
2017-ம் ஆண்டில் ஐ.பி.ஒ வந்த இந்த நிறுவனம், 2022-ல் ரூ.10,000 கோடி என்கிற டேர்ன்ஓவர் என்கிற இலக்கைத் தாண்டியது...
பாதுகாவலர்கள் சேவை, ரொக்க விநியோகம் மற்றும் அலுவலக / வளாக உபயோகிப் பாளர்களுக்கான வசதி மேலாண்மை போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனம் எஸ்.ஐ.எஸ் லிமிடெட்.
நிறுவனத்தின் தொழில்...
செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் (இந்தியா), செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் (இன்டர்நேஷனல்), ஃபெசிலிட்டி மேனெஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், கேஷ் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் போன்ற தொழில் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.
செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் தொழில் பிரிவில் பல பிராண்ட் ரீதியான நிறுவனப் பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். செக்யூரிட்டி தீர்வுகளை வழங்கு வதில் இந்தியாவில் செயல்படும் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, இந்தப் பிரிவானது 181 கிளைகளுடனும் 1,81,381 பணியாளர்களுடனும் செயல்பட்டு வருகிறது.
செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் (இன்டர்நேஷனல்) பிரிவில் ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேவைகளை வழங்கி வருகிறது. நியூசிலாந்தில் இந்தத் துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் பிரிவில் கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, 82,308 பணியாளர் களைக் கொண்ட 109 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.
கேஷ் சொல்யூஷன் பிரிவில் உலகளவில் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டுவரும் ப்ரோசெக்யூர் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டணி நிறுவனமாகச் செயல்படுகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் செயல்படும் இரண்டாவது பெரிய கேஷ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் என்ற பெருமையுடன் இயங்கி வருகிறது.
கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, 29 மாநிலங்களில் 3,000 கேஷ் வேன்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு, 10,000 ஏ.டி.எம்-கள், 22,000 ரீடெயில் பாயின்டுகள் போன்றவற்றுக்குப் பணம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது இந்த நிறுவனம்.
1985-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம், 1986-ம் ஆண்டில் கிராஜ்வேட் டிரெயினி ஆபீஸர் என்ற திட்டத்தைத் தொடங்கி தனியார் துறையில் தேவைப்படுகிற பாதுகாப்பு மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் போன்றவற்றுக்கான மனிதவளத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்தது.

நிறுவனத்தின் வரலாறு...
1990-ம் ஆண்டில் கொல்கத்தாவில் இதன் அலுவலகம் திறக்கப் பட்டது. 1995-ம் ஆண்டில் வட இந்தியாவில் தன்னுடைய செயல் பாட்டை விரிவாக்கம் செய்த இந்த நிறுவனம், டெல்லியில் மண்டல அலுவலகத்தை நிறுவியது. 1997-ம் ஆண்டில் தென் இந்தியாவில் தன்னுடைய செயல்பாட்டை விரிவாக்கம் செய்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் பெங்களூரில் மண்டல அலுவலகம் ஒன்றை நிறுவியது.
1998-ம் ஆண்டில் பாதுகாப்புப் பணியாளர்கள் சேவையை வழங்கும் பணிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழைப் பெற்றது இந்த நிறுவனம். இந்த சேவைக்கான ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் இந்தியாவில் முதன்முதலில் பெற்ற நிறுவனம் இதுவாகும். 2002-ம் ஆண்டில் இந்த நிறுவனத் தின் மொத்த விற்றுவரவு ரூ.25 கோடி என்கிற இலக்கைத் தாண்டியது.
2004-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த இ.ஆர்.பி (Enterprise Resource Planning ) வசதியை உருவாக்கியது இந்த நிறுவனம். 2006-ம் ஆண்டில் ரொக்கப்பணம் விநியோகம் செய்தல் சேவைப்பிரிவைத் தொடங்கியது இந்த நிறுவனம்.
விற்றுவரவு 1,000 கோடி என்கிற அளவை 2009-ம் ஆண்டில் எட்டிய இந்த நிறுவனம், இதே ஆண்டில் அலுவலக / வளாக உபயோகிப்பாளர்களுக்கான வசதி மேலாண்மைப் பிரிவை அமெரிக்க நிறுவனமான சர்வீஸ் மாஸ்டர் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத் துடன் இணைந்து தொடங்கியது.
2012-ம் ஆண்டில் அமெரிக் காவைச் சார்ந்த டெர்மினிக்ஸ் என்னும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, அலுவலகங்கள், வீடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் கரையான் மற்றும் பூச்சிகளைத் தடுக்கும் சேவை பிரிவை ஆரம்பித்தது. இந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 50,000 என்ற அளவைத் தாண்டியது.
2014-ம் ஆண்டில் ரூ.2,500 கோடி என்கிற விற்றுவரவு இலக்கை கடந்தது. இதே ஆண்டில் ஐ.எஸ் எஸ் எனும் டேனிஷ் நாட்டு நிறுவனத்தின் கேஷ் மேனேஜ் மென்ட் தொழிலைக் கையகப்படுத் திய இந்த நிறுவனம், அதை சிஸ்கோ (SISCO) என்று பெயர்மாற்றப்பட்ட பிராண்டாக நடத்த ஆரம்பித்தது.
2015-ம் ஆண்டில் ஒரு லட்சத்துக் கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இதே ஆண்டில் செக் யூரிட்டி பணியாளர்களைத் தேர்வு செய்வதில் தர உத்தரவாதத்தை உறுதி செய்ய உதவும் ‘ஆட்டோ மேட்டிக் கியாஸ்க்’குகளை அறிமுகப்படுத்தியது.
2016-ம் ஆண்டில் ரூ.4,000 கோடி என்கிற அளவில் விற்றுவரவு இலக்கைத் தாண்டிய இந்த நிறுவனம், இதே ஆண்டில் ‘டஸ்டர்ஸ்’ என்னும் ஃபெசிலிட்டி மேனெஜ்மென்ட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் நான்காவது பெரிய ஃபெசிலிட்டி மேனெஜ்மென்ட் நிறுவனமாக உருவெடுத்தது.
2017-ம் ஆண்டில் ஐ.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிட்டு சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம். 2022-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் விற்றுவரவானது ரூ.10,000 கோடி என்கிற இலக்கைத் தாண்டியது. இதே ஆண்டில் டெர்மினிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பித்த நிறுவனத்தில், டெர்மினிக்ஸ் வைத்திருந்த பங்குகளைக் கையகப்படுத்தியது.

ரிஸ்க்குகள் என்னென்ன?
செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் (இந்தியா), செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் (இண்டர்நேஷனல்), ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், கேஷ் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற தொழில் பிரிவுகளில் இயங்கிவரும் நிறுவனங்களுக்கே உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு.
இந்த நிறுவனம் இயங்கிவரும் பிரிவுகளில் பெரும் பான்மையானவை பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளர்ச்சி அடையும் துறைகள் என்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடையாமல்போனாலோ அல்லது தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது.
அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்பம், வாடிக்கை யாளர்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கவேண்டிய நல்லுறவு, புதிய போட்டி நிறுவனங்கள் உருவாகுதல், தேவையான மனிதவளம் தொடர்ந்து கிடைத்தல், பணி யாளர்கள் சம்பளம் அதிகரித்தல், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், அரசின் கொள்கை முடிவுகள் போன்ற வற்றில் வரும் மாற்றங்களும் இந்த நிறுவனத்தின் ரிஸ்க்குகளே.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதியானது பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின்நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்தபின், முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பது நல்லது.