விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் நம் வாசகர்கள் சிலர், அந்தியச் செலாவணி மற்றும் போரெக்ஸ் ட்ரேடிங் சம்பந்தமான சில கேள்விகளைக் கேட்டிருந்தனர். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!

அந்நியச் செலாவணி என்றால் என்ன? - ராஜாராமன்
இந்தியாவில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைந்தது அல்லது கூடியது என அவ்வப்போது செய்திகளில் கேட்டிருப்போம். அந்நியச் செலாவணி என்றால் என்ன என்ற கேள்வியும் நம்முள் எழுந்திருக்கும். நம் வாசகர் ஒருவருக்கும் அந்நியச் செலாவணி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேட்டிருந்தார்.

நம் வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு பொருளாதார நிபுணர் நாகப்பன் அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம், "எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டு கரண்ஸிதான் அந்நியச் செலாவணி. வெளிநாட்டுப் பணத்தைத்தான் அந்நியச் செலாவணி என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Forex Reserve என்று கூறுவார்கள். இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தை அதிகமாக வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இந்தியாவின் இறக்குமதியில் 50 சதவிகிதத்திற்கும் மேல் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்தான் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக எலக்ட்ரானிக் பொருள்களை இறக்குமதி செய்கிறோம்.
அப்படி நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான பணத்தை டாலரில்தான் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்துவதற்காக எப்போதும் குறிப்பிட்ட அளவுக்கான அந்நியச் செலாவணி கையிருப்பில் இருக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் சில வாரங்களுக்குத் தேவையான அளவில்தான் அந்நியச் செலாவணி இந்திய அரசாங்கத்திடம் கையிருப்பாக இருக்கும். ஆனால், இப்போதோ ஒரு வருட இறக்குமதித் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் கொண்டிருக்கிறோம். இது ஒரு வகையில் நல்ல செய்திதான் என்றாலும், அது ஒரு சுமைதான். கையிருப்பில் இருக்கும் அந்தப் பணத்தை எதிலும் முதலீடு செய்ய முடியாது. ஆனாலும், அதனை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.
Forex என்றவுடன் மற்றொரு வாசகர் Forex Trading குறித்த ஒரு கேள்வியை எழுப்பியிருந்தது சட்டென ஞாபகத்திற்கு வந்தது. Forex ட்ரேடிங் என்பது இந்தியாவில் சட்டப்பூர்வமானதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார் ராஜேஷ் என்ற வாசகர். அவருடைய சந்தேகம் குறித்து நாகப்பன் அவர்களிடம் கேட்டோம்.

"Foreign Exchange என்பதைனைத்தான் சுருக்கமாக Forex என்று குறிப்பிடுகின்றனர். Forex ட்ரேடிங் என்பது இந்தியாவில் சட்டப்பூர்வமானதுதான். ஆனால், அது வரம்புகளுக்கு உட்பட்டது. இந்தியாவில் Forex ட்ரேடிங் தொடர்பான செயல்பாடுகளையும் செபி (SEBI) அமைப்புதான் கண்காணித்து வருகிறது. செபியிடம் அனுமதி பெற்ற தரகு நிறுவனங்களின் மூலம் Forex ட்ரேடிங் செய்யலாம். மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை மற்றும் MCX-SX (Multi Commodity Exchange Stock Exchange) ஆகியவற்றில் புதிவு செய்து கொண்ட தரகர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாக Forex ட்ரேடிங் செய்வது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான். இதைத் தவிர்த்து நீங்கள் தொழில் செய்யக்கூடிய நிறுவனமாக இருக்கிறீர்கள் என்றால் அந்நியச் செலாவணியை வங்கிகள் மூலமாகவே வாங்கி விற்கலாம். அப்படித் தொழில் எதுவும் இல்லை என்றால் தரகர்கள் மூலம் செய்வதுதான் நல்லது. ஆனால், இவை இரண்டும் இல்லாமல் நாங்களாகவே வெளிநாட்டு கரண்ஸிகளை ட்ரேட் செய்கிறோம் என நிறையப் பேர் ஒரு கட்டத்தில் Forex ட்ரேடிங்கைத் தொடங்கினார்கள். அது வரம்புகளை மீறியதாக இருந்தது. அப்படிச் செய்வது சட்டப்படிக் குற்றம். அதற்குத் தண்டனைகள் கடுமையாக இருக்கும்" என்றார்.

முதலில் இந்திய ரூபாயை அடிப்படையாகக் கொண்டு மட்டும் தான் Forex ட்ரேடிங் செய்ய முடியும் என வரம்புகளை விதித்திருந்தது செபி. இந்திய ரூபாய் (INR) மற்றும் அமெரிக்க டாலர் (USD) ஆகிய இரு கரண்ஸிக்களை (INR/USD) மட்டும்தான் ட்ரேடிங் செய்ய முடியும் என்ற வரம்பு முதலில் இருந்தது. பின்னர், அவற்றுடன் பிரிட்டிஷ் பவுண்டு (GBP), யூரோ (EUR) மற்றும் ஜாப்பனிஸ் யென் (JYP) ஆகிய கரண்ஸிக்களையும் இந்திய ரூபாயுடன் ட்ரேடிங் செய்யும் வகையில் வரம்பை மாற்றியது. தற்போது EUR/USD, GBP/USD மற்றும் JPY/USD என டாலரின் அடிப்படையிலும் மேற்கூறிய மூன்று கரண்ஸிக்களை ட்ரேடிங் செய்யலாம் என வரம்பைத் தளர்த்தியிருக்கிறது. இது தவிர வேறு எந்த கரண்ஸியை வைத்து ட்ரேடிங் செய்தாலும் அது சட்டத்திற்குப் புறம்பானது, தண்டனைக்குரியது. பதிவு செய்யப்பட்ட தரகர்கள் மூலம் Forex ட்ரேடிங் செய்வதாக இருந்தாலும், அதுகுறித்து வரம்புகள் மற்றும் அது குறித்த தகவல்களை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு ட்ரேடிங்கில் இறங்குவது சிறந்தது.
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!
