பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பேயர் கிராப்சயின்ஸ் லிமிடெட்!

பேயர் கிராப்சயின்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பேயர் கிராப்சயின்ஸ்

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் கம்பெனி பயோடேட்டா பகுதியில் நாம் பார்க்கப்போகும் நிறுவனம் 125 ஆண்டுகளாக இந்தியாவில் தொழில் செய்துவரும் நிறுவனமான பேயர் கிராப்சயின்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனம்.

நிறுவன வரலாறு...

1863-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் 1896-ம் ஆண்டில் கால்பதித்த இந்த நிறுவனம், 1958-ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு பார்முலேஷன் மையத்தை இந்த நிறுவனம் முதன்முதலாக ஆரம்பித்தது. அதே ஆண்டில் பேயர் அக்ரோகெம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை இந்தியாவில் நிறுவியது. 1963-ம் ஆண்டில் பேயர் (இந்தியா) லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்ட இந்த நிறுவனம்தான், இன்றைக்கு பேயர் கிராப்சயின்ஸ் லிமிடெட் என்ற பெயரில் செயல்பட்டுவருகிறது.

நிறுவனத்தின் உற்பத்தி...

பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் பயிர்களுக்கு வருகிற நோய்களுக்கான பல்வேறு வகையான மருந்துகளை பயிர் பாதுகாப்புப் பிரிவில் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. விதைகள் பிரிவில் அதிக தரம் கொண்ட அதிக மகசூலைத் தருகிற ரீதியிலான ஹைபிரிட் விதைகளை விற்பனை செய்துவருவதால் வாடிக்கையாளர்களின் மத்தியில் இதன் தயாரிப்புகளுக்கு நல்லதொரு வரவேற்பு இருக்கிறது. இந்தவகை ஹைபிரிட் விதைகள் விவசாயத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் களைகள் மேலாண்மைக்கும், பூச்சிகள் பயிர்களைத் தாக்குவதில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் உதவும் வகையிலான பண்புகளைக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதொரு விஷயமாகும்.

மேலும், இந்த நிறுவனத்தின் டிஜிட்டல் ஃபார்மிங் (கணினி மற்றும் இணைய வசதியுடன்கூடிய விவசாயம்) முயற்சிகள் வாயிலாக விவசாயிகள் அவர்களுடைய நிலத்தின் பண்பு குறித்த தெளிவான வரையறைகளை ஏற்படுத்திக்கொண்டு அதற்கேற்ப பயிர்களைப் பயிரிடுதல், இயற்கையாக அவர்களுடைய நிலத்தில் உள்ள வளங்களையும் / வசதிகளையும் மேம்படுத்தி அதன் மூலம் அதிக பலன் பெறுதல், சரியான இடுபொருள்களை இடுதல் போன்றவற்றுக்கு உதவும் வகையிலான பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. மேலும், விவசாயம் அல்லாத பூச்சிக்கொல்லி களைத் (pest control) தயாரித்தும் இந்த நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

பேயர் கிராப்சயின்ஸ் லிமிடெட்!

இந்த நிறுவனத்தின் பார்மச்சூட்டிக்கல் பிரிவு சைடஸ் கெடில்லா நிறுவனத்துடன் இணைந்து பேயர் சைடஸ் பார்மா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்கிறது. இதய சிகிச்சை, புற்று நோய்க்கான சிகிச்சை, ரத்தத்தில் உள்ள குறைபாடுகளுக்கான சிகிச்சை (Hematology), கண்களுக்கான சிகிச்சை போன்ற வற்றுக்கான மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். கதிரியக்கம் சார்ந்த நோய்களைக் கண்டறியும் இயந்திரங்களையும் அதற்குத் தேவைப்படும் கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் எனும் ரசாயன மருந்துப் பொருள்களையும் (contrast agents) இந்தத் தொழில் பிரிவின் கீழ் விநியோகம் செய்து வருகிறது இந்த நிறுவனம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நிறுவனம் கிட்டத்தட்ட இரண்டு கோடி விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, நெல், சோளம், பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடும்போது தேவைப்படும் பல்வேறு மருந்துகள் மற்றும் தயாரிப்புகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். பேயர் நிறுவனம், இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் பெட்டர்லைப் ஃபார்மிங் எனும் அமைப்பை நடத்திவருகிறது. இந்த அமைப்பின் மூலம் சிறுவிவசாயிகள் தங்களுடைய விவசாயத்தை முழுமையான அளவில் செய்ய உதவ பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பேயர் கிராப்சயின்ஸ் லிமிடெட்!

சிறுவிவசாயிகள் நன்மைக்கு...

