ஏத்தர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (BSE Code: 543534, NSE Symbol: AETHER) - கம்பெனி பயோடேட்டா

700-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் வேகமாக வளர்ந்துவரும் ஒரு ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் நிறுவனம் ஏத்தர் இண்டஸ்ட்ரீஸ்...
சூரத் நகரில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் நிறுவனம் ஏத்தர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.
நிறுவனத்தின் உற்பத்தி...
இந்த நிறுவனம் தயாரிக்கும் வேதிப் பொருள்கள் மருந்து உற்பத்தித்துறை, பயிர் பாதுகாப்பு மற்றும் அவற்றுக்கான ஊட்டச் சத்துகள் உற்பத்தி செய்யும் துறை, பாதுகாப்புக்கான பூச்சுக்கள் தயாரிப்பு, அதிநவீன மற்றும் உயரிய புகைப்படங்களை நகல் எடுத்தலுக்கு உதவும் வேதிப் பொருள்கள் உற்பத்தி செய்யும் துறை, அடிட்டிவ்கள் உற்பத்தி செய்யும் துறை (மேம்படுத்துதலுக்காக சேர்க்கப்படும் வேதிப் பொருள்கள்), எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
உலக அளவில் வேதிப் பொருள்களுக்கான சந்தையில் தனித்துவமான வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடனும் வேதியியலை கிரியேட்டிவ்வாக அணுகும் நோக்கத்துடனும் 2013-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

இன்றைக்கு 700-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் (இதில் 81 பேர் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானிகள்) இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் நிறுவனமாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
வேதியியல் தொழில்நுட்பங்கள் ரீதியாகப் பார்த்தால், தொடர் வேதியியல் செயல்முறைகள், அதிக அழுத்தத்தாலான வேதியியல் செயல்முறைகள், ஃபிக்ஸட் பெட் ரியாக்ஷன்ஸ், க்ரையோஜினிக் ரியாக்ஷன்ஸ், ஹை வேக்குவம் டிஸ்ட்டிலேஷன், வைப்டு ஃபிலிம் டிஸ்ட்டிலேஷன், புராசஸ் ஆட்டோமேஷன் போன்ற தொழில் நுட்பங்களுடன் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.
2021-22 நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் விற்றுவரவில் 67.03% அளவிலான விற்றுவரவானது சொந்தமாக வேதிப்பொருள்களைப் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களின் உபயோகத்துக்காகத் தயாரித்த வகையிலும், 23.77% விற்றுவரவு ஒப்பந்த ரீதியில் வாடிக்கை யாளர்களுக்குத் தேவைப்படுகிற மற்றும் அவர்களால் வடிவமைக்கப் பட்ட வேதிப்பொருள்களை உற்பத்தி செய்து விற்ற வகையிலும் வந்துள்ளது.
படிப்படியான வளர்ச்சி...
2013-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம், 2015-ம் ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் முதலாவது உற்பத்தி மையத்தைத் தொடங்கியது.
2015-ம் ஆண்டில் தன்னுடைய அடுத்த உற்பத்தி மையத்தை நிறுவ 10,500 சதுர மீட்டர்கள் அளவிலான இடத்தை வாங்கி, அதில் இரண்டு உற்பத்தி மையங்களைக் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தது. இதே ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமான அளவில் உயர்ந்தது.
2016-ம் ஆண்டில் தன்னுடைய இரண்டாவது உற்பத்தி மையத்தில் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை ஆரம்பித்தது. இதே ஆண்டில் இந்த நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேலாக உயர்ந்தது.
2017-ம் ஆண்டில் தன்னுடைய முதலாவது உற்பத்தி மையத்தில் தரக்கட்டுப்பாடு மற்றும் தரத்துக்கான உத்தரவாதம் தருவதற்கான வசதிகளை மேம்படுத்தியது இந்த நிறுவனம். இந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 300 என்கிற எண்ணிக் கையைத் தாண்டியது.
2018-ம் ஆண்டில் ரூ.100 கோடி அளவிலான விற்றுவரவு என்ற எல்லையைத் தொட்ட இந்த நிறுவனம், இதே ஆண்டில் தன்னுடைய தனிச் சிறப்பு வாய்ந்த தயாரிப்பான பிரதான வேதிப்பொருளை (ஆர்த்தோ டோலைல் பென்சோநைட்ரைல் / 4-மீத்தைல்-2- சைனோபிஃபினெல் எனும் வேதிப் பொருள்) வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.
2019-ம் ஆண்டில் ரூ.200 கோடி என்கிற விற்றுவரவு எல்லையைத் தொட்ட இந்த நிறுவனம், அதே ஆண்டில் வேர்ஹவுஸ் ஒன்றையும் நிர்மாணித்தது.
இதே ஆண்டில் இன்னொரு முக்கியமான வேதிப் பொருளை (3-மீத்தாக்சி-2-மீத்தைல் பென்சாயில் குளோரைடு எனும் வேதிப்பொருள்) வர்த்தகரீதியில் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.
2020-ம் ஆண்டில் ரூ.300 கோடி என்ற அளவிலான விற்றுவரவு என்ற எல்லையை எட்டிய இந்த நிறுவனம், இதே ஆண்டில் பிரதான ஆராய்ச்சி வசதியை நிறுவியது. மற்றும் தன்னுடைய முதலாவது உற்பத்தி மையத்தில் கூடுதலாக ஒரு பைலட் உற்பத்தி வசதியையும் நிறுவியது. இதே ஆண்டில்தான் இந்த நிறுவனத்தின் முதல் உற்பத்தி மையத்தில் இருக்கும் ஆராய்ச்சி வசதிக்கு மத்திய அரசின் அங்கீகாரம் (DSIR) கிடைத்தது.
2021-ம் ஆண்டில் ரூ.450 கோடி என்கிற விற்றுவரவு இலக்கை எட்டியது. இந்த ஆண்டில் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 700 என்ற அளவைத் தாண்டியது.


