பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கிளீன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட்! - கம்பெனி பயோடேட்டா

கிளீன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கிளீன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ்

சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான வகையிலும், குறைந்த பொருள் செலவிலும் வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம்!

வேதிப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் கிளீன் சயின்ஸ் அண்ட் டெக் னாலஜிஸ் லிமிடெட் (BSE Code: 543318, NSE Symbol: CLEAN). இந்த நிறுவனமானது வேதிப்பொருள்களைத் தயாரிப்பதில் உலக அளவில் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது.

நிறுவனத்தின் வளர்ச்சி...

2006-ம் ஆண்டில் வேதிப்பொருள்கள் உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் இணைந்து செயலாற்ற ஆரம்பித்த இந்த நிறுவனம், 2009-ம் ஆண்டில் மானோ மீத்தைல் ஈத்தர் ஆஃப் ஹைட்ரோக் வைனோன் (MEHQ) மற்றும் க்கோயகல் (Guaiacol) எனும் வேதிப்பொருள்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கென ஒரு நவீன தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து நடைமுறைப் படுத்தியது.

2011-ம் ஆண்டில் 4-MAP (4 Methoxy Acetophenone) எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்வதற்கான தனித்துவ மான தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியிலான உற்பத்திக்கு அறிமுகப்படுத்தியது. 2014-ம் ஆண்டில் ப்யூடைலேட்டட் ஹைட்ராக்சிஅனிசோல் (Butylated hydroxyanisole - BHA) என்ற வேதிப்பொருள் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து பயன்படுத்த ஆரம்பித்தது. 2018-ம் ஆண்டில் அனிசோல் எனும் வேதிப்பொருளை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு வேப்பர் பேஸ் (Vapour phase) எனும் தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியது. 2020-ம் ஆண்டில் டைசைக்ளோஹெக்சைல் கார்போடிமைட் என்னும் வேதிப்பொருளை உற்பத்தி செய்வதற்கான நவீன நடைமுறைகளைக்கொண்ட தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியிலான உற்பத்திக்கு உபயோகிக்க ஆரம்பித்தது.

2021-ம் ஆண்டில் பாரா பென்சோ க்வைனோன் (P-BQ) மற்றும் டெர்ஷியரி ப்யூட்டைல் ஹைட்ரோக்வைனோன் (TBHQ) என்ற வேதிப்பொருள்களை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்தது. 2022-ம் ஆண்டில் மானோ மீத்தைல் ஈத்தர் ஆஃப் ஹைட்ரோக்வைனோன் (MEHQ), க்கோயகல் மற்றும் ப்யூடைலேட்டட் ஹைட்ராக்சிஅனிசோல் (BHA) வேதிப்பொருள்கள் உற்பத்தி செய்யும் வசதியை விரிவாக்கம் செய்தது. இதே ஆண்டில் ஹிண்டர்டு அமைன் லைட் ஸ்டெபிலைசர்ஸ் (Hindered amine light stabilizers - HALS) எனும் வேதிப்பொருளை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.

கிளீன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட்! - கம்பெனி பயோடேட்டா

நிறுவனத்தின் சிறப்புகள்...

கிளீன் சயின்ஸ் நிறுவனம் மகாராஷ்டிராவில் உள்ள புனே மற்றும் குர்கும்ப் என்ற இரண்டு இடங்களில் தன்னுடைய உற்பத்தி மையங் களைக் கொண்டிருக்கிறது. வேதிப்பொருள்கள் உற்பத்தியில் அந்தப் பொருள்கள் உபயோகப்படுத்தப்படும் துறைக்கேற்ப தரக் கட்டுப் பாடுகள் இருக்கும். இதை உறுதி செய்வதற்கென்றே இரண்டு உற்பத்தி மையங்களிலும் தரக்கட்டுப்பாட்டு மையங்களையும் நிறுவி யுள்ளது இந்த நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரத்தைத் தயாரிப்புகளில் கொண்டு வருவதற்கும் உற்பத்தி செய்த பொருள்களில் உறுதி செய்யவும் இந்தத் தரக்கட்டுப் பாட்டு மையங்கள் உறுதுணையாக இருக்கின்றன.

வேதிப்பொருள்கள் உற்பத்தியில் ஆராய்ச்சிகளின் பங்கு மிகவும் அவசிமான ஒன்று என்பதால், கிளீன் சயின்ஸ் நிறுவனம் ஒவ்வொரு யூனிட்டிலும் தனித்தனி யாக ஆராய்ச்சி வசதிகளை சொந்தமாக நிறுவியுள்ளது. பல்வேறு படிநிலைகளைக் கொண்ட கெமிக்கல் சிந்தசிஸை செய்யும் வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சி வசதியானது, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றது.

