ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட்! (BSE Code: 532215, NSE symbol: AXISBANK) - கம்பெனி பயோடேட்டா

ஆக்ஸிஸ் வங்கி, 4,903 கிளைகள், கிட்டத்தட்ட 91,900 பணியாளர்கள் மற்றும் 4.1 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது!
இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார் வங்கிகளில் மூன்றாவது பெரிய வங்கியாக திகழ்கிறது ஆக்ஸிஸ் பேங்க்.
வங்கியின் சிறப்புகள்...
2022-23-ம் நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, ஆக்ஸிஸ் வங்கியானது 4,903 கிளைகள், கிட்டத் தட்ட 91,900 பணியாளர்கள் மற்றும் 4.1 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சந்தைப் பங்களிப்பு என்கிற அடிப்படையில் பார்த்தால், மரபான வங்கிச் சேவைகள் (Traditional banking) பிரிவில் கடன் வழங்குவதில் 6%, (மார்ச் 2023 நிலவரப்படி), வைப்பு நிதிகள் பிரிவில் (மார்ச் 2023 நிலவரப்படி) 5.1%, சொத்துகள் அடிப்படையில் (மார்ச் 2022 நிலவரப்படி) 5.4% பங்களிப்பையும் கொண்டுள்ளது.
டிஜிட்டல் வங்கிச் சேவைகள் பிரிவில் யு.பி.ஐ சேவையில் 18% (மார்ச் 2023-ல் முடிவடைந்த காலாண்டில்) சந்தைப் பங்களிப்பையும், மொபைல் பேங்கிங் பிரிவில் 17% (மார்ச் 2023-ல் முடிவடைந்த காலாண்டில்) சந்தைப் பங்களிப்பையும், கிரெடிட் கார்டுகள் பிரிவில் 14% (மார்ச் 2023-ல் புழக்கத்தில் இருக்கும் கிரெடிட் கார்டுகள் அடிப்படையில்) பங்களிப்பையும் கொண்டிருக்கிறது.
பேங்கிங் வசதிகள் என்கிற அடிப்படையில் பார்த்தால், கிளைகள், ஆன்லைன், மொபைல், ரிமோட் மற்றும் போன் பேங்கிங் போன்ற வசதிகளைத் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் கிளைகள் வாயிலாக வழங்கப்படும் சேவைகளில் எந்த நேரத்திலும் பணம் எடுக்க உதவும் ஏ.டி.எம், பணம் செலுத்த உதவும் கேஷ் டெப்பாசிட் மெஷின்கள் மற்றும் நேரடிக் கிளைகள் வாயிலாக வழங்கப்படும் சேவைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