ரிஸ்க்குகள் என்னென்ன?
வேதிப்பொருள்கள் (அட்வான்ஸ்டு இன்டர்மீடியரீஸ் மற்றும் ஸ்பெஷாலிட்டி கெமிக் கல்கள்) உற்பத்தித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்கு களும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. உற்பத்தி மற்றும் நடை முறைகள் ரீதியிலான ரிஸ்க்குகள், மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்த பொருள்களைப் பாதுகாத்து வைத்திருப்பதில் இருக்கும் ரிஸ்க்குகள் முக்கியமானவை.
வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தங்கள் செய்யப்படுவதால், வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் உருவாகும் ரிஸ்க்கும் இந்த நிறுவனத்துக்கு உண்டு.
வேதிப்பொருள்கள் உற்பத்தி என்பதால், பல்வேறு அரசு ரீதி யிலான சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குக்கீழ் செயல்பட வேண்டியிருக்கும்.
தொழில்ரீதியிலான போட்டி, போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி களில் எதிர்பார்த்த அளவில் வெற்றி கிடைக்காமல் போதல், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், மூலப்பொருள்கள் விலை ஏற்றம், ஏற்றுமதி வர்த்தகத்தில் வரக்கூடிய மாறுதல்கள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.
மேலும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிக்கும் ஒரு சில துறைகள் பொருளாதார வளர்ச்சி யைச் சார்ந்தே அபிவிருத்தி அடையும் துறைகளாக இருப்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின்நோக்கம்.
பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பது நல்லது.
முன்னணி வாடிக்கையாளர்கள்..!
டிசம்பர் 2022 நிலவரப்படி, ஃபார்மா துறையில் டிவிஸ், டாக்டர் ரெட்டீஸ், லூபின், இப்கா, கெடில்லா, அலெம்பிக், மேன்கைன்ட், அதுல், லாரெஸ் லேப்ஸ், ஆர்த்தி ட்ரக்ஸ், ஐ.ஓ.எல் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களை வாடிகையாளர்களாகக் கொண்டுள்ளது ஏத்தர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். அக்ரோ கெமிக்கல் துறையில் டெக்கான், யு.பி.எல் உள்ளிட்ட பல முக்கியமான நிறுவனங்களையும், ஆயில் அண்ட் கேஸ் துறையில் ஆராம்கோ நிறுவனத்தையும், ஹைபர்ஃபாமென்ஸ் போட்டோகிராபி துறையில் போலராய்ட் நிறுவனத்தையும், மெட்டீரியல் சயின்ஸ்/கோட்டிங் துறையில் அல்டனா, பி.ஒய்.கே மற்றும் ஏவியன்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களையும் வாடிகையாளர்களாகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.