இந்த ஆராய்ச்சி வசதியில் அல்கைலேஷன் (C-O-N-), ஆக்சிடேஷன், ஹைட்ராக்சிலேஷன், குளோரினேஷன், ஹைட்ரோஜினேஷன் வித் நோபில் மெட்டல்ஸ், கேட்ட லைட்டிக் ரியாக்‌ஷன்ஸ், எஸ்டரிபிக்கேஷன் / டிரான்ஸ்-எஸ்டரிபிக்கேஷன், க்ரிக்னார்ட் ரியாக்‌ஷன், அசிட்டை லேஷன், பாலிமரிக் ரியாக்‌ஷன் போன்ற வேதியியல் நடைமுறைகளுக்கான வசதிகளும், கேஸ் க்ரோமட்டோ கிராபி, கேஸ் க்ரோமட்டோகிராப் மாஸ் ஸ்பெக்ட்ரோ மீட்டர்ஸ், ஹை பர்ஃபாமன்ஸ் லிக்யுட் க்ரோ மொட்டோகிராபி, இன்ஃப்ரா ரெட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி உள்ளிட்ட பல பகுப்பாய்வு செய்யும் கருவிகளும், கண்ணாடி உலைகள், வேப்பர் பேஸ் ரியாக்டர்ஸ், டிஸ்ட்டிலேஷன் உள்ளிட்ட தேவைகளுக்கான வேதிப்பொருள்களை பைலட் முறையில் உற்பத்தி செய்யத் தேவை யான வசதிகளும் நிறுவப்பட்டு உள்ளன.

சுற்றுச்சுழலுக்குப் பாதுகாப்பான வகையிலான வேதிப்பொருள்கள் உற்பத்திக்கான நடைமுறைகளைக் கண்டறிதல், குறைந்த பொருள் செலவில் வேதிப்பொருள்களை உற்பத்தி செய்வதற்கான நடை முறைகளைக் கண்டறிதல், ஏற்கெனவே கண்டறிந்து உற்பத்தி செய்யப்பட்டுவரும் வேதிப் பொருள்களை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி நடைமுறைகளை சிறப்பான வகையில் மாற்றி அமைத்தல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி வசதியானது செயல் பட்டு வருகிறது.

வேதிப்பொருள்கள் உற்பத்தியில் நீண்ட நாள்களுக்கு நிலைத்திருந்து செயல்படும் நிறுவனமாகத் திகழ உற்பத்தி நடைமுறைகளில் உருவாகிற கழிவுப்பொருள்களை திறம்பட மேலாண்மை செய்ய வேண்டியது அவசியம். இதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளையும் தன் உற்பத்தி வசதியில் நிறுவி யுள்ளது கிளீன் சயின்ஸ் நிறுவனம்.

கிளீன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட்! - கம்பெனி பயோடேட்டா

ரிஸ்க்குகள் என்னென்ன?

வேதிப்பொருள்கள் உற்பத்தியில் ஈடுபடுகிற நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்கு களும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. வேதிப்பொருள்கள் உற்பத்தியானது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய ஒரு துறை ஆகும். மேலும், வேதிப்பொருள் களின் ஏற்றுமதி (உற்பத்திப்பொருள்) மற்றும் இறக்குமதி (மூலப் பொருள்கள்) என்பது அரசாங்கங் களின் கொள்கை முடிவுகளைச் சார்ந்தது என்பதால், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் அதற்கேற்ப மாறுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மூலப்பொருள்கள் விலை உயர்வு மற்றும் தொடர்ந்து தங்குதடையின்றி கிடைக்க வேண்டியதன் அவசியம், உற்பத்தி செய்யும் வேதிப்பொருள்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலையில் ஏற்படுகிற மாறுதல்கள், தொழில் நுட்ப ரீதியிலான போட்டி, தொடர்ந்து ஆராய்ச்சிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம், கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி இருக்கும் தொழில்நுட்பங்களுக்குக் காப்புரிமை பெறுதல், வாடிக்கையாளர்களின் நிதிநிலைமை மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் சரிவுகள், வாடிக்கை யாளர்கள் உபயோகிக்கும் வேதிப்பொருள்களின் தேவைகள் குறைதல் மற்றும் உபயோக மாறுதல்கள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க் என்றே கூறலாம்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிக்கும் சில துறைகள் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

கிளீன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட்! - கம்பெனி பயோடேட்டா

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின்நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பது நல்லது.

மூன்று பெரும் பிரிவுகளில் உற்பத்தி!

தயாரிப்பு ரீதியாகப் பார்த்தால், எஃப்.எம்.சி.ஜி துறையில் உபயோகப்படுத்தும் வேதிப் பொருள்கள், பர்ஃபாமன்ஸ் வேதிப்பொருள்கள் மற்றும் ஃபார்மா / அக்ரோ இடைநிலை வேதிப்பொருள்கள் போன்ற மூன்று பெரும் பிரிவுகளில் உள்ள வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம். இன்றைக்கு ஆண்டொன்றுக்கு 44,000 டன் என்ற அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதிகளைக் கொண்ட உற்பத்தி மையங்களுடனும், அதனுடன் இணைந்த ஆராய்ச்சி வசதிகளுடனும், 30 நாடுகளைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் நிறுவனங்களுடனும், 1,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடனும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்!