மொபைல் பேங்கிங் பிரிவில் ஆக்ஸிஸ் மொபைல், பீம் ஆக்ஸிஸ் பே யு.பி.ஐ ஆப், யு.பி.ஐ ஆட்டோ பே, எஸ்.எம்.எஸ் பேங்கிங், பயோமெட்ரிக் நெட் பேங்கிங் பேமென்ட்ஸ் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருகிறது.
ஆக்ஸிஸ் பேங்க் முதலீடு செய்திருக்கும் (நவம்பர் 2022 நிலவரப்படி) அதனுடைய குழும நிறுவனங்களான ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் (75% முதலீடு), ஆக்ஸிஸ் கேப்பிடல் (100% முதலீடு), ஆக்ஸிஸ் ஃபைனான்ஸ் (100% முதலீடு), ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் (100% முதலீடு), ஆக்ஸிஸ் டிரஸ்டி (100% முதலீடு), ஃப்ரீ சார்ஜ் (100% முதலீடு), ஏ-டிரேட்ஸ் பிளாட்ஃபார்ம் (இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள டிரேட் ரிசிவபிள்ஸ் டிஸ்கவுன்டிங் சிஸ்டம் என்னும் எலெக்ட்ரானிக் பிளாட்ஃபார்மில் பங்கெடுக்கும் நிறுவனத்தில் 67% முதலீடு), மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் (12.99% முதலீடு) போன்ற நிறுவனங்கள் அவை செயல்படும் பிரிவில் ஆக்ஸிஸ் வங்கியுடன் ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
வழங்கிய கடன்கள்...
2022-23-ம் நிதியாண்டின் இறுதியில் ரூ.4,87571 கோடி என்கிற அளவிலான கடனை வழங்கி இருந்தது இந்த வங்கி. கடன்கள் வழங்கியதில் உட்பிரிவுகள் ரீதியாகப் பார்த்தால், வீட்டுவசதிக் கடனின் அளவு 32 சதவிகித மாகவும், கிராமப்புறக் கடனின் அளவானது 15 சத விகிதமாகவும், பர்சனல் கடன்கள் 11 சதவிகிதமாகவும், வாகனக் கடன்கள் 11 சதவிகிதமாகவும், சொத்துகளுக்கு ஈடான கடன்கள் 10 சதவிகிதமாகவும், சிறுதொழில்களுக்கான கடன்கள் (மெர்ச்சன்ட் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் லோன்ஸ்) 9 சதவிகிதமாகவும், கிரெடிட் கார்டு கடன்கள் 7 சதவிகிதமாகவும், வணிக உபயோகத்துக்கான வாகனங்கள் மற்றும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங் களுக்கான கடன்கள் 2 சதவிகிதமாகவும், ஏனைய கடன்கள் 3 சதவிகிதமாகவும் இருந்தன. இது, 2021-22-ம் நிதி ஆண்டைவிட 22% கூடுதல் வளர்ச்சி ஆகும்.
தனிநபர் கடன்கள் (பர்சனல் லோன்) என்ற பிரிவில் வழங்கப்பட்டுள்ள கடன்களில் 100% அளவிலான கடன், மாத சம்பள வருவாய் இருக்கும் நபர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. அதே போல, கிரெடிட் கார்டு கடன்கள் வழங்கப்பட்டிருப்பதில் 75% நபர்கள் மாத சம்பள வருவாயைக் கொண்டு இருப்ப வர்கள் ஆவார்கள்.
கிராமப்புறக் கடன் வழங்குதலில் கடந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.70,918 கோடி அளவிலான கடனை வழங்கி இருந்தது ஆக்ஸிஸ் வங்கி. இந்தப் பிரிவில் உழவர்களுக் கான கடன்கள், தங்க நகைக் கடன், மைக்ரோ ஃபைனான்ஸ்-ரீடெயில், மைக்ரோ ஃபைனான்ஸ்-ஹோல் சேல், விவசாய உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட பல பிரிவு களில் கடன்கள் வழங்கியுள்ளன.
வணிகர்கள் விற்பனையின் போது பணத்தைப் பெற உபயோகிக்கும் பாயின்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரங்களை அவர் களுக்கு விநியோகித்து அவர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதில் இரண்டாவது பெரிய வங்கியாகத் தன்னுடைய சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆப், டிஜிட்டல் துக்கான், மைக்ரோ பே பி.ஓ.எஸ் சொல்யூஷன் போன்ற தீர்வுகளை வணிகர்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி வழங்கி வருகிறது.
வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆக்ஸிஸ் வங்கி, கடந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.3,75,447 கோடி ரூபாய் அளவிலான நிதிச் சொத்துகளை (AUM) நிர்வகித்து வருகிறது.
4,903 (கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி) கிளைகளைக் கொண்டு இயங்கும் இந்த வங்கி யின் கிளைகளில் 31% அளவிலான கிளைகள் பெருநகரங்களிலும் (மெட்ரோ), 21% அளவிலான கிளைகள் நரகங்களிலும் (Urban), 30% அளவிலான கிளைகள் சிறு நகரங்களிலும் (Semi urban), 16% அளவிலான கிளைகள் கிராமப் புறங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும், 95-க்கும் மேற்பட்ட வர்த்தக ரீதியிலான பார்ட்னர்கள் (ஏ.பி.ஐ பேங்கிங் மற்றும் டிரான் ஸாக்ஷன் பேங்கிங்), 400-க்கும் மேற்பட்ட ஏ.பி.ஐ-கள் (வங்கியின் ஏ.பி.ஐ டெவலப்பர் போர்ட்டலில் 285-க்கும் மேலானவை ரீடெயில் ஏ.பி.ஐ-களாகும்) போன்றவற்றையும் கொண்டிருக்கிறது இந்த வங்கி.

ரிஸ்க்குகள் என்னென்ன?
வங்கித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கே உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. டெக்னாலஜியை உபயோகித்து வங்கிச் சேவையை வளர்ப்பதில் இன்றைக்கு வங்கிகளிடையே கடுமையான போட்டி இருக்கிறது. எனவே, தொடர்ந்து டெக்னாலஜி உபயோகத்தில் முன்னணி நிலையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் இந்த வங்கிக்கு இருக்கிறது.
வங்கித் துறையானது பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளர்ச்சி அடையும் துறை ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவு இல்லாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை நன்கு பாதிக்கவே செய்யும். வட்டி விகிதத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், ஏதாவது ஒரு காரணத்தால் உருவாகக்கூடிய அதிக அளவிலான வாராக்கடன்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும். அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் போன்றவைக்குக் கட்டுப்பட்டே வங்கிகள் இயங்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின்நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின், முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பது நல்லது.
ஆக்ஸிஸ் வங்கி வழங்கிய தொழில் கடன்...
சிறிய தொழில்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடனின் அளவான ரூ.42,982 கோடியில் கிட்டத்தட்ட ரூ.10,316 கோடி கடனானது தொழிலுக்கான கடனாகவும், ரூ.32,666 கோடி கடனானது வொர்க்கிங் கேப்பிடலுக்காக வழங்கப்பட்ட கடனாகவும் இருக்கிறது. இந்த வொர்க்கிங் கேப்பிடல் லோனில் 78% அளவிலான கடன் பிணையுடன்கூடிய பாதுகாப்பு (ஓவர் டிராஃப்ட், டேர்ம் லோன்ஸ் முதலியன) கொண்ட கடனாகும்.