2018-ம் ஆண்டில் இந்த அமைப்புடன் இணைந்து சிறு விவசாயிகள் தொழில்முனைவோராக மாறி கிராமப்புறங்களில் பெட்டர் லைஃப் ஃபார்மிங் சென்டர்களை நடத்துவதற்கான வசதிகள் செய்துதரப்பட்டது. இந்த வசதியின் மூலம் சிறிய ஊர்களில் உள்ள விவசாயிகளுக்கு விதைகள், பயிர்பாதுகாப்பு, பயிருக்குத் தேவையான ஊட்டச் சத்து வகைகள், சொட்டுநீர் பாசனம், மண்வள மேலாண்மை, நிதிசார்ந்த மேலாண்மை போன்றவற்றில் உலகில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை சென்டர்கள் ஒவ்வொன்றிலும் 500 விவசாயிகளுக்கு இதுபோன்ற வசதிகள் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, 710 பெட்டர் லைஃப் ஃபார்மிங் சென்டர்கள் இந்தியாவில் உள்ள ஒன்பது மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், பேயர் லேர்னிங் சென்டர் என்ற விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை அறிந்துகொள்வதற்கான வசதி ஒன்று 2020-ம் ஆண்டு முதன்முதலாக சோதனை முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது. 2020-21 நிதியாண்டில் இந்த வகை லேர்னிங் சென்டர்கள் 14-ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த வித வசதிகளின் மூலம் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிர்கள் குறித்த முழு அளவிலான தொழில்நுட்பம் மற்றும் விளைபொருள் குறித்த பல்வேறு விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். கோவிட்-19 காலத்தில் விவசாயிகளுக்கான கால் சென்டர்கள், ஆடியோ மற்றும் வீடியோ கலந்தாய்வுகள், எஸ்.எம்.எஸ் வாயிலாகத் தயாரிப் புகள் குறித்த விழிப்புணர்வுகள் போன்ற முயற்சிகளும் எடுக்கப் பட்டது தனிச்சிறப்பான விஷய மாகும்.

இந்த நிறுவனத்தின் மற்று மொரு முயற்சியான ஃபுட் செயின் பார்ட்னர்ஷிப் எனும் முயற்சியின்கீழ் விவசாயிகள், விளைபொருள்களைப் பதனிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளைச் செய்யும் புராசஸர்கள், விளை பொருள் களை வாங்கி விற்கும் டிரேடர்கள் மற்றும் விவசாயப் பொருள்களை விற்பனை செய்யும் சில்லறை வர்த்தகர்கள் போன்றவர் களை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படுகிற தரம் மற்றும் தொடர்ந்து அதே தரத்திலான விளைபொருள்களை வழங்குதல் சம்பந்தப்பட்ட அனைத்துவகை தகவல் பரிமாற் றங்களும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுவருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை (டிசம்பர் 2019 நிலவரப்படி) 80,000 விவசாயிகளையும் 16 வகையான பயிர்களையும் உள்ளடக்கிய 73 ஃபுட்செயின் பார்ட்னர்ஷிப் நடைமுறை செயல்படுத்தப்பட் டிருந்தது. இது 3,65,000 ஏக்கர் அளவிலான விளைநிலத்துக்கு பயனளிப்பதாக இருக்கிறது.

தயாரிக்கும் பொருள்கள் என்ற ரீதியாகப்பார்த்தால் விவசாயம், பார்மச்சூட்டிக்கல்ஸ் மற்றும் செஃல்ப் கேர் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டுவருகிறது. விவசாயத் துக்கான பொருள்கள் தயாரிப்பில் பூஞ்சைக்கொல்லி, களைக் கொல்லி, பூச்சிக்கொல்லி, விதைகள் வளர்ப்பு (தயாரிப்பு) போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம். பூஞ்சைக் கொல்லிகள் பிரிவில் பலவிதமான மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.

பேயர் கிராப்சயின்ஸ் லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

விவசாயத்துக்கான கெமிக்கல்கள், மருந்துகள் மற்றும் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் துறையில் செயல்பட்டுவரும் நிறுவனங்கள் அனைத்துக்கும் உண்டான ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் தொழிலில் ஆராய்ச்சிகளில் வெற்றிபெறுவது என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, தொடர்ந்து இந்த நிறுவனம் ஆராய்ச்சிகளில் வெற்றிபெற வேண்டும். தொழில்ரீதியான போட்டியாளர்கள் இந்த நிறுவனத்தைவிட வேகமான ஆராய்ச்சி வெற்றிகளைப் பெற்று அதன் மூலம் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினால் அது இந்த நிறுவனத்தின் செயல் பாட்டைப் பாதிக்கவே செய்யும். விவசாயம் சார்ந்த தொழில் என்பதால் பருவமழை எந்த அளவுக்கு விவசாயத் துக்கு சாதகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும் என்பதையும் ஒரு ரிஸ்க்காகவே நாம் பார்க்க வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், மூலப்பொருள்களின் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!