பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

புதிய பங்கு வெளியீடு... முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்...

இந்தியப் பங்குச் சந்தையில் நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடிக்குமேல் புதிய பங்கு வெளியீட்டின் (IPO) மூலம் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் நிதி திரட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர்
கா.ராமலிங்கம் இணை நிறுவனர்

குறையும் ஐ.பி.ஓ மவுசு...

அண்மைக் காலமாக ஐ.பி.ஓ-வில் சிறு முதலீட் டாளர்கள் பங்கேற்பது குறைந்து வருகிறது. காரணம், அதிக லாபம் கிடைக்கும் என்கிற பெரிய எதிர்பார்க்கப் பட்ட எல்.ஐ.சி-யின் பங்கு விலை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.

எல்.ஐ.சி புதிய பங்கு வெளி யீட்டில் களமிறங்கியபோது பாலிசிதாரர்கள் மற்றும் ஏராளமானவர்கள் புதிதாக டீமேட் கணக்கு ஆரம்பித்தார் கள். எல்.ஐ.சி பங்கு வெளி யீட்டில் வெளியானபோது அதன் விலை ரூ.949 ஆகும்.

ஆனால், அந்தப் பங்கானது சந்தையில் பட்டியலிடப் பட்டபோது 8% விலை இறக்கம் கண்டது. இதன் பிறகு, தொடர்ந்து இறக்கம் கண்டது. பல மாதங்களுக்குப் பிறகும் இப்போது ரூ.605 என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் நிகழ்ந்த ஏமாற்றம் போல வேறு பங்கு ஐ.பி.ஓ-களில் உங்களுக்கு ஏற்படக் கூடாது எனில், புதிய பங்கு வெளியீட் டுக்கு விண்ணப்பிக்கும்முன், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த விஷயங்களை இனி பார்ப்போம்.

பெற முடியாத பங்குகள்...

முன்னணி முதலீட்டு ஆலோசகர்களில் ஒருவரான வாகன் ஜான்ஜிஜியன் (Vahan Janjigian) “ஒரு ஐ.பி.ஓ-வில் உங்களுக்குப் பங்கு ஒதுக்கப் படும் எனில், அந்தப் பங்கை வாங்க வேண்டாம். உங்களால் பெற முடியாத புதிய பங்கு களை மட்டும் வாங்குங்கள்” எனச் சொல்லியிருக்கிறார்.

இது நகைச்சுவையாகத் தோன்றினாலும் அதுதான் உண்மை. அதாவது, அதிக ஆதரவு இருக்கும் பங்குகளில் பெரும்பாலானவர்களுக்குப் பங்கு ஒதுக்கீட்டின் மூலம் கிடைப்பதில்லை. முதலீட் டாளர்களிடையே குறை வான ஆதரவு இருக்கும் பங்கு எனில், எளிதில் ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்துவிடும்.

அமோக ஆதரவு எப்படி கிடைக்கிறது?

புதிய பங்கு வெளியீட்டில் ஒரு பங்குக்கு அமோக ஆதரவு எப்படிக் கிடைக்கிறது? இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று, புதுமையான தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டியது. இந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்ய அதிக பேர் விரும்பினர்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

ஆனால், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் குறைவான பங்குகளே விற்பனைக்கு வந்தது. எனவே, தேவையைவிட அளிப்பு குறைவாக இருந்தது. இதனால், செயற்கையான தட்டுப்பாடு உருவாக, எனக்கு வேண்டும், உனக்கு வேண்டாம் என்று பலரும் விண்ணப்பிக்க, பலருக்கும் கிடைக்காமல் போகிறது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு இப்படித்தான் அமோக ஆதரவு கிடைக்கிறது. இது போன்ற நிறுவனங்களின் ஐ.பி.ஓ-வில் ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் பங்கு ஒதுக்கீட்டின் மூலம் பங்குகள் கிடைக்கும். அதன் மூலம் விரைவான லாபம் ஈட்டலாம். இதனால்தான், ஐ.பி.ஓ-வை லாட்டரிக்கு ஒப்பிடுகிறார்கள்.

அதிக லாபம் சாத்தியமா..?

விரைவான லாபம் சம்பாதிக்க, ஒருபோதும் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யாதீர்கள். காரணம், ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்வது அனைத்து நேரங்களிலும் அதிக லாபத்தைத் தராது. சில சமயங்களில் சில முதலீட்டாளர்களுக்கு மட்டுமே அதிக ஆதாயம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பல முதலீட்டாளர் களின் மனதில் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். இது மகா தவறு.

