பி.எம்.பி ரக வேதிப்பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் இதுதான். ஒருங்கிணைந்த வேதிப்பொருள்கள் உற்பத்தி மையத்தையும் 800-க்கும் மேற்பட்ட அனுபவமிக்க பணி யாளர்களையும் கொண்டிருக்கிறது. செயல்படும் வேதிப் பொருள்கள் உற்பத்திப் பிரிவுகள் என்ற அளவீட்டில் பார்த்தால், ஸ்பெஷாலிட்டி அரோமேட்டிக்ஸ், ஸ்பெஷாலிட்டி மானோமர்ஸ், ப்யூட்டைல் பீனால்கள், குறிப்பிட்ட சிலவகை பாலிமர்கள் மற்றும் ஏனைய ஸ்பெஷாலிட்டி வேதிப்பொருள்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

நிறுவனத்தின் வளர்ச்சி...
1989-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1992-ம் ஆண்டில் ஐ.பி.பி எனும் வேதிப் பொருளை உற்பத்தி செய்யும் உற்பத்தி மையம் ஒன்றை மஹாத் எனும் இடத்தில் 1,200 மெட்ரிக் டன் என்ற அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையத்துடன் நிறுவியது. 1996-ம் ஆண்டில் இந்த நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையத்தின் அளவை 3,000 மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரித்தது.
பின்னர் 1997-ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையத்தை 5,000 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தியது. 2002-ம் ஆண்டில் லோட்டே என்னும் இடத்தில் 1,000 மெட்ரிக் டன் என்ற அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி செய்யும் ஏ.டி.பி.எஸ் எனும் வேதிப் பொருளை உற்பத்தி செய்யும் மையத்தை நிறுவியது இந்த நிறுவனம். 2006-ம் ஆண்டில் ஐ.பி.பி வேதிப் பொருளின் நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தி வசதியானது 10,000 மெட்ரிக் டன் என்ற அளவுக்கும், ஏ.டி.பி.எஸ் வேதிப்பொருள் உற்பத்தி வசதியானது 3,600 மெட்ரிக் டன் என்ற அளவுக்கும் உயர்த்தப்பட்டது.
2007-ம் ஆண்டில் என்-டெர்ஷியரி ப்யூட்டைல் அக்ரைலாமைட் (டி.பி.ஏ) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது இந்த நிறுவனம். 2008-ம் ஆண்டில் ஐ.பி.பி வேதிப்பொருள் உற்பத்தி மையத்தின் நிர்மாணிக்கப்பட்ட அளவானது 14,000 மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரிக்கப் பட்டது. 2009-ம் ஆண்டில் ஏ.டி.பி.எஸ் வேதிப்பொருளின் நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தி மையம் 12,000 மெட்ரிக் டன் என்ற அளவுக்கும், டி.பி.ஏ எனும் வேதிப்பொருளின் நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தி மையம் 500 மெட்ரிக் டன் என்ற அளவுக்கு மாக அதிகரிக்கப் பட்டது.
2010-ம் ஆண்டில் 12,000 மெட்ரிக் டன் அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையத்துடன்கூடிய ஐசோப் யூட்டைல் வேதிப்பொருள் உற்பத்தி மையம் ஒன்றைத் தொடங்கியது இந்த நிறுவனம். 2011-ம் ஆண்டில் ஹெச்.பி-எம்.டி.பி.இ வேதிப்பொருள் உற்பத்தி செய்யும் உற்பத்தி மையம் ஒன்று, 7,000 மெட்ரிக் டன் அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையம் ஆரம்பிக்கப்பட்டது.
2013-ம் ஆண்டில் ஏ.டி.பி.எஸ் வேதிப்பொருளின் நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தி மையமானது 26,000 மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் வாடிக்கை யாளர்களின் தேவைக்கு இணங்க உற்பத்தி செய்துதரும் அளவுக் கான டெர்ஷியரி ப்யூட்டைல் அமைன் உற்பத்தி மையம் ஒன்றை நிறுவியது. 2018-ம் ஆண்டில் ஐ.பி.பி வேதிப் பொருளின் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியானது, 25,000 மெட்ரிக் டன் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டது. 2020-ம் ஆண்டில் ப்யூட்டை பீனால் எனும் வேதிப் பொருளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 2021-ம் ஆண்டில் ஏ.டி.பி.எஸ் வேதிப்பொருளின் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியானது 40,000 மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டது.
வேதிப்பொருள்கள் உற்பத்தியில் மிகவும் அவசியமான ஒன்றாகிய ஆராய்ச்சி மையத்தையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இதன் வாயிலாக சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான வேதிப் பொருள் களைக் கண்டறிதல் மற்றும் அதிக அளவிலான தூய்மைத்தன்மை யுடன் வேதிப்பொருள்களை உற்பத்தி செய்தல் போன்றவற்றை இந்த நிறுவனம் செய்துவருகிறது.
ஏ.டி.பி.எஸ் வேதிப்பொருள்கள் உற்பத்தியில் உலக அளவிலான 3% அளவிலான ஏற்றுக்கொள்ளத்தக்க தூய்மைத்தன்மை இருக்கிற நிலையில், இந்த நிறுவனம் தனது ஆராய்ச்சி வசதிகள் கண்டறிந்த நடைமுறைகளைக்கொண்டு மிகவும் குறைந்த அளவான 0.5% அளவில் தன்னுடைய தயாரிப்பு களை உற்பத்தி செய்து தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இதே போல், ஐ.பி.பி வேதிப் பொருள்களில் 99.7% அளவிலான பியூரிட்டியுடனும், ஐ.பி வேதிப் பொருள்களில் 99.85% அளவிலான பியூரிட்டியுடனும், ஹெச்.பி-எம்.டி.பி.இ வகை வேதிப் பொருள்களில் 99.97 % அளவிலான பியூரிட்டியுடனும் உற்பத்தி செய்யும் நடைமுறைகளை இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கித் தந்துள்ளன.


ரிஸ்க்குகள் என்னென்ன?
வேதிப்பொருள்கள் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்துவகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலபொருள்கள் விலை உயர்வு, தொழில்நுட்பத்தில் வரக்கூடிய மாறுதல்கள், போட்டி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் பெற வாய்ப்புள்ள வெற்றிகள், வாடிக்கையாளர்களின் தேவையில் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.
வேதிப்பொருள்கள் உற்பத்தி என்பதால் அரசாங்கங் களின் சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் மாசுக்கட்டுப்பாடுக் கான விதிமுறைகளில் வரக்கூடிய மாறுதல்கள், அரசாங்கங் களின் சட்டதிட்டங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துகான ரிஸ்க்குகளே.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.
பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.