நீண்ட காலத்தில் இழப்பு...

நடைமுறையில் ஐ.பி.ஓ-வுக்குப் பிறகு பல நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாகக் குறைந்து குறுகிய காலத்தில் மற்றும் நீண்ட காலத்தில் இழப்பை தந்திருக்கிறது. 2008-ம் ஆண்டில் ரிலையன்ஸ் பவர் மெகா ஐ.பி.ஓ வந்தது. வாகன ஓட்டுநர்கள் முதல் பால்காரர்கள் வரை பலரும் அதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு ஆரம்பித்தார்கள். பங்கின் வெளியீட்டு விலை ரூ.450 ஆகும்.

பட்டியலிடப்பட்ட முதல் 4 நிமிடங்களுக்கு மட்டும் இந்த பங்கு ஐ.பி.ஓ-வில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்குமேல் வர்த்தகமானது. அதன் பிறகு, பங்கின் விலை இறக்கம் காண ஆரம்பித்தது. அன்றைய தினத்தில் பங்கின் முடிவு விலை ரூ.372.50 ஆகும். பிறகு பங்கின் விலை தொடர்ந்து இறங்கிக் கொண்டே வந்தது. இறங்கிய பங்கின் விலையை போனஸ் பங்குகள் கொடுத்து, அதன் நிறுவனர் அனில் அம்பானி ரூ.280 என்கிற நிலைக்கு மேலே கொண்டு வந்தார். அதன்பிறகு அந்த நிறுவனப் பங்கின் விலை அதன் வெளியீட்டு விலையை ஒருபோதும் எட்டவில்லை. ஒரு கட்டத்தில் பங்கின் விலை 2020 டிசம்பரில் ரூ.3-க்கு இறங்கியது. இப்போது ரூ.16 என்கிற அளவில் விற்பனையாகி வருகிறது.

புதிய பங்கு வெளியீடு என்கிறபோது நம்மவர் களுக்கு குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டி விடலாம் எனப் பேராசை இருக்கிறது. பல ஐ.பி.ஓ-களில் பேராசை பெருநஷ்டமாக உள்ளது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பங்கில் சரியாக முதலீடு செய்வது எப்படி?

பழைய பங்கோ, புதிய பங்கோ நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறியாமல் எக்காரணம் கொண்டும் முதலீடு செய்யக் கூடாது. நிறுவனத்தின் அடிப்படை மற்றும் பங்கின் மதிப்பீடு (Fundamental & Share valuation) பற்றி அறியாமல் எந்தப் பங்கிலும் முதலீடு செய்யக் கூடாது. புதிய பங்கு வெளியீடு என்கிறபோது விவரக் குறிப்பை (prospectus) முழுமையாகப் படித்து, தகவல் அறிந்த முதலீட் டாளராக (Informed Investor) மாறுவது மிக முக்கியமாகும். இது ஒருவரை சரியான முதலீட்டு முடிவை எடுக்க உதவும்.

புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் நிறுவனத் தின் வருவாய், நிலைத்தன்மை, தொழில் துறையில் அதன் வலிமை, டிவிடெண்ட் சத விகிதம், எந்தப் பொருளை தயாரிக்கிறது, எந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளது, நிறுவனத்தின் நிறுவனர் யார், நிர்வாகக் குழு வின் செயல்பாடு எப்படி, வளர்ச் சிக்கான வாய்ப்பு எப்படி, நிதிநிலை எப்படி இருக்கிறது, கடன் எவ்வளவு இருக்கிறது, நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி, என் னென்ன ரிஸ்க்குகள் உள்ளன போன்றவற்றைக் கவனிப்பது கட்டாயமாகும். மேற்கண்ட விஷயங்களை அலசி ஆராய்ந்த பிறகு, அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்ய விரும்பினால் பணத்தை முதலீடு செய்யலாம். அதுவும் முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

பங்கு முதலீட்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ஐ.பி.ஓ-வில்தான் முதலீடு பங்குகளை வாங்க வேண்டும் என்று இல்லை. ஏற்கெனவே ஐ.பி.ஓ வந்து நன்கு செயல்படும் பங்குகளில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்!